Saturday, February 19, 2011

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

“இந்த சதுக்கத்தில் இருந்து வெளியில் வரும்போது நான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பேன். அல்லது இங்கேயே செத்துப் போவேன்” என்று ஆவேசமாக சொல்கிறான் ஒரு இளைஞன். இந்த ரிப்போர்ட்டர் இதழ் உங்கள் கைகளில் இருக்கும் போது அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. இரண்டுமே நடக்காமல் அந்த இளைஞன் அந்த விடுதலை சதுக்கத்தில் இருந்து கொண்டே அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கலாம். அவன் அங்கே தனியாளாக இல்லை. ‘அதிபர் முபாரக் பதவி விலகும்வரை இங்கிருந்து நகர மாட்டோம்’ என்ற முடிவுடன் ஏராளமான மக்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய உணவு, மருந்துகள் எல்லாம் தினமும் வெளியில் இருந்து மக்கள் கொண்டு வந்து தருகிறார்கள். தற்காலிக கூடாரங்கள் மருத்துவமனைகளாக செயல்படுகின்றன. சிறுவர் சிறுமியரில் இருந்து முதியவர்கள் வரை எல்லா வயதைச் சேர்ந்தவர்களும் அங்கே இருக்கிறார்கள்.

ஆனால் அந்த சதுக்கத்துக்கு வெளியே 25 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஒரு கூட்டம் வருகிறது. அதிபர் முபாரக்குக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பிக் கொண்டு அவர்கள் வருகிறார்கள். குதிரைகளிலும் ஒட்டகங்களிலும் அவர்களில் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். போராடிக் கொண்டிருக்கும் எகிப்தியர்களை அந்தக் கும்பல் தாக்குகிறது. மதமோ, இனமோ, மொழியோ அவர்களைப் பிரிக்கவில்லை. இருந்தும் அந்தக் கும்பல் கையில் இருக்கும் துப்பாக்கியால் சுடுகிறது. போராட்டக்காரர்களிடம் பிடிபட்ட அந்தக் கும்பலில் சிலர் காவலர்களுக்கான அடையாள் அட்டையுடன் இருந்தார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய செய்தி. அதிபருடைய ஆதரவாளர்கள் என்ற போர்வையில் சீருடை அணியாத காவலர்கள் போராளிகளைத் தாக்குவது எல்லா இடங்களிலும் ‘நிர்வாக நடைமுறை’ போலிருக்கிறது!

பல மணி நேரம் இரண்டு தரப்பில் இருந்தும் கற்கள் வீசப்படுகின்றன. முதல் நாள் மூவர் பலி என்ற செய்தி வந்தது. அடுத்த நாள் பத்து பேர் இறந்து போனதாக சொல்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் காயம் அடைந்திருப்பதாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. ஜனவரி மாதம் 25-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தின் முதல் வாரத்தில் பாதுகாப்புப் படையினருடைய தாக்குதலுக்கு 100 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்பது வேறு செய்தி. இந்த வரிகளை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது நிலைமை கட்டுக்குள்ளும் வந்திருக்கலாம்; அல்லது இன்னும் மோசமாகப் போய் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.

உயிரையும் கொடுக்கத் தயாரான நிலையில் இந்தப் போராட்டத்தில் குதித்திருக்கும் அவர்கள் ஏன் அதிபர் முபாரக்கை பதவி விலகச் சொல்கிறார்கள்? 1967-ம் வருடத்தில் இருந்து எகிப்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. 1980-ம் வருடம் விலக்கிக் கொள்ளப்பட்டு 18 மாதம் மட்டுமே ஜனநாயகக் காற்றை எகிப்து மக்கள் சுவாசித்தார்கள். அதன் பிறகு 1981-ல் அதிபர் அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் நெருக்கடிநிலை கொண்டுவரப்பட்டது. எகிப்திய அரசமைப்புச் சட்டம் என்னென்ன உரிமைகளை எல்லாம் பாதுகாப்பதாக சொல்லி இருக்கிறதோ, அவற்றில் பல முடக்கப்பட்டன. செய்தித் தணிக்கை அமலில் இருக்கிறது. வீதி ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டன. ஆட்சிக்கு எதிரான சிறு முணுமுணுப்பு கூட ஆயுதப் படையினரால் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டது. இந்த நெருக்கடிநிலைச் சட்டத்தின் கீழ் ஏறத்தாழ 17000 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். வேறு சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளையும் சேர்த்தால், அரசியல் கைதிகள் 30000 பேர் இருப்பார்கள் என்று தெரிகிறது.

