Saturday, February 19, 2011

கூட்டத்தில் கலக்கும் சூப்பர் ஹீரோ

உலகத்தை மாற்ற வேண்டும் என்று ஏராளமானவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்; ஆனால் அவர்களில் பலர் தங்களைக் கொஞ்சம் கூட மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அப்படி மாற்றிக் கொள்ளாதவர்கள் கால மாற்றத்தில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். நடிகர் சிரஞ்சீவி தன்னை எளிதாக மாற்றிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கும் தெலுங்கு தேசத்துக்கும் மாற்றாக கடந்த 2008-ல் ஓர் அரசியல் கட்சியை ஆந்திர மாநிலத்தில் சிரஞ்சீவி தொடங்கினார்; திருப்பதியில் ஆரவாரமாகத் தொடங்கிய அவருடைய கட்சிக்கு அவர் பிரஜா ராஜ்யம் என்று பெயரிட்டார். 2009 மக்களவைத் தேர்தலில் அவருடைய வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 294 இடங்களைக் கொண்ட ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் சிரஞ்சீவியின் பிரஜாராஜ்யம் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு நடந்த முதல் சட்ட மன்றத் தேர்தலில் நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆரும் என்.டி.ராமராவும் அவரவர் மாநிலங்களில் முதலமைச்சர்களானார்கள். 1972-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய எம்.ஜி.ஆர்., 1977-ல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். என்.டி.ராமராவ் 1982-ல் தெலுங்குதேசம் கட்சியைத் தொடங்கி 1983-ல் ஆந்திர முதலமைச்சரானார். இவர்களைப் போலவே 2008-ல் கட்சியைத் தொடங்கிய சிரஞ்சீவிக்கும் 2009 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக வந்து விடலாம் என்ற கனவு இருந்திருக்கலாம். ஆனால், அவருடைய அந்தக் கனவு சிதைந்தது; அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை அவர் பொறுத்திருக்கலாம்; ஆனால் அப்போதும் தனியாக கட்சி நடத்தி, காங்கிரஸையும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தையும் எதிர்த்து மூன்றாவது அணியாக நின்று முதல்வராவது மிகவும் கஷ்டம் என்பதை சிரஞ்சீவி புரிந்து கொண்டிருப்பார் போலிருக்கிறது.

புலி வாலைப் பிடித்தாகி விட்டது. பிடித்த அந்த வாலை இனி விட முடியாது. அதனால் அரசியலில் இருந்து தான் ஆக வேண்டும். தனியாக கடை நடத்தி அதிகார மையங்களின் கதவருகே போக முடிகிறது; ஆனால் கதவைத் திறந்து மையத்துக்குள் போக முடியவில்லை. முதலமைச்சர் பதவியை எப்படியும் எதிர்காலத்தில் எட்டிப் பிடித்தாக வேண்டும்; என்ன செய்வது? அதுவரை தற்காலிகமாக ஏதாவது ஓர் ஏற்பாட்டில் ஏதாவது பதவியில் இருந்து அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும். மாநிலத்திலோ மத்தியிலோ அமைச்சராக இருக்கலாம். மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அதே சமயத்தில் காங்கிரஸ் மிகவும் கடுமையான நெருக்கடியிலும் இருக்கிறது. தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது தீவிரமான போராட்டங்கள் நடக்கின்றன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தனியாக கட்சி தொடங்கி இருக்கிறார். சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெகன்மோகனை ஆதரிக்கிறார்கள். ஜெகன் மோகன் எப்போது நினைத்தாலும், அப்போது ஆட்சியில் இருந்து காங்கிரஸ் இறங்க வேண்டியதுதான் என்ற நிலை!

கதாநாயகிக்கு வில்லன்களால் ஆபத்து வரும்போது, எவ்வளவு தொலைவில் இருந்தாலும் திடீரென்று குதித்து நாயகியை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது சினிமாவில் கதாநாயகர்களுடைய குணம்! ஆந்திர மாநிலத்து காங்கிரஸ் ஆட்சி நெருக்கடியில் இருக்கிறது. எங்கிருந்தோ சிரஞ்சீவி வந்தார். தன்னுடைய பிரஜா ராஜ்யம் கட்சியை அப்படியே காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொள்கிறேன் என்றார். இப்போது ஆந்திர முதல்வர் கிரண்ரெட்டி சற்று மூச்சு விடலாம்; சிரஞ்சீவி கட்சியிலும் 2 எம்.எல்.ஏ.க்கள் ஜெகன்மோகனை ஆதரிக்கிறார்கள். அவர்களைக் கணக்கில் எடுக்காமல் தவிர்த்து விட்டால் கூட, 16 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக கிடைத்திருக்கிறார்கள். இந்த ‘டீல்’ காரணமாக சிரஞ்சீவிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியும் கிடைக்கலாம். உரிய நேரத்தில் அல்லது அடுத்த தேர்தலில் ஆந்திர முதலமைச்சர் வேட்பாளராக சிரஞ்சீவி முன்னிறுத்தப்படலாம்; அல்லது இப்போதே மாநில அரசியலில் முக்கிய பொறுப்பைக் கொடுத்து தெலுங்கானா, ஜெகன்மோகன் பிரச்னைகளை எதிர்கொள்ளச் செய்யலாம்; டெல்லியில் அதிகாரத்தைக் குவித்து வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து என்.டி.ராமராவ் அரசியல் நடத்தினார். அதற்கு நேர் எதிராக, சிரஞ்சீவி மாநிலக் கட்சியைத் தொடங்கி பிறகு காங்கிரஸூடன் இணைகிறார்!

