Friday, September 24, 2010

அவர் அப்படி ஒன்றும் ‘ரிச்’ இல்லை!

"உங்க பெயர் என்ன?”

“காந்திலால்”

“உங்க அப்பா பெயர் என்ன?”

மருத்துவமனையில் படுக்கவைக்கப்பட்டிருந்த அந்த தாடிக்காரரிடம் மருத்துவர்கள் கேட்டார்கள். சாலையில் எங்கோ மயங்கி விழுந்து கிடந்த அவரை யாரோ மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். மருத்துவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் சத்தமாக பதில் சொல்ல முடியவில்லை.

“காந்தி” என்று அவருடைய உதடுகள் மெதுவாக உச்சரித்தன.

அப்படியே அவருடைய கடந்த கால நிகழ்வுகளில் அவருடைய மனம் இறங்கியது.

மருத்துவர்களுக்கு அனுமதிப் படிவங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம். அந்த நபரிடம் மீண்டும் கேட்கிறார்கள்.

“தேசத்தின் தந்தை காந்தி என்பது எல்லோருக்கும் தெரியும்; நாங்கள் கேட்பது உங்களுடைய தந்தையின் பெயரை! உங்க அப்பா பெயர் என்ன?”

“பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” என்று தாடிக்காரர் முணுமுணுக்கிறார்.

“காந்தி மை ஃபாதர்” என்ற இந்திப் படத்தின் ஆரம்பக் காட்சிகளே அவை. இந்திய மக்கள் தொகையில் பாதியாக இருக்கக் கூடிய இந்திய இளைஞர்களுக்கு ஹரிலால் என்றால் யார் என்று தெரிந்திருக்காது. ஆனால் ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தியையும் வருண் காந்தியையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். ஒருவேளை, பிரியங்காவின் குழந்தைகளான ரேஹனையும் மிரயாவையும் கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதிகாரம் என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? காந்தியைப் போல அதிகாரத்தில் இருந்து தானும் விலகி தன்னுடைய குடும்பத்தையும் விலக்கி வைக்கும் மனத்துணிவு இன்று நம்மிடையே இருக்கும் எந்த அரசியல் தலைவருக்கு இருக்கிறது?

ஹரிலாலைப் போல இன்றைய அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஒரு நாளும் மயங்கி விழுந்து வீதியில் கிடக்கப் போவதில்லை. சமீபத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டு இருக்கும் பல அமைச்சர்களின் சொத்து விபரங்களைப் பார்க்கும்போது இந்த எண்ணமே ஏற்படுகிறது. இந்த விபரங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தேர்தலில் நிற்கும்போது கொடுத்த சொத்துப்பட்டியல் மனுவின் அடிப்படையிலும் அதற்குப் பிறகு அமைச்சர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும் கொடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் சொல்கிறது. இந்த விபரங்களை வாங்குவதற்கே சமூக ஆர்வலர்கள் படாதபாடு பட வேண்டியிருந்தது.

கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நாளிதழ்களில் நீங்கள் ஒரு விளம்பரத்தைப் பார்த்திருக்கக் கூடும். ஐந்து வெற்றிகரமான ஆண்டுகளாக தகவல் அறியும் உரிமை நமக்கு அதிகாரத்தை தந்திருக்கிறது என்பது அந்த விளம்பரத்தின் சாரம். ”குடிமக்களின் வெளிப்படையான அதிகாரம்” என்று அந்த விளம்பரம் நம்மிடம் பறைசாற்றுகிறது. அலுவல் ரகசிய சட்டம் 1923-இல் இருந்து விடுதலையாகி விட்டோம் என்ற நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 தந்தது என்பது உண்மைதான். ஆனால் நாடாளுமன்றம் இயற்றிய இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தான் எத்தனை தடைகள்! தாங்கள் இயற்றிய சட்டத்தை செயல்படுத்துவதற்கு தாங்களே தடையாக யாரேனும் இருப்பார்களா என்றுதான் சாதாரணமாக ஒருவர் நினைக்கக் கூடும். ஆனால் நம்முடைய பிரதிநிதிகளும் அதிகாரிகளும் நாம் தகவல்களைப் பெறுவதற்குத் தடையாக இருக்கிறார்கள் என்பதைப் பல நிகழ்வுகளில் இருந்து அறிய முடிகிறது.

எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளைக் குறை சொல்லும் நடுத்தர வர்க்க மனநிலையில் இருந்து இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக நீங்கள் நினைக்கக் கூடாது. இப்போது ”நீங்கள் குறை சொல்லும் அரசியல்வாதிகள்தானே நம்முடைய பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தையே இயற்றினார்கள்” என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆமாம், அவர்கள் தான் இயற்றினார்கள். ஆனால் அதன்பிறகு ஏன் அந்த சட்டம் நடைமுறைக்கு வருவதில் நாள்தோறும் தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்? தடைகளை நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளே உருவாக்குகிறார்கள். ஆனால், அரசியல் தலைமையின் மௌனமான ஒத்துழைப்பு அல்லது ஆசீர்வாதம் இல்லாமல் அதிகாரிகளால் அவ்வளவு தடைகளை உருவாக்க முடியாது. அப்படியே அவர்கள் உருவாக்கினால், மக்களைத் திரட்டிப் போராடுவதன் மூலம் அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து விடலாம். ஆனால் ஆளும் அரசியல் தலைமையும் அந்த தடைகளுக்கு ஆதரவு கொடுக்கிறது என்றால், தடைகளை உடைப்பதற்கு நடக்கும் போராட்டத்தை நீண்டகாலம் நடத்த வேண்டியதாகிறது.

இப்போது பிரதமர் அலுவலகம் வெளியிட்டு இருக்கும் அமைச்சர்களுடைய சொத்துப்பட்டியலைப் பெறுவதற்குக் கூட நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. புதுடெல்லியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் இந்தப் போராட்டத்தை நடத்தினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர்களின் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்று அமைச்சரவைச் செயலரிடம் அவர் மனு கொடுத்தார். மேற்படி சட்டத்தின் கீழ் அமைச்சர்களின் சொத்து விபரங்கள் வரவில்லை என்று அவருக்கு அமைச்சரவைச் செயலர் பதில் சொன்னார். இந்த முதல் முட்டுக்கட்டையை மீறி இந்த விவகாரத்தை தலைமை தகவல் ஆணையத்துக்கு அகர்வால் எடுத்துப் போனார்.

மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விபரங்கள் ரகசியமானவை அல்ல என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருபவையே என்றும் தலைமைத் தகவல் ஆணையம் தெளிவுபடுத்தியது. அதை விளக்கி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியது. மக்களவை சபாநாயகரிடமும் மாநிலங்களவைத் தலைவரிடமும் ஒப்புதல் பெற்று அமைச்சர்களின் சொத்துக்களை வெளியிடுங்கள் என்று அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்திடம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தங்களுடைய சொத்துக்கள் குறித்த விபரங்களை பிரதமரிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். பிறகு அந்த விபரங்களை வெளியிடுமாறு பிரதமர் அலுவலகத்துக்கு தலைமை தகவல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். அதன்பிறகுதான் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன!

இந்த விபரங்கள் அதிகாரபூர்வமாக கொடுக்கப்பட்டிருப்பதால் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம். அதாவது பிரதமர் அலுவலகம் நாட்டு மக்களுக்கு உண்மைக்கு மாறான தகவல்களைத் தராது என்ற நம்பிக்கையில் இந்த தகவலை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். வேறு வார்த்தைகளில் சொன்னால், பிரதமரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் உண்மைக்கு மாறான தகவல்களை நம்முடைய அமைச்சர்கள் தந்திருக்க மாட்டார்கள் என்று நம்ப வேண்டியதாகிறது. நெப்போலியன், சிதம்பரம், அழகிரி போன்ற கோடீஸ்வர அமைச்சர்களை விட்டு விடுங்கள். பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளான ஆ.ராசாவின் சொத்து மதிப்பு ஒரு கோடியைக் கூட எட்டவில்லை. கேரளத்தின் முன்னாள் முதலமைச்சரும் இப்போதைய மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் தானாம்! ஆனந்த் சர்மாவின் உடைமைகள் 26 ஆயிரத்துக்கு மேல் தாண்டவில்லை. சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் வங்கிக் கணக்கில் வெறும் 29 ரூபாய்தான் இருக்கிறதாம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் உங்களுக்கு அதிகாரத்தைத் தந்திருக்கிறது. அதன் அடிப்படையில் பிரதமர் அலுவலகம் விபரங்களையும் கொடுத்திருக்கிறது. பிறகு இந்த விபரங்களைப் படிக்கும்போது உங்களுடைய கை ஏன் உங்கள் காதைத் தடவிப் பார்க்கிறது? யாராவது அங்கு பூ சுற்றியிருக்கிறார்களா என்று தேடுகிறீர்களா? அல்லது வலியே இல்லாமல் யாரேனும் காது குத்தி விட்டார்களோ என்று தடவிப் பார்க்கிறீர்களா? இந்திய ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களே, அரசு கொடுக்கும் தகவலை நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டால் போங்கள்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 23.09.10

0 Comments:

Post a Comment

<< Home