Saturday, December 25, 2010

இவர்கள் ஆபத்தானவர்கள்!

“தொழில் நிறுவனங்களுக்காக ஆதரவு திரட்டும் ‘லாபியிஸ்ட்கள்’ கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்; எல்லை தாண்டிவிடக் கூடாது” என்று மெல்லிய குரலில் முணுமுணுக்கிறார் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித். அல்லது அவர் உரக்கச் சொன்ன அந்த செய்தி ‘ராடியா டேப்ஸ்’ எழுப்பும் ஆரவாரத்துக்கு முன்னால் நமக்கு வெறும் முணுமுணுப்பாகக் கேட்கிறது! இவ்வளவு காலம் அதிகார மட்டங்களில் இயல்பாக நடந்து கொண்டிருந்த இந்த தரகுத் தொழில் அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருந்தது. இப்போது அப்பட்டமாக பொதுமக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறது. இந்த உண்மையை ஆட்சியாளர்களால் தாங்க முடியவில்லை. அதனால் மக்களின் பார்வையில் சேதமாகி நிற்கும் ‘ஜனநாயக அமைப்பைச்’ சரிசெய்ய முயல்கிறார்கள்.

சர்ச்சைக்குரிய இந்த தரகர்களை ஆங்கிலத்தில் ஏன் நாகரிகமாக ‘லாபியிஸ்ட்’ என்று அழைக்கிறார்கள்? பெரிய தொழில் நிறுவனங்களுடைய பிரதிநிதிகளைப் போல, அதிகாரத்தின் புறவாரத்தில் நின்று தேவையான காரியங்களை செய்து வாங்கிக் கொள்ளும் ’வலிமை’ கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற ‘லாபி’யில் நின்று கொண்டு நம்முடைய மக்களின் பிரதிநிதிகளை அணுகி, தங்களுக்கு ஆதரவு திரட்டும் நபர்களை முதலில் ‘லாபியிஸ்ட்’ என்று சொல்லி இருக்கலாம். இதற்குப் பொருள் என்ன? இந்த ‘லாபியிஸ்ட்’களுக்கு அதிகார பீடங்களின் ’லாபி’ அல்லது ‘புறவாரத்துக்கு’ மேல் போகும் சக்தி இல்லை. இது ஜனநாயகத்தின் ஆரம்ப கட்டத்தில் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது நிலைமைகள் வேறு. அதிகார பீடத்தில் யார் உட்கார வேண்டும் என்பதைக் கூட இவர்களே தீர்மானிக்கிறார்கள். நாள்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘ராடியா டேப்ஸ்’ உரையாடல்களில், இந்திய ஜனநாயகத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த அத்தனை போர்வைகளும் கிழிந்து தொங்குகின்றன!

அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இருக்கும் நெருக்கம் இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று இதுவரை ஊடகங்களும் சில சமூக ஆர்வலர்களும் தீவிரமாகப் பேசி வந்தார்கள். அப்போதெல்லாம் கூட அரசாங்கத்தின் கொள்கைகளின் மீது சில பெரிய தொழில் நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன என்று எண்ணிக்கையில் குறைவான குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆனால், அந்த வகைப் பிரசாரத்தை அல்லது பரப்புரையை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய ஜனநாயகத்தின் இறுதி ‘எஜமானர்களுக்கு’ தங்களுடைய ‘சேவகர்களான’ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் அவ்வளவு நம்பிக்கை! ’இவர்களை நாம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறோம்; இவர்கள் நம்முடைய பிரச்னைகளை சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் விவாதிப்பார்கள்; நம்முடைய வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும் வகையில் ஏதாவது செய்வார்கள்’ என்று ‘கடவுளை’ நம்புவது போல அரசியல் தலைவர்களை நம்பினார்கள். இந்த நம்பிக்கைகளை எல்லாம் நம்முடைய பிரதிநிதிகள் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டார்கள்!

’காலுக்குச் செருப்பும் தலைக்கு எண்ணெயும்’ இல்லாத கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையில் இருந்து ‘வறுமையை வெளியேற்றுவார்கள்’ என்று அவர்களை நம்பினோம்; அதன் மூலம் அந்த ஏழைகளைச் சிரிக்க வைத்து அந்த சிரிப்பில் ’இறைவனைக்’ காண்பார்கள் என்று எதிர்பார்த்தோம்; அந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் சிலரை மத்திய ஆட்சிக்கு அனுப்பி வைத்தோம்; ஆனால் அவர்கள் அங்கே போய் என்ன செய்திருக்கிறார்கள்? அரசியல் தரகர்களிடம் கெஞ்சியிருக்கிறார்கள்; ‘எனக்குப் பதவி வாங்கிக் கொடு; அவருக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்’ என்று மன்றாடி இருக்கிறார்கள். மக்களுடைய வேதனையைப் புரிந்து கொள்ளும் மென்மையான மனம் கொண்டவர்கள் என்று நாம் நம்பியவர்கள் கூட போட்டியும் பொறாமையும் பதவி ஆசையும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்” என்பதே ராடியா டேப்ஸ் நமக்கு உணர்த்தும் செய்தி!

