இன்னும் எத்தனை காலம் தான்…….
”டூ யூ ஹாவ் எனி சேஞ்ச் ஃபார் மீ?”
அருகில் வந்த அந்த மனிதர் என்னிடம் கேட்டார். உலகின் சொர்க்க பூமி என்று பலராலும் அழைக்கப்படுகிற அமெரிக்காவில், ’எனக்குக் கொடுப்பதற்கு உங்களிடம் சில்லறை இருக்கிறதா’ என்ற இந்தக் கேள்வியை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. “அய்யா பிச்சை போடுங்கய்யா...” என்ற பராசக்தி படத்தின் வசனம் எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது. ரங்கூனில் இருந்து தமிழ்நாடு வந்து இறங்கும் சிவாஜி கணேசன் காதில் விழும் முதல் வாசகம். “தமிழ்நாட்டுல கேட்கற முதல் குரலே பிரமாதமா இருக்கே” என்று சிவாஜி அங்கதம் செய்வார். காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் படும் அவலங்களை இந்த ஒரு வசனத்தால் எடுத்துச் சொன்னார் நம்முடைய முதல்வர் கருணாநிதி!
அமெரிக்காவில் இருக்கும் ஒரு நகரத்தில் பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போதுதான் அமெரிக்க ஆப்பிரிக்கர் ஒருவர் எங்கள் காரை நெருங்கி வந்து முதலில் சொன்ன கேள்வியைக் கேட்டார். இது அமெரிக்காவில் மிகவும் அபூர்வமாக நடக்கும் சம்பவமாக இருக்கும் என்று முதலில் நினைத்தேன். கார் புறப்பட்ட அடுத்த நொடிகளில் நடந்த உரையாடலில் இருந்து அங்கு இருந்தவர்களின் வேறு பல அனுபவங்களை அறிய முடிந்தது.
”எனக்குக் கொடுப்பதற்கு உங்களிடம் பணம் இல்லை என்றால் நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவை அப்படியே என்னிடம் கொடுத்து விடுங்கள்” என்று ஒரு பெண் தன்னிடம் கேட்டதாக ஒருவர் சொன்னார். கையில் துப்பாக்கியுடன் நள்ளிரவில் கதவைத் தட்டி ஒருவர் ‘உதவி’ கேட்ட நிகழ்வுக்குப் பிறகு பயந்து போய் என்னுடைய நண்பரின் மகள் தான் இருந்த வீட்டை அடுத்த நாளே மாற்றி இருக்கிறாள். கார் நிறுத்தும் இடத்தில், கார் கண்ணாடியை உடைத்து ‘ஏர் பேக்’ மற்றும் ‘எம்.பி.3 ப்ளேயர்’ போன்ற பொருட்களை யாரோ திருடிச் சென்ற நிகழ்ச்சியும் நான் அங்கு தங்கியிருந்த நாட்களில் எங்களுக்கே நேர்ந்தது. அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் டிசி ஆகிய முக்கிய நகரங்களில் பூங்காக்களில் கையில் ஒரு பெட்டியுடன் சோர்ந்து படுத்துக் கிடந்த மனிதர்களைப் பார்த்தேன். அவர்களைப் பற்றி விசாரிக்கும்போது ‘ஹோம்லெஸ்’ – அதாவது வீடில்லாதவர்கள் – என்று பதில் கிடைத்தது. ’கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும்’ என்ற அட்டையைக் கழுத்தில் தொங்க போட்டுக் கொண்டு பிறரிடம் ‘உதவி’ கேட்கும் மனிதர்களையும் அங்கங்கே பார்க்க முடிந்தது. எந்த நாடாக இருந்தாலும் எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்களில் ஒரு பகுதியினர் வறுமையிலும் பசியிலும்தான் வாழ்கிறார்கள் போலிருக்கிறது!
உலகின் மற்ற நாடுகளை விட்டுவிட்டு நம் நாட்டுக்கு வருவோம். இந்தியாவின் எட்டு மாநிலங்களில் வறுமை கோரத் தாண்டவம் ஆடுகிறது என்று ஐ.நா. உதவி பெற்ற ‘பன்முக வறுமைக் குறியீடு’ சொல்கிறது. ஐ.நா.வளர்ச்சித் திட்டத்தின் உதவியுடன் ஆக்ஸ்ஃபோர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி என்ற அமைப்பு இந்த அறிக்கையை அளித்திருக்கிறது. இந்த அறிக்கையின் உள்ளடக்கம், ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் மனித வளர்ச்சி அறிக்கையில் இடம்பெறும்.
