Friday, February 12, 2010

வரம் கிடைத்தும் தவற விடுகிறோம்!

சதீஷ் ஷெட்டி என்ற அந்த இளைஞருக்கு வயது 39. காலை ஏழு மணிக்கு ’வாக்கிங்’ சென்று கொண்டிருந்த போது அல்லது நடைப்பயிற்சிக்காக நடந்து கொண்டிருக்கும்போது, வாள்கள் உட்பட கூர்மையான ஆயுதங்களால் அவர் வெட்டிக் கொல்லப்பட்டார். வாய்க்கால் வரப்பு தகராறோ, வழக்கமாக கொலைச் செய்திகளில் பரபரப்பு கூட்டும் ‘கள்ளக்காதல்’ பிரச்னையோ இந்தக் கொலைக்கு காரணம் இல்லை. மது அருந்தும்போது ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறி இறுதியில் அவர் கொலை செய்யப்படவும் இல்லை. இந்திய ஜனநாயகம் அனுமதிக்கும் சட்டத்திற்கு உட்பட்டு அரசிடம் சில மனுக்களைப் போட்டு உண்மையான பதில்களையும் பெறுவதற்கு சதீஷ் தொடர்ந்து போராடி வந்தார். இதுவே அவருக்கு எதிரிகளை உருவாக்கியது. மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே பல நில மோசடி ஊழல்கள் தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்டுப் பெற்றதே அவர் செய்த ‘மன்னிக்க முடியாத குற்றம்’. இந்தக் கொலைவாள்களும் கூர்மையான ஆயுதங்களும் சதீஷ் ஷெட்டியை குத்திக் கிழித்து கொன்றது என்று அவருடைய எதிரிகள் மகிழலாம். ஆனால் சிதைந்தது சதீஷ் ஷெட்டியின் உடல் அல்ல, இந்திய ஜனநாயகமே என்று கருதும் அவருடைய குடும்பத்தினர் சி.பி.ஐ விசாரணை கோருகிறார்கள். ”எதிரிகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன; எனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குங்கள்” என்று சதீஷ் கோரியிருந்தார். அந்தக் கோரிக்கையைப் பெற்ற காவல்துறை அதிகாரி பாதுகாக்கத் தவறியது சதீஷ் ஷெட்டியின் உயிரை மட்டுமல்ல, ஜனநாயக அமைப்பின் அடித்தளத்தையே என்ற குற்றச்சாட்டுக்கு இப்போது ஆளாகி இருக்கிறார்!

ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கும் முறைகேடுகளைத் தட்டிக் கேட்பவர்களுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் ‘மரண தண்டனை’யைத்தான் வழங்குகிறார்கள் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள் என்று இங்கு குறிப்பிடுவது ஆளும் கட்சியினர் என்ற பொருளில் அல்ல; அவர்களையும் உள்ளடக்கிய வலிமையானவர்கள் என்ற அர்த்தத்தில்தான். அவர்களோ அல்லது வீசப்படும் எலும்புத் துண்டுகளுக்காக அவர்களுடைய எடுபிடிகளோ வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இந்த வலிமை அவர்களுக்கு எப்படி வருகிறது? அதிகாரம் நிறைந்த பதவி, செல்வச் செழிப்பு, சாதிய அடுக்குகளில் மேல்நிலை உள்ளிட்ட பல காரணிகள் அவர்களை வலியவர்களாக்குகின்றன. இவற்றில் ஒன்று அல்லது இரண்டின் துணையுடன் சட்டத்தை வளைக்கும் வலிமையோ அல்லது எந்தக் குற்றம் செய்தாலும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையோ அவர்களுக்கு வந்து விடுகிறது. அப்படி இல்லையென்றாலும் கூட, எதிர்தரப்பில் போராடுகிறவன் நம்மைவிட வறியவன், வலிமை குறைந்தவன் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இல்லாத வலிமையை கொடுத்து விடுகிறது.

