Saturday, September 04, 2010

பயங்கரமான பசங்க

என்ன இப்படிப் பண்ணிட்டீங்க?”

அந்த நண்பர் கேட்டபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன எப்படிப் பண்ணிட்டேன்?” என்று திருப்பிக் கேட்டேன்.

“எல்லாம் நல்லாத் தானே போயிட்டு இருந்துச்சு.. திடீர்னு இப்படி நம்ம எம்.பி.க்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டீங்களே” என்றார் அவர்.

அப்போதுதான் எனக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குப் புரிந்தது. அன்று காலை வெளியான ’ரிப்போர்ட்டரில்’ எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு கொடுப்பதில் தவறில்லை என்று ‘எரிதழல்’ பகுதியில் நான் எழுதியிருந்ததை அந்த நண்பர் படித்திருக்கிறார். அந்தக் கருத்தில் அவருக்கு உடன்பாடில்லை!

ஒருவேளை அந்த நண்பர் ஒரேயடியாக நாடாளுமன்ற ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இல்லாத நபர்களி்ல் ஒருவராக இருந்தி்ருந்தால், அவருடைய வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அரசியல்வாதிகள் எது செய்தாலும் அவர்களைத் திட்ட வேண்டும் என்ற முடிவில் இருப்பவர்களை என்ன செய்ய முடியும்? அரசியல் என்ற சொல்லையே கெட்ட வார்த்தையாக நினைத்து முகம் சுளிக்கும் நண்பர்கள், நாம் அரசியல் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதை எப்படிப் புரிந்து கொள்வார்கள்? அவர்களுக்கு ராணுவப் புரட்சி நடந்து யாராவது சர்வாதிகாரியின் ஆட்சி வந்தால்தான் நாடு உருப்படும் என்ற எண்ணம் இருக்கலாம். சரி, விடுங்கள். கனவு காண்பதற்கு அவர்களுக்கு மட்டும் உரிமை இல்லையா என்ன?

நம்மில் பலருக்கு ஏதாவது திரைப்பட ஷூட்டிங்கில் ஹீரோ அல்லது ஹீரோயின் அடிபட்டாலே அந்தச் செய்தியைப் பார்த்து மனம் வலிக்கும். ஆனால் தினம் தோறும் நிஜமா துப்பாக்கி ஷூட்டிங்கில் மனிதர்கள் செத்து விழுந்தாலோ அல்லது காயம் அடைந்தாலோ நாம் மரத்துப் போகிறோம். அதைப் பற்றிப் பேசுவதற்கு ஏதோ ஒன்று நம்மைத் தடுக்கிறது; அப்படி ஒரு நிலையில் தான் நாம் காஷ்மீரில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம் என்று தோன்றுகிறது.

“கடந்த மே மாதத்தில் மூணு பேர் வந்தார்கள். ஜூனில் அது 15 ஆச்சு.. ஜூலையில் அந்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் முதல் பத்து நாட்களில் மட்டும் 57 பேர் வந்திருக்காங்க” என்று ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் ஸ்ரீநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருக்கும் டாக்டர் சொல்கிறார். அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் மொத்த நோயாளிகளே இவ்வளவுதானா என்று நினைக்காதீர்கள். பயங்கரவாத தாக்குதல்களில் இறந்த அல்லது காயம்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கையையும் அவர்கள் சொல்லவில்லை. பிறகு? ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த சிறுவர்களின் எண்ணிக்கையே அது! குழந்தைகளாகவும் இல்லாமல் இளைஞர்களாகவும் இல்லாமல் இடைப்பட்ட பருவத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். ஸ்ரீ மகாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் மட்டும் வந்தவர்களுடைய எண்ணிக்கை அது. இதுபோல் இன்னும் ஸ்ரீநகரில் எத்தனை மருத்துவமனைகள் இருக்கின்றனவோ தெரியவில்லை.

உடல்காயங்களுக்கு அளிக்கும் சிகிச்சைக்கான வசதிக் குறைவுகள் ஒருபுறமிருக்க, அப்பகுதி மக்களின் மனக் காயங்களை ஆற்றவும் வசதிகள் இல்லை. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக துப்பாக்கிச் சூடும் குண்டுவெடிப்புமாக இருக்கும் ஒரு பகுதியில் அதிர்ச்சிகளுக்கு உளவியல்ரீதியாக சிகிச்சை கொடுக்க ஒரு தனிப்பிரிவு இல்லை என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த ஜூன் 11-ம் தேதி 17 வயதுப் பையன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனான். அதிலிருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், அந்த ஆர்ப்பாட்டத்திலும் துப்பாக்கிச் சூடு என்று ஒரு விஷ வட்டம் மீண்டும் மீண்டும் சுற்றிக் கொண்டிருக்கிறது. ‘காயம்பட்டு வரும் டீன் ஏஜ் பையன்களைக் காப்பாற்றுவதற்குள் எங்களுக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது” என்று சொல்கிறார் அந்த டாக்டர். ஏன்? “பெரும்பாலான குண்டுக் காயங்கள் தலையிலும் மார்பிலும் வயிற்றிலுமே இருக்கின்றன! மூன்று இடங்களிலும் பல காயங்களுடனும் இவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அதனால் சிகிச்சை கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன” என்று அந்த டாக்டர் சொல்கிறார்.

