Saturday, December 25, 2010

சோதனை மேல் சோதனை

"அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கவும் இல்லை; எனக்கு எந்தவிதமான உதவியும் செய்ய முன்வரவில்லை; அவர்கள் என்னை என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை” என்றார் தாமஸ் டாம் சாயர். அவருக்கு வயது 61. அவர் ஒரு அமெரிக்கர். அவருடைய மேல்சட்டை, கால்சட்டை எல்லாவற்றிலும் ஈரம். சிறுநீரின் நெடி. ‘அவர்கள்’ அனுமதித்தவுடன், அவர் அப்படியே வந்து விமானத்துக்குள் ஏறினார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்கள் கழித்தே அவர் கழிப்பறைக்குப் போய் ஆடைகளை மாற்றிக் கொண்டு வர முடிந்தது.

அவருக்கு சிறுநீர்ப்பையில் புற்றுநோய். மற்றவர்களைப் போல் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. அவருடைய உடலுடன் ஒரு குழாயைப் பொருத்தி ஒரு பிளாஸ்டிக் பையில் சிறுநீரை சேகரித்து பிறகு கொட்டும்படி மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை செய்யும் காவலர்களுக்கு இதுபோன்ற நுட்பங்கள் எல்லாம் தெரியவில்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி ஓர் எதிர்பார்ப்பை நாம் வைத்திருப்பதும் தவறு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சோதனை விதிகள் என்ன சொல்கின்றன என்பதை அந்தக் காவலர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டாமா? அவர்களிடம் சோதனைக்கு தன்னை ஒப்புக் கொடுக்கும் ஒரு மனிதன் என்ன சொல்கிறான் என்பதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்க வேண்டாமா? அமெரிக்காவில் இருக்கும் டெட்ராய்ட் மெட்ரோபாலிடன் விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு சோதனை அதிகாரிகளுக்கு ‘சந்தேகப்படும்படி இருக்கும் மனிதர்களை’ ‘முழுமையாக’ தொட்டுத் தடவி சோதனை செய்யலாம் என்ற விதி மட்டுமே கவனத்தில் இருந்திருக்கிறது.

தாமஸ் சாயர் அவர்களிடம் கெஞ்சியிருக்கிறார். ‘என்னைத் தனி அறைக்கு கொண்டு போய் கூடுதல் சோதனையைச் செய்யுங்கள். நான் ஒரு சிறுநீர்ப்பை புற்றுநோய் நோயாளி. என் சிறுநீரை சேகரிப்பதற்கு என் உடலோடு பை பொருத்தப்பட்டிருக்கிறது. சோதனை செய்யும் உங்கள் கைகள் அதன் முனையை வேகமாக தொட்டால், ஒட்டியது விட்டுப்போய் பையில் இருக்கும் சிறுநீர் கொட்டி விடும்” என்று மன்றாடி இருக்கிறார். ஆனால், அந்த சோதனை அதிகாரிகள் அந்த வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஆடைக்குள் இந்தக் குழாயும் பையும் இருப்பது தெரியாமல், சாயருடைய உடைகளின் மேல் காவலருடைய கைகள் சோதனை செய்தன. உள்ளே வைத்திருந்த சிறுநீர்ப்பை உடைந்து அவருடைய உடைகளில் சிறுநீர் கொட்டியது. இது கடந்த நவம்பர் மாதம் நடந்த சம்பவம்!

மருத்துவ உதவியுடன் இருப்பவர்களும் மாற்றுத் திறனாளிகளும் தங்களுக்கு தனியறையில் சோதனை நடத்துங்கள் என்று கேட்பதற்கு அமெரிக்க விமான நிலைய விதிகள் அனுமதி அளிக்கின்றன. அவர்கள் உடலில் செயற்கையாகப் பொருத்தி இருக்கும் உறுப்புகளைக் கழற்றிக் காட்டுங்கள் என்று அதிகாரிகள் கேட்க மாட்டார்கள் என்று விதி சொல்கிறது. ஆனால் ‘யு.எஸ். ஏர்வேஸ்’ என்ற அமெரிக்க விமான நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். அந்தப் பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய். நோயால் பாதிக்கப்பட்ட மார்பகம் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு அந்த இடத்தில் செயற்கையாக ’மார்பகம்’ போல் ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணை சோதனையிட்ட காவலரின் கைகளில் அந்த செயற்கை மார்பகம் தட்டுப்பட்டிருக்கிறது. “இது என்ன என்று கேட்ட அந்தக் காவலர் அதை வெளியில் எடுத்துக் காட்டு என்று சொன்னார். நான் மிகவும் நொந்து போனேன்; அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்” என்றார் அந்த விமானப்பணிப்பெண்!

