Friday, February 12, 2010

அமைதிக்கான நோபல் பரிசும் காந்தி அமைதி பரிசும்

சிறுதொழில் கற்பதற்கான அந்தப் பயிற்சிக் கூடத்தில் 20 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் பலர் இருந்தார்கள். அவர்களுடைய தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொள்வதற்கும் அங்கு அவர்கள் கூட்டப்பட்டு இருந்தார்கள். பெண்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல திட்டங்களை அந்த அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் அருகில் உள்ள வறுமை நிறைந்த ஒரு கிராமத்தில் இருக்கும் அந்தக் கூடத்தை அமெரிக்கர் ஒருவர் சென்று பார்த்திருக்கிறார். அவரிடம் பல விஷயங்கள் குறித்து அந்தப் பெண்கள் ஆர்வமாகப் பேசி இருக்கிறார்கள். அவர் விடைபெறும்போது அந்தப் பெண்களிடத்தில் “அமெரிக்க மக்களுக்கு நீங்கள் ஏதாவது தெரிவிக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டிருக்கிறார். அங்கிருந்த அனைவரும் அதற்கு பலவிதமாக பதில் அளித்திருக்கிறார்கள். அவற்றை எல்லாம் தொகுத்து, மொழிபெயர்ப்பாளர் அந்த அமெரிக்கரிடம் சொன்ன செய்தி, “எங்கள் முன்னுரிமை அமைதிக்கே!”

நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோ.. நாள் டிசம்பர் 10, 2009. அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் பெற்றுக் கொண்ட பிறகு அங்கு உரையாற்றினார். அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்பதாலும் அவருடைய உதடுகள் உச்சரிக்கும் வார்த்தைகளுக்கு உலகெங்கும் இருக்கும் அதிகார மையங்கள் மரியாதை அளிக்கும் என்பதாலும் அவர் என்ன பேசப் போகிறார் என்பதை அறிய ஆர்வம் இருந்தது. உலகில் அமைதியை ஏற்படுத்த அவர் எந்தவித குறிப்பிடத்தக்க பணியையும் செய்துவிடவில்லை என்ற போதிலும் அவருக்கு அந்த பரிசு வழங்கப்படுகிறது என்பதும் அவரை ஏன் தேர்வு செய்தோம் என்ற தேர்வுக் குழுவின் விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்பதும் பழைய சர்ச்சைகள். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் போருக்கு மேலும் 30000 படைவீரர்களை அனுப்பி வைத்த சில நாட்களில் அவர் அமைதிக்கான நோபல் பரிசை நேரில் வந்து பெற்றிருக்கிறார் என்பது புதிய முணுமுணுப்பு. “போர் ஒருபுறம் இருந்தாலும் அமைதிக்கான முயற்சிகள் தொடரும். இதுவே மனிதகுல வளர்ச்சி” என்ற கருத்தை அவர் வலியுறுத்துகிறார்.

அமைதி வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் பெண்கள் கோருகிறார்கள்; அமைதியை உருவாக்க நியாயமான போர்கள் அவசியமாகிறது என்று அமெரிக்க அதிபர் கூறுகிறார். இந்த இருதரப்பு கோரும் அமைதியும் இருவருக்கும் பொதுவான அமைதிதானா? அதாவது ஆப்கானிஸ்தான் பெண்கள் கேட்கும் அமைதியும் அமெரிக்கா நிறுவ முயலும் அமைதியும் ஒன்றுதானா? அமெரிக்க நகரங்கள் மீது செப்டம்பர் 11, 2001 அன்று தாக்குதல் நடத்தியவர்களை ஒடுக்குவதற்காக அந்த ஆண்டே அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின் கூட்டுப்படை ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. தொலைந்து போன ஊசியைத் தேடுவதற்காக வைக்கோற்போர் கொளுத்தப்படுவதை போல, பயங்கரவாதிகளை அழிக்க கொத்து குண்டுகள் போடப்பட்டன. அங்கு வேர்விட்டு வளர்ந்த அல்லது சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்காவால் உரமிட்டு வளர்க்கப்பட்ட பயங்கரவாதம் அந்தப் போரால் முடிவுக்கு வந்ததா? சில நூறு பேர்கள் கொண்ட சிறிய இயக்கமான ‘அல்கய்தா’வையும் சில ஆயிரம் பேர்கள் கொண்ட தலிபானையும் ஒடுக்குவதற்கு சர்வ வல்லமை கொண்ட அமெரிக்காவுக்கு எத்தனை நாட்கள் தேவை? எட்டு வருடங்கள் முடிந்த நிலையிலும், ஒபாமா அதிபராக பதவி ஏற்ற பிறகு கூட சில நாட்களுக்கு முன் கூடுதலாக முப்பதாயிரம் துருப்புகளை அங்கு அனுப்பி இருக்கிறாரே, எதற்காக? அதாவது ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த படையினர் எண்ணிக்கையை விட இப்போது இரு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் அமெரிக்க ராணுவம் ஆப்கனில் இருக்கிறதே எதற்காக? பயங்கரவாதத்தை ஒழித்து “அமைதியை” ஏற்படுத்துவதற்காக என்று முன்பு ஜார்ஜ் புஷ் சொன்னார். இப்போது ஒபாமாவும் அதையே சொல்கிறார்!

