Friday, January 07, 2011

அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!

“அவர்களை அப்படிச் செய்யாமல் இருக்கச் சொல்லுங்கள்” என்று ஒருவர் இன்னொருவருக்கு கடிதம் எழுதினார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளுடைய பெற்றோரைக் கூப்பிட்டு ஆசிரியர்கள் இப்படிச் சொல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். கல்லூரிகளில் வரம்பு மீறும் மாணவர்களைப் பற்றி பேராசிரியர்கள் முதல்வரிடம் புகார்களைத் தெரிவிப்பதுண்டு; அலுவலகங்களிலும் மேலதிகாரிகளிடம் இப்படிப்பட்ட கோரிக்கைகளை சிலர் முன்வைப்பதுண்டு; ஆனால் இந்தக் கடிதம் அப்படி சாதாரண மனிதர்கள் சம்பந்தப்பட்டது அல்ல; மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு எழுதிய கடிதம். அவர்கள் நன்னெறிக் கோட்பாடுகளை மீறுகிறார்கள் என்றும் அவர்களை முறையாக நடந்து கொள்ளச் சொல்லுங்கள் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் கோருகிறார். அவர் குறிப்பிடும் ‘அவர்கள்’ யார்? நம்முடைய மாண்புமிகு மக்களவை உறுப்பினர்களைத் தான்! அப்படி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர் அவர்கள் மேல் புகார் செய்கிறார்?

நம்முடைய எம்.பி.க்கள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரை நேரில் சந்திக்கிறார்கள். அவர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு அல்லது அவர்கள் தொடர்பான கம்பெனிகளுக்கு ஆதரவாக சில அனுமதிகளை அவரிடம் கோருகிறார்கள்; அதன் பிறகு அந்தத் துறை அதிகாரிகளை சந்தித்து அழுத்தம் கொடுக்கிறார்கள்; இது முதல் வகை; அதாவது அவர்களுடைய சொந்த விஷயங்களை செய்து முடிப்பதற்கு மக்கள் அவர்களுக்குக் கொடுத்த பதவியை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த அணுகுமுறை எம்.பி.க்களின் நடைமுறை விதிகளுக்கு எதிரானது. இந்தப் போக்கை அனுமதிக்க முடியாது. இதைக் கட்டுப்படுத்த நான் முயல்கிறேன்; ஆனால் முழுமையாக அதில் நான் வெற்றி பெற்றதாக சொல்ல முடியாது” என்று ஜெயராம் ரமேஷ் சொல்லி இருக்கிறார்.

அடுத்த வகை எம்.பி.க்கள் அவர்களுக்காக பேச மாட்டார்கள். அவர்களுடைய மாநிலத்துக்காகவோ அல்லது தொகுதிக்காகவோ வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் பெரிய தொழில் நிறுவனங்களின் திட்டத்துக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ அமைச்சகத்துக்கு வந்து பேசுவார்கள். மனு கொடுப்பார்கள்; சில சமயங்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக அந்த மனுவில் கையெழுத்து போட்டிருப்பார்கள். இந்த வகை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜெயராம் ரமேஷ் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மூன்றாவது வகை எம்.பி.க்கள் அவர்களுடைய தொகுதியின் வளர்ச்சிக்கான திட்டத்துக்காகவோ, அல்லது மாநிலத்தின் திட்டங்களுக்காகவோ அமைச்சரை அணுகுவார்கள். “இந்த வகை எம்.பி.க்களுடைய உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது; இவர்களை பார்த்து பேசுவதில் எனக்கு சிரமங்கள் எதுவும் இல்லை” என்பது அந்த அமைச்சரின் கருத்து.

மத்தியில் ஆளும் கட்சியில் இருக்கும் ஓர் அமைச்சரே மக்களவைத் தலைவருக்கு இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார் என்றால் நம்முடைய பிரதிநிதிகள் எந்த அளவுக்கு அமைச்சரகத்துக்குள் படை எடுத்திருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அது சரி, சென்னை எம்.பி.க்கள் யாரேனும் அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவின் அனுமதிக்காக ஜெயராம் ரமேஷை சந்தித்துப் பேசினார்களா? சுற்றுச் சூழல் அமைச்சரகத்தின் அனுமதி கிடைக்காததால், பிரதமர் மன்மோகன்சிங் அந்தப் பூங்காவைத் திறந்து வைக்க இயலாமல் போய்விட்டதாக தமிழக அரசு சொல்லியதே, ஏன் ஜெயராம் ரமேஷ் அந்தப் பூங்காவுக்கு அனுமதி கொடுக்கவில்லை? அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதில் ஏதேனும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் இருக்கின்றனவா அல்லது அரசியல் சூழல்தான் பிரதமருடைய நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்ததா என்று புரியவில்லை.