‘’இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்பவர்களின் அதிக பட்ச வயது இருபதிலிருந்து இருபத்தைந்துக்குள் இருக்கலாம். பத்துவயதுப் பையன்களைக் கூட பலத்த காயங்களோடு கொண்டுவருகிறார்கள். இங்கு கொடுக்கப்படும் சிகிச்சை பலனளிக்காமல் சிலர் இறந்து போகிறார்கள். நான் ஒரு மருத்துவர் என்ற போதிலும் அடிப்படையில் நான் ஒரு காஷ்மீரி. எங்கள் குழந்தைகளை இந்தக் கோலத்தில் பார்ப்பது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று சொல்லும் அந்த டாக்டர் இறுதியில் என்ன சொல்கிறார் பாருங்கள்! ”இங்கு சிகிச்சை பெற்று குணமான பிறகு மீண்டும் ஆர்ப்பாட்டத்துக்குப் போய் ராணுவத்தின் மீது கல்லெறிவோம் என்று அந்தப் பையன்கள் சொல்கிறார்கள்; குண்டு காயம் ஏற்பட்ட பிறகு அவர்களுடைய கோபம் இப்போது அதிகமாகி இருக்கிறது” என்று அந்த டாக்டர் சொல்லி இருக்கிறார்.

‘தண்ணிக்குள்ள இறங்கினா குளிர் விட்டுப் போயிடும்’ என்று நம்மூர்களில் சொல்வார்களே, அதைப் போல முதல்முறை அடிபடும் வரைதான் அரசை எதிர்ப்பதற்கு அந்தப் பையன்களுக்கு பயம் இருக்கும் போலிருக்கிறது. ஒருதடவை களத்துக்குப் போய்விட்டால் அதன்பிறகு அவர்களால் அதில் இருந்து விலக முடியாது என்பதைப் புரிந்து கொண்டவர்கள், ‘பசங்க’ கையில் போராட்டத்தைக் கொடுத்திருக்கிறார்கள். காஷ்மீரில் அரசியல் இப்போது இளம் சிறுவர்கள் கையில் இருக்கிறது. சிறுவர்களை எதிர்த்து என்ன செய்தாலும் ராணுவத்துக்கு கெட்ட பெயரே கிடைக்கும் என்ற செயல்தந்திரத்தில் சிறுவர்களைக் களத்தில் இறக்கி விடுகிறார்கள். சிறுவர்களை விசாரணைக்கு அழைத்துப் போனால், அதுவும் நேர்மறையான பலன்களைத் தராது. எப்படிப் பார்த்தாலும் இந்தப் போராட்ட களத்தில் இருந்து கொஞ்சம் பேராவது பயங்கரவாதிகள் முகாமுக்குப் போய்ச் சேர்வார்கள் என்றே தோன்றுகிறது.

இந்த செய்தியைப் படிக்கும்போது எனக்கு கடந்த 2009-ம் வருடம் வெளியான நியூயார்க்’ என்ற இந்திப்படம் நினைவுக்கு வந்தது. கபீர்கான் இயக்கத்தில் ஜான் ஆபிரஹாம் கதாநாயகனாக நடித்த படம். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்து படித்துக் கொண்டிருக்கும் சமீர் ஷேக் என்ற இளைஞனின் கதை; 2001-ம் வருடம் செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதற்குப் பிறகு அவருடைய வாழ்க்கை தடுமாறிப் போகிறது. செப்டம்பர் 21-ம் தேதி பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் சமீர் ஷேக் கைது செய்யப்படுகிறார். ஒன்பது மாதங்கள் சிறையில் கடுமையான ‘விசாரணையை’ அனுபவிக்கிறார். பிறகு அவர் பயங்கரவாதி என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்படுகிறார். ஆனால் சிறையில் நடந்த கொடுமைகளை அவரால் மறக்க முடியவில்லை. அதுவரை பயங்கரவாத சிந்தனை துளியும் இல்லாமல் அமெரிக்கனாகவே இருந்த சமீர் அதன் பிறகு பயங்கரவாதியாக எப்படி மாறுகிறார் என்பது அந்தக் கதை.

காஷ்மீரில் நடக்கும் நிகழ்ச்சிகளும் நியூயார்க் திரைப்படமும் நமக்கு ஒரு எச்சரிக்கை உணர்வைத் தருகின்றன. பிரச்னையை தீர்ப்பதாக நினைத்து நாம் எடுக்கும் நடவடிக்கைகள் புதிய பயங்கரவாதிகளை உருவாக்கிவிடக் கூடாது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 05.09.10

0 Comments:

Post a Comment

<< Home