Saturday, January 15, 2011

நெருக்கடியில் காங்கிரஸ்

அவர்கள் ஐந்து பேரும் அந்த வேலையை மிகவும் கஷ்டப்பட்டு செய்து முடித்திருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறார்கள். எல்லாவிதமான பிரிவுகளையும் சார்ந்த மக்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். மிகவும் நீண்ட ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட ஒரு விவகாரம் குறித்து அவர்கள் விசாரித்து அறிக்கை கொடுக்க வேண்டிய பணி அவர்களுடையது. அந்தப் பணியை முடித்து அறிக்கையைக் கொடுத்து விட்டார்கள். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும் அவர்கள் கொடுத்த அறிக்கையை கடந்த ஜனவரி ஐந்தாம் தேதி வியாழக்கிழமை வெளியிட்டு இருக்கிறார். ஆம்! மிகவும் உணர்ச்சிமயமான தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி நடந்த போராட்டங்கள் காரணமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா குழு அறிக்கை வெளிவந்துவிட்டது.

உள்துறை அமைச்சர் கூட்டிய அந்தக் கூட்டத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்குதேசம், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. தனித் தெலுங்கானா மாநிலத்துக்குக் குறைவான எந்த ஒரு தீர்வையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் நிலை எடுத்துவிட்டார். காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த விவகாரத்தில் எப்போதும் தங்களுடைய நிலையில் உறுதியாக இருந்ததில்லை. ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இயல்பான ஒன்று. அதே சமயத்தில் ஜனநாயகம் விவாதங்களையும் அவற்றின் அடிப்படையில் கருத்தொற்றுமையையும் வலியுறுத்துகிறது. விவாதங்களில் நியாயமான வாதங்களை முன்வைக்க முடியாத நிலையில் இருப்பவர்களே, அன்றாட நிகழ்வுகளை ஜனநாயக தளத்தில் இருந்து சதி செய்து கடத்திச் செல்ல முனைவார்கள். இந்த பிரச்னையில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து கருத்தொருமித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றே மத்திய அரசு நினைக்கிறது என்றும் அந்த அடிப்படையிலேயே ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அமைக்கப்பட்டது என்றும் மத்திய அரசு சொல்கிறது.

அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்தொற்றுமை உருவாகும் என்ற நம்பிக்கை இல்லை. அப்படியே சில பிரதான கட்சிகள் ஒருமித்து ஒரு முடிவை எடுத்தாலும் மற்ற கட்சிகள் அதை அரசியலாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியே எல்லா முக்கிய கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்தால், அந்த முடிவு தெலுங்கானா அல்லது ஆந்திராவின் பிற பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் எடுத்ததாகவே இருக்கும். அரசியல் கட்சிகளின் எல்லா நிலைப்பாடுகளையும் தீர்வுக்கான ஆலோசனைகளாக அந்த குழு முன்வைக்கிறது. அதாவது ஆறு ஆலோசனைகளை முன்வைத்து அவற்றில் மூன்றை முழுவதுமாக நிராகரிக்கிறது. ஆந்திரா இப்போது இருப்பதைப் போலவே தொடர்ந்து நீடிக்கலாம் என்பது முதல் பரிந்துரை. இதை நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையே சொல்கிறது. ஆந்திராவை சீமா ஆந்திரா, தெலுங்கானா என்று இரு தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கலாம்; இரண்டுக்கும் தனித்தனி தலைநகரங்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கி விடலாம்’ என்று இரண்டாவது ஆலோசனை கூறுகிறது.

மாநிலத்தை ராயல தெலுங்கானா, கடலோர ஆந்திரப் பகுதி என்று இரு மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்பது ஓர் ஆலோசனை. ஹைதராபாத் ராயல தெலுங்கானாவின் பகுதியாக இருக்கும். இந்த ஆலோசனையை எல்லா தரப்பும் நிராகரிக்கும். நான்காவதாக, தெலுங்கானா, ராயலசீமா என்று பிரித்து ஹைதராபாத் மாநகரத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் யூனியன் பிரதேசமாக மாற்றுவது என்ற ஆலோசனை. அடுத்து, தெலுங்கானா, ஆந்திரா என்று இரு மாநிலங்களாகப் பிரித்து தெலுங்கானா போராளிகள் கேட்பதைப் போல தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் நகரத்தை அறிவிக்கலாம். இதை இரண்டாவது நடைமுறை சாத்தியமாக அந்த அறிக்கை சொல்கிறது. இந்த ஆலோசனையை தெலுங்கானா பகுதி மக்களைத் தவிர ஆந்திராவின் பிற பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்தப் போக்கை சென்ற வருடத்தின் இறுதியில் நாம் பார்த்தோம்.

