Wednesday, December 15, 2010

மந்தமான மத்திய அரசு


”உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். இது தொடர்பாக நீங்கள் கடிதம் எழுதியதற்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னையை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்,” என்று ஒரு கடிதம் வந்தால் நம் கோரிக்கை ஏற்கப்பட்டது என்று அர்த்தம் இல்லை. பிரதமருக்கு ஒருவர் கடிதம் எழுதினால், அதற்கு வழக்கமாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் பதில் இப்படித்தான் இருக்கிறது. அப்படி ஒரு பதிலே நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகருக்கும் கிடைத்தது. ராஜீவ் சந்திரசேகர் எப்போது பிரதமருக்குக் கடிதம் எழுதினார்? கடந்த 2007-ம் வருடம். அவர் எழுதிய கடிதம் எதைப் பற்றியது? 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே அந்தக் கடிதத்தின் சாரம்.

அந்தக் கடிதத்தின் மீது பிரதமர் மன்மோகன்சிங் 2007 முதல் இன்று வரை என்ன நடவடிக்கை எடுத்தார்? அவராக எதுவும் செய்யவில்லை. 2ஜி தொடர்பான கோப்பில் அவர் எழுதிய குறிப்புகளும் தொலைத் தொடர்பு அமைச்சகத்தால் கண்டுகொள்ளப்படவில்லை என்ற நிலையிலும் கூட அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. அவருக்குத் தெரிந்த 2ஜி, சோனியாஜியும் ராகுல்ஜியும்தான் என்று பத்திரிகைகளும் குறுஞ்செய்திகளும் கேலி செய்யும் வகையில் தான் அவருடைய செயல்பாடுகள் இருந்தன. தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற நிலையில் ஒருவேளை தன்னுடைய அலுவலகத்தில் இருந்து பல செய்திகளைக் கசியவிட்டு அவற்றின் மூலமாக ஓர் அழுத்தம் ஏற்படுவதற்கு அவர் காரணமாக இருந்திருக்கலாம்.

இப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் இடங்களிலும் அவருக்கு நெருக்கமான சிலரின் இடங்களிலும் மத்திய புலனாய்வு நிறுவனம் சோதனை நடத்தி இருக்கிறது! கடந்த 2009, அக்டோபர் மாதம் 21-ம் தேதி ‘யாரோ’ சில தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் மீதும் யாரோ சில தனிமனிதர்கள் மேலும் ஒரு வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது. அந்த வழக்கின்மீது விசாரணை நடத்தி இயல்பாக சில வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தவில்லை. உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது. மத்திய அரசையும் பிரதமரையும் கண்டிக்க வேண்டியிருந்தது. உச்சநீதிமன்றமும் ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய குரல்களுக்குப் பிறகே வேறு வழியில்லாமல் ஆ.ராசா அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஊடகங்களும் உச்சநீதிமன்றமும் அப்படி ஒரு நிலையை எடுக்காமல் இருந்திருந்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுத்திருக்காது!

இன்று ராஜா தவிர வேறு சில தனிமனிதர்களுடைய இடங்களை மத்திய புலனாய்வு நிறுவனம் சோதனை செய்கிறதே, அந்தத் தனிமனிதர்களை அப்போது சி.பி.ஐ.க்கு தெரியாதா? அந்தத் துறையின் செயலர்களாக இருந்த அதிகாரிகளின் பெயர்களை ஏன் வழக்கு பதிவு செய்த போது சேர்க்கவில்லை? அமைச்சரின் பெயர் ஏன் விடுபட்டது? 2008-ம் வருடம் முதல் ஆ.ராசாவின் பெயர் இந்த விவகாரத்தில் சர்ச்சைக்கு உள்ளாகி இருந்த நிலையில், 2009-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருடைய பெயர் இல்லை என்பது சி.பி.ஐ.யின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறது. அரசியல் பருவநிலைக்கு தகுந்த மாதிரி, அரசியல்வாதிகளின் கைப்பாவையாக ‘சிபிஐ’ செயல்படுகிறதோ என்ற அச்சம் இதுபோன்ற வழக்குகளைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.