ஒபாமா உருவாக்க முயலும் அமைதியைத் தானா அந்தப் பெண்கள் கோருகிறார்கள்? நிச்சயமாக இல்லை. அவர்கள் கோரும் அமைதியின் உட்பொருள், எட்டு ஆண்டுகளாக அவர்களுடைய நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஆங்கில கூட்டுப்படை ஆப்கனை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான்! சோஷலிசத்திற்கான புரட்சி, சோவியத் ஆக்கிரமிப்பு, அதை எதிர்த்த தலிபான் போர், பிறகு தலிபான் ஆட்சியில் அடக்குமுறை, இப்போது ஆக்கிரமிப்புப் படை என்று கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அமைதி இல்லாத வறுமை மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மக்கள் மனதில் என்ன இருக்கும்? துப்பாக்கி ஓசைகள் இல்லாத – குண்டு வெடிப்புகள் இல்லாத - உயிர் இழப்புகளும் கைகால் துண்டிப்புகளும் இல்லாத - ஓர் அமைதியான வாழ்க்கைக்காக அந்த மக்கள் ஏங்க மாட்டார்களா? ஆனால் ஒபாமா போரை அல்லது ஆக்கிரமிப்பை நிறுத்துவதாக அறிவிக்கவில்லை. அமைதிக்கான நோபல் பரிசை வாங்கிக் கொண்டு ‘நியாயமான போர்கள்’ தவிர்க்க முடியாதவை என்று போரை நியாயப்படுத்தி இருக்கிறார்!

‘மாற்றம்’ என்ற ஒற்றைச் சொல் மந்திரத்தை முன்வைத்து தேர்தலில் வெற்றி பெற்றவர் ஒபாமா. பிற நாடுகளுடனான போரை ஒரு விளையாட்டாக ஜார்ஜ் புஷ் கருதுகிறாரோ என்று நினைத்த அமெரிக்க மக்கள் போருக்கு எதிராக எவ்வளவோ ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். போருக்கு வெளிப்படையாக சொல்லப்பட்ட காரணங்களை அவர்கள் ஏற்க மறுத்தார்கள். ‘ரகசியமான’ காரணங்களுக்காக நடத்தப்படும் இராக் போரில் அமெரிக்க இளைஞர்கள் தேவையில்லாமல் உயிர்த் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது என்ற கோபம் அமெரிக்க மக்களில் குறிப்பிடத்தக்க பிரிவினரிடம் இருந்தது. இந்தச் சூழலில் ஒபாமாவின் ‘மாற்றம்’ என்ற முழக்கம் மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் இப்போது நடப்பது என்ன? ஜார்ஜ் புஷ்ஷின் அலங்காரம் இல்லாத அப்பட்டமான அதே ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையே ஒபாமாவும் ஆதரிக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், அந்த நடவடிக்கைகளுக்கு தத்துவ முலாம், கொள்கைப் பூச்சு எல்லாம் பூசி அவற்றைத் தொடர்வேன் என்கிறார். ஜார்ஜ் புஷ் நேரடியாக ஆப்கன் மக்களின் கழுத்துகளில் கத்தியை வைத்தார். ஒபாமா கழுத்தைச் சுற்றி கவர்ச்சியான மெல்லிய துணியைப் போட்டு அதன் மீது ஆயுதத்தை வைக்கிறார். இரண்டிலும் முடிவு ஒன்றுதான்! இதையெல்லாம் பார்க்கும்போது ”அமைதி என்பது தொலைவில் இருக்கும் வெறும் இலக்கு மட்டுமல்ல; அதை அடைய நாம் மேற்கொள்ளும் வழிமுறைகளும் அமைதிவழியிலேயே இருக்க வேண்டும்” என்று மார்ட்டின் லூதர் கிங் உலகுக்கு அளித்த வாசகங்களை ஒபாமா மறந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால், அவர் மறக்கவில்லை. ஆஸ்லோவில் அவர் பேசிய பேச்சை படிக்கும்போது, மார்ட்டின் லூதர்கிங்கை மட்டுமல்ல, உத்தமர் காந்தியையும் அவர் மறக்கவில்லை என்று தெரிகிறது. “ ‘வன்முறை ஒருபோதும் நிரந்தர அமைதியை கொண்டுவருவதில்லை. எந்த சமூகப் பிரச்னைக்கும் அது தீர்வாக இருப்பதில்லை. மாறாக, அது புதிய சிக்கல்களை உருவாக்குவதுடன், ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை மேலும் சிக்கல்கள் நிறைந்ததாகவும் மாற்றுகிறது’ என்று மார்ட்டின் லூதர் கிங் இதே அரங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பேசிய பேச்சை நான் நினைவில் வைத்திருக்கிறேன்” என்று ஒபாமா குறிப்பிடுகிறார். லூதர் கிங்கோ, காந்தியோ பலவீனமானவர்கள் அல்லர் என்றும் அவர் சொல்கிறார். இதில் இருந்து ஒபாமா அவர்களை மறக்கவில்லை என்பது தெளிவாகிறது. அவர்களை மறக்கவில்லையே தவிர, அவர்களை அவர் மறுத்துவிடுகிறார். ‘ஒரு நாட்டின் அதிபர் என்ற முறையில் நாட்டைக் காப்பதாக உறுதி ஏற்றிருக்கிறேன். அதை நிறைவேற்ற நான் இவர்கள் இருவருடைய எடுத்துக்காட்டுகளால் வழிநடத்தப்பட முடியாது’ என்று உறுதியாகக் கூறுகிறார். ‘அஹிம்சை இயக்கம் ஒன்றால் ஹிட்லரின் படைகளைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. பேச்சுவார்த்தையால் அல்கய்தா ஆயுதங்களைக் கீழே போட வைக்க முடியாது” என்று காந்திக்கும் லூதர் கிங்குக்கும் எதிராக துப்பாக்கியை உயர்த்திப் பிடிக்கிறார். அதாவது கடைப்பிடிக்க முடியாத கற்பனாவாதம் அஹிம்சை என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.

