Saturday, January 15, 2011

நெற்றிக்கண் திறப்பினும் ......

”பேராசை நல்லது; அதிக பேராசை இன்னும் நல்லது; ஏனென்றால் அப்போதுதான் ஊழல்கள் வெளி உலகத்துக்குத் தெரிகின்றன” என்று அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு ஊழல் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் சொன்னார். அதைப்போலவே ’குற்றவாளிகள் அரசியலுக்கு வருவது நல்லது; அதிக குற்றவாளிகள் அரசியலுக்கு வந்து அதிகாரத்தில் அமரும்போதுதான், அதற்கு எதிரான உணர்வு அதிகரிக்கிறது’ என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. இந்திய அரசியலில் 1980 களில் இருந்து ‘குற்றமயமாகும் அரசியல்’ குறித்த விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அதற்கு முன்னதாக குற்றவாளிகளோடு தொடர்பு இல்லாமல் அரசியல் இருந்தது என்று இதற்கு அர்த்தம் இல்லை! ஒவ்வொரு தேர்தல் நடக்கும் போதும் வேட்பாளர்களில் எத்தனை சதவீதம் பேர் குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று செய்திகள் வரும். தேர்தல் முடிந்த பிறகு உருவாகும் மக்களவையிலோ அல்லது சட்டப் பேரவைகளிலோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் ‘கிரிமினல்’ பின்னணி கொண்டவர்கள் என்று ஒரு செய்தி போடுவதும் நம்முடைய சம்பிரதாயங்களில் அல்லது சடங்குகளில் ஒன்று!

இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று உலக மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறது. பல கட்சிகள் இருக்கும் ஓர் ஜனநாயக அமைப்பில் உலகத்திலேயே அதிகமான மக்கள் வாக்களித்து தங்களுடைய அரசாங்கத்தை தீர்மானித்துக் கொள்கிறார்கள் என்பது ஒரு காரணம்! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 73 மற்றும் 74-வது திருத்தங்கள் கொண்டு வந்து பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்த பிறகு அதிகமான மக்கள் பிரதிநிதிகளும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்ற நிலை உருவாகி இருக்கிறது. ஏறத்தாழ முப்பது லட்சம் பிரதிநிதிகள் நாடு முழுவதும் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, இவர்களில் பத்து லட்சம் பேர் பெண்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெருமை வாய்ந்த ஜனநாயக அமைப்பு உண்மையில் பெருமை கொள்ளும்படி இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கான நியாயத்தை அடிக்கடி இந்திய தேர்தல் ஆணையமே நமக்கு உணர்த்துகிறது.

“அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் அதிகரிப்பதும் கிரிமினல் அரசியல்வாதிகள் அதிகமாக இருப்பதும் தேர்தல் நடைமுறைக்கு மிகப் பெரிய அழிவாக இருக்கிறது. எனவே அவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை விதிப்பது குறித்த சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். விசாரணைக் கைதியாக சிறையில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கூட இல்லாமல் இருக்கும்போது, வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதால் பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் தேர்தலில் போட்டியிட முடிகிறது. நம்முடைய மக்களவை 543 உறுப்பினர்களில் 162 பேர் கிரிமினல் வழக்கு விசாரணையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அதில் 76 பேர் கொடூரமான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள்” என்றெல்லாம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி பேசி இருக்கிறார். கருத்துக்கணிப்புக்குத் தடை, காளான்களைப் போல் புதிது புதிதாக முளைக்கும் கட்சிகளைக் கட்டுப்படுத்துதல் பற்றியும் பேசி இருக்கிறார்.