ஆறாவதாக, ஆந்திர மாநிலத்தை இப்போது இருப்பதைப் போலவே பிரிக்காமல் வைத்திருக்கலாம். தெலுங்கானா பகுதியில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்துவதற்காக ஆந்திர மாநிலத்துக்கு உட்பட்ட தெலுங்கானா மண்டல கவுன்சில் ஒன்றை அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு உருவாக்கலாம். இதுவே ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் முதல் தேர்வு. அதாவது ஆந்திராவைப் பிரிக்கவும் கூடாது; அதேசமயம் தெலுங்கானா பகுதி மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த உணர்வும் உருவாக வேண்டும். இதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது என்று எண்ணுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இதை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இந்த நிமிடம் வரை ஏற்றுக் கொள்ளவில்லை.

என்ன தீர்வாக இருந்தாலும் ஜனநாயகத்தில் பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்பட வேண்டும் என்று ஒரு கருத்து தீர்மானமாக உலவுகிறது. அதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்வதாகவே தெரிகிறது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது ஆந்திர சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 294. இவற்றில் 107 உறுப்பினர்கள் மட்டுமே தெலுங்கானா பகுதியில் இருந்து வருகிறார்கள். மீதி அனைத்து உறுப்பினர்களும் ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதாவது 187 உறுப்பினர்கள் இந்தப் பகுதிகளில் இருந்து வருகிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு என்ன பொருள்? தெலுங்கானா பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களால், பிற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை சட்டமன்றத்துக்குள் தோற்கடிக்க முடியாது.

ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் போடுவதற்கு முன்னால் என்ன சொன்னது? ‘தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி விட்டோம்; அதற்கு ஆந்திர சட்டமன்றத்தில் இருந்து ஒரு தீர்மானம் மட்டும் வந்தால் போதும்’ என்றது. அப்படி ஒரு தீர்மானத்தை ஆந்திர சட்டமன்றத்தால் எப்படி நிறைவேற்ற முடியாது என்பது மத்திய அரசைத் தலைமை தாங்கி நடத்தும் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதா என்ன? பிறகு ஏன் அப்படிச் சொன்னது? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெலுங்கானாவைத் தனிமாநிலமாக அறிவிக்கத் தயாராக இல்லை. ஆனால் நம்மிடம் கண்ணாமூச்சி ஆடுகிறது. பெரிய மாநிலங்களை பிரித்து சிறிய மாநிலங்களாக மாற்றுவதன் நன்மைகளையும் தீமைகளையும் விவாதிப்பது வேறு விஷயம்! அந்த விவாதமாக மாற்றினால் ஒருவர் எடுக்கும் நிலைக்கும் மக்கள் உணர்வுகள் அடிப்படையில் ஒருவர் எடுக்கும் நிலைக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். அதாவது ஒரு கோணத்தில் சரியாக இருக்கும் ஒரு தீர்வு இன்னொரு கோணத்தில் தவறாகவும் நமக்குத் தெரியக் கூடும்.

எப்படி தெலுங்கானா ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது என்ற பழைய வரலாறையும் நாம் இந்த நிலையில் நினைத்துப் பார்ப்பது நமக்கு இந்த சிக்கலைப் புரிந்து கொள்வதற்கு உதவக் கூடும். ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா 1956-இல் தான் இணைக்கப்பட்டது. பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு கூட இதை ‘விரிவாக்க ஏகாதிபத்திய’ மனநிலை என்று சொன்னதாக அறிய முடிகிறது. இணைக்கப்பட்ட காலத்தில் இருந்தே தனி மாநிலத்துக்கான கோரிக்கையும் பலவிதமான போராட்டங்களும் நடந்து வருகின்றன. போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்களை எல்லாம் காங்கிரஸ் பலவிதங்களில் உள்வாங்கிக் கொண்டது. அதன் பிறகு போராட்டத்தின் தீவிரம் படிப்படியாக குறைந்து போகும். சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் அந்தப் போராட்டம் தீவிரமாகும். இந்த வரலாறைப் பார்க்கும்போது, தெலுங்கானா கோரிக்கையின் நியாயத்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தரகாண்ட் என்று புதிதாக உருவாக்கப்பட்ட சிறிய மாநிலங்கள் அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எதையும் செய்ததாகத் தெரியவில்லை. இந்த எடுத்துக்காட்டுகளைப் பார்க்கும்போது என்ன நோக்கத்துக்காக தனி மாநிலம் கோரப்படுகிறதோ, அந்த நோக்கங்கள் நிறைவேறுமா என்ற கவலையே எழுகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home