கோரமான வறுமை தலைவிரித்தாடுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டும் எட்டு இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பெறவில்லை என்பது நமக்கு ஆறுதலான செய்தி. கேரளம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மற்ற தென்னிந்திய மாநிலங்களில் வாழும் மக்களும் மோசமான நிலையில் இருப்பதாக அந்த அறிக்கை சொல்லவில்லை. பீகார், சத்தீஸ்கார், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களின் நிலையே மிகவும் மோசமாக இருக்கின்றன. இந்த எட்டு மாநிலங்களிலும் சேர்த்து 42 கோடியே 10 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இருபத்தாறு ஆப்பிரிக்க நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்கள் தொகையை விட இந்த எண்ணிக்கை அதிகம். 26 ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையில் உழலும் மக்களின் எண்ணிக்கை 41 கோடி பேர் என்கிறது அந்த அறிக்கை. இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ள முடிகிறது? ஆப்பிரிக்கக் கண்டத்தைவிட இந்திய நாட்டில் வறுமையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது!
இந்த வறுமையை எப்படியும் போக்கி ஆக வேண்டுமே! அதற்கு நம்முடைய ஆட்சியாளர்கள் நிச்சயம் கடந்த காலங்களிலும் நடவடிக்கை எடுத்திருப்பார்களே! பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை அடைந்து 60 வருடத்துக்கு மேலாகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நீங்கலாக, ஏறத்தாழ 50 வருடங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியே நம்மை ஆண்டிருக்கிறது. அந்த ஆட்சிகள் எப்படிப்பட்ட செயல்பாடுகளின் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்த மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தின? அல்லது அவர்களுடைய நடவடிக்கைகளினால் உரிய பலன் கிடைக்கவில்லையா? பலன்கள் கிடைத்திருந்தால், ஏன் இப்போது ஆப்பிரிக்காவை விட அதிகம்பேர் இந்தியாவில் வறுமையில் வாடுகிறார்கள்?
கடந்த 1971 –ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இந்திரா காந்தியின் முழக்கம் ‘வறுமையே வெளியேறு’ என்பதாக இருந்தது. அவர் வறுமையை வெளியேற்றுவதற்காக வங்கிகளை அரசுக்குச் சொந்தமாக்கினார். அரசாங்கத்தின் வறுமை ஒழிப்புத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு கிராமப்புறங்களில் வங்கிக் கிளைகளைத் தொடங்கினார்; கிராம வங்கிகளை ஆரம்பித்தார்; மன்னர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மான்யங்களை ஒழித்தார். 1991-ல் டாக்டர் மன்மோகன்சிங்கை நிதியமைச்சராகவும் பி.வி.நரசிம்மராவை பிரதமராகவும் கொண்ட காங்கிரஸ் ஆட்சி இந்திரா காந்திக்கு நேர் எதிரான பாதையை தேர்ந்தெடுத்தது. தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற மூன்று மந்திரங்கள் மூலம் இந்தியாவில் கிடுகிடு வளர்ச்சியை உருவாக்கி விட முடியும் என்றது. 2004-ல் சோனியா காந்தி ‘ஆம் ஆத்மி’ என்றார்; சாமான்ய மக்களின் நலனை உள்ளடக்கிய வளர்ச்சி என்றார்; 2009-ல் ‘இடதுசாரிகளின் முட்டுக்கட்டைகள் இருக்காது; நாலுகால் பாய்ச்சலில் வளர்ச்சி இருக்கும்’ என்றார் பிரதமர் மன்மோகன்சிங். 2010-ல் 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமையில் துன்பப்படுகிறார்கள் என்கிறது அறிக்கை!
இப்படிப்பட்ட நிலையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியால் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்க முடியுமா? பருவ மழை பெய்யாமல் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது அரசாங்கம் ஆடம்பரமாக செலவு செய்யக் கூடாது என்று கடந்த 2009 செப்டம்பர் மாதம் சிக்கன நடவடிக்கைகளுக்காக அவர் குரல் கொடுத்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ராகுல்காந்தி லூதியானாவுக்கு ரயிலில் போனதையும் சோனியா காந்தி தனி விமானத்தில் போகாமல் பயணிகள் விமானத்தில் சிக்கன வகுப்பில் பயணம் செய்ததையும் நாம் அவ்வளவு சீக்கிரம் நம் நினைவில் இருந்து அகற்றி விட முடியாது. இப்போதும் நம்முடைய அமைச்சர்களும் அதிகாரிகளும் பிரணாப் முகர்ஜியின் அந்த சிக்கனப் பரிந்துரைகளின்படிதான் செயல்படுகிறார்களா? அல்லது அவரே அப்போது சொன்னவற்றைத் திரும்பப் பெற்றுக் கொண்டாரா?
அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ‘ஒழுங்குக்கு’ கொண்டு வந்ததாகவே ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொள்வோம். அதன் பிறகு பிரணாப் என்ன செய்யப் போகிறார்? பிரபல தொழிலதிபர்கள் சிலரை அழைத்துக் கூட்டம் நடத்த இருக்கிறார். தொழில் நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகள் ஆடம்பரமான வாழ்க்கை வாழக் கூடாது என்று அவர்களிடம் அறிவுரை சொல்ல தீர்மானித்திருக்கிறாராம். ஏனென்றால் இந்திய மக்கள் தொகையில் 37.2 சதவீதம் அரசு தரும் தகவல்களின்படியே வறுமையில் வாடும்போது, தொழிலதிபர்கள் பகட்டாக வாழ்வதைப் போன்ற தோற்றம் இருக்கக் கூடாது என்று அவர்களிடம் உணர்த்தப் போகிறாராம். இப்படி ஒரு செய்தி சொல்கிறது. பிரணாப் முகர்ஜியின் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஏழைகளின் வாழ்க்கையில் நேரடியாக ஏதேனும் மாறுதல்கள் ஏற்படுமா என்ன?
இன்னொரு முக்கியமான அமைச்சர் தொடர்பான காட்சி இது. விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சரத்பவாரிடம் செய்தியாளர்கள், “உணவுப் பொருட்களின் விலை இவ்வளவு ஏறி இருக்கிறதே, மக்கள் ஏன் இதை எதிர்த்து தீவிரமாகப் போராட முன்வரவில்லை?” என்று கேட்கிறார்கள். அவர், “விலை அதிகமாக இருந்தாலும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றன” என்று பதில் சொல்கிறார். அதாவது உணவுப் பொருட்கள் கடைகளில் கிடைத்தால் போதும், என்ன விலை விற்றாலும் அதற்குத் தகுந்தவாறு மக்கள் தங்களை ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்வார்கள் என்று சொல்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சர்கள் கேட்டுக் கொண்டால், தொழிலதிபர்களும் சரி, வறுமையில் வாடுகிறவர்களும் சரி, அரசின் முடிவுக்குத் தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள்!
அப்புறம் என்ன? ஆரம்பிக்க வேண்டியது தானே! பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தொடங்கிய அடியை ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த வேண்டியதுதானே! உரத்தின் விலையை உர நிறுவனங்களே தீர்மானிக்கட்டும். பாதுகாப்பு, சில்லரை வணிகம், வங்கிகள் போன்ற துறைகளில் அந்நிய முதலீடுகளைப் பெருக்கட்டும். பொதுத்துறை நிறுவனங்களை பங்கு விலக்கல் என்ற பெயரில் தனியாருக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள். செய்தித் துறையில் மட்டும் ஏன் இன்னும் தயக்கம்? செய்தி என்ற பெயரில் தனக்குத் தகுந்தவாறு கருத்துக்களை இந்திய மண்ணில் உருவாக்கும் உரிமையை வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கு தங்கத் தட்டில் வைத்து மரியாதையுடன் அளியுங்கள்.. இன்னும் என்னென்னவோ திட்டங்களை எல்லாம் அடுத்த சில மாதங்களில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடும்.
ஏனென்றால், அடுத்த சில மாதங்களில் வர இருக்கும் எந்த சட்டமன்றத் தேர்தல் பற்றியும் காங்கிரஸ் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சி இழப்பதற்கு எதுவும் இல்லை. சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு மக்களிடம் இருந்து எதிர்ப்பு பலமாக இருந்தால் கூட, அரசாங்கத்தின் கொள்கைகள் மாறப் போவதில்லை; திட்டங்களை செயல்படுத்தும் வேகம் வேண்டுமானால் குறையலாம்.
”பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்; பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்!” என்ற கண்ணதாசனின் வரிகளில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பலத்த நம்பிக்கை இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அந்த உறுதி இல்லை!
-ஜென்ராம்
நன்றி: ரிப்போர்ட்டர் 22.07.10
0 Comments:
Post a Comment
<< Home