Wednesday, September 15, 2010

மறுபடியும் சோனியா

மறுபடியும் சோனியா

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அந்த பதவிக்கு சோனியா காந்தி சார்பாக மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேறு யாரும் அவரை எதிர்த்துப் போட்டியிடவில்லை. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர்கள், கட்சியின் மத்திய அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்து சோனியா காந்தியை மீண்டும் ஒரு முறை கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனேயே, மீண்டும் சோனியாவைத் தான் தலைவராக கட்சி தேர்ந்தெடுக்கும் என்ற முடிவையும் எல்லோரும் எதிர்பார்த்திருப்பார்கள். இருந்தாலும் 2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவர் அதிரடியாக பிரதமர் பதவியை வேண்டாம் என்று மறுத்ததைப் போல, இப்போதும் ஏதாவது ஒரு முடிவை அவருடைய மனசாட்சி சொல்லிவிடுமோ என்று சிலருடைய மனதின் ஓரத்தில் சந்தேகம் இருந்திருக்கலாம். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை!

‘நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று சொல்வதே உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவதுதானே என்று நீங்கள் கேட்கக் கூடும். ‘காங்கிரஸ் கட்சியின் தலைவரை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுக்கும்; சோனியாவே மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றோ அவர் அந்தப் பதவிக்கு வரக் கூடாது என்றோ அந்தக் கட்சியில் இல்லாதவர்கள் பேசலாமா?’ என்று சிலர் நினைக்கலாம். சாதாரண மக்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களாக யார் வர வேண்டும் என்று கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் தேசிய அரசியலில் காங்கிரசுக்கு அடுத்த நிலையில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி என்ன சொல்கிறது பாருங்கள்.

“நேரு குடும்பத்தைச் சேராத யாராவது ஒருவரிடம் கட்சித் தலைமையை சோனியா காந்தி ஒப்படைக்க வேண்டும். பிரதமர் பதவியைத் தியாகம் செய்ததைப் போல கட்சித் தலைவர் பதவியையும் அவர் தியாகம் செய்ய வேண்டும். இரண்டு முறைக்கு மேல் கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவர் வரக் கூடாது போன்ற கட்சி விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றெல்லாம் அந்தக் கட்சித் தலைமை செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கருத்து சொல்லி இருக்கிறார்! காங்கிரஸ் கட்சி அதற்கு சொல்லி இருக்கும் பதில் இன்னும் விசேஷம். “நாலு முறை என்ன, நாற்பது முறை நாங்கள் சோனியாவை எங்கள் கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்போம்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் துவிவேதி வீம்பாக பதில் சொல்லி இருக்கிறார்!

மன்னராட்சியின் வாரிசுரிமை மரபுப்படி காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை சோனியா காந்தி அலங்கரிக்கக் கூடாது என்றும் மக்களாட்சி மாண்பின்படி வேறு யாருக்காவது அந்தப் பதவியைக் கொடுத்து ஜனநாயக மரபுகளைப் போற்ற வேண்டும் என்றும் பாரதிய ஜனதாவுக்குத் தான் என்ன அக்கறை! ‘ஒருவர் ஒரே தடவை மூன்று வருடங்கள் மட்டுமே பா.ஜ.க.வில் தலைவராக இருக்க முடியும் என்று எங்கள் கட்சியில் விதி வைத்திருக்கிறோம்’ என்று ரவி சங்கர் பிரசாத் சொல்லி இருக்கிறார். 1980 முதல் 1986 வரை ஆறு வருடங்கள் அடல் பிகாரி வாஜ்பாய் பா.ஜ.க.வின் தலைவராக இருந்திருக்கிறார் என்பதை ஏன் அவர் மறைக்கிறார் தெரியவில்லை. சரி, விதிவிலக்காக வாஜ்பாயை மட்டும் அப்படி அனுமதித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. 1986, 1993, 2004 என்று மூன்று முறை சேர்ந்து 13 ஆண்டுகள் வரை கட்சியின் தலைவராக அத்வானி இருந்திருக்கிறார். தற்போது தலைவராக இருக்கும் நிதின் கட்காரி கூட ரவிசங்கர் ஆசைப்படும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை. ஆர்.எஸ்.எஸ். ஆணையை அல்லது வழிகாட்டுதலை ஏற்றுத்தான் கட்சி அவரை தலைவராக்கியது!

