Saturday, July 17, 2010

அந்த சிவகாமி மகனிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

உங்கள் குடும்பத்துக்கு முதலிடம் கொடுங்கள்,” என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொல்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; நடிகர் ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களிடம் பேசும்போது இந்த வார்த்தைகளை எப்போதும் சொல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஒரு நாட்டின் சுதந்திரத்துக்காக அல்லது ஒரு தேசத்தின் விடுதலைக்காக அல்லது சமூக மாற்றத்துக்காக போராட வருபவர்கள் இந்த அறிவுரையை ஏற்க முடியுமா என்பது விவாதத்துக்குரிய ஒரு கேள்வி. இருந்தும் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் குடும்பத்தின் முக்கியத்துவம் போதிக்கப்பட்டே வருகிறது. ஏன்? நிலவும் சமூக அமைப்பை குடும்பங்களே காத்து நிற்கின்றன என்பது காரணமாக இருக்கலாம்!

”உங்கள் குடும்பத்தை முதலிடத்தில் வையுங்கள்; ‘ஸ்டாக் புரோக்கர், கணக்கு எழுதுபவர், உடன் விளையாடும் நண்பர் சூழ்ந்திருக்க அவர் காலமானார்’ என்று எந்த துக்க விளம்பரத்தையும் நான் இதுவரை பார்த்ததில்லை” என்ற வாசகத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இந்த சொற்களை உதிர்த்தவருக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரைப் பற்றி தெரிந்திருக்காது. ‘போகும்போது விளக்கை அணைத்துவிட்டுப் போங்கள்’ என்று உதவியாளரிடம் சொல்லிவிட்டு மூடிய அறைக்குள் உயிர்விட்டவர் காமராஜர். அந்த கடைசி நிமிடங்களில் அவரைச் சுற்றி குடும்பத்தினர் யாரும் இல்லை. அவரைப் பற்றி நம்முடைய புதிய தலைமுறைக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்!

எதற்கெடுத்தாலும் சந்தேகப்படக் கூடாது என்றும் நம்பிக்கை இல்லாமல் பேசக் கூடாது என்றும் உங்களில் சிலர் முணுமுணுக்கிறீர்களா? நீங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலுவின் அறிக்கையைப் படித்து விட்டீர்கள் போலிருக்கிறது. “பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை மக்கள் திருநாளாக கொண்டாட வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்” என்று அந்த அறிக்கையில் அவர் கோரியிருந்தார். இளைய தலைமுறைக்கு புரியும் வகையில் காமராஜரின் சிறப்புகளை பட்டியலிட்டிருந்தார்!

வருகிற ஜூலை 15-ம் நாள், காமராஜர் பிறந்து 107 ஆண்டுகள் நிறைவடைகின்றன. காங்கிரஸ் கட்சி இதை 108-வது பிறந்த நாள் என்று சொல்கிறது. காமராஜர் 1903-ம் வருடம் ஜூலை 15-ம் தேதி பிறந்தார். 1904-ம் வருடத்து ஜூலை 15-ஐ அவருடைய எத்தனையாவது பிறந்த நாளாக அவருடைய பெற்றோர் கொண்டாடி இருப்பார்கள்? முதலாவது பிறந்த நாள் என்றால், இந்த ஆண்டு காமராஜரின் 107-வது பிறந்த நாள் ஆகிறது. இரண்டாவது பிறந்த நாள் என்றால் தான் தங்கபாலு சொல்லும் எண் சரியாகிறது. இந்தக் கணக்கீடுகளில் ஆங்கில மரபு, இந்திய மரபு அல்லது தமிழ் மரபு என்று பெரிய சங்கதிகள் எதுவும் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. தலைவருடைய நினைவைப் போற்றுவதுதான் முக்கியம் என்பதால் இந்த எண் சந்தேகத்தை இத்தோடு விட்டு விடுவோம்.

