Monday, June 13, 2011

இரு துருவங்கள் சேருமோ?

“ஐந்து விரல்கள் தனித் தனியாக இருந்தாலும், அவை ஒன்றாக சேர்ந்தால்தான் உருப்படியான காரியத்தை நிறைவேற்ற முடியும்” என்று முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார். சட்டமன்றம் என்பது மனிதனுடைய கையைப் போன்றது. அங்கு இடம் பெற்றிருக்கும் கட்சிகள் எல்லாம் விரல்களைப் போன்றவை. அவை ஒன்றாக இணைந்து பணியாற்றினால்தான் உருப்படியான வேலைகளைச் செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட விரும்புகிறார். எந்த சந்தர்ப்பத்தில் அவர் இப்படிப் பேசுகிறார்?

தமிழக சட்டமன்றத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரை வாழ்த்திப் பேசும்போது, ஸ்டாலின் இப்படிச் சொல்கிறார். “பெரிய தேர் ஓடுவதற்கு சக்கரங்கள் தேவை. அவற்றின் அச்சாணி மிகவும் சிறியதுதான். ஆனால் அந்தச் சிறிய அச்சாணி இல்லையென்றால், தேர்ச் சக்கரம் நகராது. அதைப் போல பெரிய கட்சி, சின்ன கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் இந்த சட்டமன்றத்தை வழிநடத்துங்கள் என்றும் அவர் பேசி இருக்கிறார்!

சட்டமன்றத்தில் சிறிய கட்சிகளின் முக்கியத்துவம் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இப்போது தி.மு.கவுக்கு வந்துவிட்டது. ஏனென்றால் வாக்குகளின் அடிப்படையில் அது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த போதிலும், சட்டமன்றத்தில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. 1991இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே தி.மு.க ஜெயித்தது. எதிர்க்கட்சியாக அப்போது காங்கிரஸ் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதைப் போல இந்த தேர்தலிலும் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. அதன் தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்த அரசியல் சூழ்நிலையில் திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக இருப்பதற்கு ஸ்டாலின் சம்மதித்திருப்பதை பாராட்டத்தக்க ஒரு செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். “அந்த அம்மா முதலமைச்சர்; விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர். நீங்க சபைக்கே போக வேண்டாம்.. அங்கே போனாலே உங்களுக்கு அவமானம்தான்” என்று அந்தக் கட்சியில் சில ‘ஜால்ராக்கள்’ வேப்பிலை அடித்திருக்கலாம். கட்சியின் வரலாறும் அப்படித்தான் சொல்கிறது. 1991 –இல் திமுகவுக்கு கிடைத்த தோல்விக்குப் பிறகு சட்டமன்றத்துக்குப் போக கருணாநிதிக்குப் பிடிக்கவில்லை. துறைமுகம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்!

2001-ல் திமுகவுக்கு 31 இடங்கள் கிடைத்தன. அப்போதும் அவர் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை! இதில் இருந்து நாம் என்ன புரிந்து கொள்ள முடிகிறது? சட்டசபைக்குப் போனால், அங்கு திமுகவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசுவதைக் கேட்க வேண்டியிருக்கும். அதற்கு பதில் சொல்ல வாய்ப்பு இருக்குமா தெரியவில்லை. இந்நிலையில் அங்கு போய் அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதே அவமானம் என்று கருதுகிறவர்கள் என்ன செய்வார்கள்? ஸ்டாலின் அவைக்குப் போக வேண்டாம் என்றே சொல்வார்கள்.

நாம் இடம் கொடுக்காமல் நம்மை யாரும் அவமானப்படுத்த முடியாது என்பதை ஸ்டாலின் நம்புகிறார் போலிருக்கிறது. நம்மைப் புண்படுத்த வேண்டும் என்று யாரோ ஏதோ செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய அந்த செயலால் நாம் புண்பட்டால்தானே அவர்களுடைய எண்ணம் நிறைவேறும்? 2001-ல் ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்ற விழாவில் பங்கேற்க வந்த ஸ்டாலினுக்கு நான்காவது வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. இந்த முறை சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பதவி ஏற்கும்போது அவர் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தார் என்கிறது செய்தி!

