Wednesday, September 01, 2010

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற எம்.பி.க்கள்

அந்த இளைஞருடைய பெயர் மார்க் பாயல். அவருடைய வயது 31; அவர் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறையால் பெரிய அளவில் கவரப்பட்டிருக்கிறார்; ‘மாற்றத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அந்த மாற்றமாகவே நீ மாறி விடு’ என்ற காந்தியின் வாசகத்தில் மனதைப் பறி கொடுத்த மார்க் பாயல் ஒரு மாறுபட்ட வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். “பணம் ஆறாவது அறிவைப் போன்றது; அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் பயன்படுத்த முடியாது” என்று சிலர் சொல்வதை அவர் அறிந்திருக்கவில்லை. கடந்த 2008 நவம்பர் மாதம் முதல் அவர் பணத்தை கையால் தொடவில்லை. அப்படியென்றால், கடன் அட்டை, காசோலை ஆகியவற்றை அவர் பயன்படுத்துகிறாரா என்ற கேள்வி உங்களுக்குள் எழக் கூடும். இல்லை.. அவர் பணத்தை பயன்படுத்துவதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டார்!

பிரிஸ்டல் நகரில் ஒரு பண்ணையில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு கேரவன் தான் அவருடைய வீடு; அவருக்குத் தேவையான அளவு காய்கறியைப் பயிரிட்டு கொள்கிறார்; விறகு அடுப்பில் சமைக்கிறார்; சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரித்துக் கொள்கிறார். அந்த சக்தியில் அவருடைய மடிக்கணினியும் செல்பேசியும் இயங்குகின்றன; சுற்றுச்சூழல் பாதிப்பு, தொழிற்சாலைகளால் ஏற்படும் பக்க விளைவுகள், போரால் மனிதர்களுக்கு நேர்கின்ற துன்பம் உள்ளிட்ட எல்லா பிரச்னைகளுக்கும் பணமே காரணம் என்ற முடிவுக்கு வருகிறார். இதைத் தொடர்ந்து பணத்தைக் கைவிடுவது என்று முடிவு செய்து வாழ்ந்து வருகிறார். பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படித்த போது, உயிரினங்களின் வாழ்க்கைச் சூழல் என்ற வார்த்தையையே அவர் கேள்விப்பட்டதில்லை என்கிறார். அதாவது கல்லூரிகளில் பொருளாதாரத்தைக் கற்றுக் கொடுப்பவர்கள் உயிரினங்களின் வாழ்க்கைச் சூழல், சுற்றுச் சூழல் ஆகியவற்றைக் கண்டு கொள்வதே இல்லை! இந்த வகையில் பொருளாதாரம் கற்ற மேதைகள் முன்வைக்கும் வளர்ச்சித் திட்டங்கள் சாதாரண உயிரினங்களுக்கு எதிராகத்தான் இருக்கும் என்பதை அவருடைய வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

அவரைப் போல நம்மால் பணம் இல்லாமல் வாழ முடியாது. ‘பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கை துரத்துதே’ என்று பாடிக் கொண்டே நாம் பொருள் தேடி அலைகிறோம். அப்படிப் பொருள் தேடும்போது கிடைக்கும் வேலையில் ஒருவர் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் இருநூறு சதவீதம் அதிகமாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது மாதம் 16000 ரூபாய் ஊதியம் வாங்கிக் கொண்டிருந்த அவருக்கு, அவருடைய நிறுவனம் திடீரென்று மாதம் 50000 ரூபாய் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் கம்பெனி நஷ்டத்தில் அல்லது நிதிப் பற்றாக்குறையில் இருக்கும்போது அவருக்கு ஊதியத்தை கூட்டியிருக்கிறது என்றால், அந்த செய்தியைக் கேட்கும்போதே அவருடைய மனம் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போகும்; கண்களில் ஆனந்தக் கண்ணீர் முட்டும்; பஸ்ஸில் இடியும் மிதியும் வாங்கிக் கொண்டு கல்லூரி செல்லும் மகளை அல்லது அலுவலகம் செல்லும் மனைவியை இனி ஆட்டோவில் போகச் சொல்லலாம் என்றோ, அவர்களுக்கு ஒரு இரண்டு சக்கர வாகனம் வாங்கிக் கொடுக்கலாம் என்றோ அவருடைய மனம் கணக்குப் போடத் தொடங்கும். அப்படி ஒரு சம்பவம் நம்முடைய வாழ்க்கையில் நடந்தால், இன்னும் அதிகமாகக் கொடு என்று முதலாளியின் அறைக்குச் சென்று நம்மில் பெரும்பாலானவர்கள் நிச்சயம் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டோம்!