இவர்களைப் போல இன்னும் எத்தனையோ அமெரிக்கர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாகிறார்கள். அமெரிக்க விமானப் பயணியிடம் தீவிரமான சோதனை நடத்தப்படும் போது, அது குறித்த விமர்சனம் வேறுவகையாக இருக்கும். அதில் இனவாதம், மாற்றுப் பண்பாட்டை மதிக்கத் தெரியாத ‘திமிர்’ பிடித்த அமெரிக்கர்கள் என்று புதிய குற்றச்சாட்டுகள் திணிக்கப்படாது. அண்மையில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கருக்கு இதுபோன்ற அதிரடி சோதனை நடந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய அதிகாரி ஹர்தீப் பூரி என்ற சீக்கியருக்கும் இந்த சோதனை நடந்தது. இந்த இரண்டு சம்பவங்களும் இந்திய ஊடகங்களில் முக்கிய செய்திகளாக இடம்பெற்றன. ‘இனவாதக்’ கண்ணோட்டத்தில் இந்தியர்கள் அவமானப்படுத்தப்படுவதாக அமெரிக்காவுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்பப்படுகின்றன.

மீரா சங்கரும் ஹர்தீப் பூரியும் இந்திய அடையாளங்களைக் கொண்டிருந்ததால்தான் தீவிரமான சோதனைக்கு உள்ளானார்கள் என்று நம் அரசியல் ‘நிபுணர்கள்’ கருத்து சொல்கிறார்கள். மீரா புடவை அணிந்திருந்தார்; புடவையை ‘புஸ்புஸ்’ என்று உடலைச் சுற்றி இருக்கும் உடையாக அமெரிக்கர்கள் நினைக்கக் கூடும். அதற்குள் எதையேனும் மறைத்து வைக்க முடியும் என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள் போலிருக்கிறது. சீக்கிய மரபுப்படி பூரி தலைப்பாகை வைத்திருந்தார். தலைப்பாகைக்குள் சிறிய ஆயுதங்கள் ஒளித்து வைக்க முடியும் என்று அவர்கள் அச்சப்பட்டிருக்கலாம். அதனால் அவர்கள் இந்தியர்கள் என்பதற்காக சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஜார்ஜ் பெர்னாண்டஸ், கமல்ஹாசன், ஷாருக் கான் உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் அங்கே பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நம்மூரில் வி.ஐ.பி.க்களுக்கு நாம் கொடுக்கும் ‘மரியாதையை’ பிற நாடுகளிலும் எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. அதேசமயம், வெள்ளை அமெரிக்கர்களை விட மற்றவர்களைக் கூடுதல் எச்சரிக்கையுடன் அவர்கள் சோதிக்கிறார்கள் என்ற கருத்தையும் முற்றிலுமாக புறக்கணித்துவிட முடியாது! நாம் வாழும் சமூகத்தில் நிலவும் கருத்துக்கள் நம்முடைய அதிகாரிகளின் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொள்வதால், அவர்கள் ‘சிலரை’ கடுமையாக நடத்துவதைப் போல், அமெரிக்க அதிகாரிகளும் நடந்து கொள்கிறார்கள் போலிருக்கிறது.

இது போன்ற புகார்களைத் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம்? பல நாடுகளில் இருக்கும் பண்பாட்டு வேறுபாடுகளை காவலர்கள் புரிந்து கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்வது எளிது. சேலைக்கும் தாலிக்கும் இந்தியப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி அமெரிக்க காவலர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கும் தனித்தன்மையான பண்பாட்டை ஒரு சராசரி காவல்துறை அதிகாரி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது மிகையாகவே தெரிகிறது. இந்தியாவில் நடக்கும் பரவலான சோதனைகளில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி, பர்தா போன்றவை படாத பாடு படுகிறது என்பதையும் இங்கே நினைத்துப் பார்க்கலாம்.

மீரா சங்கரும் ஹர்தீப் பூரியும் நம்மைப் போல சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அல்ல. ‘டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்’ எனப்படும் அரசாங்க கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள். இது போன்ற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பான சலுகைகளும் உரிமைகளும் இருக்கின்றன. பலகாலமாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றுவதென்று அமெரிக்கா முடிவெடுத்திருந்தால், அதை மற்ற உலக நாடுகளுக்குத் தெரிவித்திருக்க வேண்டும்.

இந்திய அதிகாரிகளை அமெரிக்க காவலர்கள் ’தடவு’ சோதனை செய்ததை விட, முதலில் சொல்லப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களை அவர்கள் மனிதத்தன்மை இல்லாமல் நடத்தியதே கண்டனத்துக்குரியதாகத் தோன்றுகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்


0 Comments:

Post a Comment

<< Home