Saturday, July 31, 2010

நிமிர்ந்து நில்லுங்கள்!

”அமெரிக்காவின் போர்களுக்கு எதிராக அமெரிக்க குடியுரிமையை துறந்த ஜெஃப் நேபல் பற்றி ரிப்போர்ட்டரின் எரிதழல் பகுதியில் எழுதி இருந்தீர்கள். அவரைப் பற்றி நான் இதுவரை அறிந்திருக்கவில்லை. அவரைப் போன்ற அபூர்வமான மனிதர்கள் குறித்து அடிக்கடி எழுதுங்கள்” என்று ஒரு நண்பர் என்னிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் தவிர இன்னும் சிலர் தொலைபேசியில் அழைத்து இதே மாதிரியான கருத்துக்களை சொன்னார்கள். ஓர் இதழின் வாசகர்களில் எல்லோரும் இப்படியே இருக்க மாட்டார்கள் என்ற உண்மையும் புரிகிறது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நடத்தும் அறிக்கைப் போர்களை அக்குவேறு ஆணி வேறாக ஏதாவது பத்திரிகையில் யாராவது பிரித்து மேய்ந்தால், அதைப் படிப்பதில் சிலருக்கு ஆர்வம் இருக்கிறது. எதிர்மறையான செய்திகள் மட்டுமே வாசகர்களையோ பார்வையாளர்களையோ ஈர்க்கும் என்ற பொதுவான புரிதலுக்கு எதிராக ஒரு புது தலைமுறை உருவாகி வருவதையும் பார்க்க முடிகிறது!

உலகத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தாகம் இயல்பாக மனிதர்களுக்குள் இருக்கிறது. அவரவர்களுடைய வாழ்க்கைச் சூழலுக்குத் தகுந்தவாறு அந்த தாகத்தைத் தீர்ப்பதற்கு அவர்கள் முயல்கிறார்கள். அவர்களுடைய அந்தத் தேவையை நிறைவேற்றுவதே ஊடகங்களின் வேலை. கிசுகிசுக்களை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்திக் கொடுப்பதுதான் இதழியல் என்று சிலர் ஊடகங்களை விமர்சனம் இருக்கிறார்கள்; நிச்சயம் அப்படி இல்லை என்றும் பத்திரிகை என்பது ஒரு நடமாடும் வரலாறு என்றும் சிலர் சொல்கிறார்கள். இந்த இருவகை மக்களையும் உள்ளடக்கிய அனைவருக்குமான உள்ளடக்கத் தேவைகளை நிறைவுசெய்ய வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது.

அந்தக் கடமையை ஊடகங்கள் எப்படி செய்து முடிக்கின்றன? அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களே அந்தப் பணியை செய்து முடிக்கிறார்கள். அந்த வேலையில் சிலசமயம் பூக்கள் தூவி வரவேற்கப்படலாம்; அல்லது ரத்தம் சொட்டச் சொட்ட கல்லடி கிடைக்கலாம். கடந்த ஜூலை 12-ம் நாள் உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி நமக்கு சில செய்திகளை உணர்த்துகிறது. அன்று விஜய் பிரதாப் சிங் என்ற பத்திரிகையாளர் தன்னுடைய கடமையை நிறைவேற்றுவதற்காக அலகாபாத் நகரில் ஓர் அமைச்சரின் வீட்டுக்கு சென்றார். நன்றாக கவனியுங்கள். அடர்ந்த காட்டுக்குள் அருந்ததி ராயைப் போல அவர் போகவில்லை. சர்வதேச எல்லையைக் கடந்து கடல் வழியாக பக்கத்து நாட்டுக்கு அவர் செல்லவில்லை. அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் வீட்டுக்கு அவர் போயிருந்தார். அந்த வேலையில் என்ன அபாயம் இருக்கிறது? ஆனால் அவருடைய உயிருக்கு அங்கு வெடித்த குண்டு மூலம் ஆபத்து வந்தது. அமைச்சரைக் கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததால், அவரைப் பார்க்கப் போயிருந்த பத்திரிகையாளர் விஜய் பிரதாப் சிங் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் ஒன்பது நாட்கள் உயிருக்குப் போராடினார். கடைசியில் கடந்த ஜூலை 21-ம் தேதி இறந்து போனார்.