நேரு குடும்பத்து வாரிசுகள் காங்கிரஸ் கட்சித் தலைவராக இல்லாமல் வேறு யாராவது அந்தக் கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க.வுக்கு என்ன அவ்வளவு கரிசனம்? நேரு குடும்பத்தைச் சேராதவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தபோது என்ன நடந்தது? ஏன் பா.ஜ.க அந்த நிலையை விரும்புகிறது? சமீபகால வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், இந்திரா குடும்பத்தினர் தலைமையில் காங்கிரஸ் இல்லாமல் இருக்கும்போது, எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது என்பது புரிகிறது. 1996-ல் 13 நாட்கள் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோதும், 1998-ல் நிலையான ஆட்சி என்ற முழக்கத்தோடு வாஜ்பாய் பிரதமரான போதும் நேரு குடும்பத்து வாரிசின் தலைமையில் காங்கிரஸ் இல்லை. 1996-ல் நரசிம்மராவ் தலைமையிலும் 1998-ல் சீதாராம் கேசரி தலைமையிலும் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது! சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகிய பிறகும் 1999-ல் வாஜ்பாய் ஒருமுறை பிரதமரானார் என்பது உண்மைதான். ஆனால் அதன் பிறகு இரண்டு பொதுத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உருவானதற்கு சோனியாகாந்தியின் தலைமை முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் நேருவும் அவருடைய குடும்பத்து வாரிசுகளும் தான் எப்போதும் உட்கார்ந்திருந்தார்களா? பிரதமர் பதவியையும் கட்சித் தலைவர் பதவியையும் வேறு யாருக்கும் கொடுக்காமல் தாங்களே ஆக்கிரமித்துக் கொண்டார்களா? 1947 முதல் 1964 வரை 17 வருடங்கள் நேரு பிரதமராக இருந்தார். இதில் 1951 முதல் 1954 வரை நான்கு வருடங்கள் மட்டுமே அவர் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருந்தார். குடியரசு இந்தியாவின் நெருக்கடியான ஆரம்ப வருடங்களுக்குப் பிறகு நேருவே கட்சித் தலைவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. 1959-ல் இந்திரா காந்தி ஒரு வருடம் தலைவராக இருந்திருக்கிறார். அதன்பிறகு தேர்தலில் தோற்று பிரதமர் பதவியை இழந்த பிறகு 1978-ல் தான் இந்திரா காந்தி மீண்டும் கட்சித் தலைவரானார்!

இதற்குப் பொருள் இந்திரா ஜனநாயக மரபுகளின்படி செயல்பட்டார் என்பதல்ல; இந்திராகாந்தி நெருக்கடி நிலையை கொண்டுவந்தார்; ஜனநாயக நிறுவனங்களின் அடித்தளங்களைத் தகர்த்தார். 1980-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமராகவும் கட்சித் தலைவராகவும் இரட்டைப் பதவிகளில் நீடித்தார். மன்னராட்சியைப் போல மகன் சஞ்சய் காந்தியை தனது அரசியல் வாரிசு என்று பிரகடனம் செய்தார். ஒரு விமான விபத்தில் சஞ்சய் காந்தி மரணமடைந்த போது, மூத்த மகன் ராஜிவ் காந்தியை அரசியலுக்குள் கொண்டு வந்தார். 1984-ல் இந்திரா படுகொலை செய்யப்பட்டபோது இயல்பாக அவருடைய வாரிசு ராஜிவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். அவரும் பிரதமராக இருக்கும்போது கட்சித் தலைவர் பதவியை விடாமல் பிடித்துக் கொண்டார்! அவருக்குப் பிறகு வந்த நரசிம்மராவ் நேரு குடும்பத்து வாரிசு இல்லைதான். அவரும் பிரதமர் பதவியையும் கட்சித் தலைவர் பதவியையும் அவரே வைத்துக் கொண்டார். ஆனால் சோனியா காந்தி பிரதமர் பதவியையும் கட்சித் தலைவர் பதவியையும் 1991-லேயே ஒதுக்கி விட்டார். 1998-ல் அதிரடியாக சீதாராம் கேசரியிடம் இருந்து தலைவர் பதவியைப் பறித்து அவர் தலைவரானார் என்பது வேறு கதை! எந்த வகையில் பார்த்தாலும் மற்றவர்களைவிட சோனியாகாந்தி வித்தியாசமாகவே தெரிகிறார்!

