Tuesday, December 07, 2010

கோபுர பொம்மைகள்!

“ஒழுங்கமைக்கப்பட்ட கிசுகிசு என்பதைத் தாண்டி இதில் என்ன இருக்கிறது?” நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

“ராடியா டேப்ஸ்” என்று தற்போது ‘புகழ்’ பெற்றிருக்கும் உரையாடல்கள் அந்த நாளிதழில் முழுப்பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. தனிமனிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த விஷயங்களை எல்லாம் பக்கம் பக்கமாக பத்திரிகைகள் வெளியிட்டு இருக்கின்றன என்று பார்க்கும்போது, கிசுகிசு என்ற உணர்வு இயல்பானதாகவே தெரிகிறது. அதிலும் அடுத்தவர்களுடைய அந்தரங்கத்துக்குள் தலையை நுழைக்க விரும்பவில்லை என்ற எண்ணத்துடன் நாகரிகமாக வாழ விரும்பும் நபர்களுக்கு தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதே விரும்பத்தகாத ஒரு செயலாகத் தெரியும்!

ஆனால் ‘நாட்டு நலன்’ கருதி தனிமனிதர்களுடைய உரையாடல்களை பதிவு செய்யும் உரிமையை அரசு எடுத்துக் கொண்டிருப்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அரசின் பார்வையில் பயங்கரவாதிகளாக தெரிபவர்கள், அரசுக்கு எதிரானவர்கள் போன்ற மனிதர்களுடைய தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படும்போதோ அல்லது அவர்களுடைய உரையாடல்கள் பதிவு செய்யப்படும்போதோ பெரிய சலசலப்புகள் எதுவும் ஊடகங்களில் எழுவதில்லை. பெரும்பாலும் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர ‘நாகரிக’ மனிதர்களுக்கு வேறு வழியில்லை. அரசியல்வாதிகள் தொடர்பான உரையாடல்களாக இருந்தாலும் ‘பொழுதுபோக்கு’ என்ற கோணத்தில் அதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ரத்தன் டாடா போன்ற தொழிலதிபர்களின் பேச்சு பதிவு செய்யப்பட்டு அது ஊடகங்களில் வெளியாகும்போது, சமூகத்தின் மேல்மட்டங்களில் கொஞ்சம் அதிர்வு ஏற்படுகிறது. அதனால் அவர்களுக்கு கோபம் வருகிறது. யார் மேல் அந்தக் கோபம்? பதிவு செய்யும் அரசு மீது அல்ல, அவர்களுடைய பேச்சை வெளியிடும் ஊடகங்கள் மேல் அவர்கள் எரிச்சலைக் காட்டுகிறார்கள்!

ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் சாதாரண மக்கள் கோபம் கொள்வதற்கான அடிப்படையையும் ‘ராடியா டேப்ஸ்’ கொடுக்கிறது என்பது வேறு செய்தி! 2009 மக்களவைத் தேர்தல் முடிந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது அமைச்சரவை அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்ட காலகட்டத்தில் நிரா ராடியா என்ற பெண்ணுடன் பலர் பேசிய பேச்சுக்கள் ‘ராடியா டேப்ஸின்’ உள்ளடக்கம். அந்தப் பேச்சுகளின் வரி வடிவங்களும் ஒலி வடிவங்களும் இணையத்தில் கிடைக்கின்றன. தி.மு.க எம்.பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, டெல்லியில் இருக்கும் புகழ் பெற்ற பத்திரிகையாளர்களான வீர்சங்வியும் நியூடெல்லி டெலிவிஷனின் பர்கா தத்தும் நிரா ராடியாவின் சில முயற்சிகளுக்கு உதவி இருக்கிறார்கள் அல்லது உதவுவதாக வாக்களிக்கிறார்கள். அதாவது ஊடகப் பணி மூலம் கிடைத்த புகழையும் அதிகார பீடங்களின் பக்கத்தில் போகக் கூடிய வாய்ப்பையும் அரசியல் ‘பேரங்களுக்கு’ பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற எண்ணம் அந்த உரையாடல்களைக் கேட்பவர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது!

பெரிய தொழிலகங்களுடைய மக்கள் தொடர்புப் பணிகளை செய்து கொடுப்பவராக நிரா ராடியா அறியப்படுகிறார். ஒரே நேரத்தில் டாடா குழுமத்துக்கும் முகேஷ் அம்பானி குழுமத்துக்கும் மக்கள் தொடர்பு வேலைகளை அவருடைய நிறுவனம் கவனித்து வந்திருக்கிறது. இதில் இருந்தே அவருடைய செல்வாக்கைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவருடன் ரத்தன் டாடா பேசிய உரையாடலும் ஊடகங்களால் வெளியிடப்பட்டது. இதனால் அவருடைய தனிமனித உரிமை பாதிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் ரத்தன் டாடா மனு போட்டிருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்கும்போது அவருடைய அந்தரங்கத்தில் ஊடகங்கள் நுழைந்துவிட்ட ஒரு தோற்றம் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அவர் அரசு தொடர்பான பணிகளைப் பற்றிப் பேசும்போது அதை அந்தரங்கம் என்று சொல்ல முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் யார் யாருடன் என்னென்ன வேலைகளை எப்படி பகிர்ந்து கொள்கிறது என்பதை அறியும் உரிமை மக்களுக்கு இருக்கிறது.

நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அமைச்சர்களாக யார் இருக்க வேண்டும் என்பதை நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சார்ந்த கட்சித் தலைமை தீர்மானிக்கும் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தக் கட்சியின் எம்.பி.க்கள் சிலருக்கு அந்த நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. ‘எங்களை வழிகாட்டும் மூத்த தலைவர் கருணாநிதி’ என்று சோனியா காந்தி, மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது பேசுகிறார்களே, அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லையா என்ன? மத்திய ஆட்சியில் தி.மு.க.வைச் சேர்ந்த யார்யார் அமைச்சர்களாக வேண்டும் என்பதை திமுக எம்.பி.க்களும் காங்கிரஸ் தலைமையும் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் பேசாமல், டெல்லியில் இருக்கும் ‘அதிகாரத் தரகர்களுடன்’ ஏன் பேச வேண்டும்? அமைச்சர்களைத் தீர்மானிக்கும் ‘சிறப்பு உரிமை’ கொண்ட பிரதமர் இதுபோன்ற எத்தனை தரகர்களின் தலையீடுகளுக்கு செவி சாய்க்கிறார்?

இப்படி ஏராளமான கேள்விகளை அரசியல்வாதிகளுக்கு எதிராக எழுப்பலாம். ஆனால் ராடியா டேப்ஸில் இடம் பெற்றிருக்கும் ஊடகவியலாளர்களைப் பற்றியும் பேச வேண்டிய அவசியம் எழுகிறது. இந்த அதிகார பேரத்தில் அவர்களுடைய பங்கு என்ன? இந்த ‘தரகு’ வேலையில் அவர்கள் உண்மையிலேயே மனமுவந்து இறங்கினார்களா? அல்லது தங்களுக்குத் தகவல் தரும் ஒரு ‘சோர்ஸ்’ மனம் கோணாமல் நடந்து கொள்வதற்காக அப்படி நடித்தார்களா? ”நான் அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும்” என்று பர்கா தத் கேட்கும் தொனி ஊடகவியலாளர்கள் பெருமைப்படும்படி இல்லை. மக்களைப் பெருமளவில் சென்றடையும் மிகப் பெரிய ஊடகங்களில் வேலை பார்ப்பதால் மட்டுமே இவர்களுக்கு இது போன்ற நெருக்கங்களும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட வாய்ப்புகள் வரும்போது தங்களுடைய ஊடகங்களில் வேலை செய்யும் நபர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நெறிசார்ந்த வழிகாட்டுதல்களை ஊடக நிர்வாகங்கள் வரையறுத்திருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு பண்பாட்டை உருவாக்கி அதன்படியே தானும் தன்னுடைய சக ஊழியர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த ‘புகழ்’ பெற்ற ஊடகவியலாளர்களும் விரும்புவதில்லை!

வாஷிங்டன் போஸ்ட்டின் ‘டெஸ்க்புக் ஆன் ஸ்டைல்’, அறநெறிகள் சார்ந்த இதழியல் பற்றி பேசுகிறது. ”கட்சி சார்ந்த நடவடிக்கைகள், அரசியல், சமூக நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்பதை நாம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அந்த நடவடிக்கைகள் உள்ளடக்கத்தை நியாயமாக ‘ரிப்போர்ட்’ அல்லது ‘எடிட்’ செய்யும் திறனை ஒரு தரப்புக்கு ஆதரவாக மாற்றிவிடும் அல்லது மாற்றியதாக ஒரு தோற்றத்தைக் கொடுக்கும்” என்று அதன் மூத்த இதழாளர் பென் பிராட்லீ சொல்கிறார். ’புகழ்’ பெற்ற இதழாளர்கள் குறித்து அவர் எச்சரிக்கையும் செய்கிறார். அவர்கள் தங்களுடைய நிலையை மீறிய நினைப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். கோவிலையும் கோபுரத்தையும் தாங்கி நிற்பது தானே என்று கோபுரத்தில் இருக்கும் சிற்பம் நினைப்பது போலத்தான் இவர்களும் தங்களைப் பற்றி எண்ணிக் கொள்கிறார்கள். இவர்களால்தான் பல அரசியல் நிகழ்வுகள் நடப்பதாக ஒரு கற்பனையை வளர்த்துக் கொள்கிறார்கள். இதன் விளைவாக அவர்களுடைய பார்வை மாறுகிறது. தொழில் காரணமாக அதிகார மட்டங்களில் ஏற்படும் நெருக்கத்தை ‘வேறு’விதங்களில் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்!

இந்தப் போக்கு ஊடகங்களுக்கு நல்லதல்ல! இதழ்கள் மீதும் ஊடகங்கள் மீதும் மக்கள் கொஞ்சநஞ்சம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் இழப்பதற்கு முன்னால் நிலைமைகளை சீர் செய்வதே இன்றைய தேவை. தங்களுக்கான நெறிகளை ஊடகங்கள் தாங்களே வகுத்துக் கொள்வதன் அவசியத்தை ’ராடியா டேப்ஸ்’ நமக்கு உணர்த்துகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home