ராஜா குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பது கூட இங்கு பிரச்னை இல்லை. அவருடைய முடிவால் அரசாங்கத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையின் முடிவில் அவர் குற்றமற்றவர் என்று தெரிய வந்தால், அவர் மீண்டும் அதே துறையின் அமைச்சராகக் கூட பதவி ஏற்கலாம். யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஒரு லட்சம் கோடி ரூபாயை ராஜா சுருட்டி விட்டார் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அலைக்கற்றை ஒதுக்கீடு மிகவும் மலிவான விலையில் நடந்திருப்பதால், ஏதேனும் ‘பலன்களைப்’ பெற்றுக் கொண்டுதான் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணம் ஒருவர்க்கு எழுவதை தவிர்க்க முடியாது!

இப்போது மத்திய புலனாய்வு நிறுவனம் நடத்திய சோதனைகளில் ’டயரி’ கிடைத்தது என்றும் ’முக்கிய ஆவணங்கள்’ சிக்கின என்றும் ‘வழக்கம்போல்’ செய்திகள் வருகின்றன. 2009-ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதே யாராக இருந்தாலும் இதுபோன்ற ‘ஆவணங்களை’ அப்புறப்படுத்தி இருப்பார்கள். ‘தனக்குக் கிடைத்திருக்கும் பதவியும் அதிகாரமும் நிரந்தரமானவை’ என்று ஒருவர் நம்பினால் கூட, அமைச்சர் பதவியில் இருந்து விலகியவுடன் ‘ஆவணங்களை’ வேறு இடத்துக்கு மாற்றி இருக்கக் கூடும். ஆனால் ’பணம் யார் யாருக்கு எப்படி கொடுக்கப்படிருக்கிறது’ என்ற தகவல் டயரியில் இருப்பதாக பெயர்சொல்ல விரும்பாத வருமானவரித் துறை அதிகாரி சொன்னதாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராசாவின் ஒரு முடிவால், அரசாங்கத்துக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு நாளும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையில், இவ்வளவு காலம் அமைச்சராக இருந்து, நிர்வாகத்தின் ’நெளிவு சுளிவுகளை’ அறிந்த ஒருவர் இப்படி ‘அப்பாவித்தனமாகவா’ ஆவணங்களை வீட்டில் வைத்திருப்பார்?

2006-ல் பதவி ஏற்ற நாள் முதல் இப்போதுவரை தி.மு.க அரசு தமிழகத்தில் செய்திருக்கும் நல்ல விஷயங்களால் கிடைத்த நல்ல பெயரைவிட, 2ஜி விவகாரத்தால் ஏற்பட்டிருக்கும் களங்கம் அதிகமாக இருக்கும் என்று தோன்றவில்லை. அதனால் தமிழகத்தில் 2011-ல் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ’ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் ஊழல்’ என்ற வார்த்தைகள் அதிகம் இடம் பெறும். தமிழக மக்கள் அதைப் பெரிய தேர்தல் பிரச்னையாக பார்க்கமாட்டார்கள் என்பதற்காக, அந்த விவகாரத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடாது. ஊழலை தேர்தல் பிரச்னையாக மட்டும் சுருக்கி விட முடியாது. மக்களுடைய வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்களும் வீணான முறைகளில் வாரி இறைப்பவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

உண்மையில் அப்படி ஏதும் நடக்குமா? நடக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் நடப்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படும். ‘ஆஹா! நீதி கிடைத்து விட்டது’ என்று நாம் மயங்கி இருக்கும் நிலையில் விசாரணை மந்தமாகும்; புதிதாக முளைக்கும் வேறு ஒரு பிரச்னையில் நம்முடைய கவனம் குவியும். பழைய விவகாரங்களை நாம் படிப்படியாக மறந்து போய்விடுவோம். இதுதான் நம் நாட்டின் நிர்வாக நடைமுறை. எந்தப் புள்ளியில் இருந்து இந்த நடைமுறையை மாற்றுவது என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டியது அவசியம்!

’சட்டம் தன் கடமையைச் செய்யும்’, ’நீதியின் சக்கரம் மெதுவாக சுற்றலாம்; ஆனால் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்’ போன்ற வார்த்தைகள் எல்லாம் நம்மை அமைதிப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே உதவும். இப்போது ராசாவின் வீடு மற்றும் பல இடங்களில் நடந்த சோதனைகள் காலதாமதமானவை என்றும் மிகவும் குறைந்த அளவிலானவை என்றும் புரிந்து கொள்வதற்கு ஒருவர் அரசியல் பண்டிதராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home