Wednesday, September 15, 2010

எங்கே போவேனோ நீதி கிடைக்காவிட்டால்?

பிரதமர் மன்மோகன்சிங் அலங்காரமான அடுக்கு மொழியில் பேசி நம்மை எளிதில் கவர்ந்த அரசியல் தலைவர் அல்ல; அவர் நம்புகிற விஷயத்தை நேர்மையோடு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் என்பதே அவருடைய பெருமை. அதனாலேயே அவர் எப்போது என்ன பேசினாலும் நாம் கூர்ந்து அதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” என்று அவர் சொல்லி இருக்கிறார். கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி, திங்கட்கிழமை டெல்லியில் சில பத்திரிகை ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

இந்த செய்தி வந்த அதே நாளில் செய்தித்தாள்களில் வெளியான வேறு சில செய்திகளையும் பாருங்கள். தமிழ்நாட்டில் சமச்சீர் கல்விக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையர் நியமனம் வெளிப்படையான முறையில் நடைபெறவில்லை என்றும் அரசின் இந்த செயல் சட்டத்துக்குப் புறம்பான செயல் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டி இருக்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர்களின் சொத்து மற்றும் வருமானம் குறித்த தகவல்களை அளிக்காததற்கு பிரதமர் அலுவலகம் 10-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. தமிழ்நாடு டி.ஜி.பி. நியமனத்தில் தன்னுடைய பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி விஜயகுமார் நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறார். ஏற்கனவே இது தொடர்பாக டி.ஜி.பி. ஆர். நட்ராஜ் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி வழக்கு நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாநில காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசும்போது மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ‘உரிய நடவடிக்கை எடுத்து ஒடுக்காவிட்டால், காவி பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக தலையெடுக்கும்’ என்று சொன்னது குறித்து விசாரிக்க அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற விதி குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க இருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று மன்மோகன்சிங் சொன்ன செய்தி வந்த அதே நாளில் இத்தனை நீதிமன்ற வழக்குகள் அல்லது சட்டத்தை மதிக்காத நிர்வாக முடிவுகள் பற்றிய செய்திகள்!

இந்த நிலைமை எதைக் காட்டுகிறது? நிர்வாகத்தின் அன்றாட அலுவல்களில் நீதிமன்றம் தலையிடுகிறது என்று பிரதமரைப் போலவே நாமும் சொல்லலாமா? அல்லது நிர்வாகம் அத்தனை தவறுகளைச் செய்கிறது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய நிவாரணத்துக்காக நீதிமன்றங்களை நாடுகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டுமா? அரசாங்கம் எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளில் தலையிடுவதில்லை என்று நீதிமன்றங்களே கூட கடந்த காலத்தில் சொல்லி இருக்கின்றன. இருந்தாலும் நிர்வாக முறைகேடுகள், சட்டமீறல்கள் குறித்து புகார்கள் வரும்போது ஏதேனும் ஒரு சட்டப்பிரிவில் சொல்லப்பட்ட குடிமக்களின் உரிமையைக் காப்பதற்காக நீதிமன்றம் நிர்வாக முடிவுகளில் தலையிட நேர்கிறது. தனிமனிதர்களைப் பொறுத்தவரையிலும், எந்த ஒரு சாதாரண மனிதனும் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் பயணம் செய்ய விரும்புவதில்லை. இருந்தாலும் நிர்வாகத்தின் முடிவுகள் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பாதிக்கின்றன என்னும்போது வேறு நிவாரணம் இல்லாத நிலையில் நீதிமன்றங்களையே நாட வேண்டியிருக்கிறது!

