யுத்தம் இல்லாத அமைதி கேட்டேன்
ஒவ்வொரு நாளும் வரும் செய்திகளைத் தொடர்ந்து பார்க்கவோ படிக்கவோ முடியவில்லை; செய்தித் தாள்களில் படித்தாலும் சரி, தொலைக்காட்சிகளில் பார்த்தாலும் சரி, எங்கும் ரத்தக் கறைகளே படிந்திருக்கின்றன. தனியாக வீட்டில் இருந்த பெண் அல்லது முதியவர்கள் படுகொலை, தனிக்குடித்தன பிரச்னைக்காக தற்கொலை அல்லது கொலை, காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவி, பணம் அல்லது நகைகளைக் கொள்ளை அடிப்பதற்காக நடக்கும் கொலை, முன்விரோத பழி வாங்கும் படுகொலை என்று உணர்ச்சிவசப்பட்ட மனிதர்களின் செயல்கள் ஒருபுறம்; காஷ்மீரில் ராணுவத்துக்கும் இளைஞர்களுக்கும் மோதல், மாவோயிஸ்ட் தாக்குதலில் காவலர்கள் பலி அல்லது என்கவுண்டரில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை, மீன் பிடிக்கப் போன இடத்தில் அந்நியப் படையினர் செய்யும் அத்துமீறல்களால் நம்முடைய மீனவர்கள் சாவு போன்ற அரசியல் விவாதங்களை உருவாக்கும் வன்செயல்கள் மறுபுறம்; எந்த வகையான வன்முறையாக இருந்தாலும் கொல்வதும் நாமே, செத்துப்போவதும் நாமே! அதாவது காஷ்மீரி, வங்காளி, தமிழன், மலையாளி என்று எந்த இனத்தின் பெயரிலாவது அழைக்கப்பட்டாலும், இந்தியர்களே இறந்து போகிறார்கள்!
இந்த வன்முறை குறித்தெல்லாம் நமக்கு தார்மீக கோபம் அல்லது அறச் சீற்றம் வருவதில்லை. நம்முடைய அப்பாவோ அல்லது அம்மாவோ, அண்ணனோ அல்லது தம்பியோ, நண்பர்களோ அல்லது சொந்தக்காரர்களோ நியாயத்துக்கு மாறாக ஏதேனும் செய்யும்போது நாம் அவர்களைக் கண்டிப்பதில்லை; கண்டனம் செய்து அவர்களுடனான உறவைத் துண்டித்துக் கொள்வதில்லை; அவ்வளவு ஏன்? குறைந்தபட்சம் ஒரு முணுமுணுப்பைக்கூட நாம் வெளிப்படுத்துவதில்லை. மாறாக குடும்பத்தினர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நாம் அநியாயத்தின் பக்கம் நிற்கிறோம். குடும்பம் தவறு செய்தால் அதைக் கண்டிக்க நம்முடைய பாசம் தடுக்கிறது; அதைப் போலவே நாடு தவறு செய்தால் அதை எதிர்க்கவிடாமல் நம்முடைய தேசபக்தி குறுக்கே வருகிறது!
இப்படிப்பட்ட பாசம், தேசபக்தி போன்ற பொதுவான இலக்கணங்களை எல்லாம் மீறி வாழும் தனிமனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஜெஃப் நேபல் என்ற அமெரிக்கர்; வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அமெரிக்க கடற்படையில் கமாண்டராக வேலை பார்த்தவர்; உத்தமர் காந்தியின் மேல் தீராத பற்றும் பாசமும் கொண்டவர். கடந்த 1995 முதல் இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் வசித்து வருகிறார்; அங்கு காந்திய ஆசிரமம் ஒன்றில் தங்கி இருக்கிறார்; காந்தியின் உயிருக்கு நிகரான கொள்கையான அஹிம்சையை பிரசாரம் செய்வதே அவருடைய முழுநேர வேலை. காந்தியை வழிகாட்டியாக நினைக்கும் அவர் இந்தியாவில் ‘அரசியல் புகலிடம்’ கேட்கிறார். காந்தியை தேசப்பிதாவாக வரித்துக் கொண்ட நம்முடைய மத்திய அரசு அவருக்குப் புகலிடம் கொடுக்க மறுக்கிறது!
