நேர்மையே உன் விலை என்ன?
“அவர் நேர்மையாக இருந்தவர்தான். ஆனால் இப்போது அவரை அப்படி சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அவர் ஊழல் செய்யும் அமைச்சர்களைப் பாதுகாக்கிறார்” என்று மூத்த வழக்கறிஞரும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்களில் ஒருவருமான ராம் ஜேத்மலானி ஒரு தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் சொன்னார். யார் அந்த ‘அவர்’ என்பதை இன்றைய அரசியலை ஊன்றிக் கவனிப்பவர்களுக்குத் தனியாக விளக்க வேண்டியதில்லை. “இந்த அரசாங்கம் ஊழல்கள் நிறைந்த அரசாங்கம்; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் புதிது புதிதாக ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் அந்தப் பதவியில் இல்லாமல் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்” என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் டாக்டர் மன்மோகன்சிங்கை கண்டனம் செய்தார்!
ராம் ஜேத்மலானி எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்; சர்ச்சைக்குரிய பல விஷயங்களில் அவர் தன்னை இணைத்துக் கொள்பவர் என்று சித்தரிக்கப்பட்டவர்; சத்தீஸ்கர் நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை கொடுக்கப்பட்ட மருத்துவர் பினாயக்சென்னுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் கட்டணம் எதுவும் வாங்காமல், வாதாடப் போவதாக அறிவித்து இருக்கிறார். இதைப் போல பல வழக்குகளில் ‘பொதுவான மக்கள் மனநிலைக்கு’ எதிரான பல செயல்களை அவர் உற்சாகமாக செய்பவர். அதனால் அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிலர் சொல்லக் கூடும். ‘சொல்வது யார் என்பது முக்கியமில்லை; என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து அது உண்மையா என்று பார்ப்பதே அறிவு’ என்று நமக்கு காலம் காலமாக கற்பிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய ‘துரதிர்ஷ்டம்’ என்ன என்றால், நமக்கு இந்த விளக்கங்களை எல்லாம் கொடுத்தவர்கள், ‘பொருளைப்’ பார்க்காமல் அதைப் பேசுபவர்கள் யார் என்ற மரபணு ஆராய்ச்சியில் அடிக்கடி இறங்கி விடுவதுதான்!
ராம் ஜேத்மலானி சொன்னார் என்பதை விட்டு விடுங்கள். கடந்த சில மாதங்களாக பல ஊடகங்களில் பல பத்திரிகையாளர்களும் பல அரசியல் விமர்சகர்களும் பிரதமர் மன்மோகன்சிங்கின் ‘நேர்மை’ குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். நேர்மை என்பது என்ன? உங்களுக்குக் கொட்டிக் கொடுக்க சிலர் தயாராக இருந்தாலும் அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்காமல், அவர்களிடம் இருந்து சல்லிக்காசு கூட வாங்காமல் இருப்பது மட்டும்தானா? மன்மோகன்சிங் கோடிக்கணக்கான ரூபாய்களை முறைகேடாக வாங்கி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார் என்று அவருடைய ‘மோசமான எதிரி’ கூட குற்றம் சாட்டுவதில்லை. அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் தங்கமும் வைரமுமாக வாங்கிக் கொடுத்தார் என்று எந்தப் பத்திரிகையும் எழுதியதில்லை. டெல்லிக்கு வெளியில் பண்ணை வீடுகளை விலைக்கு வாங்கினார் என்று யாரும் சொன்னதில்லை. ஆனாலும் ஊடகங்களில் அவருடைய ‘நேர்மை’ கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
ஏனென்றால், அமைச்சரவை அமைப்பதில் இருந்து ஆட்சி நிர்வாகத்தின் அன்றாட செயல்கள் வரை ஒன்றிரண்டு நபர்களின் நலன்களை முன்னிறுத்தியே அனைத்தும் நடக்கின்றன என்று தெரிந்தாலும் எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் அவற்றை அவர் சகித்துக் கொள்கிறார். இந்திய ஜனநாயக அமைப்புக்கு உள்ளேயே ஒன்றை ஒன்று சமன்செய்து நிர்வாகம் ஜனநாயகரீதியாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக, இந்திய அரசமைப்புச் சட்டம் சில நிறுவனங்களுக்கும் பதவிகளுக்கும் அதிகாரத்தையும் சிறப்பு உரிமைகளையும் கொடுத்திருக்கிறது. அந்தப் பதவிகளிலும் நிறுவனங்களிலும் ’சர்ச்சைக்குரிய’ மனிதர்களை நியமித்து, அவற்றின் சுதந்திரத்தன்மை அதிகமாகக் கேலி செய்யப்பட்டது டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருக்கும்போதுதான்!
