மக்களை மறந்த மன்னர்கள்
“இயற்கைப் பேரழிவுகளான நிலநடுக்கம், கடுமையான மழை, பெரும் வறட்சியைப் போலவே விலைவாசி உயர்வு” என்று தமிழக சட்டப் பேரவையில் நம்முடைய நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் பேசி இருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பாலபாரதி விலைவாசி உயர்வு குறித்து கவலை தெரிவித்த போது பேராசியர் அன்பழகன் இந்தக் கருத்தை கூறி இருக்கிறார். ”விலைவாசி பிரச்னை தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது; உலக அளவிலும் இருக்கிறது” என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். ”எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், விலைவாசி உயர்வு என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும்” என்றும் அவர் பேசி இருக்கிறார். தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்னை பற்றி பேசும்போது நம்முடைய தலைவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பாருங்கள்!
அதேசமயம் முதலமைச்சர் கருணாநிதி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதற்கான அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். மு.க.ஸ்டாலின் சொல்வதைப் போல் உலகளாவிய பிரச்னையாக விலைவாசி உயர்வு இருக்கும்போது, நம்முடைய சின்ன மாநிலத்தில் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று முதலமைச்சர் பேசாமல் இருந்துவிடவில்லை. நிலநடுக்கத்தைப் போல, பெரு மழையைப் போல மக்களுடைய அல்லது ஆட்சியாளர்களுடைய சக்திக்கு மீறிய ஒரு சங்கதியாக விலைவாசி உயர்வு இருந்தால், முதலமைச்சர் கருணாநிதி கூட்டும் அந்த ஆலோசனைக் கூட்டத்தால் எந்த பயனும் இல்லை. ஆனால் நிதியமைச்சர் அப்படி ஒரு கருத்தை முன்வைத்துப் பேசுகிறார். ஒருவர் ஒரு பிரச்னையை எழுப்பியவுடன் தங்களைத் தற்காத்துக் கொள்ளவே சராசரியாக இருக்கும் ஒருவர் விரும்புகிறார். எழுப்பப்பட்ட பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதை மனம்திறந்து விவாதிக்கலாம் என்ற எண்ணம் உடனடியாக வருவதில்லை. சராசரியாக இருக்கும் நம்மைப் போலவே அல்லது நம்மைவிட சில சமயங்களில் சராசரியாக நம்முடைய பிரதிநிதிகள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது!
விலைவாசி உயர்வு தொடர்பாக டெல்லியில் என்ன நடக்கிறது? அதிகரித்து வரும் விலைவாசியை மத்திய அரசால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ராகுல் காந்தியிடம் ஒரு மாணவர் கேட்டிருக்கிறார். அதற்கு ”கூட்டணி நிர்ப்பந்தங்களே விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாததற்குக் காரணம் என்று ராகுல் காந்தி பதில் சொல்லி இருக்கிறார். ‘இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது தனிக்கட்சி ஆட்சியாக காங்கிரஸ் ஆட்சி இருந்ததால், அப்போது விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது’ என்றும் கூறி இருக்கிறார். இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் டி.பி.திரிபாதி கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். “மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே பிரதானமானது. அதனால் அந்தக் கட்சித் தலைவர்களுடைய வார்த்தைகள் எளிமையாகவும் பணிவாகவும் இருக்க வேண்டுமே தவிர திமிராக வெளிப்படக் கூடாது” என்று சொன்னதுடன் அவர் நின்றுவிடவில்லை. “இத்தாலியில் கூட கூட்டணி அரசுதான் நடக்கிறது” என்று சோனியாகாந்தி பிறந்த நாட்டை ‘உள்ளே’ இழுத்து, தனிப்பட்ட முறையில் தாக்கினார்.
அதே கட்சியை சேர்ந்த தாரிக் அன்வர், “மத்திய அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை நிராகரித்துவிட்டு, ஒரு அமைச்சரை மட்டும் குறை சொல்வது நியாயம் அல்ல; பீகாரில் படுதோல்வியை சந்தித்த பிறகும் காங்கிரஸ் இப்படிப் பேசக் கூடாது” என்று காங்கிரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். விலைவாசி உயர்வுக்கு ‘கூட்டணி நிர்ப்பந்தங்களே காரணம்’ என்று சொன்ன ராகுல் காந்தியின் பேச்சை தி.மு.க.வோ, மமதா பானர்ஜியோ கண்டிக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் மட்டுமே எதிர்க்குரல் எழுப்பியது. ஏனென்றால், ராகுல் காந்தி யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் குற்றம் சாட்டியது மத்திய விவசாயம் மற்றும் உணவுத் துறை அமைச்சர் சரத்பவாரைத் தான் என்பதை எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் தி.மு.கவும் கூட்டணிக்கு எதிரான காங்கிரஸின் கருத்தாக அதை எடுத்துக் கொள்ளாமல், சரத்பவாருக்கு எதிரான புகாராக எடுத்துக் கொண்டது போலிருக்கிறது.