அமைதியை பாதுகாக்க நியாயமான போர் சில இடங்களில் அவசியமாகிறது என்றும் நாட்டைப் பாதுகாப்பதற்குத் தேவைப்பட்டால் தன்னிச்சையாக தாக்குதல் நடத்தும் உரிமை தமக்கு இருக்கிறது என்றும் புஷ் அரைத்த மாவையே தான் ஒபாமாவும் அரைக்கிறார். மாற்றத்தை ஒபாமா உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பு, போருக்கு எதிராகப் போராடும் மக்களிடம் தகர்ந்து போனது. ஆட்சி அதிகார அமைப்பு எவரையும் உள்ளே இழுத்து விழுங்கி ஏப்பம் விடும் தன்மையிலானது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். தலையில் போடும் தொப்பியை மாற்றுவதால், மூளையின் சிந்தனை மாறிவிடுவதில்லை என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை இந்திய அரசியலில் நாம் பார்த்திருந்தாலும், உலக அரங்கில் இப்போது ஒபாமா கூடுதலான ஓர் எடுத்துக்காட்டு!

”அமெரிக்க குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்துக்காக உலகெங்கும் உள்ள குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. அதனால்தான் எங்கெல்லாம் பயங்கரவாதமும் அணுஆயுத அச்சுறுத்தலும் இருக்கிறதோ, அங்கெல்லாம் அமெரிக்கா தலையிட வேண்டியிருக்கிறது” என்ற அர்த்தத்திலும் அவருடைய சொற்கள் இருக்கின்றன. ”அணு ஆயுதப் போருக்கான தயாரிப்பில் நாடுகள் இருக்கும்போது அமைதியை விரும்பும் நாடுகள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்று அவர் பேசி இருக்கிறார். இதற்கு என்ன பொருள்? ஏற்கனவே ஆப்கன், இராக் ஆகிய நாடுகளின் மீது தாக்குதல் இருக்கிறது; தேவைப்பட்டால் இரான், வட கொரியா மீதும் எதிர்காலத்தில் அமெரிக்கா போர் தொடுக்கலாம். அவர் கூறுவதில் நியாயம் இருக்கலாம். பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களின் கோரப் பிடியில் இருந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால், அமெரிக்கா இதில் எவ்வளவு தூரம் நேர்மையாக இருக்கிறது? அணு ஆயுதங்களைப் பொறுத்த அளவில் உண்மை நிலை என்ன?

