Tuesday, July 27, 2010

பயமோ பரிவோ தேவையில்லை!

பார்வையில்லாத ஒருவர் அவருடைய நண்பருடைய வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். சூரியன் மறைந்து இருட்டத் தொடங்கியது. மின்வசதியும் தெரு விளக்குகளும் இல்லாத காலகட்டம் அது. பார்வையில்லாதவர் நண்பரிடம் பேசி முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவருடைய நண்பர் அவரிடம் ஒரு அரிக்கேன் விளக்கைக் கொடுத்து ‘வீட்டுக்குப் போவதற்கு இந்த விளக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்,’ என்றார். பார்வையில்லாதவரோ, ‘விளக்கு எரிவதால் மட்டும் எனக்குப் பாதை தெரிந்துவிடப் போவதில்லை. இருளும் ஒளியும் எனக்கு ஒன்றுதான். எனவே இந்த விளக்கு எனக்குத் தேவையில்லை,’ என்று பதில் சொன்னார். ஆனால், அவருடைய நண்பர் அவரை விளக்கில்லாமல் வெளியில் போக அனுமதிக்கவில்லை. ‘உங்களுக்கு அந்த விளக்கின் ஒளியால் பயன் இல்லை என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். ஆனால் நீங்கள் வருவதை உங்களுக்கு எதிரில் வருபவர்களுக்கு அந்த விளக்கின் ஒளி காட்டும். அவர்கள் உங்கள் மேல் மோதாமல் விலகிப் போவார்கள். அதனால் நீங்கள் அவசியம் விளக்கை எடுத்துக் கொண்டு போக வேண்டும்’ என்றார்.

பார்வையில்லாத நண்பர் கையில் விளக்கை எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். அவர் கொஞ்ச தூரம் போன நிலையில் வேறொருவர் அவசரமாக வந்து அவரை நிறுத்தினார். ‘இந்த இருட்டுல நீங்க எங்கே போறீங்க,’ என்று புதியவர் கேட்டார். அதற்கு, ‘இருட்டா? நான் தான் கையில் விளக்கு வைத்திருக்கிறேனே! உங்களால் பார்க்க முடியவில்லையா என்ன?’ என்று பார்வையில்லாதவர் பதில் கேள்வி கேட்டார். ‘அன்புள்ள நண்பரே, உங்க விளக்கு எப்பவோ அணைஞ்சு போயிருக்கு. நான் உங்களை முதல்ல பார்த்ததுலேர்ந்து இப்போ வரைக்கும் நீங்க எரியாத ஒரு விளக்கையே தூக்கிப் பிடிச்சிட்டு இருக்கீங்க,’ என்று சொன்னார். எரியும் விளக்கை காற்று அணைப்பது போல நம்முடைய வளர்ச்சித் திட்டங்களை ஊழல் அழிக்கிறது. விளக்கு எரிகிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியாத நிலையில் அவர் இருந்ததைப் போலத்தான் நாமும் நம்முடைய ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் பயன் தருகின்றனவா என்று தெரியாமலே வைத்திருக்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது.

டெல்லி மாநில லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது. டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த மூன்று வருடங்களில் எந்தத் துறையினர் மேல் அதிகமான ஊழல் வழக்குகளைப் போட்டிருக்கிறது என்பதே அந்த செய்தி. அதில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் முதலிடத்தையும் டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். இந்த இரு துறைகளிலும் வேலை பார்க்கும் 300 அதிகாரிகள் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் சிக்கியவர்களில் அதிகபட்ச உயர்பதவியில் இருப்பது காவல்துறையின் இன்ஸ்பெக்டர்கள் அல்லது ஆய்வாளர்கள். அதற்கு மேலான பதவிகளில் இருப்பவர்களிடம் ஊழல் இல்லையா என்றோ உயர்பதவிகளில் இருப்பவர்கள் வழக்குகளில் சிக்கிக் கொள்வதில்லையா என்றோ கேட்காதீர்கள். அந்தக் கேள்விகளுக்கான பதில் அந்த செய்தியில் இல்லை!