அவர் எடுத்து வைத்திருக்கும் ஒவ்வொரு சிக்கலைப் பற்றியும் எவ்வளவோ பேச முடியும். ஆனால் இங்கு இப்போது குற்றமயமாகும் அரசியலைப் பற்றி மட்டும் பார்க்கலாம். தலைமைத் தேர்தல் ஆணையர் இந்த விஷயத்தில் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறாரா? அல்லது ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னால் நடக்கும் வழக்கமான சடங்குதானா? இந்த மாதிரி கேள்வியை கேட்கும் நம்பிக்கையற்ற மனநிலையிலேயே சராசர் வாக்காளர் இருக்கிறார். இதற்கு முன்னால் இருந்த தேர்தல் ஆணையர்களுடைய முயற்சிகள் என்ன ஆயிற்று? உச்சநீதிமன்றம் அவ்வப்போது தலையிட்டும் நிலைமைகளில் பெரிய மாற்றம் இல்லை. வேட்புமனு தாக்கல் செய்யும்போது நிலுவையில் இருக்கும் வேட்பாளருடைய வழக்குகள் குறித்து தகவல் கொடுக்க வேண்டும் என்ற நிலை நடைமுறைக்கு வந்தும் பெரிதாக பலன் இருப்பதாகத் தெரியவில்லை. குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த அதிசயம்? கொலை, கொள்ளை, வல்லுறவு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு ஏன் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு ‘டிக்கெட்’ கொடுக்கின்றன? ‘எப்படியாவது’ தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கொள்கையும் யாருக்கும் கிடையாது. “எங்கள் மீது மரியாதை வைத்து எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று கேட்ட காலம் மலையேறிவிட்டது. ”சரி, மரியாதை வேண்டாம், அது உள்ளன்போடு கிடைப்பதில்லை. அதனால் உங்களிடம் சொன்ன வாக்குறுதிகளை நாங்கள் செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை வைத்து எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்ற நிலையும் இப்போது பல இடங்களில் மாறி விட்டது. “மரியாதை போச்சு; அது பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நம்பகத்தன்மை போச்சு; அதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை. எங்களைப் பார்த்து பயந்து போய், எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்ற நிலையே இப்போது நிலவுகிறது.

அவர்கள் வெற்றி பெற்று அதிகாரத்தில் உட்கார்ந்ததும் அவர்களுடைய ‘முதலீட்டை’ திரும்பப் பெற நினைக்கிறார்கள். அப்போது கொள்கை சார்ந்த அரசியல் அவர்களுடைய புஜபலத்துக்கு முன்னால் மண்டியிட நேர்கிறது. மக்களுடைய வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற கருப்புப் பணம் தேவைப்படுவதாக ஒரு நியாயமும் கற்பிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், கிரிமினல்கள், பயங்கரவாதிகளுக்கு இடையில் இருக்கும் தொடர்பு பற்றி விசாரித்து வோரா கமிட்டி கொடுத்த அறிக்கை தூசி படிந்து கிடக்கிறது. மும்பையில் நடந்த கலவரம், கொள்ளை, கொலைகள் குறித்து விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையும் பரணில் தூங்குகிறது. பணமும் குற்றமும் அதிகாரமும் ஜனநாயகப் பூச்சும் சேரும் போது, அது வலிமையாகி விடுகிறது. அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சுதந்திர அமைப்பான தேர்தல் ஆணையத்தால் கூட இந்த வலிமையை உடைக்க முடியவில்லை.

அரசியல் கட்சிகள் கிரிமினல்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை மறுக்கப்போவதில்லை. அதேசமயம் வெறும் வழக்குப் பதிவும் குற்றச்சாட்டும் இருந்தால், தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இயற்கை நீதிக்கு எதிராக இருக்கிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்டவரை நிரபராதி என்றே கருத வேண்டியிருக்கிறது. அவருடைய மேல்முறையீடுகள் உச்சநீதி மன்றத்தால் விசாரிக்கப்பட்டு, முடிவு தெரியும் வரை சில பத்தாண்டுகள் கடந்து போய் விடுன்றன. அப்படி என்றால் என்ன செய்வது? “அரசியல்வாதிகளின் வழக்கு விசாரணைகள் தினசரி நடை பெற வேண்டும். அவர்களுடைய விசாரணை முடிந்து அவர்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும்வரை அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது. பதவியில் இருக்கும்போது அவருக்கு குற்றவாளி என்று தண்டனை விதிக்கப்பட்டால், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்றெல்லாம் பல குரல்கள் நம்மூரில் எழுகின்றன.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, மக்கள் இவர்களை அடையாளம் கண்டு தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதே!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home