ஆனால், இந்த சொற்போரை தொடர்ந்து நீடிப்பதற்கு காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் விரும்பவில்லை. ராகுல்காந்தியின் பேச்சை ஊடகங்கள் தவறாக வெளியிட்டுவிட்டன என்று காங்கிரஸ் ஊடகங்களின் மேல் பழியைப் போட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் அவருடைய கட்சித் தலைவர்களின் எதிர்வினையை அவர்களுடைய சொந்தக் கருத்து என்று சொல்லி காங்கிரசிடம் ‘வெள்ளைக் கொடியை’ உயர்த்திப் பிடித்தார்! அதோடு மட்டும் நிற்காமல், ‘ராகுல் காந்தி எந்த அமைச்சருடைய பெயரையும் குறிப்பிடாத போது, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்றும் எடுத்துச் சொல்லி இருக்கிறார். ஏழைகளால் வாங்க முடியாத அளவு விலை ஏறி நிற்கும் உணவுப் பொருட்கள் யாருடைய துறைக்குக் கீழ் வருகிறது? அந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யக் கூடிய விவசாயத் துறையின் அமைச்சர் யார்? இரண்டு துறைகளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பொறுப்பிலேயே இருக்கின்றன!
அமைச்சர்கள், அதிகாரிகள், திட்டக் கமிஷன் உள்ளிட்ட பலரிடமும் ஆலோசனை நடத்திய பிறகு, மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுக்க முன்வந்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்குத் தடை, இறக்குமதிக்கு இருந்த தடைகளைத் தளர்த்துதல், பதுக்கல்காரர்கள் மீது வருமானவரி சோதனை என்று சில நடவடிக்கைகளைப் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகள், வழங்கலுக்குத் தயாராக இருக்கும் இருப்பும் தேவைகளும் விலையைத் தீர்மானிக்கின்றன என்ற பொருளாதார விதி ஒன்றின் அடிப்படையில் மட்டுமே இருக்கின்றன. மத்திய அரசாங்கம் செய்த வேறு சில செயல்களும் செய்ய மறுக்கும் சில விஷயங்களும் இந்த விலையேற்றத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்பதை அரசாங்கங்கள் ஏற்க மறுக்கின்றன.
பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் பொறுப்பை அரசு கை கழுவியது. எண்ணெய் நிறுவனங்கள் நினைத்த போதெல்லாம் இப்போது விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற நிலையை அரசு உருவாக்கியது. இந்த விலை உயர்வு மற்ற பொருட்களின் விலையே அதிகரிக்கச் செய்யும் என்பதை எந்தப் பண்டிதரும் வந்து நிதியமைச்சர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. சின்னச் சின்ன குழுக்களில் இருந்து சில அரசியல் கட்சிகள் வரை ஊக வணிகத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொண்டை வறளக் கத்துகிறார்களே, அரசாங்கம் அந்தக் குரலைக் காது கொடுத்துக் கேட்காமல் இருப்பது ஏன்?
மூன்றாம் நூற்றாண்டில் சீனாவில் இருந்த ஹூய் என்ற மன்னரிடம் மக்கள் அரிசி வாங்க முடியாமல் கடுமையாக கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்லப்பட்டது. அப்போது அவர், ‘அரிசி இல்லை என்றால் என்ன? இறைச்சியை அவர்கள் சாப்பிடலாமே!’ என்றாராம். இதைப் போலவே பிரான்சில் ஓர் இளவரசி, மக்கள் பஞ்சத்தில் வாடிய போது, ‘ரொட்டி இல்லை என்றால் என்ன? கேக் சாப்பிடுங்கள்’ என்றாராம். மன்னராட்சியில் பரம்பரை பரம்பரையாக ராஜாக்களாகவே இருந்தவர்களுக்கு சாதாரண மக்கள் பஞ்சத்தில் படும்பாடு புரியாது. ஆனால் மக்களாட்சியில் நமக்கு மத்தியில் சாதாரண மனிதர்களாக இருந்து, அதன் பிறகு அதிகாரத்துக்குப் போனவர்களுக்கும் புரியாதா என்ன?
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
0 Comments:
Post a Comment
<< Home