"உங்கள் நண்பன் யார் என்று சொல்லுங்கள்; நான் உங்களைப் பற்றி சொல்கிறேன்” என்பார்கள்; வேறு சிலரோ இந்த வாசகத்தை சிறிது மாற்றி நீங்கள் படிக்கும் புத்தகங்களைப் பற்றி சொல்லுங்கள்; உங்கள் குணநலன்கள் என்ன என்று சொல்கிறேன் என்பார்கள். அந்த வரிசையில் இப்போது புதிதாக ஒன்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. "உங்கள் நகரத்தில் இருக்கும் வங்கியைப் பற்றி சொல்லுங்கள்; அந்த நகரத்தின் வளர்ச்சியை நாங்கள் விவரிக்கிறோம்" என்பதே அது. ஹைதராபாத் நகரில் நடந்த ஒரு சம்பவமே இந்தப் புதுமொழிக்கு காரணம். அப்படி அங்கு என்ன நடந்து விட்டது?
ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி ஒரு கிளையைத் திறந்திருக்கிறது. 4000 சதுர அடியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் வசதிகளுடன் அந்தக் கிளை இருக்கிறது. நீங்கள் அழைத்தால் உங்கள் வீட்டிற்கு வந்து அனைத்து சேவைகளும் செய்யப்படும். அல்லது நீங்கள் அழைத்தால் கார் அனுப்பி உங்களை வீட்டில் இருந்து அழைத்து வருவார்கள். திரும்பவும் வீட்டில் கொண்டு விடுவார்கள். லாக்கர் என்னும் பாதுகாப்புப் பெட்டகம் நாள் முழுக்க திறந்திருக்கும். அதாவது ஒரு நாளின் 24 மணி நேரத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கு சென்று உங்கள் நகைகளை எடுத்து அங்கேயே அணிந்து கொண்டு விழாக்களுக்கு சென்று விட்டு வரும் வழியிலேயே மீண்டும் லாக்கரில் வைத்துவிட்டு வீடு திரும்பலாம். வீட்டுக்கு கொண்டு வந்து உங்கள் நகைகளை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருடர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரே ஒரு நிபந்தனைதான்! அந்த வங்கியின் கதவைத் திறந்து கொண்டு நீங்கள் அந்தக் கிளையின் உள்ளே நுழைய வேண்டும் என்றால் அந்த வங்கி உங்களை அழைக்க வேண்டும். அப்படி ஒரு அழைப்பு உங்களுக்கு வரவேண்டும் என்றால் நீங்கள் ஒரு கோடீஸ்வரனாக இருக்க வேண்டும்!
ஆம்! அங்கே ஒரு கணக்கு திறக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும். ’கோஹினூர் பஞ்சாரா பிரிமியம் பேங்கிங் சென்டர்’ என்ற பெயரில் அந்தக் கிளையை பாரத வங்கி திறந்திருக்கிறது. இந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி திறக்கப்பட்ட கிளைக்கு முதல் இரு நாட்களில் 50 வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். இந்த நிதியாண்டுக்குள் 250 வாடிக்கையாளர்களைச் சேர்க்க முடியும் என்று வங்கி நம்புகிறது. ஏற்கனவே நகர்ப்புறத்து ஏழை மக்களை வங்கியின் பக்கம் ஈர்ப்பதற்காக ‘ஒரு ரூபாய் சேமிப்புக் கணக்கு’ என்ற திட்டத்தையும் ஸ்டேட் வங்கி கொண்டு வந்திருக்கிறது என்பது வேறு விஷயம்!
ஆரம்ப சுகாதார நிலையமும் தொடக்கப்பள்ளியும் இல்லாத இடங்களில் கூட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளைத் திறக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி விரும்பினார்; பரந்து வாழ்கிற ஏழை எளிய மக்களுக்கு வங்கிகளின் சேவைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே வங்கிகளை நாட்டுடைமை ஆக்கினார். கிராமப்புறங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த வங்கிகள் குறிப்பிடத்தக்க பங்காற்றின என்று எல்லா அரசியல் தலைவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 1991-ல் நரசிம்மராவ் பிரதமராகவும் மன்மோகன்சிங் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்ற பிறகு அரசாங்கத்தின் பார்வை மாறத் தொடங்கியது. நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகள் கருவியாக பயன்பட வேண்டும் என்றாலும் அவை லாப நோக்கில் செயல்படும் நிறுவனங்கள் என்ற பார்வை கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. தனியார் வங்கிகளுக்கும் வெளிநாட்டு வங்கிகளுக்கும் 'சிவப்புக் கம்பள’ வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த வங்கிகளுடன் போட்டி போடுவதற்காக ஸ்டேட் வங்கியும் மற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் பலவிதமான சேவைகளை தொடங்கின. அந்த கவர்ச்சிகரமான வித்தைகளில் ஒன்றாகவே, கோடீஸ்வரர்களுக்கான கிளையை ஸ்டேட் வங்கி திறந்திருக்கிறது.