சின்ன மீன்கள் மட்டுமே வலையில் சிக்குகின்றன; பெரிய பெரிய திமிங்கிலங்கள் எல்லாம் வலையை அறுத்துக் கொண்டு தப்பித்து விடுகின்றன என்று நம்மைப் போன்ற சாதாரண மக்கள் பேசுவார்கள் என்பதை பிரதமர் மன்மோகன்சிங் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் கடந்த 2009 ஆகஸ்ட் 26-ம் தேதி நடந்த மத்திய புலனாய்வு அமைப்பு, மாநில லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கூட்டத்தில், ‘பெரிய திமிங்கிலங்களைத் தப்ப விடாதீர்கள்’ என்று பேசி இருக்கிறார். ‘வேகமாகவும் உறுதியாகவும் பயம் இல்லாமலும் யாருக்கும் பரிவு காட்டாமலும் நீங்கள் நடவடிக்கை எடுங்கள். அதற்கான சட்டப் பாதுகாப்பு உங்களுக்கு இருக்கிறது’ என்று அதிகாரிகளை உற்சாகப்படுத்தி இருக்கிறார். சர்வதேச அரங்கங்களில் இந்தியாவுக்கு நல்ல பெயர் கிடைப்பதற்குத் தடையாக லஞ்சமும் ஊழலும் இருக்கின்றன என்பது பிரதமரின் கவலை!

டெல்லியில் மட்டும்தான் ஊழல் இருக்கிறதா என்ற கேள்வி இயல்பாக ஒருவருக்கு எழக் கூடும். பானையில் இருக்கும் சோறு நன்றாக வெந்திருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக ஒரு சோறை எடுத்துப் பதம் பார்ப்பதைப் போல, டெல்லி மாநிலம் குறித்த தகவல் இருக்கிறது. வேறு மாநிலங்களின் நிலையைப் பார்க்கும்போது, ஒப்பீட்டளவில் சில வேறுபாடுகள் இருக்கலாமே தவிர, பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும் என்று சொல்வதற்கில்லை

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு முதல் இன்றைய பிரதமர் மன்மோகன்சிங் வரை எல்லா பிரதமர்களின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் மீதும் ஊழல் புகார்கள் வந்திருக்கின்றன. ராணுவத்துக்கு வாங்கப்பட்ட ஜீப்கள் தரமானதாக இல்லை என்பதால், பிரிட்டனில் தூதராக இருந்த கிருஷ்ணமேனன் பதவி விலக நேர்ந்தது. சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு நிறுவனத்துடன் இருந்த நெருக்கம் காரணமாக சுரங்கத்துறை அமைச்சர் கே.டி.மாளவியா பதவியை இழந்திருக்கிறார். ஹரிதாஸ் முந்த்ரா என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் முதலீடு குறித்து டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீது புகார் செய்யப்பட்டது.

பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் ஊழல் புகார்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது. கர்நாடகத்தில் குண்டுராவ், ஒரிசாவில் ஜே.பி.பட்நாயக், பீகாரில் ஜெகனாத் மிஸ்ரா, மகாராஷ்டிராவில் ஏ.ஆர்.அந்துலே, மத்திய பிரதேசத்தில் அர்ஜூன்சிங் என்று இந்திராவின் தளபதிகள் பலர் மீது ஊழல் புகார்கள் இருந்தன. போபர்ஸ் பீரங்கி ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் என்று ராஜீவ் காந்தியின் ஆட்சியிலும் சர்ச்சைகள் தொடர்ந்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிப்பதற்காக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததில் இருந்து நரசிம்மராவ் ஆட்சியின் அடிப்படை நமக்குப் புரியும். ஹவாலா ஊழலும் ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை மோசடிகளும் உர ஊழலும் அவர் நிர்வாகத்தின் சில எடுத்துக்காட்டுகள். பாஜக தலைமையிலான ஆட்சியிலும் சவப்பெட்டி ஊழல், கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகளை வாங்கியது என்று பல செய்திகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். மாட்டுத் தீவனம், தாஜ் வளாகம், மதுகோடா, லாவ்லின் என்று குறுநில மன்னர்களின் ஊழல் பட்டியல் தனியாக இருக்கிறது. மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எழுந்த சமீபத்திய புகார்கள் இப்போதும் செய்திகளில் இருப்பதால், யாரும் நமக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை!

1991 –க்கு முன்னால் வரை இந்தியா ‘லைசன்ஸ் ராஜ்யமாக’ இருப்பதால் ஊழல் மலிந்திருக்கிறது என்று சொன்னார்கள். அதாவது என்ன தொழில் தொடங்க வேண்டும் என்றாலும் அதற்காக அரசாங்கத்திடம் உரிமம் அல்லது லைசன்ஸ் பெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் கட்டுப்பாடு தான் ஊழலுக்குக் காரணம் என்றார்கள். 1991-ல் இருந்து இன்று வரை எந்தத் தடையும் இல்லாமல் ’பொருளாதார சீர்திருத்தங்கள்’ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் இப்போது ஊழல் குறைந்திருக்க வேண்டும்! ’ட்ரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல்’ என்ற வெளிப்படையான நிர்வாகத்துக்காக போராடும் ஓர் அமைப்பு ஒவ்வொரு வருடமும் ஊழல் குறைந்த நாட்டை முதல் இடத்திலும் ஊழல் அதிகமாக இருக்கும் நாட்டை கடைசியிலும் இருக்கும்படி, ஒரு பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி இந்தியா 2005-ல் 92-வது இடத்தில் இருந்தது. இப்போது கடைசியாக வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்தியா 86-வது இடத்தில் இருக்கிறது. இதன்படி பார்த்தாலும் இந்தியாவில் இப்போது ஊழல் குறைந்திருக்க வேண்டும். அல்லது மற்ற நாடுகளில் ஊழல் அதிகரித்திருக்க வேண்டும். மற்ற நாடுகளை விட்டுவிடுவோம், இந்தியாவில் ஊழல் குறைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு உங்கள் அனுபவம் தரும் பதில் என்ன?

