Sunday, January 02, 2011

கண்களில் என்ன ஈரமோ?

அந்த நண்பர் அப்படி எரிச்சலான வார்த்தைகளை அந்தக் கடைக்காரரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. சாதாரணமான வார்த்தைகள் தான் என்றாலும் கடைக்கார்ரின் குரலில் வெளிப்பட்ட எரிச்சல் அந்த நண்பரைப் பாதித்தது.

“ஏன் இவ்வளவு கோபப்படறீங்க?” என்று கடைக்காரரிடம் கேட்டார்.

“நீங்க செய்த வேலைக்கு கோபம் தான் வரணும். ஆனா நான் கோபப்படவில்லை. உங்களை ஜாக்கிரதையா எடுத்துப் போடுங்கன்னு தானே சொன்னேன்,” பழைய வாடிக்கையாளரை இழந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு இப்போது கடைக்காரரிடம் தெரிந்தது. இரண்டு நாட்களாக எல்லா செய்திகளிலும் அடிபடும் வெங்காயத்தை கைதவறி தரையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் போட்டுவிட்ட ‘தப்பு’ இப்போது அந்த நண்பருக்கு உறைத்தது.

ஆம். சில நாட்களாக வெங்காயம் மீண்டும் ஊடகங்களில் முக்கிய செய்தியானது. ”மாமூல் வேணும்னா எவ்வளவுன்னு சொல்லிட்டு வாங்கிட்டுப் போயிடுங்க. அதைவிட்டுட்டு அரை கிலோ வெங்காயம் போடுன்னு கேட்காதீங்க” என்ற ரீதியில் ஒரு நாளிதழில் கார்ட்டூன் வந்தது. தங்கத்தை அடகு வைத்து பணம் வாங்கினால்தான் கடைக்குப் போய் காய்கறி வாங்க முடியும் போலிருக்கிறது என்று ஒருவர் நக்கலாக சொன்னதாக ஒரு செய்தியையும் படிக்க நேர்ந்தது. ஆப்பிள் பழத்துக்கு இணையாக வெங்காயத்தின் விலை ஏறிவிட்டதாக இன்னொரு செய்தி. பெரிய அளவில் மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு பற்றி மறுபடியும் ஊடகங்களில் தீவிரமாக விவாதம் நடக்கிறது.

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை திடீரென்று தொண்ணூறு ரூபாய் முதல் 100 ரூபாய் என்றானது. பழைய சோறு, வெங்காயம் என்று சாப்பிடும் எளிய குடும்பங்களில் இருந்து வெங்காய சாம்பார், வெங்காய சட்னி என்று உணவில் சேர்த்துக் கொள்ளும் நடுத்தர மக்கள் வரை வெங்காயம் ஒரு முக்கிய பொருளாகவே இருக்கிறது. தேர்தல் முடிவுகளை மாற்றக் கூடிய ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு; டெல்லி மாநிலத்தில் ஷீலா தீட்சித்திடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். அதனால்தானோ என்னவோ அவர்களும் சரி, மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் சரி, இந்த விலை உயர்வை எதிர்த்து தொடர்ச்சியாக இயக்கம் நடத்தப்படும் என்று அறிவிக்கிறார்கள்!

பிற நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடைவிதித்தும், வெங்காய இறக்குமதிக்கு வரி குறைத்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதனால் அதிகரித்த விலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கி இருக்கிறது. வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி, பூண்டு ஆகிய பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் போதெல்லாம் நாம் என்ன நினைக்கிறோம்? அல்லது நாம் என்ன சொல்லப்படுகிறோம்? ”பலத்த மழை காரணமாக பொருட்கள் நாசமாகி விட்டன அல்லது கடுமையான வறட்சியால் உணவு உற்பத்தி மிகவும் குறைந்து விட்டது. அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகளின் விளைவாக பொருட்களின் விலை ஏறுவதில்லை” என்று மீண்டும் மீண்டும் போதிக்கப்படுகிறோம். அதாவது விலைவாசி உயர்வுக்கு நிர்வாக ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை. வெள்ளம், வறட்சி போன்ற இயற்கையான நிகழ்வுகளே இதற்குக் காரணம் என்று நாம் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம். இந்திய உணவுப் பொருட்களின் உற்பத்தி காலம் காலமாக இயற்கையை நம்பியே இருக்கிறது. வறட்சிக்காலத்திலோ அல்லது கனமழைக்காலத்திலோ எப்படி சமாளிப்பது என்ற தொலைநோக்கு அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது போலிருக்கிறது.