சரி, ஒரு தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன? தமிழக அரசு ஜூலை 15-ஐ கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுகிறது. அந்தக் கொண்டாட்டங்களுக்காக ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் கருணாநிதி ஆணை இட்டிருக்கிறார். அதாவது, தொடக்கப்பள்ளிகளுக்கும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் 94 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய், உயர்நிலைப் பள்ளிகளுக்கும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஏறத்தாழ 25 லட்சம் ரூபாய் என்று செலவு செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் கருணாநிதியின் இந்த உத்தரவைப் புரிந்து கொள்ள முடிகிறது. ‘சரஸ்வதி’ வரத் தயங்கிய பகுதிகளில் எல்லாம் பள்ளிக் கூடங்களையும், கட்டணமில்லாக் கல்வியையும் இலவச மதிய உணவையும் வழங்கிய ஒரு முன்னாள் முதலமைச்சரை இந்நாள் அரசாங்கம் நினைவு கூர்கிறது. இதற்கு மேல் அரசிடம் இருந்து பெரிதாக வேறெதுவும் எதிர்பார்க்க முடியாது!

ஆனால், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நிறைய எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தில் காமராஜரின் அரசியலை கையில் எடுத்திருப்பதாக அந்தக் கட்சி பெருமையுடன் சொல்கிறது. காமராஜரின் ஆட்சி அமைப்போம் என்றும் அவ்வப்போது அதன் தலைவர்கள் சொல்கிறார்கள். இந்தப் பின்னணியில் காங்கிரஸ் உண்மையிலேயே காமராஜர் நினைவைப் போற்றுகிறது என்றால் வெறும் கொண்டாட்டங்களுடன் நிறுத்திக் கொள்ள முடியுமா? காமராஜரின் பிறந்தநாளை மக்கள் ‘திருநாளாக’ கொண்டாடினால், அது மட்டும் போதுமா? தமிழ்நாட்டில் இருக்கும் கட்சித் தலைவர்களையும் எம்.எல்.ஏ.க்களையும் எம்.பி.க்களையும் பார்த்தால், காமராஜரின் உண்மைத் தொண்டர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள் என்று மக்கள் நினைக்க வேண்டாமா? பொதுவாழ்வில் காமராஜரும் கக்கனும் கடைப்பிடித்த ஒரு வாழ்க்கை முறையை தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர்கள் இன்று வாழ்ந்து காட்ட வேண்டாமா? இப்படி எத்தனையோ கேள்விகள் அடுக்கடுக்காய் மனதில் எழுகின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் அந்த ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று தலைவர்கள் அழைப்பதாலும் இப்படிப்பட்ட கேள்விகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

வேறு எத்தனையோ தலைவர்களை காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு கொடுத்திருந்தாலும் காமராஜரை மட்டுமே தமிழக மக்கள் மனதில் வைத்துப் போற்றுகிறார்கள். தேர்தல் நேரங்களில் அவருடைய பெயரைச் சொல்ல வேண்டிய கட்டாயம் எல்லா தலைவர்களுக்கும் வந்து விடுகிறது. அவருடைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு ஏராளமான நன்மைகளைப் பெற்றது என்பது உண்மைதான். சாத்தனூர், அமராவதி, வைகை, மணிமுத்தாறு உட்பட பல அணைகள் கட்டப்பட்டன. இவற்றின் மூலம் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது. தொழில் துறையிலும் குறிப்பிடத் தகுந்த அளவு தமிழ்நாடு முன்னேறியது. கல்வித் துறையில் அவர் செய்த மாற்றங்களே அடுத்தடுத்த வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. இவையெல்லாம் அவருடைய நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டுகள்.

ஆனால் சிறந்த நிர்வாகத்துக்காக மட்டுமா அவர் போற்றப்பட்டார்? ஒருவேளை தமிழ்நாடு காங்கிரஸ் அப்படி நம்புகிறதோ என்னவோ? அதனால்தான் புதிதாக கட்சி உறுப்பினர்களைச் சேர்க்கும் விழாவில் மாநிலத் தலைவர் தங்கபாலு, ஆட்சிக்கு வருவதைப் பற்றி பேசினார் போலிருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் தானே சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க முடியும்! “திமுக, அதிமுக வுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது. அதை முதலிடத்துக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம். தமிழகத்தில் நீண்டகாலம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருக்கிறது. மத்தியிலும் பல ஆண்டுகள் நிலையான ஆட்சியை அளித்து வருகிறது. எனவே தமிழகத்தில் ஆட்சி நடத்துவதற்கான எல்லா தகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது” என்று அப்போது சொல்லி இருக்கிறார். ஆட்சிக்கு வருவதற்கான தகுதிகளாக அவர் எதைக் கருதுகிறார், பாருங்கள்!