இந்த உண்மைநிலை எல்லோருக்கும் தெரிந்ததுதான்! அப்படி இருந்தும் சில மனிதர்கள் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் எதையும் எதிர்கொள்ளத் தயாராக போராட்டப் பாதையில் இறங்குகிறார்கள். அரசியல் காரணங்களைத் தெரிந்து கொண்டு - நிலவும் சமூக நிலையை மாற்ற வேண்டும் என்ற உந்துதலில் - களத்தில் இறங்கும் போராளிகளை நாம் இங்கு குறிப்பிடவில்லை. ‘சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது; சிலரேனும் மாளாமல் பகை வெல்ல முடியாது’ என்று அவர்கள் ‘எதிரி’களைக் கொல்வதற்கும் அந்த முயற்சியில் உயிரை விடுவதற்கும் தயாராகவே களத்திற்கு வருகிறார்கள். எனவே அவர்களைப் பற்றி இங்கு பேசவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் அளிக்கும் உரிமைகளை பயன்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டு அஹிம்சை வழியில் செயல்படும் சிலரே இங்கு நம்முடைய கவனத்தை ஈர்க்கிறார்கள். இவர்கள் சட்டவிரோதமாக ஒரு செயலும் செய்வதில்லை. உண்மையில் சட்டங்களை மதித்து நடப்பதோடு, மற்றவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களை – அல்லது அவர்களைப் போன்ற நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த ‘சேவை’ மனப்பான்மையில் பொது வாழ்வுக்குள் நுழையும் ஒரு மனிதனுக்கு சதீஷ் ஷெட்டியின் படுகொலை எந்த விதமான உணர்வுகளை ஏற்படுத்தும்? இருந்த போதிலும் அவர்களை விடாத போராட்டங்களில் துணிந்து பங்கேற்கத் தூண்டுவது எது?

இந்திய ஜனநாயகத்தில் ஒருபுறம் சதீஷ் ஷெட்டி போன்றவர்கள் கொல்லப்பட்டாலும் இன்னொரு புறம் ஊக்கம் அளிக்கும் நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உச்சநீதிமன்ற நீதிபதிகளுடைய சொத்து விபரங்களும் மக்களுக்கு அறியத் தரப்பட வேண்டும் என்றும் ஜனநாயகத்துக்கு அடிப்படையே வெளிப்படையான செயல்பாடுதான் என்றும் கடந்த 2010 ஜனவரி 12-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூவர் பெஞ்ச் தீர்ப்பளித்தது. ”இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 55 ஆண்டுகள் கழிந்த நிலையில், 2005, மே 12/13 தேதிகளில், இந்திய நாடாளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஜனநாயகத்தில் சந்தேகத்துக்கே இடமில்லாமல் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு” என்று அந்த பெஞ்ச் குறிப்பிட்டிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14 (சமத்துவ உரிமை), 19 (1) (அ) (பேச்சு சுதந்திரம்) மற்றும் 21 (வாழ்வுரிமை) ஆகிய அடிப்படை உரிமைகளின் பகுதியாகவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருக்கிறது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை படிக்கும் அனைவருக்கும் ஜனநாயகத்தின் மீது நிச்சயமாக ஆர்வம் அதிகரிக்கும். மற்ற துறைகளைப் போலவே நீதித் துறையும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் மற்ற துறைகளுக்கு முன்மாதிரியாக நீதித் துறை இருக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கருதுவதாக இந்தத் தீர்ப்பில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

ஏற்கனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப் பெரிய சாதனையாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. சாதாரண மனிதர்களுக்கு அந்த சட்டம் வலிமையை அளிக்கிறது என்பது உண்மைதான். அரசாங்கத்துக்குள் என்ன நடக்கிறது என்பதை சாமான்யன் அறிந்து கொள்வது அவனுடைய அடிப்படை உரிமை என்று சட்டத்தை இயற்றியவர்களும் நீதிமன்றங்களும் சொல்லும்போது நமக்குள் கிளர்ச்சி ஏற்படுகிறது. அரசு அதிகாரிகள் மக்களுடைய வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள் என்றும் அதனால் அவர்களுடைய சொத்துக்களைப் பற்றிய விபரங்களை மக்கள் அறியத் தர வேண்டும் என்றும் மத்திய அரசிடம் இருந்து ஆணைகள் பிறப்பிக்கப்படும்போது, சிலருடைய சொத்து விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நமக்குள் பீறிடுகிறது. இந்த ஆர்வம் அவர்களுடைய ‘அந்தரங்க விபரங்களை’ அறியும் ஆர்வம் அல்ல. அவர்களுடைய சொத்து விபரங்கள் தனிப்பட்ட விபரங்கள் அல்ல என்றும் அவை குறித்து அறிந்து கொள்வது அவர்களுடைய அந்தரங்கத்தில் தலையிடுவதாக ஆகாது என்றும் மத்திய அரசின் தகவல் ஆணையர்கள்தான் சொல்கிறார்கள். இந்த சொத்து விபரங்கள் வெளிப்படையாக இருப்பது ஊழல்களைக் குறைக்கும் என்று அரசு நம்புகிறது. ‘பினாமி’கள் பற்றி எதுவும் உங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் முணுமுணுக்கலாம். அதற்கும் அரசிடம் இருந்து உற்சாகமான பதில் வருகிறது. அதாவது அனைவருடைய வருமான வரி அறிக்கைகளும் மக்கள் அறியக் கேட்டால் தரப்பட வேண்டிய ஆவணமே என்று மத்திய தகவல் ஆணையர் அறிவிக்கிறார்.

