Saturday, February 19, 2011

ஆசை தவிர்

பதவி, பணம் ஆகியவை தரும் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கை அல்ல; ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே அவை மகிழ்ச்சி தரும். அதற்குப் பிறகும் அவற்றின் பின்னால் ஓடினால் அதைப் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசி இருக்கிறார். கடந்த பிப்ரவரி முதல் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் ரண்பீர் சிங்கின் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் முன்னிலையில் சோனியா காந்தி இப்படிப் பேசி இருக்கிறார். ”நம்முடைய சுயநலத்தைத் தள்ளி வைத்துவிட்டு பொதுநலத்துக்காக நாம் பாடுபட வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நாம் மறக்கக் கூடாது” என்றும் அந்த மேடையில் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

எங்கே, எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் இப்படிப் பேசி இருக்கிறார் என்ற கேள்வி ஒரு மனிதனின் மனதில் எழுந்தால், அதை ஒருவர் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அவர் எந்த இடத்தில் இந்தக் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்? மத்திய தொலைத் தொடர்பு துறையின் விழா ஒன்றிலே சோனியா காந்தி இப்படிப் பேசி இருக்கிறார்; சோனியா காந்தியின் அந்தப் பேச்சு ஒரு தற்செயலான நிகழ்வா? அல்லது அந்தத் துறை தொடர்பாக பல மாதங்களாக நடந்து வருகின்ற சம்பவங்கள் அவரைப் பாதித்து இருப்பதால் அந்த மேடையையே இப்படிப் பேசுவதற்கு பயன்படுத்திக் கொண்டாரா? இப்படிப் பேசுவதற்கு முந்தைய நாள் தான், அவர் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கு தி.மு.கவுடன் கூட்டணியைத் தொடர்வது தொடர்பாக அவர்கள் இருவரும் கலந்து உரையாடி இருக்கிறார்கள்!

அதனால் தி.மு.க.அமைச்சர்களை மனதில் வைத்து அவர் பேசி இருக்க மாட்டார் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம். அது தவிரவும், முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் செயல்பாட்டால் மட்டுமே மத்திய அரசுக்கு நெருக்கடி வரவில்லை. பல்வேறு பதவிப் போட்டிகளாலும், பணம் குவிக்கும் ஊழல்களாலும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களே மத்திய ஆட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி இறந்த காலத்தில் எழுதுவது கூடத் தவறு என்பதை தினமும் செய்திகளில் வெளியாகும் முறைகேடுகள் உணர்த்துகின்றன. போபர்ஸ் பீரங்கி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களைப் பற்றியும் அவர் பேசி இருக்க வாய்ப்பில்லை. அப்படி என்றால் அவர் யாரை நோக்கி அந்த அறிவுரையை சொல்லி இருக்கிறார்? அரசியல் கட்சிகளையோ அல்லது அந்தக் கட்சிகளின் தலைவர்களையோ அவர் அப்படிக் கேட்டுக் கொள்ளவில்லை என்றால் வாக்களிப்பதோடு தங்கள் கடமை முடிந்து விடுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் நூறு கோடிக்கும் அதிகமான இந்திய மக்களைப் பார்த்தே அவர் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்!

இந்த கோடிக்கணக்கான மக்கள் எந்தப் பதவிக்காக ஆசைப்பட்டிருக்கிறார்கள்? இவர்கள் நிலையில் இருக்கும் எந்த ஒருவரும் மத்திய அமைச்சர் பதவிகளுக்காக அரசியல் தரகர்களிடம் பேரம் பேசுவதில்லை; ஆனால், அவர்கள் விரும்பாவிட்டாலும் அவர்களுக்கு சில பதவிகள் தேடி வருகின்றன. அவர்களுடைய வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வருகிறவர்கள் ‘நன்றி உணர்வுடன்’ எடுக்கும் சில கொள்கை முடிவுகள், இந்த சாதாரண மக்களுக்கு அந்த பதவியைக் கொடுத்து விடுகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த பத்தாண்டுகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு ‘சிவலோக’ பதவி இந்த வழியிலேயே கிடைத்தது. மீன்பிடிப்பதையும் கிடைத்த மீனை விற்று வாழ்க்கை நடத்துகிறவர்களுக்கு அவர்கள் கேட்காமலே இலங்கை கடற்படை ‘வைகுண்ட’ பதவியைக் கொடுக்கிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? அநியாயமான அந்தப் படுகொலைகளின்போது கூட அந்நியக் கொலையாளிகளைக் கண்டிக்காமல், ‘பேராசையால்’ மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்று தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளக்கம் கொடுக்கிறோம்!

