இது யாருக்காக?
“இந்தியப் பிரதமர் பேசும்போது மக்கள் கவனமாகக் கேட்கிறார்கள்” என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சொல்லி இருக்கிறார். ஆனால் நம்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங் முடிவை ஏற்க மறுக்கிறார்கள். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டிக்கிறார்கள்; நாடு முழுவதும் ஜூலை 5-ம் தேதி முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கிறார்கள். அரசின் ஜூன் 25 முடிவை எதிர்ப்பதில், அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் பா.ஜ.கவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேர்கோட்டில் நிற்கின்றன. இதற்கு முன் எதிர்க்கட்சிகளிடம் இப்படி ஓர் ஒற்றுமையை 1975, ஜூன் 25 -ல் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை தான் உருவாக்கியது!
எதிர்க்கட்சிகள் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தும் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் இந்த விலையேற்ற அறிவிப்பை ஜூன் 25, வெள்ளிக்கிழமை மாலையில் அரசு அறிவிக்கிறது. அடுத்து வரும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் பெரும்பாலும் அலுவலகங்கள் இயங்காது. விலையேற்றத்தால் மக்கள் கோபம் கொண்டால் கூட அல்லது எதிர்க்கட்சிகள் மக்களைத் திரட்டி கோபத்தை உருவாக்கினால் கூட அவர்கள் உடனடியாக போய் அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்த முடியாது. அல்லது அந்த போராட்டத்தால் ’இயல்பு’ வாழ்க்கை பாதிக்காது. சில நாட்களுக்குப் பிறகு கட்சிகளை ஒருங்கிணைத்து திட்டமிட்டு நடத்தப்படும் போராட்டத்தில் உணர்ச்சிகள் குறைந்து சம்பிரதாயங்களே நிறைந்து இருக்கும் என்பது அரசின் நம்பிக்கை போலும்!
இதுபோன்ற விலையேற்ற அறிவிப்புகளை நாம் அதிர்ச்சியுடனும் வேதனையுடனும் தான் எதிர்கொள்கிறோம். ஆனாலும் அடுத்த நொடியில், “எவ்வளவோ சுமைகளை தாங்கியிருக்கிறோம், இதைத் தாங்க மாட்டோமா” என்ற மனநிலைக்கு வந்து நகர்ந்து விடுகிறோம். இதைத் தான் அரசு வேறுவிதமாக புரிந்து கொள்கிறது. ”விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடி காரணமாகத்தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று புரிந்துகொண்டு மக்கள் பாராட்டுகிறார்கள்” என்று பிரதமர் மன்மோகன்சிங் சொல்லி இருக்கிறார்; “இவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்; ரொம்ப நல்லவர்கள்” என்ற நினைப்பில், பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதில் அரசுக்கு இருந்த கட்டுப்பாட்டு அதிகாரத்தையும் விலக்கிக் கொண்டார். டீசல் விலைக்கு இருக்கும் கட்டுப்பாடும் விரைவில் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லியும் இருக்கிறார்.
இதற்கு என்ன அர்த்தம்? பெட்ரோலிய நிறுவனங்களே பெட்ரோல் விலையை முடிவு செய்து கொள்ளலாம். அரசு தலையிடாது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு அரசு சொல்லும் காரணம் என்ன? பெட்ரோல் விலை அதிகமாகி விடக் கூடாது என்று அரசு கட்டுப்படுத்துவதால், பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டமடைகின்றன. அந்த இழப்பை சரிசெய்ய அரசு மான்யங்களை கொடுக்க வேண்டியதாகிறது. பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த மாதிரியான காரணங்களையே நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று மத்திய ஆட்சியாளர்கள் மாறினாலும், இந்த ‘பல்லவி’ மட்டும் மாறுவதில்லை. ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
“கடந்த 2009 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் பெட்ரோலிய நிறுவனங்கள் லாபமாக மத்திய அரசுக்கு ஏறத்தாழ 56000 கோடி ரூபாய் கொடுத்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில், இந்த நிறுவனங்களுக்கு அரசு கொடுத்த மான்யம் 14000 கோடி ரூபாய்” என்கிறது ஒரு செய்தி. அதாவது அரசுக்கு மக்கள் கொடுத்ததில் கால் பங்கை அரசு மான்யமாக மீண்டும் மக்களுக்கு அளித்திருக்கிறது. வேறுவார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அரசு மக்களுக்கு மான்யம் அளிக்கவில்லை, மக்களே அரசுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கிறார்கள்!
அடுத்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறுவதால் நாமும் இங்கு விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது என்கிறார்கள். நம்மூரில் ஏற்படும் விலை உயர்வுக்கு அது மட்டும் தான் காரணமா? பத்து வருடங்களுக்கு முன்னால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 25 அமெரிக்க டாலர் என்றால், அதற்கு நம் அரசு விதிக்கும் சுங்க வரி ஏறத்தாழ 5 ரூபாயாக இருந்தது. இப்போது ஒரு பீப்பாய் 75 அமெரிக்க டாலர் என்றால், சுங்கவரியும் மூன்று மடங்கு அதிகமாகிறது. அதாவது நாம் சுமப்பது சர்வதேச விலை ஏற்றம் மட்டுமல்ல, நம்நாட்டின் சுங்க வரியையும் சேர்த்துத்தான்!
அடுத்ததாக, கச்சா எண்ணெயில் இருந்து நம் பயன்பாட்டுக்குத் தகுந்தவாறு பெட்ரோலியப் பொருட்களை உருவாக்குவதற்குத் தனியாக அரசு வரி போடுகிறது. இதில் கிடைக்கும் நிதியை மீண்டும் பெட்ரோலியத் துறைக்கே செலவிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 2006, மே மாதம் சமர்ப்பித்த அறிக்கையில், விலை கட்டுப்பாட்டுக்கான நிதியை உருவாக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகள் இருந்தன. என்ன பயன்? அரசு இன்று வரை கண்டுகொள்ளவில்லை. அந்த நிலைக் குழுவின் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜனார்த்தன் ரெட்டி! உறுப்பினர்களில் அகமது படேல், ராஜீவ் சுக்லா போன்ற காங்கிரஸ் எம்.பி.க்களும் அடக்கம்! இருந்தும் யார் கவலைப்படுகிறார்கள்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை பிரதமர் மன்மோகன்சிங் கேட்க மாட்டார். அவற்றை அதிகாரம் மிகுந்த மத்திய அமைச்சர்கள் குழுவும் பரிசீலிக்காது. அப்படியென்றால் அவர்கள் யாருடைய பரிந்துரைகளைத் தான் ஏற்றுக் கொள்வார்கள்? கிரிக்கெட் வீரர்களுடைய மட்டையிலும் சட்டையிலும் அவர்களுடைய ’ஸ்பான்ஸர்கள்’ யார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. நம் அமைச்சர்களின் சட்டைகளில் அவை தெரிவதில்லை!
நன்றி: ரிப்போர்ட்டர் 11.07.2010
Labels: பெட்ரோல், மன்மோகன்சிங், வரி, விலை
0 Comments:
Post a Comment
<< Home