Saturday, January 15, 2011

சஞ்சயைக் கைவிடும் காங்கிரஸ்

அன்று அவன் வீட்டில் இருந்தான். தினமும் ரேடியோவில் மதியம் 12.45 மணிக்கு தமிழில் செய்திகள் கேட்பது அவனுடைய வீட்டு வழக்கம். அப்பாவோ அண்ணனோ அல்லது அவனோ வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் செய்திகள் ஓடும். அன்று வீட்டில் இருந்த அவன் அதிசயமாக அந்த செய்திகள் நேரத்தில் ரேடியோவை அணைத்தான். “ஏன் அதை அணைக்கிறாய்?” என்று அம்மா கேட்டார். ‘அது எதுக்கும்மா இப்போ? எப்போ பார்த்தாலும் அது உண்மைக்கு மாறான தகவலையே தருகிறது’ என்று அவன் பதில் சொன்னான். சிறிது நேரத்தில் அப்பா மதிய உணவு இடைவேளையில் வீட்டுக்கு சாப்பிட வந்தார். அருகில் இருந்த உயர்நிலைப்பள்ளி ஒன்றில் அவர் ஆசிரியராக இருந்தார். வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக, “என்னடா! ரேடியோவில் நியூஸ் கேட்டியா?” என்றார். அவன் ”இல்லையே என்ன விஷயம்பா?” என்று கேட்டான். “விமான விபத்துல சஞ்சய் காந்தி இறந்து போயிட்டாராமே, ஊரே பரபரப்பா இருக்கு” என்றார். அவன் திகைத்து நின்றான்.

அந்த நாள் ஜூன் 23, 1980. அமேதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் காந்தி. பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன். விமானங்களை ஓட்டுவதில் ஆர்வமாக இருந்தவர். அன்று காலை எட்டரை மணியளவில் ’ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளாகியது. அந்த விமானத்தை சஞ்சய்காந்தி ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் இறந்திருக்கலாம்’ என்று டெல்லியில் செய்தி பரவி இருக்கிறது. அப்போது அவருக்கு வயது முப்பத்து மூன்று! 1977-ல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பிறகு நடந்த 1980 தேர்தலில், மீண்டும் இந்திரா காந்தியை இந்தியாவின் பிரதமராக்கி அரியணையில் அமர வைத்ததில் முக்கிய பங்காற்றியவர் சஞ்சய். 1977 தேர்தலில் இந்திரா காந்தி படுதோல்வி அடைவதற்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது வேறு விஷயம்!

பிரதமராக இருந்த இந்திரா காந்தியை மிரட்டியே சில காரியங்களை சஞ்சய் காந்தி சாதித்துக் கொள்வார் என்றும் இந்திரா முழுக்க முழுக்க சஞ்சய்காந்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தார் என்றும் அப்போது செய்திகள் வந்ததுண்டு. இந்தியாவின் இருண்ட காலமான நெருக்கடி நிலையின்போது, சஞ்சய் காந்திக்கு நெருக்கமான முதலமைச்சர்கள் ஆட்சியில் இருந்த ஹரியானா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இந்தியாவுக்கு ‘புதிய அரசமைப்புச் சட்டம்’ வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றின. அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, ஸ்வரண்சிங் தலைமையில் பன்னிரண்டு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்படி பிரதமரை சஞ்சய்காந்தி நிர்ப்பந்தம் செய்தார். இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை மாற்றி, அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்து, இந்தியாவின் நிரந்தர குடியரசுத் தலைவராக இந்திரா காந்தி இருக்க வேண்டும் என்பது சஞ்சயின் விருப்பம்!

இப்படி எல்லாம் ஒரு பத்திரிகையாளன் எழுதினால் வழக்கமாக காங்கிரஸ் என்ன செய்யும்? அவனைக் காங்கிரசுக்கு எதிரானவன் என்று முத்திரை குத்தும். அந்த காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்தின் வாரிசு ஒருவரை ‘தன்னிச்சையானவர், எதேச்சதிகாரி’ என்று சொல்லும் என்பதை யாராவது எதிர்பார்த்திருப்பார்களா? ஆனால் அந்தக் கட்சி தன்னுடைய பார்வையில் பதிவு செய்யும் வரலாற்றில் அப்படியே எழுதி இருக்கிறது. ’காங்கிரசும் இந்திய தேச உருவாக்கமும்’ என்ற வரலாற்று நூலில் நெருக்கடி நிலை குறித்து காங்கிரஸ் பதிவு செய்கிறது. இந்த நூலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன்சிங்கும் வெளியிட்டார்கள். காங்கிரஸ் கட்சியே சஞ்சய் காந்தி குறித்த விமர்சனத்தை முன்வைத்த பிறகு மற்ற கட்சிகளின் தலைவர்கள் அதை எதிர்க்க மாட்டார்கள் என்பது சராசரி நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கையை நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறையில் இருந்த பாரதிய ஜனதாவின் எல்.கே.அத்வானி பொய்யாக்கி இருக்கிறார். சஞ்சயை ‘பலிகடா’வாக்கி விட்டு காங்கிரஸ் தப்பித்துவிட முடியாது என்று அவர் ’சஞ்சய்க்கு ஆதரவாக’ குரல் கொடுக்கிறார்!