வார்த்தைகளை கவனமாகக் கையாளுங்கள்; ஏனென்றால் அவை அணுகுண்டுகளை விட வலிமையானவை” என்பார்கள். அணு ஆயுதங்களுக்கு எதிராக வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டே ஒவ்வொரு நாடாக அணு ஆயுதங்களைத் தயார்செய்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே தயாரித்த அணுகுண்டுகளை அழிப்பதற்கும் வல்லரசுகள் தயாராக இல்லை என்ற நிலையே நீடிக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா ஆகிய ஒன்பது நாடுகளிடம் மட்டும் 27000 அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இவை பூமியைப் போன்ற பல கோள்களை அழிக்கும் வல்லமை கொண்டவை. ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் அணுகுண்டுகளை வீசிய அமெரிக்காவின் கைகளில் மட்டும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று அமெரிக்க அணு விஞ்ஞானிகளின் அதிகாரபூர்வமான அறிக்கை ஒன்று சொல்கிறது. இந்த ஆண்டு மட்டும் அணு ஆயுத ஆய்வுக்காக ஒபாமா அரசாங்கம் 600 கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்கி இருக்கிறது. அமெரிக்கா செய்தால் அது ஆக்கப் பணிக்காக என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது!

தவிர்க்க முடியாத நியாயமான போருக்கான இலக்கணங்கள் குறித்து ஒபாமா சொல்வது என்ன? ஆப்கன் போரும் இராக் போரும் அந்த இலக்கண வகைப்படி நடந்தவையா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடினால் அமெரிக்கா இன்னும் அம்பலப்பட்டு நிற்கிறது! வன்முறை தவிர்த்த பொருளாதாரத் தடை போன்ற வழிகளில் முதலில் வரம்பு மீறும் நாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும், எதிரிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறே படையினரின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். இராக்கின் மீது சுமத்தப்பட்ட ‘பேரழிவு ஆயுதங்கள்’ குற்றச்சாட்டு இன்று வரை மெய்ப்பிக்கப்படவில்லை. ஆப்கனில் அல்கய்தா மற்றும் தலிபான்களின் எண்ணிக்கையை விட அமெரிக்கா தலைமையிலான படையினரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். நியாயமான போர் என்ற சித்தரிப்புக்குக் கீழே கூட அமெரிக்காவின் போர்கள் வரவில்லை என்ற நிலையில் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசை வாங்கி இருக்கிறார்!

உரையில் ஜனநாயகம், மனித உரிமை, சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவிக்காத அரசாங்கம், வழிபாட்டு உரிமை போன்ற கவர்ச்சிகரமான சொற்களும் உண்டு. இந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்திலேயே கிளர்ச்சி கொள்ளும் மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்பது தெரிந்து இந்த சொற்களும் அவருடைய உரையில் இடம் பெற்றிருக்கின்றன போலும்! மத்திய கிழக்கு, யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான முரண்பாடு, காங்கோ, சோமாலியா, பர்மா என்று உலகில் மோதல்கள் நடக்கும் பகுதிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த மே மாதம் மட்டும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு குறித்து எந்த சொல்லும் அவரது உரையில் இல்லை. போரை நியாயப்படுத்த நாம் சொல்லும் காரணங்களையேதான், இலங்கை அரசும் சொல்கிறது என்று கருதி உரையாசிரியர்கள் அந்த இனப்படுகொலை குறித்த வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம். அல்லது அந்த இனப்படுகொலையின் பங்குதாரர் சரத் ஃபொன்சேகா இப்போது அமெரிக்காவின் புதிய பங்காளி ஆகி இருக்கலாம்! எப்படியோ சர்ச்சைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, இரண்டு போர்களுக்கு நடுவில் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசை வாங்கி விட்டார். வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் உரையையும் நிகழ்த்திவிட்டார்!

இந்திய அரசும் காந்தி அமைதிப் பரிசு வழங்கி வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசுக்கான தேர்வுக் குழுவின் வழிமுறையை இந்திய அரசும் பின்பற்றி விடக் கூடாது என்ற கவலை இப்போதே ஆட்கொள்கிறது. பொதுவாக நம்மைப் போன்ற சாமான்யர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் செவிசாய்ப்பதில்லை. அந்த அடிப்படையில் பார்த்தால், நோபல் தேர்வுக் குழுவின் வழிமுறையை அடியொற்றி நடப்பது என்று மன்மோகன்சிங் அரசு முடிவெடுக்கக் கூடும். அப்படி நடந்தால் காந்தி அமைதிப் பரிசு யாருக்குக் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்? உங்கள் பதில் மகிந்த ராஜபக்சே அல்லது சரத் ஃபொன்சேகா என்று இல்லாமல் இருந்தால் சரி!

- ஜென்ராம் நன்றி: அம்ருதா, ஜனவரி 2010.

0 Comments:

Post a Comment

<< Home