சட்டநுட்பங்களின்படி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், திமுகவின் வி.வி.ஐ.பி. என்ற வகையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் என்ன? அதனால் ஜெயலலிதாவின் அரசு எந்த விதத்தில் குறைந்துவிடப் போகிறது என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்திலும் கூட ஸ்டாலின் ஒரே நாளில் வாரிசாக முன்னுக்கு வந்துவிடவில்லை. தயாநிதி மாறன், அழகிரி, கனிமொழி எல்லோரும் குறுகிய காலத்தில் அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தார்கள். 2004-ல் நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதி மாறன், உடனடியாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரானார். குடும்பத்துக்குள் மோதல் வலுத்த போது கனிமொழி மாநிலங்களவை உறுப்பினரானார். 2009 தேர்தலில் முதன்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிரி, உடனே மத்திய அமைச்சராகி விட்டார்.

ஆனால் ஸ்டாலின் விஷயத்தில் அப்படியான உடனடி வளர்ச்சி எதுவும் இல்லை.
மிசா சட்டத்தின் கீழ் நெருக்கடிநிலை இருண்ட காலத்தில் பல மாதங்களாக ஸ்டாலின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். சிறைக் காவலர்களின் மிருகத்தனமான அடக்குமுறை அவர் மீது ஏவி விடப்பட்டது. அவர் 1989-ம் வருடம் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது திமுக தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவருக்கு எந்தவிதமான அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை.

1991-ல் அவரால் வெற்றி பெற முடியவில்லை. 1996-ல் மீண்டும் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. 2001-ல் மீண்டும் திமுக ஆட்சியை இழந்தது. 1989-ல் சட்டமன்ற உறுப்பினரான ஸ்டாலின், 2006-ல் தான் அமைச்சராக முடிந்தது. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே பணி செய்திருக்கிறார். அதில் இரண்டு முறை திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்பது இங்கு நாம் கவனிக்க வேண்டிய செய்தி. நான்காவது முறையாக சட்ட மன்ற உறுப்பினராகும்போதுதான் அவர் தமிழக அமைச்சராகிறார். அதற்காக அவர் காத்திருந்த ஆண்டுகள் 17!

அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் தேசிய திராவிட முற்போக்குக் கழகம் இருந்தாலும், உண்மையான எதிர்க்கட்சியாக மக்கள் மன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகமே இருக்கிறது. முதலமைச்சராகவோ, எதிர்க்கட்சித் தலைவராகவோ இல்லாமல் கருணாநிதி தமிழக சட்டமன்ற உறுப்பினராக மட்டும் சட்டமன்றத்துக்குள் வருவாரா என்பது சந்தேகம் தான்! அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்டாலினின் பங்கே சட்டமன்றத்தில் முக்கியமாகிறது.

அதற்குத் தகுந்தவாறு, முதலமைச்சர் ஜெயலலிதாவும் சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார். “மிகவும் குறைந்த இடங்களையே எதிர்க்கட்சிகள் பிடித்திருக்கின்றன. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க ஆளும் கட்சி தயங்காது. சட்டப்பேரவை ஜனநாயகம் வாழவும் வளரவும் வளம் பெறவும் நிலைத்து நிற்கவும் துணையாக நிற்போம்” என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார்.

உண்மையிலேயே அப்படி ஒரு நிலையை உருவாக்க ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் ஆகிய மூவரும் முழு முயற்சி எடுக்க வேண்டும். பொதுவாக ஆட்சியாளர்களின் கடந்தகால அணுகுமுறை, நமக்குள் அவநம்பிக்கையை உருவாக்கக் கூடும். இருந்தாலும் ஸ்டாலின் அதற்கான முயற்சியை மேற்கொள்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. முயற்சிகள் ஒருவேளை தோற்றுப் போகலாம்; ஆனால் முயலாமலேயே இருப்பது ஜனநாயகத்துக்குப் பெருந்தோல்வி என்றே சொல்லத் தோன்றுகிறது!

குமுதம் ரிப்போர்ட்டர் 05.06.11

0 Comments:

Post a Comment

<< Home