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளை விட தனியார் வங்கிகள் மீதும் வெளிநாட்டு வங்கிகள் மீதும் நம்மிடையே கவர்ச்சி கூடி இருக்கிறது. ஆனால் இன்னும் எண்ணற்ற கிராமப்புறங்களில் இந்த வங்கிகள் கிளைகளைத் திறக்க முன்வரவில்லை. அங்கெல்லாம் கிராம வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளுமே மக்களுக்கு தேவையான நிதி சேவைகளை அளித்துக் கொண்டிருக்கின்றன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளும் மக்களுடைய தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்கின்றன. ஆனால் இதை எல்லாம் நகர்ப்புறங்களில் வாழும் மனிதர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை; அவர்கள் மத்தியில், தனியார் வங்கிகளும் வெளிநாட்டு வங்கிகளும் நல்ல சேவைகளை வழங்குகிறார்கள் என்ற எண்ணமே பரவலாக இருக்கிறது. அந்த வங்கிகள் கடன்களை வசூலிப்பதற்கு கையாளும் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்ற கண்டனங்கள் வந்த போதிலும், அந்த வங்கிகளின் மீது நமக்கு இருக்கும் கவர்ச்சி இன்னும் குறையவில்லை. அந்த கவர்ச்சியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக அரசு வங்கிகள் ‘புதுமையான’ வழிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஸ்டேட் வங்கி அப்படி ஒரு முயற்சியாகவே கோடீஸ்வரர்களுக்கான கிளையைத் திறந்திருக்கிறது!
ஆனால், இதைக் கேள்விப்படும்போதே வேறு ஒரு கேள்வியும் எழுகிறது இந்திய மக்கள் அனைவரையும் எந்தவித காரணங்களுக்காகவும் வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஓர் அரசு, தன்னுடைய வங்கி வாடிக்கையாளர்களை பணவசதியின் அடிப்படையில் பிரித்து வைப்பதை எப்படி அனுமதிக்கிறது என்பதே அந்தக் கேள்வி. இன்னும் அறுபது சதவீத இந்திய மக்களுக்கு வங்கிகளின் சேவைகள் போய்ச் சேரவில்லை என்று யாராவது சொன்னால் அவர் ‘காலாவதியாகிப் போன’ பொருளாதாரக் கொள்கையை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறார் என்ற கண்டனத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளை வணிக நிறுவனங்களாகவும் பார்க்க வேண்டியதுதான். ஆனால் அவற்றை பொதுமக்களுக்கு சேவை செய்யும் அமைப்புகளாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது. அதேசமயம் அவை நஷ்டத்தில் இயங்கினாலும் பரவாயில்லை, சேவை தான் செய்ய வேண்டும் என்றும் யாரும் சொல்வதில்லை. லாபம் ஈட்டுவதற்கும் தொழிலை விரிவுபடுத்துவதற்கும் வங்கிகள் எடுக்கும் முயற்சிகளையும் யாரும் தடுக்கவில்லை. அவை எந்தெந்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன என்பதையும் அந்த விஷயங்கள் அரசுடைமையாக்கப்பட்டதற்கான அடிப்படை நோக்கத்துடன் ஒத்துப் போகின்றனவா என்பதையும் விவாதிக்கவே கூடாது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் திறக்கப்பட்டிருக்கும் இந்தக் கிளையில் உள் அலங்காரங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போல இருக்கின்றன என்பது செய்தி. மற்ற கிளைகளை விட இந்த ஒரு கிளைக்கு மட்டும் உள்கட்டமைப்புக்கு பல லட்சம் ரூபாய் கூடுதலாக செலவழிப்பது முறைதானா என்ற கேள்வியும் இயல்பாக தோன்றுகிறது. அந்தக் கிளையில் வேலை பார்க்கும் ஊழியர்களுடைய பணிநிலைமைகள் மற்ற ஊழியர்களை விட சிறப்பாக இருப்பதை நிர்வாகம் ஊழியர்களிடையே வேற்றுமை பாராட்டுவதாக ஊழியர்கள் நினைக்கக் கூடும். சாமான்யர்களை உள்ளடக்கிய வளர்ச்சி என்று ஆட்சியாளர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது சாமான்யர்களை விலக்கி வைக்கும் ஒரு செயலை அரசு வங்கி செய்கிறது. அரசுக்கு சொந்தமான வங்கிகளுடைய செயல்பாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாக இருக்கிறது. அல்லது எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது உண்மையிலேயே அரசின் கொள்கை இல்லை! இதன் அடிப்படையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு யாருடைய நலன்களைப் பாதுகாக்கும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தால், அதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை!
நன்றி: ரிப்போர்ட்டர் 19.09.10
0 Comments:
Post a Comment
<< Home