ஒரு குடும்பத்துக்குள் இருக்கும் பூசல்களை அல்லது ஒரு கட்சிக்குள் இருக்கும் வேறுபாடுகளை அந்தக் கட்சியினர் டெல்லியில் வேறு கட்சியைச் சேர்ந்த பிரதமரிடமோ அல்லது கூட்டணியின் தலைவரிடமோ கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பது நம்முடைய எதிர்பார்ப்பு. அந்த விஷயங்களை எல்லாம் அந்தக் கட்சியின் தலைமையுடன் மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும் என்றும் டெல்லியில் அந்தக் கட்சியின் குரல் ஒன்றாக ஒலிக்க வேண்டும் என்றும் நம்முடைய ‘ஜனநாயக’ உணர்வு அல்லது ‘இன’ உணர்வு நம்முடைய பிரதிநிதிகளிடம் எதிர்பார்க்கிறது. ஆனால், இவர்களோ அதிகாரத் தரகர்களிடம் எல்லா விஷயங்களையும் பேசுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தின் அடுக்குகளில் இந்த தரகர்களுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது என்ற உண்மையே இவர்களை அவர்களிடம் எல்லாவற்றையும் பேச வைக்கிறது!

அமெரிக்காவில் இதுபோன்ற லாபியிஸ்டுகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்படுவதற்கு அல்லது தோற்கடிக்கப்படுவதற்கு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுபவர்களை ‘லாபியிஸ்ட்’கள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளாக இயங்குகிறார்கள். அரசாங்கத்தின் கொள்கைகள் வகுக்கப்படுவதில் இந்த லாபியிஸ்டுகளுக்கும் பங்கு இருக்கிறது என்பதை அந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். யார் யார் எந்தெந்த வகையில் எதற்காக ஆதரவு திரட்டுகிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதைப் போல ஓர் அங்கீகாரத்தை இங்கே இருக்கும் லாபியிஸ்ட்களுக்கும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று பலர் முயற்சி செய்கிறார்கள். லாபியிஸ்ட்கள் எல்லை தாண்டக் கூடாது என்று சல்மான் குர்ஷித் சொல்லும்போதே, அவர்களை அங்கீகரித்து விடுகிறார்!

இந்திய ஜனநாயகத்தில் இந்திய மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் தரகர்கள் தேவையில்லை. இந்திய ஆட்சிப்பணிக்கும் மக்களுக்கும் இடையில் கமிஷன் ஏஜெண்டுகள் அவசியம் இல்லை. ஆனால் மக்கள் தொடர்பு அலுவலகங்கள் என்ற பெயரிலும் ஆலோசனை அலுவலகங்கள் என்ற பெயரிலும் இயங்கி வந்த அதிகாரத் தரகர்கள், இப்போது ‘லாபியிஸ்ட்கள்’ என்று பகிரங்கமாகவே இயங்கத் தொடங்கி இருக்கிறார்கள். டெல்லியில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வகையில் செயல்படுவதாக செய்திகள் சொல்கின்றன. அரசுத் துறையில் வேலைபார்த்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களை அந்த நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துகின்றன. ஓய்வு பெற்ற அதிகாரிகள் பழைய தொடர்புகள் மூலம் அரசு அலுவலகங்களில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். வழக்கறிஞர்களோ நீதிமன்ற மனுக்கள், நோட்டிஸ்கள் மூலம் ‘மெலிதான மிரட்டல்களை’ முன்வைக்கிறார்கள். ஊடகங்களில் வேலை செய்யும் சிலர் தங்களுடைய செய்தி நிறுவனங்களுக்கு செய்தியை சொல்வதற்கு முன்பாக இதுபோன்ற தரகர்களுக்கு நாட்டு நடப்புகளைச் சொல்லும் அளவுக்கு அங்கங்கே விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

விவசாயத்தில் என்ன விதைகள், என்ன உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் ஆய்வு செய்து சொல்கிறது என்று நம்பினோமே, அது இந்த தரகர்களின் முடிவாக இருக்கலாமோ என்ற அச்சம் எழுகிறது. சில்லரை வணிகத்தில் வால்-மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்க அரசு நினைக்கிறதே, அதுவும் வால்மார்ட்டுக்கு ஆதரவான தரகர்களின் தொழில் வெற்றிதானா என்ற சந்தேகம் வருகிறது. வாக்களித்த மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியவர்கள் வேறு யார் யாருக்கோ ஆதரவாக இருக்கும் தரகர்களின் ‘மாய வலைக்குள்’ வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பணமும் செல்வாக்கும் கொண்டவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை தங்கள் விருப்பத்துக்கு வளைத்துக் கொள்வதற்காக முன்னிறுத்தும் தரகு நிறுவனங்கள் செய்வதற்குப் பெயர் தொழில் அல்ல, ஊழல்! அதனால் அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் ஏற்க முடியாது. அரசியல் அரங்கில் இருந்து இந்த தரகர்கள் முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் கோரிக்கையாக இருக்க முடியும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home