அவர் ஏற்கனவே கன்சியாம் கேவத் என்ற கொள்ளையனுக்கும் 400 காவலர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையை நேரடியாகப் பார்த்து எழுதி இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது உ.பி. மாநிலத்தில் ஜான்பூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய நீதிக் கட்சி வேட்பாளர் பகதூர் சோங்கர் மர்மமான முறையில் இறந்து போனார். அந்த சாவு எப்படி நடந்த்து என்று அவர் புலனாய்வு செய்திருந்தார். போர்ட்டர் வேலைக்கு சேரும் பெண்களுக்கு விநோதமான சோதனை நடத்தப்படுவதை அம்பலப்படுத்தி சர்ச்சையாக்கினார். கொள்ளையனுக்கும் போலீசுக்கும் நடந்த மோதல் நடந்த இடத்தில் அவருடைய உடலில் குண்டு பாய்ந்து அவர் செத்துப் போயிருந்தால் அதை ஒருவரால் புரிந்து கொள்ள முடியும்.

அரசின் தூதுவராக இல்லாமல் சந்தனக் கடத்தல் வீரப்பனின் பேட்டிக்காக ரகசியமாக காட்டுக்குள் போகும்போது ஒரு பத்திரிகையாளருக்கு அதிரடிப்படையால் ஏதேனும் நேர்ந்திருந்தால் அந்த அபாயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். விடுதலைப் புலிகளை சந்திப்பதற்காக படகில் போய்க் கொண்டிருக்கும்போது ஓர் இதழாளன் நடுக்கடலில் சிங்களப் படையினராலோ அல்லது இந்தியக் கப்பல் படையாலோ சுட்டுக் கொல்லப்பட்டால், மக்கள் அதைப் புரிந்து கொள்வார்கள். அது போன்ற பணிகளுக்குச் செல்லும் பத்திரிகையாளர்களும் நமக்கு ஏதேனும் நேரக் கூடும் என்ற புரிதலோடுதான் அந்த வேலைகளில் இறங்குவார்கள். ஆனால் பாதுகாப்பு நிறைந்த அமைச்சர் வீட்டில் இப்படி ஒரு கோர முடிவு ஏற்படும் என்று எந்தப் பத்திரிகையாளர் எதிர்பார்க்க முடியும்?

குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் விஜய் பிரதாப் சிங்கின் உயிர்த் தியாகத்தை மதித்துப் பேசி இருக்கிறார். அண்மையில் ராம்நாத் கோயங்கா விருதுகளை பத்திரிகையாளர்களுக்கு வழங்கி அவர் பேசினார். அப்போது விஜய் பிரதாப் சிங்கைப் பாராட்டி இருக்கிறார். அதேசமயம் ஊடகங்களை அவர் எச்சரித்தும் இருக்கிறார். ”இரண்டு முக்கிய சவால்களை ஊடகங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன; செய்திப் பஞ்சம், ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்குதல் ஆகிய இரண்டில் இருந்தும் ஊடகங்கள் விடுபட வேண்டும்,” என்று அவர் சொல்லி இருக்கிறார். ஆம்! முந்தைய நாள் தொலைக்காட்சி செய்திகளில் வந்ததை விட விரிவாக செய்திகளை அடுத்த நாள் வரும் நாளிதழ்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது. செய்தித் தாள்களில் வரும் செய்திகளில் இல்லாத பின்னணியையும் வேறு பரிமாணங்களையும் வாரம் இருமுறை வரும் இதழ்களும் வார இதழ்களும் தர வேண்டியிருக்கிறது. 24 மணிநேர செய்தி சேனல்களோ தொடர்ந்து 24 மணிநேரமும் ஏதாவது புதிய செய்திகளைக் கொடுக்கும் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன!

இந்த நெருக்கடிகள் காரணமாகவே சில ஊடகங்கள் ‘ஸ்டிங்க்’ நடவடிக்கைகளில் இறங்குகின்றன. சமூகத்தில் நடக்கும் தீமைகளை, அந்தத் தீமைகளுக்கு காரணமாக இருக்கும் மனிதர்களை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும் என்ற சமூக நோக்கம் அந்த நடவடிக்கைகளில் இல்லாமல் இருக்கலாம். வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் அல்லது பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற வியாபார நோக்கம் மட்டுமே அவர்களை உந்தித் தள்ளி இருக்கலாம். ஆனால் அவர்களுடைய வியாபார நலனிலும் ஒரு பொதுநலன் இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்? ’குளத்தில் வாழும் மீன்கள் அழுக்கைத் தின்று நீரை சுத்தப்படுத்துகின்றன; அந்த மீன்களின் சுயநலத்தில் ஒரு பொதுநலனும் இருக்கிறது’ என்ற பிரபலமான வசனத்தை நாம் மறந்திருக்க மாட்டோம்!