இந்திய அரசியலை ஊன்றிக் கவனித்து வருபவர்களுக்கு இதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. சஞ்சய்காந்தியின் மறைவுக்குப் பிறகுதான் இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் முதல் அமர்வே நடந்தது என்பது வேறு கதை. ஆனால் பா.ஜ.க.வின் முந்தைய அவதாரமான பாரதிய ஜனசங்கத்தின் தலைவர்களுக்கும் அந்தக் கட்சியை வழிநடத்தும் கொள்கையை வகுக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தவர்களுக்கும் சஞ்சய் காந்தி மேல் அன்பு இருந்திருக்க வேண்டும். நெருக்கடி நிலையின்போது காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் மீதும் ஜனசங்கத்தின் மீதும் அரசு அடக்குமுறையை அவிழ்த்து விட்டதற்குப் பிறகும் சஞ்சய் காந்தி மீது அவர்களுக்கு ஓர் ஈடுபாடு இருக்கிறதென்றால், சஞ்சயின் கொள்கை என்ன என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது! இப்போது சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தியும் மகன் வருண் காந்தியும் பாரதிய ஜனதாவின் முக்கிய பிரமுகர்கள்!

நெருக்கடி நிலை உருவாக காரணமாக இருந்த சூழ்நிலையை இரண்டு பக்கங்களுக்கு விவரிக்கும் அந்த நூல், நெருக்கடி நிலை அத்துமீறல்களை இரண்டு பத்திகளோடு நிறுத்திக் கொள்கிறது என்று அத்வானி குற்றம் சாட்டுகிறார். வரலாற்றைத் திரிக்கும் ஒப்பந்தத்தை யாரும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துவிட முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. நெருக்கடி நிலை அத்துமீறல்கள் குறித்த அந்த இரண்டு பத்திகளில் காங்கிரஸ் என்ன சொல்கிறது?

வழக்கமான அரசியல் நடைமுறைகளும் அடிப்படை உரிமைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன; எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்; பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. தீவிரமான மதவாத இயக்கங்களும் இடதுசாரி அமைப்புகளும் தடை செய்யப்பட்டன. நெருக்கடி நிலை அமலில் இருந்த 19 மாதங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. எந்தவிதமான வரம்புகளும் இல்லாத முழுமையான அதிகாரம் பிரதமரிடம் குவிக்கப்பட்டது.

நிர்வாகம் பொதுவாக சிறப்பாக நடந்ததால், பெரும்பாலான மக்கள் ஆரம்பத்தில் நெருக்கடிநிலையை வரவேற்றார்கள். ஆனால் தனிமனித உரிமைகளும் கருத்து சுதந்திரமும் பறிக்கப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். துரதிருஷ்டவசமாக, கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டதிலும் குடிசைகளை ஒழிப்பதிலும் அதீத ஆர்வம் காரணமாக தவறுகள் நடந்தன. அந்த நாட்களில் சஞ்சய் காந்தி மிக முக்கிய தலைவராக வளர்ந்திருந்தார். குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அவர் ஆதரவு முழுமையாக இருந்த்தால், அரசு அதைத் தீவிரமாக செயல்படுத்தத் தீர்மானித்தது. குடிசைகளை ஒழிப்பதிலும் வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கைகளிலும் எழுத்தறிவை வளர்ப்பதிலும் பரவலான பொதுமக்களுடைய கருத்துக்கு எதிராக அவர் தன்னிச்சையாகவும் எதேச்சதிகாரமாகவும் நடந்து கொண்டார்.”

முதல் பத்தியில் விவரிக்கப்பட்டிருக்கும் ஜனநாயக விரோத செயல்கள் அனைத்தும் மிகவும் கொடுமையான சர்வாதிகாரியின் ஆட்சியில் நடக்கக் கூடியவை. அவை அனைத்துக்கும் சஞ்சய் காந்தியை மட்டுமே பொறுப்பாக்கி காங்கிரஸ் நழுவிவிட முடியாது. அதேசமயம் நிர்வாகத்தின் எந்தப் பதவியிலும் இல்லாமல் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான அதிகார அமைப்பாக சஞ்சய் காந்தி இருந்தார் என்பதை அத்வானி மறைத்து விடவும் முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்களும் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிப்பவர்களும் வரலாறு உட்பட எல்லாவற்றையும் தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொள்ளவே முயல்கிறார்கள்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home