ஏறத்தாழ முப்பது வருடங்கள் அனைத்து ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்கள் என்ன செய்வார்கள்? கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், தீவிரவாதிகள், மதவாதிகள், ஜனநாயகவாதிகள் என்று பல்வேறு பிரிவினரும் சேர்ந்து ஒரே அணியாக நிற்கிறார்கள். அவர்களுக்கு ஒரே கோரிக்கைதான். “முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும்.” ஆனால் அவர் என்ன சொல்கிறார்? “அரசியல் அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறேன். வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடாமல் விலகிக் கொள்கிறேன். அதுவரை என்னை பதவியில் நீடிக்க விடுங்கள்” என்கிறார். ஆனால் ஜனநாயகத்துக்கான போராட்டக்காரர்களோ, “அவர் இப்போதே பதவியில் இருந்து இறங்க வேண்டும்” என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இப்படித்தான் பல மன்னர்களின் சாம்ராஜ்யங்கள் சரிகின்றன. அவலமாக வாழ்ந்து வரும் வாழ்க்கை, மக்களை வீடுகளில் இருந்து வீதிக்கு விரட்டுகிறது. விலைவாசி உயர்வும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒவ்வொரு வீட்டிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகள், ஆட்சியாளர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் பணத்தையும் சொத்துக்களையும் குவித்துக் கொண்டு ஆடும் ஆடம்பர ஆட்டங்கள் ஆகியவை ஆட்சிக்கு எதிராக இனம்புரியாத வெறுப்பையும் கோபத்தையும் மக்களிடம் வளர்க்கின்றன. ஆட்சியில் இருந்து கொண்டு தங்களை வதைத்த சர்வாதிகாரியைப் பதவியில் இருந்து கீழே இறங்கு என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைப்பதற்கு இந்த உணர்வுகள் போதுமானவையாக இருக்கின்றன.

ஒரே ஒரு வாக்கியம் அல்லது கருத்து, மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து அவர்களை செயல்படத் தூண்டியது என்றால் அது மாபெரும் சக்தியாக வடிவெடுக்கும் என்பதை பல போராட்டங்கள் நமக்கு உணர்த்தி இருக்கின்றன. மிகவும் சமீபத்திய உதாரணம் துனிசியா நாட்டில் நடந்த மாபெரும் மக்கள் எழுச்சி. இயல்பாக மக்களிடம் எழக் கூடிய போராட்ட உணர்வை வழிநடத்துவதற்கு அரசியல் தலைமை திட்டங்கள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையிலும், ஒரு இளைஞனின் தீக்குளிப்பு ஏற்கனவே உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த மக்களை வீதிக்கு வரவழைத்தது. “ஏழை வர்க்கமே இணைந்து விட்டால், கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்” என்ற வரிகள் சொல்வதைப் போல, அந்த நாட்டின் அதிபர் நாட்டை விட்டே ஓடிவிட்டார். “விடிவெள்ளிதான் முளைக்கும்வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா, கிழக்கு முகம் வெளுத்து விட்டால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு” என்று நேபாள மக்கள் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.

இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் உலகத்தின் இன்ன பிற பகுதிகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே அவதாரம் எடுத்த அமெரிக்கா, பல நாடுகளில் தங்களுடைய நலனைப் பாதுகாக்கும் சர்வாதிகாரிகளையும் மன்னர்களையும் காப்பாற்றி வருகிறது. கடந்த முப்பது வருடங்களாக அப்படி பாதுகாக்கப்படும் சர்வாதிகாரிதான் எகிப்து அதிபர் ஹாஸ்னி முபாரக். அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் இணக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் எகிப்து, அமெரிக்காவிடம் இருந்து மிகவும் அதிகமான அளவில் உதவிகளைப் பெறுகிறது. எகிப்து மக்களுடைய ஒற்றுமையைப் பார்த்து அதிர்ந்து போன இஸ்ரேல், புதிய கோஷத்தின் மூலம் அந்த ஒற்றுமையைக் குலைக்க முயல்கிறது. “நான் ஆட்சியை விட்டு இறங்கினால், நாட்டில் குழப்பமும் சீர்குலைவுமே நடக்கும்” என்று முபாரக் சொல்வதை இஸ்ரேல் வேறு வார்த்தைகளில் வழிமொழிகிறது. “முபாரக் ஆட்சி இல்லாவிட்டால் எகிப்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கை ஓங்கி விடும்” என்று சொல்லி இஸ்ரேல் அமெரிக்காவிடம் முபாரக்கைக் காப்பாற்றுமாறு கோருகிறது. அமெரிக்கா என்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை. ஆனால், பல நாடுகளில் இருக்கும் அமெரிக்க எடுபிடி அரசுகள் ஒவ்வொன்றாக அதிகாரத்தை இழந்து கொண்டிருக்கின்றன.

எது எப்படியோ வன்முறை இல்லாத அஹிம்சைப் போராட்டம் மூலம் ஒன்றுபட்டு இருக்கும் மக்கள் சக்தியை எந்த அடக்குமுறையும் பணிய வைக்க முடியாது என்று எகிப்திய மக்கள் வரலாறு படைத்திருக்கிறார்கள். அவர்களை ஆதரிக்க வேண்டியது ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டிருக்கும் அனைவருடைய கடமை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home