ஊடகங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று முண்டாசு கட்டி விடுகிறார்கள். அந்த நம்பிக்கையில் செயல்பட்ட சில ஊடகங்கள் மிக மோசமான அடக்குமுறைகளுக்கு உள்ளாகி இருக்கின்றன. ராணுவத்தில் நடக்கும் ஆயுத பேரங்களை அம்பலப்படுத்திய தெஹல்கா இதழின் பொருளாதார பின்புலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் சிதைக்கப்பட்டது. ஆந்திராவில் ‘ஈ நாடு’ ஊடகங்களை நடத்தும் ராமோஜிராவ் அரசாங்கத்தின் தொல்லைகளுக்கு உள்ளானார். ’தீய சக்திகளை வெட்கத்தில் தலைகுனியச் செய்வதற்காக உண்மையை சொல்ல வேண்டும் என்பதை விட வேறு உயர்ந்த சட்டம் இதழியலில் இல்லை’ என்று சொல்வார்கள். அதை நம்பிச் செயல்படுகின்ற நிறுவனங்களும் தனிமனிதர்களும் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாகிறார்கள்.

பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு என்று ஒரு சர்வதேச அமைப்பு இருக்கிறது. அது தரும் தகவலின் அடிப்படையில் பார்த்தால் 2010-ம் ஆண்டு மட்டும் இதுவரை உலக அளவில் 18 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1992 முதல் 819 இதழாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 454 ஊடகவியலாளர்கள் அரசின் அடக்குமுறை காரணமாக வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். அதாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதும் கார்ட்டூனிஸ்டு ‘காணாமல்’ போவதும் அடிக்கடி செய்திகளாகின்றன. திசநாயகம் கைது செய்யப்பட்டு சர்வதேச அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். லசந்த விக்ரமசிங்கே கொலை செய்யப்பட்டார். கார்டூனிஸ்ட் பிரகீத் எக்னலிகோடா ’காணாமல்’ போனார். இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் எத்தனை சம்பவங்கள் இருக்கின்றனவோ தெரியவில்லை!

பத்திரிகையாளர்களுக்கு எதிரான பயங்கர நாடுகள் என்று இருபது நாடுகளை அந்த அமைப்பு பட்டியலிட்டிருக்கிறது. அவற்றில் முதலிடத்தில் இராக் இருக்கிறது. ஏழாவது இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. 13 வது இடத்தில் இலங்கை இருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா இந்தப் பட்டியலில் இடம் பெறாமல் இருந்தால் நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் அந்தப் பட்டியல் நமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இந்தியாவின் பெயரும் இருக்கிறது, எட்டாவது இடத்தில்! அதாவது பாகிஸ்தானை விட பரவாயில்லை என்று இந்தியர்கள் பெருமைப்படலாம். இலங்கையை விடவா இந்தியா மோசம் என்று தமிழர்கள் ஆச்சர்யப்படலாம்.

பத்திரிகையாளர்களுக்கு எதிராக குற்றச் செயல்களை செய்தவர்களில் 89 சதவீதம் பேர் எந்தத் தண்டனையும் பெறவில்லை. பலியானவர்களில் 57 சதவீதம் அச்சு ஊடகத்திலும் 26 சதவீதம் காட்சி ஊடகத்திலும் வேலை செய்தவர்கள். போரைப் பற்றிய செய்திகளை சேகரிக்கப் போய் போர்க்களத்தில் இறந்தவர்கள் 35 விழுக்காடு; அரசியல் களத்தில் 38 சதவீதமும் ஊழலை அம்பலப்படுத்திய வகையில் 21 சதவீதமும் உயிர் இழந்திருக்கிறார்கள்.

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்த பிறகும் சில ஊடகங்கள் உண்மையைச் சொல்வதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. அரசிடம் இருந்து விளம்பர வருமானம் இல்லை என்றாலும் கவலைப்படாமல் ‘கருமமே கண்ணாக’ இருக்கின்றன. லாபத்திற்காகத்தான் ஒரு தொழிலை ஒரு நிறுவனம் நடத்துகிறது என்றாலும் சாராயத்தில் கிடைக்கும் லாபம் ஊடகங்களில் கிடைக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்! ’நீக்குப் போக்காக’ நடந்து கொண்டே சில நல்ல பணிகளையும் பல ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

எல்லாத் துறைகளிலும் இருப்பதைப் போலவே இங்கும் சில தவறுகள் நடக்கின்றன. ‘கவர்’ ஸ்டோரிகளும், ஆதாரம் இல்லாத அவதூறுகளும் ஊடகங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கின்றன. உயிர் உட்பட பல இழப்புகளுக்கு உள்ளாகும் பத்திரிகையாளர்களின் தியாகத்தை இதுபோன்ற செயல்கள் கேலிக்குரியதாக்குகின்றன. இந்தியப் பிரதமருக்கு ஆட்சிக்காலம் ஐந்து வருடம்; ஆனால் ஊடகங்களின் ஆட்சி நிரந்தரம் என்பது உண்மையாக வேண்டுமானால், ஊடகங்கள் பொறுப்புடனும் நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 01.08.2010

0 Comments:

Post a Comment

<< Home