ஆனால் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்படி ஓர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நம்மில் ஒருவரோ அல்லது நம்மைப் போல் ஒருவரோ இல்லை என்பதை கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதன் மூலம் அவர்கள் நமக்கு உணர்த்தினார்கள்; சிந்தனையிலும் செயலிலும் அவர்கள் நம்மை விட வித்தியாசமானவர்கள் என்பதை அன்று மக்களவையில் ஆர்ப்பாட்டம் செய்து நிரூபித்தார்கள். மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த அந்த அந்த ஊதிய உயர்வு அவர்களுக்கு போதவில்லை. அவர்கள் அப்படி என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள்? என்ன ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது? அந்த உயர்வு ஏன் அவர்களுக்கு போதவில்லை?

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு 16 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியமாக இருந்தது. இப்போது அது 50000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எம்.பி.க்களின் அலுவலக நிர்வாக செலவுக்காக கொடுக்கப்பட்டு வந்த தொகை 20000 ரூபாய். அது இப்போது 40000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. 20000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த தொகுதிப் படியும் 40000 ரூபாயாக கூட்டப்பட்டது. சொந்த வாகனம் வாங்குவதற்கு வட்டியில்லாத கடனாக இதுவரை 1 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. அது இப்போது 4 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இவைதவிர, வழக்கம்போல இலவச விமானப் பயணம், ரயில் பயணம், தொலைபேசியில் குறிப்பிடத்தக்க இலவச அழைப்புகள் என்று தனிப் பட்டியல் வேறு.. சாலைப் பயணப்படியும் அதிகரிக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் அந்த அமளி நாடாளுமன்றத்தில் நடந்தது. அரசுச் செயலர்கள் 80000 ரூபாய் சம்பளம் வாங்கும்போது, எம்.பி.க்களுக்கு அதைவிட ஒரு ரூபாயாவது அதிகம் வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கை. இந்த விவகாரத்தை கவனிப்பதற்காக உருவாக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவும் அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டது. எம்.பி.க்களுக்கு 80001 ரூபாய் அடிப்படைச் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தது. “இந்த பரிந்துரையை அரசு ஏற்காமல், நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தி விட்டது” என்று லாலு பிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் கோபப்பட்டார்கள். இதற்குப் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் அலுவலக நிர்வாகச் செலவு 45000 ரூபாய் என்றும் தொகுதிப்படி 45000 ரூபாய் என்றும் மாதம் பத்தாயிரம் ரூபாய் மேலும் அதிகரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு நம்முடைய தலைவர்களும் சிறிது அமைதியாகி இருக்கிறார்கள்!

இந்த நிகழ்வுகள் எல்லாம் அவ்வப்போது தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் செய்திகளாக வந்தவைதான். இதையெல்லாம் பார்த்து பொதுமக்கள் பலர் ஊடகங்களில் கருத்து தெரிவித்தார்கள். அவர்களில் மிகவும் அதிகமானவர்கள் நம்முடைய எம்.பி.க்களின் கோரிக்கையில் நியாயம் இல்லை என்றார்கள்; அவர்கள் அப்படி என்ன வேலை செய்கிறார்கள் என்று கொந்தளித்தார்கள்; லஞ்சமும் ஊழலும் அவர்களுடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு ஊதிய உயர்வே தேவை இல்லை என்று பேசினார்கள். உணர்ச்சிவசப்பட்ட மத்திய தர உணர்வே அவர்களிடம் மேலோங்கி இருந்தது. எம்.பி.க்கள் மட்டும் அல்ல - அரசு ஊழியர்களோ, வங்கி ஊழியர்களோ அல்லது இன்ஷ்யூரன்ஸ் ஊழியர்களோ - யார் போராடினாலும் அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். அவர்களோடு சேர்ந்து அப்போது நம்முடைய எம்.பி.க்களும் பேசுவார்கள். அமைப்பு சாராத தொழிலார்களும் விவசாயிகளும் வறுமையில் வாடும்போது இவர்கள் அதிக சம்பளம் கேட்டு போராடுவது நியாயம்தானா என்று பிரசாரம் செய்வார்கள். ‘போராட்டம் நடத்துவோரை மக்களே கவனித்துக் கொள்வார்கள்’ என்று சொல்லி வன்முறையைத் தூண்டுவார்கள்!