இப்படியெல்லாம் நீதிமன்றங்களும் உயர் அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அருமை பெருமைகளைப் பேசும்போது, அதன் அடிப்படையில் சில தகவல்களைப் பெறும் ஆர்வம் நம்மில் சிலருக்கு வருகிறது. இதுவரை எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி முயற்சிகளில் அந்த சிலர் இறங்கும்போது என்ன நடக்கிறது? அதே அதிகாரிகளும் தலைவர்களும் ஏன் முட்டுக்கட்டை போடுகிறார்கள்? சட்டத்தைப் பாதுகாப்போம் என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்வது, சட்டம் நடைமுறைக்கு வராமல் ‘பேப்பரிலேயே’ பாதுகாப்போம் என்ற பொருளிலா என்ற ஐயம் பல சமயங்களில் ஏற்பட்டு விடுகிறது. அரசியல் ஆதாயத்துக்காக சட்டத்தின் சிறப்புகளை பிரசாரம் செய்வதும், தகவல் கேட்பவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அதிகாரத்தில் இருப்பவர்களுடைய ‘இரண்டு முகங்களாகவே’ இருக்கின்றன. இந்த இரு வேறு முகங்களில் நாம் எந்த முகத்தை நம்பி செயலில் இறங்குவது?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனையை ஏற்றுக் கொள்ள முடியாமல், சட்டத்தின் நடைமுறை குறித்து குறை சொல்வதாக சிலர் நினைக்கக் கூடும். சட்டத்தின் சிறப்புகளை அரசு எந்திரத்தின் ஒரு பகுதி இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் அவர்களுடைய தன்னிச்சையான செயல்பாட்டுக்கு இந்த சட்டம் இடைஞ்சலாக இருக்கிறது என்பதால் கேள்வி கேட்பவர்களை அடக்கி வைக்கும் முயற்சிகளில் அவர்கள் இறங்குகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது. அந்த அடக்குமுறைகளில் முக்கியமானதுதான் முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சதீஷ் ஷெட்டி படுகொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஏராளமான செய்திகள் வருகின்றன. தன்பாத் மாவட்டத்தில் கோவிந்த்பூர் பகுதியில் குத்தூஸ் அன்சாரி என்பவர் குடும்பத்துடன் ஊரில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார். அவர் செய்த குற்றம் என்ன? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அந்த கிராமத்தில் குளத்தைத் தூர்வாரும் பணிக்கு 23 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. பணியைக் கண்காணிக்க 12 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. வேலை நடந்தது. எப்போது? இரவில். வேலை செய்தது கிராமத்து மனிதர்கள் அல்ல. எந்திரங்கள். தொழிலாளர்களிடம் இருந்து 72 வேலை அட்டைகள் சேகரிக்கப்பட்டு நிரப்பப்பட்டன. காண்டிராக்டர்கள் வளம் பெற்றனர். தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் உன்னதமான நோக்கம் குளத்தின் சகதியில் புதைக்கப்பட்டது. இத்திட்டம் குறித்த உண்மைத் தகவல்கள் கேட்டு குத்தூஸ் அன்சாரி மாவட்ட அதிகாரிகளிடம் மனுச் செய்தார். காண்டிராக்டர்கள் ஊர் மக்களுக்கு நிதி கொடுத்து குத்தூஸ் அன்சாரியைத் தனிமைப்படுத்தினார்கள். தகவல் அறியும் மனுவை திரும்பப் பெறாவிட்டால் ஊரில் இருந்து குடும்பத்துடன் விலக்க நேரிடும் என்று ஊர்மக்கள் எச்சரித்தனர். அன்சாரியின் கடந்த காலப் பணிகளில் இப்போது புதிய குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இனி அவற்றை சமாளிப்பதே அவருக்கு பெரிய வேலையாக இருக்கும். அரசிடம் கேள்வி கேட்பதற்கு அவருக்கு இனி நேரம் இருக்காது!

