Friday, September 24, 2010

தேர்தல் வேண்டும்; நியமனம் வேண்டாம்

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு இதுவரை மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டவில்லை. அவரை மாற்றி விட்டு காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்துப் போகிற ஒரு தலைவரை சோனியா காந்தி நியமிக்க வேண்டும்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரி இருக்கிறார். அவருடைய இந்த பேச்சை நீங்கள் செய்திகளில் படித்திருப்பீர்கள். அந்த செய்தியைப் படித்த போது உங்களுக்கு என்ன உணர்வு ஏற்பட்டது? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடத்துங்கள் என்று கேட்காமல், மாநிலத் தலைவரை நியமியுங்கள் என்று அவர் ஏன் கோருகிறார் என்ற கேள்வி உங்களில் சிலருக்கு எழுந்திருக்கும்.

இளங்கோவன் மட்டும் ஏதோ ஜனநாயக விரோதமாக இப்படி ஒரு கோரிக்கையை வைத்துவிட்டார் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் காங்கிரஸ் கமிட்டியால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் டெல்லி போய்ச் சேர்கிறது. “எங்கள் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை நாங்கள் காங்கிரசின் அகில இந்திய தலைவர் சோனியா காந்திக்கு வழங்குகிறோம்” என்பதே அந்த தீர்மானத்தின் வரிகள். கோவா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், கேரளா என்று வரிசையாக தீர்மானம் நிறைவேற்றிய செய்திகள் கடந்த பத்து நாட்களில் வந்து கொண்டே இருக்கின்றன. இதுவும் பொதுவாக ஒரே மாதிரி அரங்கேற்றப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அறிவிப்பு வருகிறது. போட்டியிட விரும்புகிறவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதிநாள் எல்லாம் அறிவிக்கப்படுகிறது. அந்த நாளுக்குள் எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் வேட்புமனு தாக்கல் செய்வதில்லை. பிறகு மாநிலத்தின் நிர்வாகிகள் எல்லோரும் சேர்ந்து மாநிலத் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள். சில மாநிலங்களில் தேர்தல் நடந்து சில மாநிலங்களில் இந்த வகை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் அதைப் புரிந்து கொள்ள முடியும். எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடைமுறை என்றால், இதை அகில இந்திய தலைமையுடைய உத்தரவு என்றுதான் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் முதன்மையான அரசியல் கட்சி காங்கிரஸ். வரலாற்றுரீதியாகப் பார்த்தாலும் சமூகத்தின் எல்லா தரப்பினரையும் உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டு ஜனநாயக அடிப்படையில் இயங்கிய மிகப் பெரிய கட்சியாகவே காங்கிரஸ் இருக்கிறது. பிறகு ஏன் மாநில அமைப்புகளில் அந்தக் கட்சி தேர்தலை நடத்தத் தயங்குகிறது?

“மாநிலத்தில் தேர்தல் நடந்தால் கோஷ்டிகளுக்கு இடையே மோதல் பெரிதாகும்; போட்டியும் பொறாமையும் அதிகரிக்கும்; பகையும் வெறுப்பும் அதிகமாகி முதலுக்கே மோசமாகி விடும்” என்று நினைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான சிந்தனை இல்லையா? காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்திய மக்களை விடுதலை பெறச் செய்வதிலும் அதன் பிறகு ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்குவதிலும் முதன்மையான பங்கை ஆற்றிய பழம்பெரும் கட்சியான காங்கிரசில் இதுபோன்ற சிந்தனை மேலோங்குவது சரியா என்ற கேள்விகள் இயல்பாக ஒருவருக்கு எழக் கூடும். உட்கட்சித் தேர்தல்களை ஜனநாயகரீதியில் நடத்துங்கள் என்று சோனியா காந்தி ஏன் உறுதியாக மாநில அமைப்புகளிடம் சொல்ல மறுக்கிறார் என்பது புரியவில்லை.

மாநிலத்தின் முதலமைச்சரை தேர்வு செய்வதாக இருந்தாலும் மாநில சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் கூடி டெல்லி மேலிடத்தில் இருந்து நியமிக்கப்பட்டவரையே முதலமைச்சராகத் தேர்வு செய்கிறார்கள். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் ஜெகன்மோகன் ரெட்டி இன்று வரை நடத்திக் கொண்டிருக்கும் ஆறுதல் யாத்திரைகளுக்கு என்ன காரணம்? ஆந்திராவின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை ஆதரவு முதலமைச்சர் ரோசையாவுக்கு இருக்கிறதா என்ன? ரோசையா நியமனத்தால் வருத்தம் கொண்ட ஜெகன்மோகன், மேலிடத்தின் ஆறுதலை வேண்டித்தானே ஆறுதல் யாத்திரை நடத்துகிறார்?