இந்தியாவின் பிரதமராக 2004 –ம் வருடம் மன்மோகன்சிங் பதவி ஏற்றார். 2007-ல் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பிரதிபா பாட்டீல் அறிவிக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சி அவர் மீது பல புகார்கள் சொன்னது. வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. காங்கிரஸ் கட்சியிலே கூட அதற்கு எதிராக முணுமுணுப்பு இருந்தது. அதற்கும் முன்னால் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிபுசோரன் உள்ளிட்டவர்களைத் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். இந்தியத் தேர்தல் ஆணையம், ஊழல் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு ஆணையம் போன்ற அமைப்புகளில் சர்ச்சைக்குரியவர்கள் நியமிக்கப்பட்டபோது, பிரதமர் மன்மோகன்சிங் எதுவும் பேசவில்லை. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம், 2ஜி ஸ்பெக்ட்ரம் என்று ஊழல் பட்டியல் நீண்டது. ஆனால் நாட்டின் பிரதமர் என்ற முறையிலோ காங்கிரஸ் கட்சியின் ‘மிஸ்டர் க்ளீன்’ என்ற முறையிலோ டாக்டர் மன்மோகன்சிங் ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதாகத் தெரியவில்லை.
இப்படிச் சொல்வதற்காக நீங்கள் கோபமோ வருத்தமோ கொள்ளத் தேவையில்லை. தனிப்பட்ட முறையில் கூட டாக்டர் மன்மோகன்சிங் உண்மைக்கு மாறான தகவலைக் கொடுத்திருப்பதாக நம்ப இடம் இருக்கிறது. அவர் ஏறத்தாழ ஏழு வருடங்கள் பிரதமராக இருந்தாலும் கூட, அவர் மக்களவையின் உறுப்பினர் கிடையாது. மாநிலங்களவை உறுப்பினராகவே அவர் இன்னும் நீடிக்கிறார். இதில் சட்டவிரோதமாக என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சட்டவிரோதமாக இதில் எதுவும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நேர்மையாளராக பெரும்பாலான மக்களால் போற்றப்படும் மன்மோகன்சிங் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அஸ்ஸாம் மாநிலத்தில் அவர் தொடர்ந்து ஏழு நாட்கள் தங்கி இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் அவர் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அங்கு வசிப்பதாக சொன்னது அவருடைய நேர்மைக்கு உடன்பாடான செயலாக இருக்க முடியாது.
இந்தப் பட்டியல்கள் எல்லாம் சில ஆண்டுகளாக இருக்கின்றன. அப்போதெல்லாம் படிப்படியாக சரிந்து கொண்டிருந்த மன்மோகன்சிங்கின் நற்பெயர் ‘ராடியா கேட்’ எனப்படும் தொலைபேசி உரையாடல்கள், தொலைத் தொடர்புத் துறையில் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் ஊழல் புகார் போன்றவற்றிற்குப் பிறகு மிகவும் வேகமாக கீழிறங்கி விட்டது. மன்மோகன்சிங் போன்ற மனிதர்களை எப்போதும் உயர்த்திப் பேசும் பத்திரிகையாளர் ‘சோ’ ராமசாமி போன்றவர்கள் கூட அவருடைய நேர்மையைக் கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டார்கள். கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இருக்கலாம். கூட்டணி நிர்ப்பந்தங்கள் அவருக்கும் அவருடைய கட்சித் தலைமைக்கும் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் முறைகேடுகளை நியாயப்படுத்த முடியாது.
‘தவறான கட்சியில் சரியான மனிதர்’ என்று ஊடகங்களும் எதிர்த்தரப்புத் தலைவர்களும் பாராட்டி மகிழ்ந்த அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இதே சங்கடங்கள் அவருக்கும் இருந்தன. 2002-ல் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகள் நடந்த போது, முதலமைச்சர் நரேந்திர மோடியைப் பதவி விலகச் செய்ய பிரதமர் வாஜ்பாயால் முடியவில்லை. மோடி பதவி விலக வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று தகவல்கள் சொன்னாலும் அதை அவர் துணிச்சலுடன் கட்சிக்குள் எடுத்துச் செல்லவில்லை. இப்படி செயல்வடிவம் பெறாத வெற்று வார்த்தைகளால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. செயல்வீரர்களாக அறியப்பட்டவர்கள் எல்லாம் அரசியல் சதுரங்கத்தில் வெறும் மேடைப் பேச்சாளர்களாகவும் முறையீடு செய்பவர்களாகவும் ‘சுருங்கிப்’ போவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது.
எந்தவித பின்னணியும் இல்லாமல் களத்தில் நின்று நியாயத்துக்காக குரல் கொடுக்கும் சாமான்ய மனிதர்கள் அரசியல் தலைவர்களுக்கு முன்னோடியாக இருக்கிறார்கள். அவர்கள் அநியாயமாக கொடியவர்களால் கொல்லப்பட்டும் வருகிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகவும் இன்ன பிற வழிகள் மூலமாகவும் ஊழலை அம்பலப்படுத்த முயலும் போராளிகளிடம் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேர்மை பற்றிய பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் மனிதனாக இருப்பதற்கே முதல் தகுதி நேர்மையாக இருப்பதுதான்!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
0 Comments:
Post a Comment
<< Home