பொகாரா மாவட்டத்தில் சுஜித் குமார் என்ற கல்லூரி மாணவர் மாவட்ட அதிகாரியால் மிரட்டப்பட்டிருக்கிறார். ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டம் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் ஊர்மக்கள் குறித்த விபரங்களைக் கேட்டு அவர் மனு கொடுத்திருக்கிறார். “எனக்கு ஏதேனும் சிக்கல் உருவாக்கினால், உன்மேல் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளிவிடுவேன்” என்று அந்த அதிகாரி மிரட்டியதாக மாணவர் கூறுகிறார். ”பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் திட்டம், நலத்திட்ட உதவிகள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்திலும் முறைகேடுகள் நடக்கின்றன. இதைச் சுட்டிக் காட்டினால், சரி செய்ய வேண்டிய அதிகாரிகளே நம்மை மிரட்டுகிறார்கள். நான் என்ன செய்வது?” என்ற அந்த மாணவர் ஒதுங்கி நிற்கிறார்.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் அரசும் காவல்துறையும் நியாயமாக நடந்து கொள்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்கான பெருமையை முதல்வர் கருணாநிதியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கோருகிறார்கள். இதை ஆரோக்கியமான அரசியல் போட்டியாக எடுத்துக் கொள்ளலாம். இருவருமே சட்டத்தின் சிறப்புகளையும் மக்களுக்குத் தகவல் அறியும் உரிமையின் அவசியத்தையும் பேசுவதால், கேள்வி கேட்பவர்களை அதிகாரிகள் பெரிய அளவில் துன்புறுத்துவதில்லை போலிருக்கிறது. சென்னையில் மாதவ் என்ற இளைஞர் கடந்த இரண்டு வருடங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏறத்தாழ 250 மனுக்கள் போட்டிருக்கிறார் என்று ஒரு செய்தி! அந்த செய்தியை நீங்கள் படிக்காவிட்டாலும் ‘சிவப்புக் கொண்டை’ கார் டிரைவரிடம் யாருடைய கார் என்று விசாரித்ததற்காக சில மணிநேரங்கள் அவர் நெருக்கடிக்குள்ளான பரபரப்புச் செய்தி உங்கள் நினைவை விட்டு அகன்றிருக்காது. சிவப்புக் கொண்டை காரை பயன்படுத்தியவர் கொடுத்த புகாரின் பேரில் மாதவ் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார். விசாரணையில் அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்பதோடு புகார் தெரிவித்தவரே விதிகளை மீறி சிவப்புக் கொண்டை காரை பயன்படுத்தியிருக்கிறார் என்பதை அறிந்த காவல்துறை அவரை விடுவித்து விட்டது. சிலமணி நேரம் அவரை காவல்நிலையத்தில் வைத்திருந்ததையும் தவிர்த்திருந்தால், தமிழக காவல்துறை இன்னும் கூடுதலான பாராட்டுதல்களை பெற்றிருக்கும்.

தென்னக ரயில்வேயில் மாதவ் அளித்த மனு ஒன்றுக்கு பதிலளிக்க, ரயில்வே ஊழியர்களின் சம்பளமாக ரூபாய் 750 கட்ட வேண்டும் என்று ரயில்வே பதில் அளித்தது. அதை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்தில் மாதவ் மனுச் செய்தார். மத்திய தகவல் ஆணையம் ரயில்வேயின் பதிலைக் கண்டித்து கட்டணம் இல்லாமல் தகவல் அளிக்க உத்தரவிட்டது. விலக்களித்திருந்த சில துறைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதிலும், பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிதி குறித்த விபரங்களை அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவதிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றி இருக்கிறார். இன்னும் கூட இன்றைய இளைஞர்கள் சிலரின் கனவாக இருக்கக் கூடிய ‘இன்ஃபோசிஸ்’ நிறுவனத்தில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இத்தகைய மக்கள் சேவையில் மாதவ் ஈடுபட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் மாதவ் போன்றவர்களின் வெற்றிகளைப் பார்த்து பொது வாழ்க்கைக்கு ஈர்க்கப்படும் இளைஞர்களை அச்சுறுத்துவதைப் போல் சதீஷ் ஷெட்டி படுகொலை இருக்கிறது. ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகமே இந்திய ஜனநாயகத்துக்கு அடிப்படை என்று ஆட்சியாளர்களும் ஜனநாயகத்தால் பயன் பெறுபவர்களும் உண்மையிலேயே நம்பினால், மாதவ்கள் உற்சாகப்படுத்தப்பட வேண்டும்!

நன்றி: அம்ருதா பிப்ரவரி 2010.

1 Comments:

At 8:56 AM, Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 

Post a Comment

<< Home