இப்படிச் சொல்வதால், சோனியா காந்தி மீதான தனிமனித வழிபாடு என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது! சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலும் இன்னும் நிறைய ஜனநாயக மரபுகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. சோனியாவை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் என்பதற்காக ஜிதேந்திர பிரசாத் சில கற்றுக்குட்டிகளால் என்ன பாடு படுத்தப்பட்டார் என்பதை இன்னும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக வேர் வலிமையானது. எதிர்த்துப் போட்டியிட்டதற்காக ஒருவரை சிறுமைப்படுத்தும் தன்மை அந்தக் கட்சிக்கு கிடையாது. 1938-39இல் மகாத்மா காந்தியின் ஆதரவு பெற்ற பட்டாபி சீதாராமையா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் தோற்றுப் போன கதையை பல மேடைகளில் கேட்டிருப்பீர்கள். அதேபோல் 1950-ல் நேருவுக்கும் நேர்ந்திருக்கிறது. நேருவின் ஆதரவு பெற்ற ஆச்சார்யா கிருபளானியை எதிர்த்து சர்தார் வல்லபபாய் படேலின் ஆதரவுடன் புருஷோத்தம் தாஸ் தாண்டன் போட்டி போட்டிருக்கிறார். நேரு ஆதரித்த வேட்பாளர் தோற்றுப் போயிருக்கிறார்!

இப்படிப்பட்ட ஜனநாயக மரபுகளை தற்போது காண முடியவில்லை என்று சிலர் முணுமுணுப்பதை சோனியா கவனத்தில் கொள்ள வேண்டும். நான்காவது முறையாக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்கும் சோனியா காந்தியின் முன் பல கடமைகள் இருக்கின்றன. அடுத்த பிரதமராக ராகுல் காந்தியை கொண்டு வருவதற்கான பணியை மிகவும் கவனமுடன் அவர் செய்து வருகிறார். “பழங்குடியினரைப் பாதுகாப்பதற்காக டெல்லியில் இருக்கும் உங்கள் வீரன் நான்” என்ற ராகுலின் வார்த்தைகள் ’ஆம் ஆத்மி’ பற்றிய அக்கறையை வெளிப்படுத்துகின்றன. மன்மோகன்சிங் தலைமையிலான அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அவர்களுடைய வணிக நலன்களுக்கும் ஆதரவாக இருக்கும்போதே, காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அவருடைய வாரிசும் ஏழை எளிய மக்கள் மீது அக்கறையை வெளிப்படுத்தி ‘பாலன்ஸ்’ செய்கிறார்கள். நாலு கால் பாய்ச்சலில் சீர்திருத்தப் பாதையில் ஓடத் துடிக்கும் மன்மோகன்சிங், மாண்டெக்சிங் அலுவாலியா போன்றவர்களுக்கு அவ்வப்போது ‘பிரேக்’ போடுகிறார்கள். திக்விஜய்சிங், மணிசங்கர் அய்யர், ஜெயராம் ரமேஷ் போன்ற எதிர்க் குரல்களை சில சமயங்களில் ஒலிக்கச் செய்வதும் அவசியமாகவே தெரிகிறது!

ஆயிரம் விமர்சனங்கள் காங்கிரஸ் கட்சியின் மீது ஒருவருக்கு இருக்கலாம்; ஆனால் அந்தக் கட்சி சாதி, மதம், இனம், வர்க்கம் என்று ஏதோ ஒன்றை அடிப்படையாக வைத்து பிறர் மீது வெறுப்பை வளர்க்காத கட்சி. இப்படித்தான் இன்றைய இளைய தலைமுறை அந்தக் கட்சியைப் பார்க்கிறது. இந்த சாதகமான அடித்தளத்தை விரிவுபடுத்தும் பொறுப்பில் இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் போன்றவர்கள் கூடுதல் கவனம் செலுத்தலாம். இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலையும், இந்திரா கொல்லப்பட்டபோது நடந்த சீக்கியர்களுக்கு எதிரான படுகொலைகளும் காங்கிரஸ் வரலாற்றில் கரும்புள்ளிகள். அவற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளலாம். ஒருவர் எவ்வளவு பெரிய மகாத்மாவாக இருந்தாலும் சரி, அவர் தவறாகப் பயன்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கையில், அவரிடத்தில் ஜனநாயக நிறுவனங்களின் அடித்தளத்தை தகர்க்கும் அதிகாரத்தை மக்கள் கொடுத்துவிடக் கூடாது!

நன்றி: ரிப்போர்ட்டர் 12.09.10

0 Comments:

Post a Comment

<< Home