Monday, July 12, 2010

கல்யாணப் பரிசு!


எல்லா திருமணங்களும் மகிழ்ச்சியானவையே; அதற்குப் பிறகான வாழ்க்கை தான் அனைத்துவிதமான சிக்கல்களையும் தருகிறதுஎன்பது பரவலான நம்பிக்கை. கல்யாண மேடைகளிலேயே தம்பதியிடம் இந்தக் கருத்தை வேறு வார்த்தைகளில் ஜாலியான அறிவுரையாக சிலர் சொல்வதுண்டு. அப்படி வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னாலேயே சிலருக்கு கல்யாணப் பரிசாக மரணத்தைக் கொடுக்கும் செய்திகள் சமீபகாலமாக வடமாநிலங்களில் இருந்து அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. தன்னுடைய மார்பிலே பால் குடித்து வளர்ந்த மகளை அம்மா கொல்கிறார்; தோளில் தூக்கி வளர்த்த பெண்ணையும் அவளுடைய கணவனையும் தீர்த்துக் கட்டுகிறார் அப்பா; தங்கையின் வீட்டுக்குள் புகுந்து அவளுடைய குடும்பத்தை அண்ணன் கொல்கிறார். தாய்மாமன்கள் அக்காவின் மரியாதையைக் காக்க மடியில் தூக்கி சீராட்டிய மருமகளை அழிக்கிறார்கள். இப்படி செய்திகளாக நம்மை வந்து சேரும் எத்தனையோ கொடூரமான சம்பவங்களில் பலியானவர்கள் செய்த பாவம் என்ன? தங்களுடைய விருப்பப்படி தங்களுடைய வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டதுதான்!

அது பெரிய குற்றமா? பெற்றோரின் விருப்பத்துக்கு விரோதமாக தன்னுடைய ஜோடியை ஒருவர் தேடிக் கொண்டால், பெற்றோரின் குடும்ப கவுரவம் பறிபோய் விடுகிறது. இப்படிப் பறிபோன கவுரவத்தை எப்படி மீட்பது? பெற்ற குழந்தைகளைக் கொன்று அவர்களுடைய ரத்தத்தில் கை நனைப்பதன் மூலமாகவா? அல்லது அவர்களை எரித்து கிடைக்கும் சாம்பலைப் பூசிக் கொள்வதன் வழியாகவா? ஆம், இதைப் போன்ற செயல்களின் மூலம் இழந்த மரியாதை மீண்டும் கிடைப்பதாக சிலர் நம்புகிறார்கள். அதற்காகவே அவர்கள் கொலைகள் செய்கிறார்கள். குடும்பத்தின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தக் கொலைகளை செய்வதால், அவர்கள் பெருமிதமும் கொள்கிறார்கள்!

அப்படி இதுவரை இந்த ஆண்டு எத்தனை குடும்பங்களின் கவுரவம் காப்பாற்றப் பட்டிருக்கிறது? இப்படிப்பட்ட கவுரவக் கொலைகள் இந்தியாவில் ஒரு வருடத்துக்கு ஓராயிரம் நடக்கிறதாம்! அண்மையில் லண்டனில் நடந்த ஒரு கருத்தரங்கில் சண்டிகாரைச் சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு இந்த விபரத்தை சொல்லி இருக்கிறார்கள். தேசிய மகளிர் ஆணையத்துக்காக நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு மேலும் சில புள்ளி விபரங்களைத் தருகிறது. கடந்த ஓராண்டில் பதிவு செய்யப்பட்ட கவுரவ குற்றங்களில்’ 72 சதவீதம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் மீது ஏவப்பட்டவை. ஒரேகோத்திரத்துக்குள்திருமணம் செய்து கொண்டதற்காக தாக்கப்பட்டவர்கள் 3 சதவீதம். பெற்றோரின் சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்து கொண்டதற்காக 15 விழுக்காட்டினரும், வேற்று மதத்தைச் சேர்ந்தவரை மணம் செய்ததற்காக ஒரு சதவீதத்தினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த விபரங்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பானவை மட்டுமே.. அந்தந்த ஊர் பஞ்சாயத்துக்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் எத்தனையோ குடும்பங்கள் ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டிருக்கலாம்; காதலித்தவர்கள் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மீது ஊர்வலம் விட்டிருக்கலாம்; ஊருக்குள் ஒட்டுத் துணி இல்லாமல் நிர்வாணமாக நடந்து செல்லும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம். ஊருக்குப் பொதுவான மைதானத்தில் வைத்து குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடம் வல்லுறவு கொண்டிருக்கலாம். வலுக்கட்டாயமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளச் செய்திருக்கலாம்; இன்னும் எத்தனையோ தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவை பெரும்பாலும் எங்கும் புகார்களாக பதிவு செய்யப்பட்டிருக்காது. பாதிக்கப்பட்டவர்கள் அதே ஊரில் தொடர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதையும் அவர்கள் புகார் கொடுத்தால் அவை பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு தூரம் கொடூரமாக நடந்து கொள்ளுமாறு அந்த மக்களை எது தூண்டுகிறது? பல நூறு வருடங்களாக - தலைமுறை தலைமுறையாக -அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நம்பிக்கை தான் அதற்குக் காரணமாக இருக்க முடியும். ‘ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண்களாலேயே அந்தக் குடும்பத்தின் கவுரவம் காப்பாற்றப்படுகிறது’ என்று அவர்கள் நம்புகிறார்கள். தனக்குக் கணவனாக யார் வர வேண்டும் என்ற சிந்தனையே ஒரு பெண்ணுக்கு வரக் கூடாது என்று நினைக்கிறார்கள். அந்த ஊரில் நிலவும் சமூக நம்பிக்கைகளுக்கு உட்பட்டு ஒரு பெண்ணின் விருப்பம் இருந்தால் கூட அவர்கள் நிறைவேற்றி வைக்கமாட்டார்கள். ஏனென்றால் மக்களிடம் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் அப்படி இருக்கின்றன!