தங்கபாலுவின் அறிக்கையில், “தான் ஆற்றிய தியாகத்தால் பெற்ற உயர்ந்த பதவிகளில் சுகம் காணாமல், ஏழைகள் உயர வழி காணவும், தமிழகம் வளர வகைகள் தேடவும், பாரதம் மிளிர பணிகள் செய்யவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்” என்று காமராஜர் போற்றப்படுகிறார். இதுவரை நேர்மறையாகவே – அதாவது ’பாசிட்டிவாக’வே – பாராட்டி வந்த அறிக்கை வாசகங்கள் திடீரென்று ஏன் பாதை மாறுகின்றன? ‘தியாகத்தால் பெற்ற உயர்ந்த பதவிகளில் சுகம் காணாமல்’ என்ற எதிர்மறைச் சொற்கள் ஏன் இடம் பிடித்திருக்கின்றன? தியாகத்தால் பெற்ற உயர்ந்த பதவிகளில் யார் சுகம் காண்கிறார்கள்? அவர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களா அல்லது வேறு கட்சியில் இருக்கிறவர்களா? இயக்குநர் வசந்த் இயக்கிய ஒரு படத்தில் போகிற போக்கில் ஒரு காட்சி வரும். வீட்டுக்கு வந்த அத்தைக்கு நாயகி காபி போட்டுக் கொடுப்பாள். “நீ போட்டிருக்கற காபி பிரமாதம்; அவ காபி போட்டா இப்படி நல்லா இருக்காது;” என்று அத்தை நாயகியை பாராட்டுவார். அப்போது நாயகன், “அம்மா! ஒருவரைக் குறை சொல்லாம, இன்னொருத்தரை பாராட்டத் தெரியாதா?” என்று கேட்பார். தங்கபாலு அறிக்கையின் எதிர்மறை வாசகத்தைப் படிக்கும்போது இயக்குநர் வசந்தின் இந்த வசனமே நினைவுக்கு வருகிறது.

காமராஜர் ஆட்சியிலும் நிர்வாகம் குறித்த விமர்சனங்கள் இருந்தன. கொள்கைகள் பற்றிய கண்டனங்கள் இருந்தன. அன்று விமர்சனம் செய்தவர்களும் கண்டனக் குரல் எழுப்பியவர்களும் இன்று அவரைப் பாராட்டுகிறார்கள். ஏன்? அவர் லட்சியவாதம் பேசாத லட்சியவாதி. எளிமையும் நேர்மையும், அவருடன் ரத்தமும் சதையுமாகக் கலந்திருந்தன. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஒன்பது வருடங்கள் இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக பதவி வகித்திருக்கிறார். லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி என்ற இரண்டு பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட காரணமாக இருந்திருக்கிறார். ஆனால், அவர் இறக்கும்போது அவரிடம் இருந்த சொத்து எவ்வளவு? இன்று ஏதாவது ஒரு மாநகராட்சியில் வார்டு கவுன்சிலராக இருக்கும் காங்கிரஸ் உறுப்பினரின் சொத்து மதிப்பு என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடினாலே, காமராஜரிடம் இருந்து காங்கிரஸ் ஏதேனும் கற்றுக் கொண்டிருக்கிறதா என்ற அடுத்த கேள்விக்கு பதில் கிடைக்கும்.

காங்கிரஸ் கட்சி காமராஜரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதிலோ, ஆட்சிக்கு வர நினைப்பதிலோ எந்தத் தவறும் இல்லை. காமராஜர் தமிழக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர் என்ற போதிலும், காங்கிரஸ் கட்சிக்கு அவரிடம் சிறிது கூடுதல் உரிமை இருக்கிறது. அதனாலேயே அந்தக் கட்சித் தலைவர்கள் வேறு யாரை விடவும் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பொதுவாழ்வின் முன்னுதாரணங்களாக காங்கிரஸ் தலைவர்கள் இருந்து கொண்டு, ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுங்கள் என்று மக்களை அணுகலாம்; அப்போது மக்கள் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று சொல்லக் கூடும்!

நன்றி : ரிப்போர்ட்டர் 18.07.10

0 Comments:

Post a Comment

<< Home