வெளிப்படையான குற்றங்கள் பற்றிய செய்திகளுக்கு நடுவில் இது போன்ற செய்தியும் சின்னதாக வருகிறது. இப்படி வரும் செய்தியை நாம் ஒருவேளை பார்க்காமலே இருந்திருக்கலாம். அப்படியே பார்த்தாலும் அந்த செய்தி பெரிய பாதிப்பு எதையும் நமக்குள் ஏற்படுத்திவிடப் போகிறதா என்ன? சிறுநீரகக் கோளாறுக்கு சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வர அனுமதியுங்கள் என்று கெஞ்சிய ஒரு தேசத்தின் குரலை நாம் காதில் வாங்கினோமா? நாம் அனுமதிக்க மறுத்த சில மாதங்களில் அந்தக் குரல் அடங்கி விட்டது. .. அதாவது நடந்து முடிந்து வருடங்கள் ஓடிவிட்டன.. நாம் மறந்து போயிருக்கலாம். சில மாதங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இன்னும் நமக்கு நினைவில் இருக்க வேண்டுமே, இருக்கிறதா? சர்க்கரை நோயாலும் பக்க வாதத்தாலும் துன்பப்படும் பார்வதியம்மாள் என்ற மூதாட்டி, சிகிச்சைக்காக நம் நாட்டுக்கு வந்தார். அவரை நகருக்குள் நுழைய விடாமல், விமானநிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பினோமே, ஞாபகம் இருக்கிறதா? மத அடிப்படைவாதிகள் மரண தண்டனை விதித்ததால், உயிர்ப்பிச்சை கேட்டு வந்த தஸ்லிமா நஸ்ரினுக்காவது தொடர்ந்து புகலிடம் கொடுத்தோமா?
”பாலசிங்கம் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்; அவரை சென்னையில் சிகிச்சை பெற அனுமதிக்க முடியாது” என்றார்கள்; அவர் இங்கு இருக்கும் தமிழர்களிடம் ‘சுதந்திர தாகத்தை’ ஊட்டி விடுவாரோ என்ற சந்தேகத்தில் நாமும் தலையாட்டி ஏற்றுக் கொண்டோம். தஸ்லிமா நஸ்ரின் எழுதியவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற போதிலும் அவருக்கு அடைக்கலம் கொடுப்பதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று ‘கருத்து சுதந்திரத்தில்’ அக்கறை கொண்ட ஜனநாயக அரசு சொல்லும் என்று எதிர்பார்த்தோம்; வாக்கு வங்கி அரசியலைக் குறிவைத்து தஸ்லிமா நஸ்ரினையும் வெளியேறச் செய்து விட்டோம். கணவனை இழந்த சோகத்திலும் குடும்பத்தோடு பெற்ற பிள்ளை ’மறைந்து’ போயிருக்கும் கவலையிலும் துவண்டு போயிருக்கும் 80 வயதுப் பெண்மணிக்கே கூட நம்முடைய உள்ளம் உருகவில்லையே, பிறகு மற்ற விஷயங்கள் பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது?