ஒரிசா மாநிலத்தில் நியாம்கிரி மலைப்பகுதியில் வேதாந்தா நிறுவனத்தின் பாக்சைட் கனிமச் சுரங்கத்துக்கு தடையில்லா சான்றிதழ் கொடுக்க மறுத்த நாள் முதல் ஜெயராம் ரமேஷ் மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மரியாதை அதிகரித்தது. அதேசமயம், அமைச்சரவை சகாக்கள் சிலர் பகிரங்கமாக அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதையும் பழங்குடியின மக்களுடைய வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போடுவதையும் அனுமதிக்க முடியாது என்று ராகுல் காந்தியும் முழங்கினார். ராகுல், ஜெயராம் ரமேஷ், திக்விஜய்சிங், மணிசங்கர் அய்யர் என்று சில தலைவர்கள் நம்பிக்கை அளிப்பதாக சில ஊடகங்களில் கருத்துக்கள் வெளிப்பட்டதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயராம் ரமேஷ் சில நடவடிக்கைகளை உறுதியாக எடுத்தார். நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு சில இடங்களில் அனுமதி கொடுக்கவே முடியாது என்றும் வேறு சில இடங்களில் அனுமதிக்கலாம் என்றும் அவர் வரையறை செய்தார். இதற்கு நம்முடைய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்தார்.

”நிலக்கரி வளமாக இருக்கும் இடங்களில் 30 சதவீத இடங்களில் சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்க மாட்டோம் என்று சொன்னால், என்ன பொருள்? எட்ட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் நம்முடைய வளர்ச்சி விகித இலக்கை நாம் குறைத்துக் கொள்ள வேண்டுமா? இந்த முடிவின் விளைவுகளை ஜெயராம் ரமேஷ் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்” என்று மாண்டெக் சிங் அலுவாலியா ஓர் நாளிதழுக்கு பேட்டி கொடுத்தார். அதற்கு முன்னதாகவோ அல்லது பிறகோ வேறு யார் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் என்ற இடத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்குக் கொடுக்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பே இல்லை என்று ஜெயராம் ரமேஷ் அதிரடியாகப் பேசி இருக்கிறார்.

இந்த அணுமின்நிலையம் கட்டப்பட இருக்கும் இடம் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி என்று டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் எனப்படும் டாடா சமூக அறிவியல் கழகம் அறிக்கை கொடுத்திருக்கிறது. ஆனால் அந்தப் பகுதி பாதுகாப்பான பகுதிதான் என்று தேசிய அணுமின் கழகம் சொல்கிறது. 930 கோடி ரூபாய் செலவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரிவா என்ற நிறுவனம் இங்கு இரு அணு உலைகளை அமைக்கும் என்று சமீபத்தில் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோசியும் பிரதமர் மன்மோகன்சிங்கும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இந்த ஒப்பந்த்த்தின்படி அணு உலைகளை அமைப்பதற்காக ஐந்து கிராமங்களில் 968 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அங்கு வாழும் மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நிலங்களை விற்பதற்கு கூடுதல் பணம் கொடுக்கத் தயாராக இருப்பதாக மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் ஆசை காட்டுகிறார். எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் நிலங்களைத் தரமாட்டோம் என்று மக்கள் உறுதியாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னொரு ’நந்திகிராம்’ உருவாகிவிடக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கின்றன.

ஆனால் ஜெயராம் ரமேஷ் இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பதாக இல்லை. அணுமின்நிலையத்துக்குக் கொடுத்த அனுமதியை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். “என்னுடைய முடிவு சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால் 120 கோடி மக்களின் மின்சார தேவைகளை நிறைவேற்ற சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலைகள் மூலம் மட்டும் முடியாது. அணுமின் நிலையங்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று ஜெயராம் ரமேஷ் பேசி இருக்கிறார். அதே வார்த்தைகள்.. அதே வாதம்.. மன்மோகன்சிங், மாண்டெக்சிங் அலுவாலியாவுக்கு பதிலாக இப்போது ஜெயராம் ரமேஷ்! அவருடைய ’சுற்றுச்’ சூழலும் மாசு படிந்து கிடக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home