அத்தனைக்கும் கோபப்படு!
“நேர்மையே உன் விலை என்ன?” என்ற தலைப்பில் சென்ற இதழுக்கான பத்தியை எழுதி அனுப்பிய அடுத்த நாள் நேர்மைக்கு ஒருவர் உயிரையே விலையாகக் கொடுத்த செய்தி வந்தது. குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுக்கு நடுவில் அந்தக் குடும்பத்தின் இழப்பும் கதறலும் நம்முடைய காதுகளை எட்டவில்லை. குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் வரை மகாராஷ்டிர மாநிலத்தின் மாலேகான் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சித் தலைவராக இருந்த யஷ்வந்த் சோனாவானே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். சட்டவிரோதமாக பெட்ரோலில் மண்ணெண்ணெய் கலந்து விற்கும் பெட்ரோல் கலப்படக் கும்பலால் அவர் படுகொலை செய்யப்பட்டார். வேறு வேலையாகப் போய்க் கொண்டிருந்த அவருடைய வழியில் ஒரு பெட்ரோல் டேங்கர் லாரி நின்று கொண்டிருந்தது.
நாம் போகின்ற வழியில் நம்முடைய வேலையோடு தொடர்புடைய எத்தனையோ சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. நம்மில் எத்தனை பேர் அந்த இடத்துக்குப் போய் அங்கு நடக்கும் அத்துமீறல்களை பதிவு செய்கிறோம்? ஆனால் யஷ்வந்த் சோனாவானே நம்மைப் போல சுயநலம் கொண்டவர் இல்லை. அரசாங்கம் போட்டிருக்கும் சட்டங்களும் விதிகளும் நிர்வாகிகளால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை என்று தீவிரமாக அவர் நம்பினார். அதனால் அவருடைய வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த டேங்கர் லாரியில் என்ன நடக்கிறது என்று போய்ப் பார்த்தார். அங்கு நடந்து கொண்டிருந்த கலப்படப் பணியை அவருடைய செல்போனில் படம் பிடித்தார். அதற்குப் பிறகு அவருடைய வாகனத்துக்கு அவர் வருவதற்குள் ரவுடிக் கும்பல் ஒன்று அவரைச் சுற்றியது; அடித்துத் துவைத்தது; தாக்குதலைத் தாங்க முடியாமல் கீழே விழுந்த அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது. இந்திய ஆட்சி நிர்வாகத்தை மீண்டும் ஒரு முறை வன்முறையாளர்கள் தங்கள் காலடியில் மண்டியிடச் செய்திருக்கிறார்கள்!
இந்த வன்முறையாளர்கள் தனிநாடு கேட்டுப் போராடும் ‘தீவிரவாதிகள்’ அல்லர்; பழங்குடி மக்களின் நிலத்தைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் என்று துப்பாக்கிகளுடன் துணை ராணுவத்தை எதிர்கொள்ளும் ‘மாவோயிஸ்டுகளும்’ அல்லர்; ஒருவேளை இந்த மாவோயிஸ்டுகளையும் ‘தீவிரவாதிகளையும்’ அடக்கி ஒடுக்குவதற்கும் அழித்து ஒழிப்பதற்கும் பயன்படுகின்ற ‘தேசபக்தி கொண்டவர்களாக’ இந்த வன்முறைக் கும்பல் இருக்கக் கூடும். அரசாங்கத்தின் விதிகளை செயல்படுத்தும் ஓர் அதிகாரியைக் கொல்லும் துணிச்சலை இந்தக் கும்பல் எங்கிருந்து பெற்றது? ‘என்கவுண்டர்’ பற்றிய பயமோ, சிறைத் தண்டனை குறித்த கவலையோ கொஞ்சமும் இல்லாமல் இவர்களால் கொலைகளை இரக்கமில்லாமல் செய்ய முடிகிறது என்றால், இவர்களுக்குப் பின்னால் நின்று இயக்குபவர்கள் அதிகாரம் மிகுந்தவர்களாகத் தான் இருக்க முடியும்.
