Saturday, December 25, 2010

உள்ளிருந்து கொல்லும் வைரஸ்!


"நம் நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து நான் மிகவும் கவலை அடைகிறேன்” என்று பிரதமர் மன்மோகன்சிங் சொல்லி இருக்கிறார். இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தைக்காக ஜெர்மனிக்குப் போகும்போது விமானத்தில் செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை அவர் பேசி இருக்கிறார். ஜனநாயகத்தின் பண்புகள் மீதும் இந்திய ஜனநாயக அமைப்புகள் மீதும் இந்தியாவின் பிரதமருக்கு மட்டும் மிகுந்த அக்கறை இருப்பதைப் போலவும் எதிர்க்கட்சிகளுக்கு அந்தக் கவலை இல்லை என்பதைப் போலவும் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு உங்களுக்கு ஓர் எண்ணம் உருவாகிறதா? அப்படி என்றால், பிரதமர் மன்மோகன்சிங் சிறந்த அரசியல்வாதியாக உருமாற்றம் பெற்றுவிட்டார் என்று அர்த்தம்!

டாக்டர் மன்மோகன்சிங் ஏன் இப்படி சொல்கிறார்? நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் எந்தவித விவாதங்களும் நடைபெறவில்லை; எந்த மசோதா பற்றியும் கலந்துரையாடல் அங்கு நடக்கவில்லை; கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கிய அந்தக் கூட்டத் தொடர் டிசம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைந்தது; காலவரையின்றி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத் தொடரில் 24 மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கான திட்டம் இருந்தது என்று செய்திகள் சொல்கின்றன. இவற்றை எல்லாம் விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கி நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கி விட்டன என்றும் அதனால் இந்திய நாடாளுமன்ற எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறேன் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் சொல்கிறார்!

பிரதமரின் பார்வை குறித்து பேசுவதற்கு முன்னால், நாடாளுமன்ற நடைமுறையை சிறிது பார்க்கலாம். ஒரு வருடத்தில் நாடாளுமன்றம் மூன்று முறை கூடுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர், மழைக்காலக் கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத் தொடர் என்று மூன்று முறை கூடுகிறது. பட்ஜெட்டின் போது ஏறத்தாழ 35 அமர்வுகளும் மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தின் போது ஒவ்வொரு தொடரிலும் 24 அமர்வுகளும் என்று வருடத்துக்கு 83 அமர்வுகள் நடக்க வேண்டும். இதற்கான செலவாக இந்த வருடத்தில் மக்களவைக்கு 347.65 கோடி ரூபாயும் மாநிலங்களவைக்கு 172.33 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதுதவிர, நாடாளுமன்றம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் நாடாளுமன்ற விவகாரத்துறைக்கு இந்த வருடம் 7.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் சேர்த்து ஒரு நாள் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு அரசு 6.35 கோடி ரூபாய் செலவு செய்கிறது. இருபது நாட்களுக்கும் மேலாக நடந்த அமளியில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 146 கோடி ரூபாய் என்கிறது ஒரு செய்தி!

இனி, பிரதமரின் கவலை நம்முள் உருவாக்கும் கேள்விகளைப் பார்க்கலாம். அடுத்தடுத்து அம்பலமாகி நிற்கும் ஊழல்களால் இந்திய ஜனநாயகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மன்மோகன்சிங் நினைக்கிறாரா? வளர்ச்சி என்ற பெயரில் சொந்த நாட்டு மக்களையே எதுவும் இல்லாதவர்களாக இடம் பெயர வைக்கிறோமே அது நமக்கு எந்தவகையிலாவது பெருமை சேர்க்கிறதா? ’வளர்ச்சி’ என்ற பெயரில் பழங்குடியினரின் வாழ்க்கையை சிதைப்பவர்களை எதிர்ப்பவர்கள் ‘வேட்டை’யாடப்படுவது எந்த வகை ஆட்சிமுறையில் சேர்கிறது? சட்டத்தை இயற்றும் அதிகாரமும் நிர்வாக அதிகாரமும் நீதியை நிலைநாட்டும் அதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. அதனால்தான் இந்த மூன்று துறைகளும் ஒன்றுக்கொன்று சமன்செய்து கொள்ளும் வகையில் ஜனநாயக அமைப்புகள் இயங்குகின்றன. இப்போதைய நிலையை விட மிகவும் மோசமாக ‘ஜனநாயகத்தின் குரல்வளை’ நெறிக்கப்பட்ட அவசரநிலைக் காலங்களையும் கடந்து இந்திய ஜனநாயகம் ‘உயிர்ப்புடன்’ இருக்கிறது. அந்த ஜனநாயகம்தான் மக்கள் ஆதரவு இல்லாத டாக்டர் மன்மோகன்சிங் என்ற முன்னாள் அதிகாரியை நிதியமைச்சராகவும் பிறகு பிரதமராகவும் ஏற்றுக் கொண்டது!

