Tuesday, December 07, 2010

தேசபக்தர்கள் யார்?

"அலகாபாத் நீதிமன்றத்தில் ஏதோ அழுகிக் கிடக்கிறது” என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் அந்த வார்த்தைகளில் இருந்து நாம் என்ன புரிந்து கொள்வோம்? ஏதோ ஒரு பொருள் அங்கு அழுகிக் கிடக்கிறது; யாரும் பார்த்து அதை வெளியில் தூக்கிப் போடாததால் அந்த மன்றத்திற்குள் நுழைந்தாலே முடைநாற்றம் அடிக்கிறது என்று நம்மில் பலர் அர்த்தம் கொள்வோம். அரசியல் உணர்வு அதிகம் கொண்டவர்கள், அங்கே நீதி செத்து அழுகிக் கிடக்கிறது என்று ஒருவேளை பொருள் கொள்ளக் கூடும். இந்த வார்த்தைகளை சொல்லி இருப்பவர் யார் என்று தெரிந்தால் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வது எளிது என்றும் நம்மில் சிலர் நினைக்கலாம். ‘எந்த விஷயத்தைப் பற்றியும் யார் சொன்னாலும் அதன் உண்மையான பொருளை தீவிரமாக ஆய்வு செய்து புரிந்து கொள்வதே அறிவு’ என்று நமக்கு நம்முடைய முன்னோர்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் சொல்பவரை விட சொல்லப்பட்ட விஷயத்தின் மெய்ப்பொருள் தான் நமக்கு முக்கியம் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டியதிருக்கிறது!

இது நம்முடைய அரசியல் தலைவர்களாலும் அல்லது சாதாரண மக்கள் மத்தியிலும் நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்விக்கு எதிர்மறையான பதிலே கிடைக்கிறது. ஊடகங்களில் ஒரு ‘ஊழல்’ பரபரப்பாக இடம்பெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த புகார் அல்லது குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்ற விவாதம் நடப்பதற்குப் பதிலாக சில இடங்களில், ஊடகங்கள் ஏன் இந்த விஷயத்தை பரபரப்பாக்குகின்றன என்ற உரையாடலில் நாம் இறங்கி விடுகிறோம். ஏதாவது ஒரு நிறக் கண்ணாடியை கண்களில் மாட்டிக் கொண்டு அந்த நிறமே எங்கும் தெரிகிறது என்று நாம் ‘சொந்தமாக’ முடிவுக்கு வந்து விடுகிறோம். பிறகு அதுவே உண்மை என்று மற்றவர்களிடம் பிரசாரம் செய்யவும் தொடங்குகிறோம்.

அலகாபாத் நீதிமன்றத்தில் ஏதோ அழுகிக் கிடக்கிறது என்பதைச் சொன்னது உச்சநீதிமன்றம். டென்மார்க் நாட்டில் ஏதோ அழுகிக் கிடக்கிறது என்று ‘ஹாம்லட்’ என்ற நாடகத்தில் ஷேக்ஸ்பியர் குறிப்பிடுவதைப் போல நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூவும் ஜி.எஸ்.மிஸ்ரா கொண்ட பெஞ்ச் இந்த கருத்தை சொல்லி இருக்கிறது என்று செய்திகள் சொல்கின்றன. ”சில நீதிபதிகளுக்கு நெருக்கமான உறவினர்கள் அங்கே வழக்க்கறிஞர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் எல்லாம் தொழிலுக்கு வந்த சில வருடங்களில் செல்வச் செழிப்பும் செல்வாக்கும் கொண்டவர்களாக மாறி விடுகிறார்கள்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

லக்னோவுக்கு 80 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் உள்ளூர் விழாக்களின் போது சர்க்கஸ் நடத்துவதற்காக நிலத்தை ஒரு சர்க்கஸ் கம்பெனிக்கு ’லீசு’க்கு கொடுத்திருக்கிறார்கள். இதை எதிர்த்து லக்னோ உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. லக்னோவின் எல்லைக்குள் வரும் இந்த வழக்கு அதன் பிறகு எப்படியோ அலகாபாத் கிளைக்கு வந்து அங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அங்கு கிடைத்த தீர்ப்பை ஏற்க முடியாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அந்த வழக்கின் விசாரணையின்போதுதான் அலகாபாத் நீதிமன்றத்தில் ஏதோ அழுகிக் கிடக்கிறது என்ற வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டிருக்கின்றன.

இதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே ‘அழுகிக் கிடப்பது அலகாபாத் நீதிமன்றம் மட்டும் தானா’ என்ற கேள்வி உங்களுடைய மனதில் எழக் கூடும். சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘தமிழகத்தில் காவல்துறையின் ஈரல் அழுகிக் கிடக்கிறது’ என்று முதலமைச்சர் கருணாநிதி சொன்னது உங்களுடைய நினைவுக்கு வரக் கூடும். ஓர் அறையில் ஏதோ கிடந்து அழுகிப் போய் ’நாற்றம்’ தாங்க முடியவில்லை என்றால் நாம் என்ன செய்வோம்? அழுகிக் கிடப்பதை எடுத்து வெளியில் போட்டுவிட்டு அந்த அறையை சுத்தம் செய்வோம்; ஊதுபத்தி, வாசனைத் திரவங்கள், ‘ரூம் ரெஃப்ரெஷ்னர்’ போன்ற பொருட்களின் உதவியுடன் நாற்றத்தை போக்க முயல்வோம். அப்படித்தான் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் செய்ய முயல்கிறார் போலிருக்கிறது!

ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில் வீடு ஒதுக்கீடு, அலைக்கற்றை ஒதுக்கீடு என்று ஊடகங்கள் பரபரத்துக் கிடந்தபோது கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா, மக்களுக்கு ஒதுக்க வேண்டிய நிலத்தில் ‘கொஞ்சம்’ தன் மக்களுக்கும் ஒதுக்கிக் கொண்டார் என்ற ஊழலும் பரபரப்புப் பட்டியலில் சேர்ந்து கொண்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான புகார்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று இரு வாரங்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வரும் பாரதிய ஜனதா தலைமைக்கு இந்த ஊழல் புகார் பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு தார்மீக வலிமை தேவை. கடந்த கால நிகழ்ச்சிகளை எல்லாம் நினைவுக்கு கொண்டு வந்தால் எந்த அரசியல் கட்சியின் கோரிக்கைகளிலும் அற வலிமை இருக்காது. மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே அனைத்து கட்சிகளும் திடீர் திடீரென்று ‘அறக் கோட்பாடுகளைப்’ பற்றி பேசுகின்றன. அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, அந்த அற நிலைப்பாட்டுக்கு எதிராக அந்தக் கட்சி மீதே புகார் வந்தால் என்ன செய்வது? அப்படித்தான் எடியூரப்பாவுக்கு எதிரான புகாரும் அதன் மீது கட்சிரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாத பாஜகவின் ‘கையறு’ நிலையும் அந்தக் கட்சியின் மத்திய தலைமைக்கு பெரிய நெருக்கடியைக் கொடுத்தது!

முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பாவை விலகச் சொல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கி அது தொடர்பான செய்திகளையும் கசிய விட்டார்கள். கட்சிக்குள் விசாரணைக்கும் உத்தரவிட்டார்கள். அவரும் தன் ‘மக்களுக்கு’ ஒதுக்கிய நிலத்தை அரசிடம் மீண்டும் ஒப்படைத்தார். முதலமைச்சரின் அதிகாரபூர்வமான இல்லத்தில் இருந்து ‘குழந்தைகள்’ வெளியேறினார்கள். இந்த நடவடிக்கைகள் உண்மையில் போதுமானவைதானா? இவை எல்லாம் நாற்றம் அடிக்கும் அறையில் ஊதுபத்திகளைக் கொளுத்தி வைப்பதற்கு ஒப்பானவையாக மட்டுமே தோன்றுகின்றன. சட்டவிரோதன வழியாக இருந்தாலும் பரவாயில்லை, பணமும் பொருளும் ஈட்ட வேண்டும் என்ற வெறியே நம்முடைய மனதில் அழுகிக் கிடக்கும் பொருளாக நாற்றம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் என்று இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் எல்லாவற்றையும் அரித்துக் கொண்டிருக்கிற லஞ்சத்தையும் ஊழலையும் போக்குவதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? தொடர்ச்சியான கோரிக்கைகளும் போராட்டங்களும் நமக்குப் பெற்றுத் தந்த ஊழல் தடுப்பு அமைப்புகளும் சட்டங்களும் ‘அட்டைக் கத்திகளாக’ இருக்கும் சூழலில் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி நம் எல்லோருடைய மனதிலும் ஒரு நொடியாவது எழக் கூடும். இந்திப்பட இயக்குநர் சேகர் கபூருக்கு அந்தக் கேள்வி தோன்றிய நொடியில் அவர் எழுதிய பதிலைப் பாருங்கள்.

”ஒவ்வொரு முறையும் யாராவது ஒருவர் உங்களிடம் லஞ்சம் கேட்கும்போது, நீங்கள் எழுந்து நின்று இந்திய தேசிய கீதத்தைப் பாடுங்கள். அப்படி நாம் எல்லோரும் செய்யத் தொடங்கும்போது இந்தியாவில் எப்போதும் தேசிய கீதம் ஒலித்துக் கொண்டே இருக்கும்!”

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home