Thursday, August 05, 2010

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை?

“இந்தப் பிரச்னையில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கின்றன” என்று மக்களவையின் பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சொன்னார். கடந்த ஜூலை 27-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது அவர் சொன்னதைப் போல எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே நிலையில் இருப்பதாகவே வெளியில் தெரிந்தது. ’நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்து விட்டு விலைவாசி உயர்வு பற்றி எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்’ என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளுடைய கோரிக்கை. ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக இருந்த மாயாவதி, முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களும் இந்த முறை எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து நின்றது காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். அடுத்தடுத்த நாட்களில் காட்சிகள் மாறலாம். நம்முடைய அரசியலில் எதுவும் நடக்காது என்று நிச்சயமாக சொல்ல முடியாது!

சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகள் எப்படி ஒரே புள்ளியில் கூடி நிற்கின்றன? சாமான்ய மக்கள் மீது உண்மையிலேயே எதிர்க்கட்சிகள் அக்கறை கொண்டுதான் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஒன்றுபட்டிருக்கிறார்களா? காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு விலைவாசியை உயரவிடாமல் தடுக்கும் கொள்கை எத்தனை எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறது? இப்படிப் பல கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன. மக்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பெரிய அளவில் பாதிக்கின்ற விலைவாசி உயர்வு குறித்து எந்த அரசியல் கட்சியும் மௌனம் சாதிக்க முடியாது. அதனால் விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பா அல்லது வெறும் விவாதமா என்ற முக்கியமான கேள்வியில் கருத்து வேறுபாடு இருந்தாலும், மத்திய அரசுக்கு எதிராக பேச மாயாவதி முன்வந்திருக்கிறார். ‘வெறும் விவாதம் மட்டும் போதும். விவாதத்துடன் வாக்கெடுப்பு என்ற கோரிக்கையை முன்வைத்து பாஜகவுடன் சேர்ந்து நிற்க விரும்பவில்லை’ என்று பகுஜன் சமாஜ் கட்சி சொல்லி இருக்கிறது!

கடந்த 1996 ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்து 2004 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வரை மத்திய ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் அடிக்கடி ‘கருத்தொற்றுமை’ என்ற வார்த்தையை கேட்டு வந்தோம். ஆனால் 2009 தேர்தல் வெற்றிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து அந்த சொல்லைக் கேட்க முடியவில்லை. ஆட்சிக்கு ஆதரவு தரும் தலைவர்களை வீட்டுக்கு அழைத்து பிரதமர் பேசினால் அவர்களுடைய ‘ஈகோ’ அமைதியாகி இருக்கும். ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன்சிங், ஆட்சிக்கு ஆதரவு தரும் தலைவர்களுடன் கலந்து ஆலோசிப்பதில்லை என்பதாலோ என்னவோ, ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர்களும் இந்த பிரச்னையில் எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள்! இதனால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை; ஆனால் மற்ற மதச்சார்பற்ற கட்சிகளை அரவணைத்துப் போகவேண்டிய அவசியம் காங்கிரசுக்கு வரும் என்று அவர்கள் கணக்கு போடுகிறார்கள். ’திறமை இல்லாத இந்த அரசை மாற்றுவோம்’ என்று முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் கட்சியினர் மக்களவையில் முழக்கங்களை எழுப்பினாலும், பாரதிய ஜனதாவுடன் பகிரங்கமாக நெருங்கி வர மாட்டார்கள்!