“தன்னுடன் படுக்கப் போகும் ஆண்களை விபச்சாரிகள் தான் தேர்வு செய்வார்கள்” என்பது மகேந்திரசிங் திகாய்த் என்ற விவசாயிகள் சங்கத் தலைவருடைய வார்த்தைகள். அதாவது யாருடன் தன்னுடைய வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பெண் தீர்மானித்தால், அவள் ஒரு பாலியல் தொழிலாளி! இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்? குடும்பப் பெண்கள் தங்களுடைய இணையைத் தாங்களே தேடிக் கொள்ள மாட்டார்கள்! இப்படி ஒரு பெண்ணுக்கு தன்னுடைய கணவனைத் தேர்வு செய்யும் உரிமையே கிடையாது என்று சொன்ன பிறகு அவளுக்கு அங்கு என்ன வாழ்க்கை மிச்சம் இருக்கிறது? இப்படிப்பட்ட இருண்ட சூழ்நிலையில் இருந்து வெளியேற நினைப்பவர்களே அநியாயமாக பலியாகிறார்கள்.

வட்டார அளவில் செயல்படும் பஞ்சாயத்துகளின் பெரிய கூட்டம் வருகிற ஜூலை 17-ம் தேதி நடக்க இருக்கிறது. அரசாங்கத்திடம் அந்தக் கூட்டம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறது. ஒரே ‘கோத்திரத்துக்குள்’ நடக்கும் திருமணம் தடைசெய்யப்பட வேண்டும். ஆணின் திருமண வயதை 17 ஆகவும் பெண்ணின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்க வேண்டும். அதாவது ஆணோ, பெண்ணோ வேலைக்குப் போய் ‘சுதந்திரமாக’ இருந்தால்தானே குடும்ப கவுரவத்துக்கு சிக்கல் வருகிறது? மீண்டும் ’பால்ய விவாக’ காலத்துக்கு போய்விட்டால், பெற்றோர் பார்த்து குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி ஏதோ ஒரு திருமணத்தை செய்து வைத்து விடலாம்!

இந்தக் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று அரசாங்கம் சொல்கிறது. இருந்தும் வன்முறையைத் தூண்டும் வட்டாரப் பஞ்சாயத்து தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ‘வாக்கு வங்கி’ அரசியல் இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. ஊடகங்களிலும் இது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கவுரவக் கொலைகளை தடுத்து நிறுத்தும் வகையில் கடுமையான சட்டம் ஒன்றை மத்திய அரசு மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வர வேண்டும் என்று அரசிடம் தேசிய மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்திருக்கிறது. சிறப்பு திருமணச் சட்டத்திலும் சில திருத்தங்களை சமூக ஆர்வலர்கள் கோருகிறார்கள். இந்தக் கோரிக்கைகளை ஏற்பதன் மூலம் அரசாங்கம் தன்னுடைய கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்!

நன்றி: ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home