Saturday, February 19, 2011

இந்திய அவமானப் பணி அதிகாரிகள்!

அமைதியான காலை நேரம். ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்துக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டு நிர்வாகம் செய்த லண்டன் மாநகரம். மாநகரின் அந்தப் பகுதி எப்போதும் அமைதியாகவே இருக்கும். ஆனால் அன்று அந்த நேரத்தில் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு பெண்ணின் கூக்குரலும் அழுகையும் கூச்சலும் வெளியில் கேட்டது. சில நொடிகளில் அந்தப் பெண்ணும் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தார். அவரது உடலில் கீறல்கள்.. கீறல்களில் இருந்து ரத்தம் வழிந்தது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் காவல்துறையிடம் புகார் சொன்னார்கள். விரைந்து வந்தது ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. ஆனால் வந்த அதிகாரியால் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை. ஏனென்றால் ‘வெளிநாட்டு தூதரக’ அதிகாரிகளுக்கு சிறப்பான சலுகைகளும் உரிமைகளும் அந்த அதிகாரியின் கைகளைக் கட்டிப் போட்டிருந்தன!

ஒரு நாட்டின் சட்டத்துக்குப் புறம்பாக, அந்த நாட்டில் இருக்கும் வேறு நாட்டு தூதரகத்தில் ஏதேனும் தவறு நடந்தால் கூட, தவறு செய்யும் அந்த வெளிநாட்டு அதிகாரிகளுக்கு நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் ‘விடுபாட்டு உரிமை’ இருக்கிறது. அந்த விடுபாட்டு உரிமையில் இருந்து விலக்களித்து விசாரணையையும் அதன் மீதான நடவடிக்கையையும் எடுக்கலாம் என்று பிரிட்டனிடம் அந்த தூதரக அதிகாரியின் நாட்டு அரசு சொன்ன பிறகே அந்த அதிகாரி மேல் உள்ளூர் சட்டப்படி பிரிட்டன் நடவடிக்கை எடுக்கும்! பல சமயங்களில் தவறு செய்யும் அதிகாரிகள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதைத்தான் பார்க்க முடிகிறது!

‘அன்று டிசம்பர் 11. காலை 9.30மணி இருக்கும். என்.டபிள்யூ 11, காரிங்கம் ரோடு என்ற முகவரியில் ஒருவர் தாக்கப்பட்டதாக புகார் வந்தது. அந்த முகவரிக்கு நேரில் போய், 40 -களில் வயது இருந்த ஓர் ஆணிடம் விசாரித்தோம். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை’ என்று ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையின் அதிகாரி ஒருவர் அந்த நிகழ்வை உறுதி செய்தார். ஆனால், கொடுமைப்படுத்தப்பட்ட அந்தப் பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவரோ, அந்த நாடு என்ன சொன்னது? ”நாங்கள் அந்த விவகாரத்தை கவனமாகப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம். இது தனிமனிதர்களின் அந்தரங்கமான விஷயம்; மிகவும் உணர்ச்சிமயமான விஷயம். இப்போதைய நிலையில் இது குறித்து கருத்து சொல்வது அவசரப்பட்டுப் பேசுவதாகவே இருக்கும். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான இந்த பிரச்னை, இரு தரப்பின் மனநிறைவோடு பேசித் தீர்க்கப்படும் என்று இப்போது எதிர்பார்க்கிறோம்” என்பதே அந்த நாட்டின் நிலை!

குடும்ப வன்முறையில் காயம்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் பரோமிதா ராய். அவரை அடித்த அந்தக் கணவனின் பெயர் அனில் வர்மா. லண்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தில் மூன்றாவது நிலையில் இருக்கும் அதிகாரி. அந்த அதிகாரி அவருடைய மனைவியை அடிப்பதற்கு அப்படி என்னதான் காரணம்? கிறிஸ்துமஸ் மரம் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்ட மகனுக்கு அப்பா புதிதாக ஒன்று வாங்கிக் கொடுக்கலாம் என்றார். அம்மா ‘புதுசு தேவையில்லை. போன வருஷம் வாங்கியது இருக்கிறது. அதையே வைத்துக் கொள்ளலாம்’ என்று சொல்லி இருக்கிறார். ஆனால் பக்கத்தில் வசிக்கும் அனில் வர்மாவின் சித்தி, பேரனுக்கு புதிதாக ஒரு கிறிஸ்துமஸ் மரம் வாங்கிக் கொடுத்து விட்டார். அதை பரோமிதாவும் வாங்கி வீட்டுக்குள் வைத்து விட்டார்!

அனில் வர்மாவுக்கு அவமானம் தாங்கவில்லை. மனைவி வாங்கி வைத்த கிறிஸ்துமஸ் மரத்தை வெளியில் தூக்கிப் போட அனில் வர்மா முயன்றார். அதை மனைவி தடுத்தார். கூச்சல், அடிதடி, அழுகை, காயம், ரத்தம், புகார், காவல்துறை, விசாரணை என்று அடுத்தடுத்துப் போய் இப்போது அவர் இந்தியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டு இருக்கிறார்! ‘விடுபாட்டு உரிமையில் இருந்து வர்மாவுக்கு விலக்களியுங்கள்; அல்லது அவரை இந்தியாவுக்குத் திருப்பி அழைத்துக் கொள்ளுங்கள். எங்கள் நாட்டில் தூதர்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று பிரிட்டன் கறாராக நடந்து கொண்டதன் விளைவாக அனில் வர்மா இப்போது இந்தியா வருகிறார்!