எப்போதெல்லாம் தங்களுடைய நிர்வாக அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிடுகிறது என்று அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்களோ, அப்போதெல்லாம் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பவும் தவறுவதில்லை. கடந்த 2007-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில், தமிழ்நாட்டில் நடந்த நிகழ்ச்சியையே நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். “தமிழ்நாட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆள நினைக்கிறார்கள்; முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு இருக்கும் அதிகாரத்தைவிட தங்களுக்கு கூடுதலாக அதிகாரம் இருப்பதாக சில நீதிமன்றங்கள் நினைத்துக் கொள்கின்றன” என்ற தொனியில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி பேசினார். ”பூனைக்கு மணி கட்டும் வேலையை அமைச்சர் செய்திருக்கிறார்” என்று நம்முடைய முதலமைச்சர் கருணாநிதியும் அந்தக் கருத்தை வழிமொழிந்தது போல் அப்போது பேசி இருந்தார்.

நிர்வாகத்தின் அன்றாடப் பணிகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்பது சரிதான். ஆனால் அந்த நிலை ஏன் வருகிறது என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். எந்த அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவி ஏற்றுக் கொள்கிறார்களோ அந்த அரசமைப்புச் சட்டத்தின் விதிகளை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடைமுறைப்படுத்த தவறும்போது, நீதிமன்றமே தீர்வுக்கான இடமாக இருக்கிறது. அரசாங்கத்தின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவதை உண்மையிலேயே அரசியல் தலைவர்கள் விரும்புவதில்லை என்றும் சொல்ல முடியவில்லை. பல சமயங்களில் நம்முடைய தலைவர்கள் நீதிமன்றத்தின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.

செல்வாக்கு படைத்த பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக மக்களை இடம்பெயரச் செய்ய வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் புலம்பெயர வேண்டியிருக்கிறதே என்று தொழிலதிபருக்கு தொழில் தொடங்கவே அரசாங்கம் அனுமதி கொடுக்காமல் தடுக்க முடியும். ஆனால் அப்படி அவர்கள் செய்ய மாட்டார்கள். அனுமதியும் கொடுக்க வேண்டும்; மக்கள் அதற்காக தங்களை தப்பாக நினைத்துவிடக் கூடாது; அந்த மாதிரி சமயங்களில் நீதிமன்றத்தை அவர்கள் ஒரு பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ளுங்கள் என்று நீதிமன்றம் சொன்னால், அப்போது பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நீதிமன்றம் நிர்வாகத்தில் தலையிடுகிறது என்று முணுமுணுப்பதில்லை!

இப்படி எத்தனையோ விஷயங்களை நீதிமன்றத்திடம் விட்டுவிட்டு இவர்கள் மௌனமாகவே இருக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த அக்கறை தடையாக இருக்கக் கூடாது என்று சில வழக்குகளில் தீர்ப்பு வரும்போது நிர்வாகம் மகிழ்ச்சியுடன் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறது. ஓரிடத்தில் அணை கட்டப்பட வேண்டுமா வேண்டாமா? அணையின் நீர் கொள்ளளவை உயர்த்தலாமா கூடாதா? ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் நதியில் இருந்து நீரை மற்ற மாநிலத்துக்கு கொடுக்க வேண்டுமா வேண்டாமா? கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு கொடுக்க வேண்டும்? நதிகளை இணைக்க வேண்டுமா வேண்டாமா? இது போன்ற விஷயங்கள் மட்டுமல்ல, நம்முடைய குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதில் தொடங்கி நாம் யாருடன் படுக்க வேண்டும் என்பதுவரை நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன என்பதை பிரதமர் மன்மோகன்சிங் நிச்சயம் அறிவார்.

ப்போதெல்லாம் நீதிமன்றத்துக்கு எதிராக பிரதமர் மன்மோகன்சிங் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. உணவு தானியங்களை சேமிக்க முடியாமல் அழுகி வீணாக விடுவதற்கு பதிலாக, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு இலவசமாக கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லும்போது பிரதமர் பதில் சொல்கிறார். பிரதமர் யார் பக்கம் இருக்கிறார் என்ற ஆராய்ச்சியை விடுங்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய “இந்திய மக்களாகிய நாம்” எங்கு போய் நீதி கேட்க வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்?

நன்றி: ரிப்போர்ட்டர் 16.09.10

0 Comments:

Post a Comment

<< Home