“உங்கள் கஷ்டங்களை எல்லாம் இங்கு இறக்கி வையுங்கள். கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்” என்று மத போதகர்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இப்போது ராகுல் காந்தியும் அதைப் போலவே பேசுகிறார். “ விலைவாசி உயர்வை பிரதமர் மன்மோகன்சிங் கட்டுப்படுத்துவார். நீங்கள் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்” என்று காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசும்போது ராகுல் காந்தி சொல்லி இருக்கிறார். காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, நாம் எல்லோருமே அப்படி யாராவது ஒரு பிரதமர் நம்மைப் பாதிக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார் என்று நம்பவே விரும்புகிறோம். ஆனால் வேறு என்னென்னவோ நம்முடைய நினைவுக்கு வந்து அந்த நம்பிக்கை நம்முள் வேர்விடாமல் கலைத்துப் போடுகிறது.

அடுத்தடுத்து அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலையால், ஓரளவு நியாயமான சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பங்கள் கூட திண்டாடுகின்றன. 1993-94 முதல் 2004-05 வரையிலான அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அளிக்கப்பட்ட அர்ஜூன்சென் குப்தா அறிக்கை என்ன சொன்னது? 83.6 கோடி இந்தியர்கள் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான மதிப்பிலான உணவையே உட்கொள்ளுகிறார்கள். அதற்குப் பிந்தைய சுரேஷ் டெண்டுல்கர் குழுவின் அறிக்கை என்ன சொன்னது? கிராமப்புறங்களில் 41.8 விழுக்காட்டினரும் நகர்ப்புறங்களில் 25.7 சதவீதத்தினரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் வறுமைக் கோட்டுக்கான வரையறை என்ன? அந்த வரையறை சரிதானா, நியாயமானதா என்ற விவாதத்துக்குள் நாம் இப்போது போக வேண்டாம். அந்தக் கோடு என்ன என்பதை மட்டும் பார்க்கலாம்.

கிராமப்புறங்களில் ஒரு மாதத்துக்கு 446.68 ரூபாயும் நகர்ப்புறங்களில் ஒரு மாதத்துக்கு 578.80 ரூபாயும் ஒரு நபரால் செலவழிக்க முடிந்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவர்கள். அந்த அளவு கூட செலவு செய்ய இயலாதவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள். டெண்டுல்கர் கமிட்டியின் கணக்குப்படி பார்த்தாலும், கிராமப்புறங்களில் ஏறத்தாழ 40 சதவீதத்துக்கும் மேலானவர்கள் ஒரு நாளைக்கு 15 ரூபாய் கூட செலவழிக்க முடியாத நிலைமையில் இருக்கிறார்கள். இவர்களும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் என்று காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்கள்தான்! அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் வர்த்தகத்துக்கும் தொழில்துறைக்கும் கொடுத்த முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கு வறுமை ஒழிப்புக்காக கொடுத்திருந்தால், இன்று நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காது.

சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சரத்பவார்தான் நம்முடைய நாட்டின் உணவு மற்றும் விவசாயத்துறையின் அமைச்சராக இருக்கிறார். அதிக விக்கெட் எடுப்பவர்களையும் அதிக ரன் எடுப்பவர்களையும் நல்ல ஆட்டக்காரர்கள் என்று கிரிக்கெட்டில் சொல்வார்கள்; அதைப் போல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலோ, உணவுப் பொருட்களின் விலை அதிகமானாலோ, உணவு அமைச்சர் நன்றாக நிர்வாகம் செய்கிறார் என்று பாராட்டுவார்கள் என்று அவர் நினைக்கிறாரா தெரியவில்லை. அதனால் தான் ராகுல் காந்தி சரத்பவார் மீது நம்பிக்கை வையுங்கள் என்று நம்மைக் கோரவில்லை; பிரதமர் மன்மோகன்சிங் மீது நம்புக்கை கொள்ளுங்கள் என்கிறார்!

88 நாடுகளில் 66-வது இடத்தில் இந்தியா இருப்பதாக 2008-ல் குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் எனப்படும் உலக பட்டினிக் குறியீடு தகவல் தந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் 2010-ல் அதே குறியீடு 84 நாடுகளில் இந்தியாவுக்கு 67-வது இடத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங்! இன்னும் நிலைமைகள் மோசமாவது போலத்தான் தெரிகிறது. பெட்ரோல் விலை அவ்வப்போது உயர்கிறது; டீசலும் சமையல் எரிவாயுவும் விலை கூட்டப்படும் என்று எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கிறது. நம்முடைய சட்டைப் பையில் இருந்து நமக்குத் தெரியாமல் நமக்குச் சொந்தமானவற்றை எடுப்பதற்குக் ‘கை’கள் நீளுகின்றன. அதை நாம் அறியாமல் இருப்பதற்கான ‘மயக்க பிஸ்கட்’டாக ராகுல் காந்தி இருக்கிறார்!

0 Comments:

Post a Comment

<< Home