இந்த அதிகாரம் மிகுந்தவர்கள் என்ன செய்கிறார்கள்? சலுகை விலையில் 12 ரூபாய்க்குக் கிடைக்கும் மண்ணெண்ணெயை ஏறத்தாழ 60 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோலுடன் கலப்படம் செய்கிறார்கள். சட்டவிரோதமாக நடக்கும் இந்தத் தொழிலில் ஒரு வருடத்துக்கு 10000 கோடி ரூபாய் புழங்குகிறது என்று ஒரு செய்தி சொல்கிறது. நியாயவிலைக் கடைகளில் ஏழைகளுக்கு வழங்குவதற்காக சலுகைவிலையில் கொடுக்கப்படும் மண்ணெண்ணெயில் கிட்டத்தட்ட 38.6 சதவீதம் கறுப்புச் சந்தைக்கு கடத்தப்படுகிறது என்று மகாராஷ்டிர மாநிலத்தின் ‘அசோசம்’ எனப்படும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு அரசிடம் கொடுத்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது? ரேஷன் கடை ஊழியரில் தொடங்கி சிவில் சப்ளை டிபார்ட்மெண்ட் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரை இந்தக் கொள்ளையில் பங்கு பெறுவதால்தான் இந்த அநியாயம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு ரேஷன் கடையில் எத்தனை குடும்ப அட்டைகள் இருக்கின்றனவோ, அவற்றைப் பொறுத்து மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அது அட்டை வைத்திருப்பவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் குறிப்பிட்ட அளவில் மக்கள் வாங்குவதற்கு முன்னால், ‘சரக்கு இருப்பு இல்லை’ என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். பிறகு நிலுவையில் இருக்கும் மண்ணெண்ணெயை கறுப்புச் சந்தைக்கு அனுப்புகிறார்கள். ஆனால் எல்லா குடும்ப அட்டைகளுக்கும் கெரசின் கொடுக்கப்பட்டதாக பதிவு செய்து கொள்கிறார்கள். இது நன்றாகத் தெரிந்தாலும் ‘பறக்கும் படை’ அதிகாரிகள் அவ்வப்போது நியாயவிலைக் கடைகளை சோதனை போடுவார்கள். சோதனைகளைப் பார்த்தவுடன் நாம் எல்லாம் நியாயமாக நடப்பதாக நம்பி விடுவோம். பிறகு மாஃபியா கும்பல் கலப்பட வேலையை செய்யும். காவல்துறையின் உதவி இல்லாமல் இப்படி நடக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த விஷயம் எல்லாம் தெரியாமல் யாராவது நேர்மையான போலீஸ் அதிகாரி மாஃபியா கும்பலின் தொழிலை முடக்க நினைத்தால் அவரை மாற்றுவதற்கு அரசியல்வாதியின் துணை தேவை. அவர்களுடைய ஆதரவு இல்லாமல் ஓர் அணுவும் அசையாது!
இந்த சுழல் வட்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள் என்ற முடிவுக்கே ஒருவர் வர நேர்கிறது. இந்தக் கூட்டுக் கொள்ளையில் சம்பந்தப்படாமல் யாராவது ஒருவர் தீவிரமாக நேர்மையாக இருந்தால், அவரை அந்த கும்பல் உயிருடன் விடுவதில்லை. அப்படி யாராவது ஒரு நேர்மையாளர் கொல்லப்படும்போது, நாட்டில் மக்கள் மத்தியில் எழும் எழுச்சியை அடுத்து சில நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடுத்த சில மாதங்களில் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படும். பழைய நிலை மீண்டும் தொடரும் என்பதே இன்றைய நடைமுறையாகத் தெரிகிறது. இப்படித்தான் 2005-ல் மஞ்சுநாத் சண்முகம் என்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி கொல்லப்பட்டார். கலப்பட பெட்ரோலை விநியோகித்த இரண்டு பெட்ரோல் பங்குகளை அவர் ’சீல்’ வைத்து மூடினார். அவருடைய தலையீட்டை விரும்பாத எண்ணெய் மாபியா அவரைக் கொன்று விட்டு அதனுடைய லாப வேட்டையைத் தொடர்ந்தது. அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு உ.பி.யில் பிரஜேந்திர விக்ரம் சிங் என்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி வீட்டிற்குள் ஒரு கும்பல் புகுந்து அவரைக் கத்தியால் குத்தியது.
ஆனால் முன்னெப்போதையும் விட இந்த முறை மகாராஷ்டிர மாநில அரசு ஊழியர்கள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி, தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதனால் மாநில அரசு சில நடவடிக்கைகளை வேகமாக எடுக்கிறது. 200 பெட்ரோல் நிலையங்களில் ‘சோதனை’ நடந்திருக்கிறது. எண்ணெய் டேங்கர்கள் எங்கு செல்கின்றன என்பதைக் கண்டறியும் ஜி.பி.எஸ் எனப்படும் கருவி மூலம் கண்காணிக்கப்படும் என்கிறது அரசு. சலுகை விலையில் கொடுக்கப்படும் மண்ணெண்ணெய் கறுப்புச் சந்தைக்குப் போகக் கூடாது என்பதற்காக, நியாயவிலைக்கடை கெரசின் நிறத்தை நீலமாக்கிப் பார்த்த அரசு, அதன் பிறகு அனைத்தையும் கைவிட்டது. எண்ணெய் மாஃபியாவைக் கட்டுப்படுத்துவதற்காக லீனா மெஹெண்டேல் என்ற அதிகாரி முன்வைத்த பல ஆலோசனைகளை அரசு கருத்தில் கொள்ளவில்லை என்று தற்போது செய்தி போடுகிறார்கள். இப்போதும், யஷ்வந்த் சோனாவானே கொலை செய்யப்பட்டதாலும் அந்த செய்தியைக் கேட்டு அந்த மாநில மக்கள் எழுச்சியுடன் அந்த அரசை எதிர்ப்பதாலும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சொல்கிறது!
பெட்ரோலில் மட்டுமல்லாமல், பாலில் கலப்படம் செய்யும் தொழிலும் அந்த மாநிலத்தில் கொடிகட்டிப் பறக்கிறது என்கிறது ஒரு செய்தி. மத்திய அரசில் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு கூட்டணி நிர்ப்பந்தங்கள் தடையாக இருக்கிறது என்கிறார்கள். மனித உயிர்களோடு விளையாடும் கலப்படக் கும்பல்களை இல்லாமல் ஒழிப்பதற்கு எது தடையாக இருக்கிறது?
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
0 Comments:
Post a Comment
<< Home