ஆனால் காந்தியை உண்மையாகவே வழிகாட்டியாக வரித்துக் கொண்ட ஜெஃப் நேபல், ‘நெட்டை மரமாக’ நின்று புலம்பவில்லை; கடந்த 2009 ஜூலை 19-ம் தேதி டெல்லி ராஜ்காட்டில் இருக்கும் காந்தியின் சமாதிக்கு முன்னால் உட்கார்ந்தார். தன்னுடைய அமெரிக்க குடியுரிமையை வேண்டாம் என்று தூக்கி எறிந்தார். அவருடைய அமெரிக்க பாஸ்போர்ட்டைக் கிழித்துப் போட்டார்; பிறப்புச் சான்றிதழ் உட்பட அமெரிக்க அரசாங்கம் கொடுத்திருந்த எல்லா ஆவணங்களையும் சுக்குநூறாக கிழித்தெறிந்தார்; எந்த ஒரு பிரச்னைக்கும் போர் தீர்வல்ல என்று நம்பும் இவரால், சீனியர் ஜார்ஜ்புஷ் அதிபராக இருந்து நடந்திய வளைகுடாப் போரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அமெரிக்காவில் அவருக்கு இருந்த சொத்துகளை எல்லாம் விற்று விட்டு இந்தியா வந்தார். 1995 முதல் சிம்லாவில் வசித்து வருகிறார்.
இவர் இப்படி செய்வதற்கு என்ன காரணம்? ஒருவர் வாழும் நாட்டின் அரசு செய்யும் தவறுகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் அல்லது ஒப்புக்கு எதிர்த்துக் கொண்டு எத்தனையோ பேர் இருக்கும் போது இவரை இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது எது? “சொந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தாண்டி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சர்வதேச கடமைகள் இருக்கின்றன. எனவே அமைதிக்கும் மனிதத்தன்மைக்கும் எதிரான குற்றங்கள் உலகில் நடக்காமல் தடுப்பதற்காக உள்நாட்டு சட்டங்களை மீற வேண்டியிருந்தால், அப்படி மீறும் கடமை தனிமனிதர்களுக்கு இருக்கிறது என்று நியூரெம்பர்க் போர்க் குற்ற தீர்ப்பாயம் 1950-ல் சொல்லி இருக்கிறது” என்று ஜெஃப் நேபல் எடுத்துச் சொல்கிறார்! இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் ஆணையை ஏற்று கொடுமைகள் செய்தோம் என்ற வாதத்தை மறுத்து போர்க் குற்றங்களை விசாரித்த தீர்ப்பாயம் சொன்ன வார்த்தைகள் இவை!
சர்வதேசக் கடமையை செயல்படுத்துகிறேன் என்று சொல்லி அரசுக்கு எதிராக வரி கொடாமை இயக்கத்தை நேபல் என்ற தனிமனிதரால் அமெரிக்காவில் நடத்த முடியுமா? அதை சட்டபூர்வமான ஒரு வாதமாக அமெரிக்க அரசு ஏற்றுக் கொள்ளுமா? இருந்தும் அவர் கவலைப்படவில்லை. சொந்த நாட்டு மக்களானாலும் சரி, எந்த நாட்டு மக்களானாலும் சரி, அவர்களைக் கொல்லும் ஆயுதங்களை வாங்குவதற்கு பயன்படும் நிதிக்கான பணத்தை, ஓர் அரசுக்கு வரியாக நான் செலுத்த மாட்டேன் என்று அவர் பிரகடனம் செய்கிறார்! ‘அமெரிக்காவில் வரி கொடுக்காமல் போராடுவதை விட அந்த நாட்டை விட்டே வெளியேறிவிடலாம் என்று நினைத்து இந்தியா வந்து விட்டேன்’ என்று அவர் சொல்கிறார்.
அமெரிக்கா அவருக்குக் கொடுத்த பாஸ்போர்ட்டை அவர் எப்படிப் பார்க்கிறார்? அவர் உலகின் எந்தப் பகுதிக்குப் போகிறார் என்பதைக் கண்காணிப்பதற்கும் அவருடைய நடமாடும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்குமான கருவியே பாஸ்போர்ட் என்று சொல்கிறார்! அவருடைய பாஸ்போர்ட்டையும் மற்ற அமெரிக்க ஆவணங்களையும் அழிக்கும் வேலையை காந்தி நினைவிடத்தில் வைத்து அவர் ஏன் செய்தார்? “தார்மீக அடிப்படை எதுவும் இல்லாத, ஊழல் மற்றும் வன்முறை நிறைந்த அரசாங்கத்தை எதிர்த்து, ஆயுதம் இல்லாமல் அறப் போராட்டம் நடத்த முடியும் என்பதற்கான அடையாளம் காந்தி என்பதால் இந்த இடத்தை நான் தேர்வு செய்தேன்” என்பது அவருடைய பதில்!