காங்கிரஸ் கட்சி இந்த வேறுபாடுகளையே நம்பி இருக்கிறது. இடதுசாரிகளுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு இல்லாமல் செய்துவிட்டால் இந்த அளவு நெருக்கடியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சந்திக்க வேண்டியிருக்காது. விலைவாசி உயர்வை விட்டு விட்டு குஜராத் அமைச்சர் அமீத் ஷா கைது பற்றி விவாதிக்கத் தொடங்கினால், இரு முக்கிய எதிர்க்கட்சிகளும் முட்டிக் கொள்ளும். ‘மத்திய அரசு புலனாய்வு அமைப்பை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது என்பதே எங்கள் நிலையும். ஆனால் அமீத் ஷா விஷயத்தில் நாங்கள் அப்படி நினைக்கவில்லை’ என்று ஏற்கனவே இடதுசாரிகள் சொல்லி இருக்கிறார்கள். இடதுசாரிகளின் இன்றைய நிலை குறித்து சமீபத்தில் அத்வானி தன்னுடைய வலைப்பதிவில் ஒரு கருத்தை சொல்லியிருந்தார். ”காங்கிரசுக்கு எதிராக ஜனசங்கம்/பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இடதுசாரிக்ள் சேர்ந்தே செயல்பட்டார்கள். கடந்த சில வருடங்களாகவே அவர்கள் பாஜக மீது வெறுப்பு கொண்டு தீண்டாமையை கடைப்பிடிக்கிறார்கள்; எதிர்க்கட்சிகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு குறித்து எங்களுடன் பேசுவதற்கு அவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு வர மாட்டார்கள். வேறு கட்சி அலுவலகங்களிலேயே நாங்கள் அவர்களுடன் ஆலோசனை செய்வோம்” என்று எழுதி இருந்தார். அதாவது ‘பாஜகவுடன் ஒருங்கிணைந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வேலை செய்யும்; ஆனால் அதை பகிரங்கமாக அந்தக் கட்சிகள் செய்யாது’ என்பதே அவர் நமக்கு உணர்த்தும் செய்தி.

நாடாளுமன்றத்தின் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மக்களவையின் மார்க்சிஸ்ட் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யாவும், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தாவும் மக்களவை பாஜக தலைவர் அலுவலகத்தில் சுஷ்மா ஸ்வராஜையும் அத்வானியையும் சந்தித்தார்கள் என்று அத்வானி சொல்கிறார். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து இரு கட்சிகளும் ஒரே நாளில் முழு அடைப்பு நடத்தின. ‘பிரதான எதிரியைத் தோற்கடிப்பதற்காக மற்ற எதிரிகளுடன் அணி சேர்கிறோம்’ என்ற விளக்கத்துடன் பாஜகவுடன் இடதுசாரிகள் கைகோர்க்கலாம். அது அவர்களுடைய செயல் தந்திரம் தொடர்பான பிரச்னை! ஒருங்கிணைப்பு எல்லாம் கிடையாது என்று சொல்லிவிட்டு ’தற்செயலாக’ சேர்ந்து செயல்படுவதைப் போன்ற பாவனைகளை மக்கள் அறிய மாட்டார்களா என்ன? பாரதிய ஜனதாவுடன் பல கட்சிகள் கொண்டிருக்கும் உறவைப் பார்க்கும்போது முன்பு எங்கோ படித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

அந்த மடத்தில் ஒரு வயது முதிர்ந்த துறவி இருந்தார். அவர் அங்கு இருந்த சீடர்களுக்கு தியானம் கற்றுக் கொடுத்தார். வயதில் இளைஞர்களாக இருக்கும் சில துறவிகளும் ஓர் இளம் பெண் துறவியும் அங்கு சீடர்களாக இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே பெரியவரிடம் தியானம் கற்றுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் துறவி மிகவும் அழகாக இருந்தார். அவருடைய தலை மொட்டை அடிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் காவி உடையே அணிந்திருந்த போதிலும் இளைய துறவிகளில் ஒரு சிலருக்கு அவர் மீது ஒரு கண் இருந்தது. ’நாம் தனியாக சந்திக்கலாமா’ என்று கேட்டு அவர்களில் ஒருவர் அந்தப் பெண் துறவிக்கு காதல் கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதம் கையில் கிடைத்த பிறகு அந்தப் பெண் பதில் கடிதம் எதுவும் எழுதவில்லை. அதேசமயம் ‘எனக்கு எப்படி கடிதம் எழுதலாம்?’ என்று அவர் ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. அடுத்த நாள் தியானப் பயிற்சி வகுப்பு முடிந்தது. எல்லா சீடர்களிடமும் பெரியவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் துறவி எழுந்திருந்தார். காதல் கடிதம் எழுதிய இளைய துறவியைப் பார்த்து, ‘எனக்கு நீங்கள் கடிதம் எழுதியிருக்கிறீர்களே, என்னை நீங்கள் உண்மையிலேயே காதலிக்கிறீர்களா? அப்படி என்னை நீங்கள் காதலிப்பதாக இருந்தால், இப்போதே எழுந்து வந்து என்னை அணைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார். அந்த இளைய துறவி பதில் எதுவும் பேசவில்லை; மௌனமாக தலை குனிந்து நின்றார்!

பாஜகவுடன் உறவு என்ற விஷயத்தில் பல அரசியல் கட்சிகளின் நிலையும் அந்த இளம் துறவியைப் போலவே இருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்


0 Comments:

Post a Comment

<< Home