Wednesday, September 08, 2010

அரசியல் ஓய்வதில்லை

இன்னிக்கு பேப்பர் பார்த்துட்டீங்களா?” கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார்.

“இன்னும் இல்லைங்க..” என்றேன்.

ஓர் ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில் ‘இளைய இந்தியா முதிய தலைவர்கள்’ என்று ஒரு செய்திக்கட்டுரை வந்திருக்கிறது என்றும் அதைப் பார்த்துவிட்டு அதைப் பற்றி ரிப்போர்ட்டரில் எழுதலாம் என்றும் அவர் ஆலோசனை சொன்னார். இப்போதெல்லாம் அடிக்கடி பலதரப்பட்ட நண்பர்கள் அவரவர் பார்வையில் முக்கியமாகத் தெரியும் விஷயங்களைப் பற்றி எழுதச் சொல்கிறார்கள். வற்றில் பல நிர்வாகம் தொடர்பானவையாகவே இருக்கின்றன. ஆனால் அன்று அந்த நண்பர் சொன்ன செய்தி பொதுவான தன்மை கொண்டது. அந்த செய்தியைப் படித்த பிறகு, இளைய இந்தியாவின் முதிய தலைவர்கள் குறித்து எழுதலாம் என்றே தோன்றியது.

இந்திய மக்களின் சராசரி வயது 26. ஆனால், மத்திய அமைச்சரவையின் சராசரி வயது 64. இந்தியப் பிரதமரின் வயது 78. வலிமையான 15 நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா மிகவும் இளைய நாடு. அதாவது இளைஞர்கள் அதிகம் வாழும் நாடு. ஆனால் இந்தியாவின் அரசியல் தலைமை மிகவும் முதுமையானதாக இருக்கிறது. அமெரிக்க மக்களின் சராசரி வயது 37. அதிபர் ஒபாமாவின் வயது 49. ரஷ்ய மக்களின் சராசரி வயது 39. ரஷ்யக் கூட்டமைப்பின் குடியரசுத் தலைவர் மெத்வதேவுக்கு வயது 44. ஐக்கிய ராஜ்யத்தில் வாழும் – எளிமையாக சொல்வதென்றால் பிரிட்டனில் வாழும் – மக்களின் சராசரி வயது 40. பிரதமர் டேவிட் கேமரானின் வயது 43. அதாவது மற்ற நாடுகளை விட இந்தியாவில் மக்களின் சராசரி வயதுக்கும் அரசியல் தலைமையின் வயதுக்கும் இடையிலான வேறுபாடு மிகவும் அதிகமாக இருக்கிறது. நம் நாட்டில் அது ஏறத்தாழ மூன்றரை மடங்கு வித்தியாசமாக இருக்கிறது!

இதுதான் அந்த செய்தி. இந்த செய்தி தரும் விபரங்கள் நமக்கு என்ன கருத்தைச் சொல்ல வருகின்றன? இளைஞர்கள் புலிப் பாய்ச்சலில் முன்னேறத் துடிக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம் பின்தங்கி இருக்கிறது. இந்தியாவின் அரசியல் தலைமை இந்திய இளைஞர்களின் கனவுகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்படக் கூடிய இளைய தலைமையாக இல்லை! வளர்ந்த நாடுகளான பிரிட்டனும் அமெரிக்காவும் இளைய தலைவர்களைக் கொண்டிருக்கின்றன. வளர்முக நாடான இந்தியாவில் பிரதமர் மன்மோகன்சிங் எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். எனவே அரசுப் பதவிகளில் உட்காரும் அரசியல்வாதிகளுக்கு ஓய்வளிக்கும் வயது வரம்பு ஒன்று வரையறுக்கப் படவேண்டும். ராஜிவ் காந்தி தலைமையேற்றதைப் போல, ராகுல் காந்தி தலைமை ஏற்பது இந்த வயது வித்தியாசத்தைக் குறைக்க உதவும். சுருக்கமாகச் சொன்னால், விரைவில் இளைஞர்களில் ஒருவரான ராகுல் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும்!