போன வருடம் பாஸ்போர்ட்டை அவர் கிழித்துப் போட்ட பிறகு என்ன நடந்தது? பாஸ்போர்ட்டைக் கிழிக்கவில்லை, அதன் நகலைத்தான் கிழித்தேன் என்றாரா? அல்லது கேமிரா முன்னால் வீர வசனம் பேசி விட்டு, ரகசியமாக ’டூப்ளிகேட் பாஸ்போர்ட்’டுக்கு விண்ணப்பித்தாரா? அரசியல் ஆதாயம் தேடும் தலைவர்கள் அப்படி செய்வார்கள்; ஆனால் ஜெஃப் அப்படி எதுவும் செய்யவில்லை. டெல்லியில் இருக்கும் ஒரு காவல்நிலையத்துக்கு நேராக போய் தன்னிடம் எந்த ஆவணமும் இல்லை என்றும் காவல்துறை தன்னைக் கைது செய்யலாம் என்றும் சொன்னார். அவர் யார், அவர் செய்தது என்ன, அமெரிக்க குடியுரிமையை மறுத்து அன்று அவர் வெளியிட்ட அறிக்கை பற்றியெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட காவல்துறை அதிகாரி அவரை கைது செய்யவில்லை. “உங்களைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு எந்த சிக்கலும் வராது. என்ன பிரச்னை என்றாலும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்,” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் எழுத்துபூர்வமாக உறுதியளிக்க அந்த அதிகாரி மறுத்துவிட்டார்!
அதனால் அரசியல் புகலிடம் கோரி ஜெஃப் நேபல் அரசிடம் விண்ணப்பம் செய்தார். அமெரிக்க குடியுரிமையை திருப்பிக் கொடுத்த ஒருவருக்கு இந்தியாவில் புகலிடம் கொடுத்தால் அமெரிக்கா என்ன நினைக்கும்? அது நினைக்கிறதோ இல்லையோ, அது ஏதாவது நினைக்கும் என்ற எண்ணம் போதாதா, நாம் முடிவு எடுக்காமல் இருப்பதற்கு? புகலிடம் கோரிய அவருடைய மனுவுக்கு பதில் எதுவும் கொடுக்காமல் அரசு மௌனமாக இருந்தது. அரசின் மௌனத்தை எப்படிக் கலைப்பது? நீதிமன்றத்தில் நேபல் முறையிட்டார். மௌனம் கலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு வந்தது. ”நேபலுக்கு அரசியல் புகலிடம் அளிக்க இயலாது” என்று அரசு தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், ”இந்தியக் குடியுரிமை கோரி அவர் முறையாக விண்ணப்பித்தால், அரசு அதைப் பரிசீலிக்கும்” என்று அரசு சொன்னது. கடைசியில் இப்போது குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு இரு வார அவகாசத்தை நீதிமன்றம் அவருக்குக் கொடுத்திருக்கிறது.
இருவாரத்துக்குள் அவர் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு அந்த மனுவைப் பரிசீலித்து அவருக்குக் குடியுரிமை வழங்கலாம். ஆனால், அவருடைய வாழ்க்கை அபூர்வமான ஓர் உண்மையை நமக்கு சுட்டிக் காட்டுகிறது; சொந்தப் பிரச்னைகளுக்காக மற்றவர்களைத் தூண்டி விட்டு வன்செயல்கள் நிகழ்த்தும் மனிதர்கள் மத்தியில், பொதுப் பிரச்னைக்காக தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் நல்ல மனிதர்களும் நமக்கு நடுவில் இருக்கிறார்கள்! இந்த உண்மை நமக்கு நம்பிக்கை அளிக்கிறது!
நன்றி: ரிப்போர்ட்டர் 25.07.10
0 Comments:
Post a Comment
<< Home