மனைவியை தாக்குவது பிரிட்டனுக்கு பெரிய குற்றமாகத் தெரிகிறது. ஆனால், இந்திய வெளியுறவுத் துறைக்கு இது ஒரு பெரிய குற்றமாகத் தெரிவதில்லை. நாம் ‘பெருமையோடு’ கொண்டாடும் ‘இந்திய’ மரபு, மனைவியை கணவன் அடிப்பதையோ, குழந்தைகளை பெற்றோர் அடிப்பதையோ வன்முறையாக ஏற்றுக் கொள்வதில்லை. மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட ‘மனைவி தப்பு செய்தால் கணவன் அடிப்பான்தான்! இதுல என்ன தப்பு இருக்கு?’ என்று அடிவாங்கும் மனைவிகளே பேசுவதை நாம் காண முடிகிறது.

குடும்ப வன்முறை என்று சொன்னால் நம் கண் முன்னால் என்ன பிம்பம் வருகிறது? கூலி வேலை பார்க்கும் ஒருவர் ராத்திரி குடித்துவிட்டு வந்து மனைவியை குடிசையில் இருந்து வெளியில் இழுத்துப் போட்டு அடிக்கும் காட்சியே நம் கண் முன்னால் விரிகிறது. ஒரு நாட்டின் பிரதமருடைய வீட்டில் இருந்து திடீரென்று ஒரு நாள் இரவு ஒரு மருமகள் வெளியேற்றப்படும் பிம்பம் நம் மனதில் தோன்றுவதில்லை. இந்தியாவுக்குள் இருந்தாலும் சரி, வெளிநாடுகளில் இருந்தாலும் சரி, இந்திய உயர் நடுத்தர வீடுகளிலும் பணக்கார வீடுகளிலும் கூட, ‘என்னுடைய வீட்டில் இருந்து வெளியே போ’ என்று நள்ளிரவில் ஒரு கணவன், தன்னுடைய மனைவியைத் தூக்கி எறியும் காட்சி நம் கற்பனையில் வருவதில்லை. ஆனால் அனில் வர்மாக்கள் நம்முடைய முகத்தில் ஓங்கி அறைகிறார்கள்! மிருகத்தனமான செயல்பாட்டுக்கு சாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடுகள் இல்லை என்ற படிப்பினையைத் தருகிறார்கள். படிப்பு, பணம், பதவி போன்றவை எந்தவித நாகரிகமான பண்பாட்டையும் கற்றுக் கொடுப்பதில்லை என்று நமக்குப் புரிய வைக்கிறார்கள். தன்னைப் போலவே ரத்தமும் சதையும் உயிரும் உணர்வும் கொண்டவர்களாக மனைவி உள்ளிட்ட சக மனிதர்களை மதிப்பதற்கு நம்முடைய ‘மரபு’ சொல்லிக் கொடுப்பதில்லை என்பதை இவர்கள் அடிக்கடி நினைவுபடுத்துகிறார்கள்!

வெளிநாடுகளில் ‘இந்தியப் பெருமையை’ நிலைநாட்டும் பணி அனில் வர்மாவுடன் நின்றுவிடவில்லை என்பதை நீங்கள் சில நாட்களுக்கு முன் வந்த இன்னொரு செய்தி மூலம் அறிந்திருப்பீர்கள். அலோக் ரஞ்சன் ஜா என்ற அதிகாரி, நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானம் ஒன்றில் ஒரு பெண்ணிடம் வம்பு செய்தார் என்று ஒரு புகார். அதன் அடிப்படையில் அவரும் இந்தியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருக்கிறார். வல்லுறவு, கொலை போன்ற செயல்களைப் பெரிய குற்றங்களாக ஏற்றுக் கொள்ளும் நம்முடைய மனநிலை, குடும்பங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்செயல்களை மட்டும் தீவிரமான குற்றங்களாக ஏன் பார்ப்பதில்லை? அவற்றை நாம் தினசரி எதிர்கொள்ளும் ‘அன்றாட நிகழ்வுகளாக’ நம்மை ஏற்றுக் கொள்ளச் செய்வது எது? சட்டரீதியாக தண்டனைக்குரிய குற்றமாக இருந்த போதிலும், கணவன் அடித்தால் மனைவி பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நம்மைக் கட்டிப் போடுவது எது? கண்ணுக்குத் தெரியும் விலங்குகளில் இருந்தே விடுபடுவதற்கு முயற்சி எடுக்காத நாம், நம்மைச் சுற்றிப் பின்னியிருக்கும் கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய சங்கிலிகளை எப்போது அறுத்தெறியப் போகிறோம்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home