சமீபகாலமாக நாம் பார்க்கும் சில செய்திகளில் இருந்து நாம் என்ன முடிவுக்கு வர முடிகிறது? ஒவ்வொரு நாள் வெளியாகும் புதிய புகார்களும் பழைய புகார்களை மிஞ்சி நிற்கின்றன. பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணைமுதல்வர் சுசில்குமார் மோடி உள்ளிட்டோர் மேல் ஏறத்தாழ 11500 கோடி ரூபாய் மோசடி புகார் வந்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இருக்கும் கருவூலங்களில் இருந்து பணம் எடுத்து செலவு செய்ததில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு! சட்டவிரோதமாக சுரங்கங்களில் இருந்து கனிம வளம் கொள்ளையடிக்கப்படுகிறது என்று கர்நாடக மாநிலம் பரபரத்துக் கிடக்கிறது. ஆளுநரும் முதல்வரும் ஆளுக்கொரு பக்கம் நின்று கொண்டு அதிரடிக் காட்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள். பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக லலித் மோடி வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்! இன்னும் இவற்றைப் போல எத்தனையோ செய்திகளை நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த ஜூன் மாத இறுதியில் கனடாவின் டொராண்டோ நகரில் நடந்த ஜி20 நாடுகளின் மாநாட்டில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. “சந்தைகளின் ஒருமைப்பாட்டை ஊழல் அச்சுறுத்துகிறது; நியாயமான போட்டி நிலவ முடியாமல் செய்கிறது; நிதி ஒதுக்கீட்டை சிதைக்கிறது; மக்களை நம்பிக்கை இழக்கச் செய்கிறது; சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்குகிறது” என்று ஊழலின் தீமைகளை அந்தத் தீர்மானம் பட்டியலிடுகிறது.

சுதந்திரமான சந்தை செயல்படுவதற்கு ஊழல் தடையாக இருக்கிறது. உண்மைதான்! சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஊழல் பெருஞ்சுமையை ஏற்றுகிறது. இதுவும் இன்னொரு உண்மை. ஊழல் ஒழிப்பில் அக்கறை உள்ளவர்கள் சிலர், பெரிய இடங்களில் நடக்கும் ஊழலைப் போக்க வேண்டும் என்கிறார்கள். மேலிடம் சுத்தமானால், கீழடுக்குகளில் தப்பு செய்யும் சபலம் வராது என்பது அவர்கள் வாதம். ஆனால் அரசாங்கங்கள் எப்போதும் கீழ்நிலையில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள், தாசில்தார்கள், அரசு ஊழியர்கள் போன்றவர்கள் வாங்கும் லஞ்சத்தையே முன்னிலைப்படுத்துகின்றன. கீழ்மட்டத்தில் நடக்கும் ஊழலை ஒழிப்பதால், அன்றாடம் காய்ச்சிகளும் பயன் பெறுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பெரிய பெரிய ‘புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்’ புரிந்து கொள்ளப்படும் உணர்வு என்ன என்றோ அவை அவர்களுடைய தோள்களில் பளுவை ஏற்றுகின்றனவா என்றோ சாதாரண மக்கள் அறிய முடிகிறதா? தொழிலதிபர்கள் நலனுக்காக முன்வைக்கப்படும் ’ஊழல் ஒழிப்பும்’ சாதாரண மக்களின் வாழ்வைத் திசை மாற்றுகின்ற ஊழலை ஒழிப்பதும் ஒரே விதமானதுதானா? மேய்க்கப்படும் ஆடுகளின் நலனும் தன்னுடைய நலனும் ஒன்றுதான் என்று ஒரு மேய்ப்பன் சொன்னால் அதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

வெள்ளாடுகளின் நலனும் வேங்கைகளின் நலனும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை!

நன்றி: ரிப்போர்ட்டர் 29.07.10

0 Comments:

Post a Comment

<< Home