சேவைக்குச் சிறை!
அவரைக் குற்றவாளி என்று விசாரணை நீதிமன்றத் தீர்ப்பு சொல்லும் என்பது எதிர்பார்த்ததுதான்; ஆனால் அவருக்கு ஆயுள்தண்டனை கொடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்கவில்லை. கடந்த காலத்தில் சத்தீஸ்கர் மாநில அரசு அந்த டாக்டரை நடத்திய முறையையும் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்குவதற்கு இரண்டு வருடங்கள் போராடினார் என்பதையும் மறக்காதவர்கள் எல்லோருக்கும் இந்த மனநிலையே இருக்கும். சத்தீஸ்கர் விசாரணை நீதிமன்றம் ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிய ‘ராஜ துரோக’ குற்றத்துக்காக டாக்டர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தண்டனை அளிக்கப்பட்ட நாள் கடந்த டிசம்பர் 24-ம் தேதி. அதாவது மக்கள் மீது அன்பு கொண்டு ஆளுவோரை எதிர்த்த ‘தேவ குமாரன்’ இயேசு கிறிஸ்து பிறந்த நாளைக்கு முந்தைய நாள்! தமிழ்ச் சூழலில் சொல்வதாக இருந்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு சுய மரியாதையைக் கற்றுத் தந்த பெரியார் மறைந்த நாள்!
இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) ஆதரவாளர் என்ற முத்திரையை டாக்டர் பினாயக் சென் மீது குத்துவதில் ஏற்கனவே சத்தீஸ்கர் மாநில அரசு வெற்றி பெற்றிருக்கிறது. ‘தடைசெய்யப்பட்ட இயக்கத்தை நேற்றும் இன்றும் நாளையும் ஆதரிப்பேன்’ என்று அவர் எந்தக் கூட்டத்திலும் பேசியதில்லை; மாறாக, பல இடங்களில் மாவோயிஸ்டுகளின் ‘வன்செயல்களைக்’ கண்டித்துப் பேசி இருக்கிறார். அவருடைய செயல்பாடு பெரும்பாலும் காந்தியின் வழியிலேயே இருக்கிறது. ஆனாலும் அவர் மீது அந்த அரசு ‘வன்முறையாளன்’ முத்திரையைப் பதிக்கத் துடித்தது. ஏன்? அவர் அரசின் சட்டவிரோதமான வன்செயல்களை எதிர்த்தார். மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக மாநில அரசு உருவாக்கிய ‘சல்வா ஜூடும்’ என்ற அடியாள் படைக்கு அரசாங்கமே ஆயுதங்களைக் கொடுப்பதைக் கண்டித்தார். மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு கொடுப்பதாக யாரை எல்லாம் சந்தேகப்படுகிறார்களோ அவர்களை எல்லாம் அந்தப் படையினர் கொன்றார்கள்; அவர்களுடைய குடிசைகளைக் கொளுத்தினார்கள். மாவோயிஸ்டுகளின் வன்முறையைக் கண்டித்த டாக்டர் பினாயக் சென் இந்த வன்முறை வெறியாட்டத்தையும் தீவிரமாக எதிர்த்தார்.