அப்படியெல்லாம் கடந்த காலங்களில் நம்முடைய எம்.பி.க்கள் ‘ஜனநாயக விரோதமாக’ நடந்து கொண்டார்கள் என்பதற்காக அவர்களுடைய கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை நாம் மறுத்துவிடக் கூடாது. ஊதிய உயர்வு கேட்டுப் போராடும் எல்லாருடைய போராட்டங்களிலும் இருக்கும் நியாயம் இவர்களுடைய கோரிக்கையிலும் இருக்கிறது. அவர்களுடைய செயல்பாடுகளில் நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக அவர்களுடைய நடத்தையை மாற்றிக் கொள்ளும்படி நாம் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களுடைய கோரிக்கையின் நியாயத்தை மறுக்கக் கூடாது. சர்வதேச அளவில் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்கும் சம்பளத்தைவிட நம்முடைய எம்.பி.க்கள் மிகவும் குறைவாகவே வாங்குகிறார்கள். எட்டு இந்திய மாகாணங்களில் 42 கோடி மக்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்ற செய்தியை சில வாரங்களுக்கு முன்பு எரிதழல் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். அப்படி ஒரு சூழல் இந்தியாவில் இருக்கும்போது நம்முடைய பிரதிநிதிகள் அவர்களுடைய சம்பளத்துக்காக அமளியில் ஈடுபடுவது நியாயமா என்று பலர் கேட்கிறார்கள். அது போன்ற கேள்விகளில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

அவர்களுடைய கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொள்வதால், அவர்களுடைய நடத்தையை ஒருவர் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விடுதலைக்குப் பிறகான முதல் பத்தாண்டுகளில் வருடத்துக்கு சராசரி 124 அமர்வுகள் நாடாளுமன்றத்தில் இருந்தன என்றும் இப்போது அந்த சராசரி எண்பதைச் சுற்றி இருக்கிறது என்றும் ஒரு தகவல் சொல்கிறது. அதிலும் பாதி நாட்கள் அமளியில் கழிந்து விடுகிறது. மிக முக்கியமான மசோதாக்கள் கூட தீவிரமான விவாதங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 150 எம்.பி.க்கள் மேல் குற்ற வழக்குகள் இருப்பதாகவும் அவர்களில் 73 பேர் கொலை போன்ற கொடிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பவர்கள் என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கழகம் என்ற அமைப்பு தெரிவிக்கிறது. எழுபது கோடி மக்கள் எந்தவித வசதிகளும் இல்லாமல் கிராமங்களில் வாழ்ந்து வருகிறார்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் எழுபது சதவீதத்தினர் ரத்தசோகையுடனும் ஊட்டச்சத்து இல்லாமலும் இருக்கிறார்கள். 66 கோடி இந்தியர்கள் கழிப்பறை வசதி இல்லாமல் திறந்த வெளிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று யுனிசெப் சொல்கிறது. இன்னும் எத்தனையோ குறைகள் அடிக்கடி இந்தப் பகுதியில் சுட்டிக்காட்டப்படுகின்றன. அந்தக் குறைகளைப் போக்குவதற்கும் நம்முடைய எம்.பி.க்கள் போராட வேண்டும். தங்களுடைய ஊதிய உயர்வுக்காக காட்டிய அக்கறையையும் கோபத்தையும் அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் நமது எம்.பி.க்கள் காட்ட வேண்டும்.

கோரிக்கைகளில் நியாயம் இருந்தாலும் அவற்றை நிறைவேற்றுவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் சரியானதாக இருக்க வேண்டும் என்று சாதாரண மக்களுக்கு அரசியல் தலைவர்கள் அறிவுரை வழங்குவார்கள். அதே ஆலோசனையை இப்போது நாம் அவர்களுக்கு திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுடைய சம்பளத்தை அவர்களே நிர்ணயம் செய்து கொள்வது சரியான வழிமுறையாகத் தெரியவில்லை. ஒரு சுதந்திரமான ஆணையத்தின் மூலம் இந்தக் குறையைப் போக்க முடியும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒரு முறை அவர்களுடைய ஊதியம் திருத்தியமைக்கப்படலாம். கையெழுத்துப் போட்டுவிட்டு அவைக்கு வராமல் போகிறவர்களுக்கு சம்பளத்தைக் குறைக்கலாம். அவைக்கு ஒழுங்காக வந்து விவாதங்களில் சிறப்பாக பங்களிப்பவர்களுக்கு ஊக்கத் தொகையும் கொடுக்கலாம்.

ஏற்கனவே கோடீஸ்வரர்களாக இருப்பவர்களுக்கு இன்னும் ஊதிய உயர்வு தேவையா என்று உங்களில் சிலர் இன்னும் கேட்கலாம். எம்.பி. என்றவுடன் நீங்கள் விஜய் மல்லையா, நவீன் ஜிண்டால் போன்ற தொழிலதிபர்களை நினைத்துப் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நம்முடைய எம்.பி. தென்காசி லிங்கத்தை நினைத்துப் பாருங்கள். ஊதிய உயர்வு அவசியம் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 02.09.10

0 Comments:

Post a Comment

<< Home