கடந்த நவம்பர் முதல் நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் முடங்கிப் போனதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமே காரணமா? நிச்சயமாக இல்லை. இந்திய ஊழல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு இந்திய அரசுக்கு இழப்புகளை ஏற்படுத்திய முறைகேடாக ‘2ஜி விவகாரம்’ பார்க்கப்படுகிறது. ”இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகே நான் எடுத்தேன்” என்று மீண்டும் மீண்டும் முன்னாள் அமைச்சர் ராஜா சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை வலியுறுத்துவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டுக் குழுவின் விசாரணைக்கு பிரதமரை அழைத்து பிரதமர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முயல்கின்றன என்று காங்கிரஸ் தரப்பில் சொல்கிறார்கள். ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோமே, அது பிரதமருக்குப் பொருந்தாதா? எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுக் குழு விசாரணையில் ‘தேவைப்பட்டால்’ நேரில் ஆஜராகி தன் அமைச்சரவையின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்கே பிரதமர் முயன்றிருக்க வேண்டும். அதுவே அவருக்கும் இந்திய ஜனநாயகத்துக்கும் பெருமை சேர்க்கும் செயலாக இருந்திருக்கும்!

இந்த நிலைமைக்கு எதிர்க்கட்சிகள் மட்டும்தான் காரணமா? எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத ஆளும் தரப்புக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லையா? மக்களைப் பாதிக்கின்ற பொதுவான பிரச்னைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதும், அவை குறித்த கருத்துக்களை விவாதிப்பதும், அந்த விவாதத்தில் எழும் கருத்து வேறுபாடுகளை அங்கீகரித்து மதிப்பதும், இறுதியில் பெரும்பான்மையின் கருத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு முடிவுக்கு வருவதும் தானே நாடாளுமன்ற நடைமுறை? ஆளும் கூட்டணியும் எதிர்த்தரப்பு கூட்டணியும் தங்களுடைய நிலையில் இருந்து கொஞ்சம் கூட கீழே இறங்கி வராமல் பிடிவாதமாக இருந்ததே இந்த இழப்புக்குக் காரணம்!

இப்போது வரும் செய்திகளைப் பார்க்கும்போது இரண்டு தரப்பும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது கூட தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. ‘நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கிய எதிர்க்கட்சியை மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்’ என்று சோனியாகாந்தி பேசி இருக்கிறார். “நாடாளுமன்றம் செயல்படாமல் இருப்பதால் கூட சில சமயங்களில் நியாயம் கிடைக்கும்” என்று பாஜகவின் எல்.கே.அத்வானி சொல்லி இருக்கிறார். பாஜகவும் இடதுசாரிகளும் அடுத்து வரும் நாட்களில் இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்திடம் எடுத்துப் போக இருப்பதாக சொல்கிறார்கள். நாடாளுமன்றத்துக்குள் நடக்காத விவாதங்கள் இனி வரும் நாட்களில் தொலைக்காட்சி அரங்கங்களில் நடக்கும்; செய்தித்தாள்களில் பத்திகளாக தொடரும்; மக்களை நேரில் சந்திக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் பஞ்சம் இருக்காது. அடுத்த வருடம் மே மாதம் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரை இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் உயிர்ப்புடன் வைத்திருக்கவே முயலும்!

அதேசமயம் கடந்த டிசம்பர் 13-ம் தேதியுடன் நம்முடைய நாடாளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு ஒன்பது வருடங்கள் நிறைவடைகின்றன. இந்திய ஜனநாயகத்தின் சின்னத்தை நிர்மூலமாக்குவதற்கு 2001 டிசம்பர் 13-ம் நாள் சில பயங்கரவாதிகள் முயன்றார்கள். இந்திய ஆட்சி முறையின் மையத்தைத் தகர்ப்பதற்கு அவர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. நாடாளுமன்றத்தின் வெளியில் இருந்து பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களை நம்மால் எளிதில் முறியடிக்க முடிகிறது. நாடாளுமன்றத்துக்குள் நம்முடைய பிரதிநிதிகளாகப் போய் உட்கார்ந்து கொண்டு உள்ளே இருந்து இந்திய ஜனநாயகத்தை சிதைப்பவர்களை நாம் எப்படி எதிர்கொள்வது?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home