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் அகில இந்தியத் துணைத் தலைவராகவும் பொறுப்பில் இருந்த டாக்டர் பினாயக் சென், மாநில அரசின் அத்துமீறல்களை ‘உண்மை கண்டறியும் குழுக்கள்’ மூலமாக அம்பலப்படுத்தினார். மாநில அரசாங்கத்தால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உலகப் புகழ் பெற்ற வேலூர் மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவரான பினாயக் சென் என்ன செய்திருக்க வேண்டும்? வணிகமயமான கார்ப்பொரெட் மருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றில் மருத்துவ ஆலோசகராக இருந்திருக்கலாம்; டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்த பின்னணியில் இருந்து அப்படியே அமெரிக்காவுக்குப் போய் ‘செட்டில்’ ஆகி இருக்கலாம். பாவம்! பிழைக்கத் தெரியாத டாக்டர்! முப்பது வருடங்களுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு சேவை செய்கிறார்! அவர்களுடைய சுகாதார வசதிகளை அதிகமாக்குவதற்கான வேலைகளை செய்து கொண்டே இலவச சிகிச்சை மையங்களையும் உருவாக்கி வருகிறார். சரி, அவருக்குத் தான் ஏதோ கோளாறு.. இப்படி எல்லாம் ஏழை எளிய மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்.. அவருடைய மனைவியும் குழந்தைகளும் இதே மாதிரி மக்களுடன் மக்களாக கலந்து வாழ்கிறார்களே! இதை எப்படி அனுமதிக்க முடியும்?
இப்படிப்பட்டவர்களை சமூகத்தில் நடமாட விடலாமா? சினிமாக்காரன் சினிமா எடுக்க வேண்டும்; டாக்டருக்குப் படிச்சவன் பெரிய கிளினிக் கட்ட வேண்டும்; இதற்கு மாறாக அவர்களுக்கு மக்கள் மேலே அக்கறை எல்லாம் எதற்கு? அப்படி அக்கறை காட்டினால் அவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைதான்! சரி, அப்படி என்றால், யாரெல்லாம் நம்முடைய சமூகத்தில் மதிப்புடனும் மரியாதையுடனும் வீதி வலம் வரலாம்? அதிகாரத்தில் இருக்கும் சிலர் ஒருவேளை சில வரையறைகளை வகுத்திருக்கலாம்; “கொலை செய்தாயா? கொள்ளை அடித்தாயா? வீதியில் விளையாடும் சின்னப் பெண்களைக் கடத்தி வல்லுறவு கொண்டாயா? மாமனா? மச்சானா? மானம் கெட்டவனே! விளையாட்டுப் போட்டிகளில் கோடிகளைச் சுருட்டத் தெரியுமா உனக்கு? அல்லது வீட்டு வசதி சங்கத்தில் தான் வேண்டியவர்களுக்கு வீடுகளை ஒதுக்கத் தெரியுமா? யாருக்கு எதை ஒதுக்கினாலும் உன் பையை நிரப்பிக் கொண்டு அரசாங்கத்துக்கு இழப்புகளை ஏற்படுத்தத் தெரியாத உன்னை மாதிரி ஆளுக்கெல்லாம் எதுக்கடா மதிப்பும் மரியாதையும்?” என்று ஒருவேளை அவர்கள் நம்மைப் பார்த்து கேட்கக் கூடும்!
பொதுமக்கள் மத்தியில் மருத்துவ சேவையை சிறப்பாக செய்வதாலேயே ஒருவர் என்ன செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா என்று நம்மில் சிலருக்கு கேள்வி எழலாம். “துணை ராணுவப் படையினரையும் அப்பாவி ஆதிவாசிகளையும் பயங்கரவாதிகளும் மாவோயிஸ்டுகளும் ஏராளமாகக் கொன்று குவிக்கிறார்கள். இதன் மூலம் சமூகத்தில் அச்சமும் பயங்கரவாதமும் பரவுகிறது; ஒழுங்கின்மையும் அமைதியின்மையும் ஏற்படுகிறது; அதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ள முடியாது” என்று அந்த நீதிபதி சொல்கிறார். சத்தீஸ்கர் விசாரணை நீதிமன்றத்தில் அந்த நீதிபதியிடம் பெருந்தன்மையை யாரும் எதிர்பார்க்கவில்லை. மாறாக அரசு தரப்பு முன்வைத்த ஆதாரங்கள் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளத் தக்கவையா என்று அவர் பார்த்தால் மட்டுமே போதும்!