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உட்கட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. இல்லை என்றால் நம்முடைய அரசியல் கட்சிகள் உட்கட்சித் தேர்தல் என்ற பெயரில் நடக்கும் சடங்குகளைக் கூட நடத்துவார்களா என்பது சந்தேகம்தான். காங்கிரஸ் கட்சியை விட்டு மற்ற கட்சிகளைப் பார்த்தாலும் எங்கும் ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாகத் தெரியவில்லை. இரண்டாவது முக்கிய கட்சியான பாரதிய ஜனதாவில் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீடு தெரிகிறது. மாநிலக் கட்சிகள் அனைத்தும் யாராவது ஒரு தலைவரை சுற்றியே இயங்குகின்றன. முலாயம்சிங். மாயாவதி, லாலுபிரசாத் யாதவ், சந்திரபாபு நாயுடு, தேவேகவுடா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் ஆளுமையே அரசியலில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த கட்சிகளில் விசுவாசத்துக்கு கிடைக்கும் முக்கியத்துவம் ஜனநாயகத்துக்கு கிடைப்பதில்லை என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை.

ஜனநாயகம் என்றால் என்ன? பெரும்பான்மையினரின் கருத்துக்கள் எப்போதும் ஆட்சி செலுத்த வேண்டும் என்பதே என்னுடைய கொள்கை என்கிறார் அமெரிக்காவின் மூன்றாவது அதிபராக இருந்த தாமஸ் ஜெபர்சன். வலியவர்களைப் போலவே எளியவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் கொடுக்கும் நிர்வாக முறையையே ஜனநாயகம் என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன்என்கிறார் உத்தமர் காந்தி. நான் அடிமையாகவும் இருக்க மாட்டேன்; எஜமானாகவும் இருக்கமாட்டேன். இதுவே ஜனநாயகத்தைப் பற்றிய என் கருத்துஎன்கிறார் ஆபிரகாம் லிங்கன். இவர்கள் சொல்லும் ஜனநாயகத்தின் எந்த வரையறைக்குள்ளும் நம்முடைய மாநில கமிட்டிகள் கோரும் ‘நியமனம்’ வரவில்லை.

“நீங்கள் நினைப்பது போல் காங்கிரஸ் ஜனநாயகத் தன்மையை இழந்துவிடவில்லை” என்பதை நமக்கு சொல்லும் விதமாக ராகுல் காந்தி சில வேலைகளை சிறப்பாக செய்து வருகிறார். இளைஞர் காங்கிரஸ், இந்திய தேசிய மாணவர் சங்கம் இரண்டுக்கும் அமைப்புத் தேர்தல்களை வெளிப்படையாகவும் நியாயமாகவும் சுதந்திரமான ஓர் அமைப்பின் மேற்பார்வையில் நடத்தி இருக்கிறார். ஃபவுண்டேஷன் ஃபார் அட்வான்ஸ்டு மேனேஜ்மெண்ட் ஃபார் எலக்‌ஷன்ஸ்” எனப்படும் தேர்தல்களுக்கான உயர்தர மேலாண்மை நிறுவனத்திடம் இந்த தேர்தல்களை நடத்தும் பொறுப்பை ராகுல் காந்தி ஒப்படைத்தார். முன்னாள் தேர்தல் ஆணையர்களான ஜே.எம்.லிங்டோ, ஜி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோபால்சாமி உள்ளிட்டவர்கள் அந்த நிறுவனத்தை நடத்துகிறார்கள். இந்தப் பணியை ஏற்றுக் கொள்வதற்கு முன் ராகுல் காந்தியை கே.ஜே.ராவ் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் ராகுலிடம், “இளைஞர் காங்கிரஸ், மாணவர் சங்கத்தில் தேர்தல் நடத்தச் சொல்கிறீர்கள். காங்கிரஸ் கட்சியின் தேர்தலை நடத்த வேண்டாமா?” என்று கேட்டிருக்கிறார். “இந்த இரண்டு அமைப்புகளும் என் பொறுப்பில் இயங்குகின்றன. இவை குறித்து நான் முடிவெடுக்க முடியும். கட்சித் தேர்தல் பற்றி நீங்கள் கட்சித் தலைமையுடன் தான் பேச வேண்டும்” என்று ராகுல் பதில் சொன்னாராம்!

இருவேறு இந்தியா இருக்கிறது என்று ராகுல் காந்தி போகுமிடங்களில் எல்லாம் பேசி வருகிறார். அவர் கே.ஜே.ராவிடம் சொன்னதைப் பார்க்கும்போது இருவேறு காங்கிரஸ்கள் இருப்பதாகத் தோன்றுகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 26.09.10

0 Comments:

Post a Comment

<< Home