மக்கள் காத்திருக்கிறார்கள்!
எனக்கு ஊக்கம் அளிக்கும் செய்தி ஒன்றை நீண்ட நாட்களுக்குப் பிறகு படித்தேன்” என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி சொல்லி இருக்கிறார். கடந்த 2002-ம் வருடம் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்த போது முதலமைச்சர் நரேந்திர மோடி, அரசமைப்புச் சட்டம் வகுத்திருக்கும் முதல்வரின் கடமையை சரியாக செய்யவில்லை என்றும், அப்படிச் செய்து இருந்தால், பல உயிர்கள் காக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்தக் ‘கலவரங்களின்’ போது முதலமைச்சர் நரேந்திர மோடி தன்னுடைய கடமையைச் செய்யத் தவறினார் என்று சொல்வதற்குத் தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருப்பதாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியைத் தான் ஊக்கம் தரும் செய்தி என்று அத்வானி தன்னுடைய வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கையின் முழு உள்ளடக்கத்தையும் அறிந்து கொள்வதற்கு இந்திய மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
”இந்தக் கலவரங்களுக்கு நரேந்திர மோடி எந்தவகையிலும் காரணம் இல்லை. நடந்து விட்ட இந்தக் கலவரங்கள் துரதிருஷ்டவசமானவை. ஆனால், மோடி கலவரங்களைத் தூண்டி விட்டார் என்றோ கடமைகளைச் செய்யத் தவறினார் என்றோ சொல்வது பொய்” என்று குஜராத் அரசு வழக்கறிஞர் முகுல் ரோகத்கி சொல்கிறார். ”உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு குஜராத் மாநில அரசு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது. சட்டத்தை மதித்து நடந்து கொள்வோம் என்று நாங்கள் கட்சிரீதியாக முடிவெடுத்தோம்; விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தோம். எங்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் வேலை செய்தன. இருந்தாலும் நாங்கள் சட்டத்தை நம்புகிறோம்” என்று பாஜகவின் ஷா நவாஸ் ஹூசேன் பேசி இருக்கிறார். இவர்கள் எல்லாம் இப்படி சொல்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான்! நரேந்திர மோடியை முதலமைச்சராகக் கொண்ட அரசின் வழக்கறிஞர் வேறு எப்படிப் பேசுவார்? மோடியின் அரசியல் கட்சியான பாரதிய ஜனதா இந்த செய்திக்காக மகிழ்ச்சி அடையாமல் என்ன செய்யும்?
ஓர் உறையில் போட்டு ஒட்டப்பட்ட நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் உள்ளடக்கம் என்ன என்பது உச்சநீதிமன்றத்தில் வெளியாகும் வரை யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. இருந்தாலும் அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை ’யாரோ’ ஊடகங்களுக்கு கசிய விட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அந்தக் ‘கசிவே’ இந்த செய்தியாகி இருக்கிறது. அப்படி வெளியாகி இருக்கும் செய்தியின்படி, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த குஜராத் படுகொலைகளில் நரேந்திர மோடியைச் சேர்த்துப் பார்க்கும் வகையில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு சொல்லி இருப்பதாகத் தெரிகிறது. அந்த விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொள்ளப் போகிறதா அல்லது வேறு என்ன செய்யப் போகிறது என்பதை அறிய குஜராத்தில் நடந்த அநியாயங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் அத்தனைபேரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சாகியா ஜாஃப்ரி என்ற பெண்மணியும் இந்த நீதிக்காக காத்திருக்கிறார்!
அவர்தான் முதலமைச்சர் நரேந்திர மோடி தன்னுடைய கடமையைச் செய்யத் தவறினார் என்று புகார் செய்து வழக்கு தொடர்ந்தார். அவருடைய கணவர் எஹசான் ஜாஃப்ரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். அவருடைய வீடு அஹமதாபாத் நகரில் குல்பர்க் சொசைட்டி என்று அழைக்கப்படும் குடியிருப்பில் இருந்தது. கடந்த 2002, பிப்ரவரி 28-ம் தேதி எஹசான் ஜாஃப்ரி ஒரு கும்பலால் தீயிட்டுக் கொல்லப்பட்டார். முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய அமைச்சரவை சகாக்கள், காவல்துறை, அதிகாரிகள் அனைவரும் அரசமைப்புச் சட்டத்தின்படியான அவர்களுடைய கடமைகளைச் செய்திருந்தால், ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்றும் சாகியா ஜாஃப்ரி குற்றம் சாட்டி இருக்கிறார். சாதி,மதம், பாலினம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து எல்லா உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று சொல்லும் அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவியை ஏற்றுக் கொள்பவர்கள், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது அவருடைய புகார்!