ஆனால் என்ன நடந்திருக்கிறது? சிறையில் இருந்த மாவோயிஸ்ட்டான நாராயண் சன்யால் என்பவரை 35 நாட்களில் 33 தடவை டாக்டர் பினாயக் சென் காவலர்கள் முன்னிலையில் சந்தித்தார். இந்த சந்திப்புகளில் கடிதப் பரிமாற்றம் எதுவும் நிகழவில்லை என்று காவலர்கள் சாட்சி அளித்திருக்கிறார்கள். ஆனால் நாராயண் சன்யாலிடம் இருந்து கடிதங்களை வெளியில் இருக்கும் மாவோயிஸ்டுகளிடம் கொண்டு சேர்க்கும் ‘கூரியராக’ பினாயக் சென் இருந்தார் என்று நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டது. பினாயக் சென்னின் வீட்டில் சோதனை செய்யும்போது கிடைத்த ஆவணங்களில் எல்லாம் பினாயக் சென்னின் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். ஆனாலும் கையெழுத்து இல்லாத ஒரு கடிதத்தை அங்கிருந்து எடுத்ததாக சொல்லி நீதிமன்றத்தில் காவல்துறை கொடுத்தது. “நீங்கள் செய்து வரும் சேவை மகத்தானது; அதற்காக உங்களுக்கு எங்களுடைய பாராட்டுகள்” என்று தட்டெச்சு செய்யப்பட்ட அந்தக் கடிதத்தை யார் அனுப்பினார்கள் என்று எந்தத் தகவலும் இல்லை. ஆனால் அது மாவோயிஸ்டுகள் டாக்டர் பினாயக் சென்னுக்கு அனுப்பிய கடிதம் என்று அரசு சொல்வதை கோர்ட் ஏற்கிறது!
இன்னொரு ஆதாரம் வேடிக்கையானது; ஐ.எஸ்.ஐ.க்கு பினாயக் சென்னின் மனைவி டாக்டர் இலினா சென் அனுப்பியதாக ஒரு மின்னஞ்சல். இப்படி மொட்டையாக சொல்லும்போது நமக்கும் ‘பகீர்’ என்கிறது. ஆனால் இந்த ஐ.எஸ்.ஐ. என்பது இந்தியன் சோஷியல் இன்ஸ்டிடியூட் என்னும் அமைப்பே தவிர, பாகிஸ்தானின் உளவு அமைப்பு அல்ல என்ற உண்மை தெரிந்தவுடன் நீதி முறையையே சத்தீஸ்கர் போலீஸ் ‘கிண்டல்’ செய்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ”வெள்ளைமாளிகையில் உட்கார்ந்திருக்கும் சிம்பன்ஸி” என்ற வார்த்தைகள் பயங்கரவாதிகளுக்கு இடையில் சங்கேத மொழியாக இருக்கலாம் என்கிறது காவல்துறை!
பினாயக்சென்னுக்கு மேல் முறையீட்டில் விடுதலை கிடைக்கும் என்று தான் இப்போது நம்ப வேண்டியிருக்கிறது. பினாயக் சென் போன்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடிய உத்தமர் காந்தியும் அரசுக்கு எதிரான கலகம், ராஜ துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் நாம் அவரை எல்லாம் மறந்து கொண்டிருக்கிறோம். நம் நினைவில் இப்போது இருப்பதெல்லாம் ராகுல் காந்தி மட்டும்தான் என்றால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
1 Comments:
ரொம்ப நாள் கழிச்சு ஸ்டேஷன் பெஞ்ச் பக்கம் வந்திருக்கிறேன். கடிவாளம் கட்டப்பட்ட மருத்துவ சமூகத்தில் அரிதாக விழிப்புணர்வுடன் உள்ளவர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களும், எங்களது கையறு நிலையும் மிகுந்த வருத்தத்தையே தருகிறது. அதிலும் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதே தெரியாமல் ஒரு சாரார் இருப்பது அதிலும் கொடுமையாக இருக்கிறது.
Post a Comment
<< Home