கடுமையான விலைவாசி உயர்வாலும் தொழில் நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்காக நடக்கும் நிலப்பறிப்பாலும் இன்னும் பட்டியலிடப்படாத ஏராளமான காரணங்களாலும் வெறுமனே உயிரை மட்டும் உடலில் தக்க வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கும் நூறு கோடி மக்களைப் பார்த்து ’பதவி, பணம் தரும் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கை அல்ல’ என்று சோனியா காந்தி சொல்வார் என்றால், அதைவிட குரூரமான நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது! அவர் மக்களைப் பார்த்து சொல்லவில்லை என்றும் மக்கள் பிரதிநிதிகள் நடந்து கொள்ள வேண்டிய முறையையே அவர் பேசினார் என்றும் விளக்கங்கள் தரப்படலாம். அப்படி என்றால் அவர் இந்த கருத்தை நாடாளுமன்றத்தில் பேசி இருக்க வேண்டும்; காங்கிரஸ் செயற்குழுவிலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் இந்த அறைகூவலை விட்டிருக்கலாம். அதையும் தாண்டி ஒரு படி மேலே போக வேண்டும் என்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் உறுப்புக் கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்தி இருக்கலாம்! தேசிய வழிகாட்டும் குழுவின் தலைவர் என்ற முறையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கி மத்திய அமைச்சரவைக்கு உண்மையிலேயே நல்ல நிர்வாகப் பண்புகளைக் கற்றுக் கொடுக்கலாம்!

ஆனால் இவர்களிடம் எல்லாம் சோனியா காந்தி இப்படி ஆலோசனைகளைச் சொன்னதாக செய்திகள் இல்லை. அப்படியே அவர் அவர்களிடம் அறிவுரை சொன்னாலும் அவர்கள் கேட்பார்களா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் செய்யப்பட இருக்கும் திருத்தம் தொடர்பாக ஆட்சிக்கும் தேசிய ஆலோசனைக் கமிட்டிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. அரசியல்வாதிகள் மற்ற அரசியல்வாதிகளுக்கு ஆலோசனைகளையோ அறிவுரைகளையோ வழிகாட்டும் நெறிமுறைகளையோ சொல்ல முடியாது போலிருக்கிறது. சினிமா நடிகர்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் வரை எல்லோரும் சாதாரண மக்களுக்கு மட்டும் இலவச ஆலோசனைகளை வஞ்சம் இல்லாமல் அள்ளி வழங்குகிறார்கள். சினிமாவிலோ தொலைக்காட்சியிலோ அரசியலிலோ கொஞ்சம் பிரபலமாகி விட்டாலே, தாம் சொல்வதை மக்கள் கேட்டு நடப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நம்முடைய பிரபலங்கள் மத்தியில் இருக்கிறது. ஞானபீட்த்தில் அமர்ந்து கொண்டு மக்களை கீழ்நோக்கிப் பார்த்து அறிவுரை சொல்வது பலருக்கும் மிக எளிதாக வருகிறது!

நம்முடைய மக்கள் எதையும் தாங்குவார்கள். ”எவ்வளவு அடிச்சாலும் தாங்கறானே, இவன் ரொம்ப நல்லவனா இருக்கான்” என்று சொன்னால் போதும் போல இருக்கிறது. “எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்” என்பதும் “ஜனநாயகத்தில் மக்களே இறுதி எஜமானர்கள்” என்றும் சொல்வதன் மூலம் தங்கள் மீது விழும் அடிகளுக்கு எதிராக மக்களை முணுமுணுக்க விடாமல் வைத்திருக்கிறோம். அவர்களில் 65 சதவீதம் பேர் இரவில் எதுவும் சாப்பிடாமல் பட்டினியோடு படுக்கப் போகிறார்கள் என்று அரசே அறிக்கை தந்தாலும் அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை. பாதிக்கு மேல் படிக்கவோ எழுதவோ தெரியாதவர்களாக இருந்தாலும் ஏறத்தாழ எழுபத்தைந்து சதவீதம் பேர் மருத்துவ வசதிகள் இல்லாமல் இருந்தாலும் ஆட்சியாளர்கள் வருத்தப்படுவதில்லை. ஒருவேளை இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மக்களில் சிலர் புறப்பட்டால் என்ன செய்வது?

“பதவி, பணம் தரும் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கை அல்ல” என்று அவர்களுக்கு ஆலோசனை சொல்வோம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home