வில்லன்களாலும் வில்லிகளாலும் சூழப்பட்டிருக்கும் அபாயமான ஒரு நிலையில் இருந்து ஹீரோயினை சினிமா கதாநாயகர்கள் காப்பாற்றுவார்கள் என்ற கதை தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது? நேரடியாக அரசியல் பிரசாரம் செய்வதற்கு ரஜினியும் கமலும் வர மாட்டார்கள் என்றாலும் பொது மேடைகளில் முதல்வர் கருணாநிதியின் அருகில் ‘துவார பாலகர்களாக’ அவர்கள் தரிசனம் தருகிறார்கள். விஜய் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக வார்த்தைகளை உதிர்க்கிறார். அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பவர்களால் தொல்லைக்குள்ளாவதை முதல்வர் இருந்த மேடையில் அஜித் போட்டு உடைத்தார். முன்னாள் ஹீரோ கார்த்திக் இப்போது காமெடியன் போல் இருந்தாலும் ஆட்சிக்கு எதிரான அணியில் தன்னை இணைத்திருக்கிறார். ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி ஆரம்பிக்கும் முன்னாலேயே தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கி இதுவரை தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் பிடிபிடியென்று மேடைகளில் பிடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த் இந்த முறை தன்னையும் தன் கட்சியையும் பாதுகாத்துக் கொள்வதற்காக கூட்டணி சேரும் முடிவை எடுப்பார் என்று அவருடைய பேச்சுக்களில் இருந்து அறிய முடிகிறது!

சரி, விடுங்கள்! காங்கிரசில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி விலகினால், சிரஞ்சீவி வந்து சேர்கிறார். புதுவையில் முன்னாள் முதல்வர் ரெங்கசாமி காங்கிரசில் இருந்து விலகி புதுக் கட்சி தொடங்கி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ‘அறிவுரை’ சொல்லி இருக்கிறார். ”காங்கிரசின் அடையாளத்தை இழந்துவிட்டால், மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள் கூட சாதாரண மனிதர்களாகி விடுவார்கள்” என்று அவர் பேசி இருக்கிறார். மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதலமைச்சர் வைத்தியலிங்கம் எல்லோருக்கும் காங்கிரஸ் தான் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தனிமனிதர்களை விட அமைப்பு பெரியது என்பதை வலியுறுத்துவதற்காக ஒருவர் இப்படிச் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், நம்முடைய மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை முதன்முதலாக மத்திய நிதியமைச்சராக மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியில் அமர்த்தியது அவர் இப்போது குறிப்பிடும் காங்கிரஸ் அல்ல; ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் என்ற மாநிலக் கட்சியே அவருக்கு அப்படி ஒரு பெருமையையும் அடையாளத்தையும் கொடுத்தது! தமிழ் மாநில காங்கிரசும் காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்த கட்சிதான் என்று சிலர் விளக்கம் கொடுக்க முன்வரலாம். அப்படியென்றால், அதே விளக்கத்தை ரெங்கசாமியாலும் கொடுக்க முடியும். இப்போது கட்சியை காங்கிரசில் இணைத்ததன் மூலம், சிரஞ்சீவி வேறொரு அடையாளத்தை இழந்திருக்கிறார்! அவர் மத்திய அமைச்சராகலாம்; ஆந்திர முதலமைச்சர் ஆகலாம்; ஆனால் மக்கள் அவரை வேறுவிதமாகவே இதுவரை பார்த்தார்கள்; யாரையும் எளிதில் வீழ்த்தும் சூப்பர் ஹீரோ அவர் என்று நினைத்தார்கள்; காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததன் மூலம் அந்த பிம்பத்தை சிரஞ்சீவி இழந்திருக்கிறார்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home