கலவரம் மற்றும் படுகொலைகள் தொடர்பான மாநில அரசின் காவல்துறையே விசாரணை செய்தது. அந்த விசாரணை நியாயமாகவும் நம்பகத்தன்மையுடனும் நடக்கவில்லை என்று தேசிய மனித உரிமை ஆணையம் கூறியதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. அந்த விசாரணைக் குழு நரேந்திர மோடியை நேரில் அழைத்து விசாரித்தது. அரசிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் ஆவணங்களைப் பெற்று தொடர்புடையவர்கள் விசாரிக்கப்பட்டார்கள். இதற்கெல்லாம் பிறகு இப்போது இறுதியாக, சிறப்பு விசாரணைக் குழு ஓர் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கொடுத்திருக்கிறது.
இந்த புகாரைக் கொடுத்த சாகியா ஜாஃப்ரியின் கணவர் எஹசான் ஜாஃப்ரி எப்படி கொல்லப்பட்டார்? அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது? கடந்த 2002, பிப்ரவரி மாதம் 28-ம் தேதி காலை ஒன்பது மணி அளவில் ஒரு கும்பல் குல்பர்க் சொசைட்டி வீடுகளின் முன்னால் திரண்டு நின்றது. அங்கு குடியிருக்கும் முஸ்லீம்களை அச்சுறுத்தும் வகையில் முழக்கங்களை அந்தக் கும்பல் எழுப்பியது. நண்பகலுக்குப் பிறகு அந்தக் கும்பல் அங்கு குடியிருந்த முஸ்லீம்களைத் தாக்கத் தொடங்கியது. அங்கேயே குடியிருந்த எஹசான் ஜாப்ரியின் வீட்டுக்குள் அடைக்கலமாக மக்கள் வரத் தொடங்கினார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்ப்பினர் என்ற வகையில் அவருக்கு எப்படியும் எந்த ஆபத்தும் நேராது என்ற நம்பிக்கையில் முஸ்லீம்கள் அவருடைய வீட்டுக்குள் புகலிடம் தேடி இருந்திருக்கக் கூடும். முதலமைச்சர் நரேந்திர மோடியில் தொடங்கி காங்கிரஸ் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக எந்திரத்தின் முக்கிய பதவிகளை அலங்கரிப்பவர்கள் என்று பலரிடமும் எஹசான் ஜாஃப்ரி தொலைபேசியில் பேசியிருக்கிறார். ஒரு கும்பலின் வன்செயல்களுக்கு பலியாகப் போகும் அவலநிலையில் இருந்து மீட்கப்படுவதற்கு உதவி செய்யுமாறு அவர்களிடம் கெஞ்சி இருக்கிறார்!
காலை ஒன்பது மணியில் இருந்து அவர் எழுப்பிய குரலைக் கேட்டு யாரும் உதவ முன்வரவில்லை. மாறாக, முதலமைச்சர் மோடி தொலைபேசியில் பேசும்போதே அவரை அவமதித்ததாக சாட்சிகள் சொல்கிறார்கள். காவல்துறையில் இருந்த சில அதிகாரிகளும் ’கலவரத்தை தடுக்க வேண்டாம்’ என்ற உத்தரவு இருப்பதாக சொல்லி, அவருக்கு உதவ மறுத்ததாக சொல்லப்படுகிறது. யாருமே நம்மைத் தடுக்க மாட்டார்கள் என்ற சூழல் நிச்சயமான பிறகு மதியத்துக்கு மேல் அந்தக் கும்பல் ஜாஃப்ரியின் வீட்டுக்குப் போய் அவரையும் அவருடன் அங்கு இருந்தவர்களையும் எரித்துக் கொன்றிருக்கிறது. அன்று சாயங்காலத்துக்குள் அந்த சொசைட்டியில் 69பேர் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது செய்தி. மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது அந்த மாநிலத்தில் நடந்தது மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி! எல்.கே.அத்வானியும் அப்போது இந்தியாவின் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். அந்த அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கு இவர்கள் தார்மீகரீதியாக பொறுப்பாக மாட்டார்கள் என்றால் வேறு யார்தான் பொறுப்பாவார்கள்?
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
0 Comments:
Post a Comment
<< Home