அந்த செய்தி உணர்த்தும் கருத்து அதுதான். அந்த செய்தி சொல்வதைப் போல் இப்போதுதான் இந்தியா இருக்கிறதா? அல்லது எப்போதுமே இந்தியா முதியவர்களின் வழிகாட்டுதலில்தான் இருந்ததா? இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அந்தப் பொறுப்பை ஏற்கும்போது அவருக்கு வயது 58. ஏறத்தாழ 17 வருடங்கள் பதவியில் இருந்து இந்தியாவை குறிப்பிடத்தக்க விதத்தில் முன்னேறச் செய்தபிறகு அவர் 75-வது வயதில் அவர் இறந்தார். அடுத்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பதவி ஏற்கும்போது அவருக்கு வயது 60. அடுத்து இந்திரா காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட போது அவருடைய வயது 48. அவருடைய மகன் ராஜிவ் காந்தி பிரதமராகும்போது அவருக்கு வயது 40!

ராஜிவ் காந்தி காலம் வரையிலும் அரசியல்வாதிகள் பதவி வகிப்பதற்கு வயது வரம்பு வேண்டும் என்று பெரிய அளவில் பேச்சு நடந்ததாகத் தெரியவில்லை. அப்போது இந்திய மக்களின் சராசரி வயது இன்று இருப்பதைப் போல மிகவும் இளமையாக இருந்திருக்காது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொன்று காங்கிரஸை எதிர்த்து நின்ற கட்சிகள் இந்தப் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் இருந்தன. ஏனென்றால், அந்தக் கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களைவிட வயதில் முதிர்ந்தவர்கள். இந்திரா காந்தியை தேர்தலில் வீழ்த்திய ஜனதா அரசாங்கம் 1977-ல் பொறுப்பேற்கும்போது, பிரதமர் மொரார்ஜி தேசாயின் 81. இரண்டு வருடங்களுக்குள் அவருடைய ஆட்சியைக் கவிழ்த்து பிரதமரான சரண்சிங்குக்கு அப்போது வயது 76!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கு ஓய்வுபெறும் வயது வரம்பு இருக்கிறது. நீதிபதிகளுக்கு இருக்கிறது; ராணுவ அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை என்று சிலர் தேர்தல் ‘சீர்திருத்தம்’ பேசுகிறார்கள். இப்படிப் பேசுகிறவர்கள் பொதுவாக எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்? சில தொழிலதிபர்கள் இப்படிப் பேசி இருக்கிறார்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் வரும் ஆங்கில வணிக நாளிதழ்களில் எழுதுகிறவர்கள் அடிக்கடி இந்த கருத்தை வலியுறுத்துகிறார்கள். யாராவது முப்பது வயதைக் கடந்த கிரிக்கெட் வீரர் சரியாக விளையாடவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். முப்பது வயதைக் கடந்த பின்னும் வெட்கம் இல்லாமல் நம்முடைய அரசியல்வாதிகளைப் போல் விளம்பர வெளிச்சத்தில் இருந்து விலக மனம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று எழுதுகிறார்கள். சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் பற்றி எழுதும் போது, பதவி விலக மறுப்பது இந்தியாவின் தேசிய நோய் என்று எழுதியவர்கள் இருக்கிறார்கள்!

வயதானவர்களை அரசுப் பதவிகளில் இருந்து விலகச் சொல்வதன் மூலம் இவர்கள் ‘காலாவதியாகிப் போன’ சில அரசியல் கொள்கைகளை அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கலாம். அதாவது முதிய அரசியல்வாதிகள் சிலர்தான் காலத்துக்கு ஒவ்வாத சில கொள்கைகளை இன்னும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இவர்கள் நினைக்கக் கூடும். இப்படிப்பட்ட பழைய கொள்கைகளை வைத்திருப்பவர்கள்தான் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். கொள்கை முடிவுகளை எடுத்துக் கொடுத்த பிறகு, நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கக் கூடாது என்று சிலர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம் அதற்கும் நிர்வாகத்தில் அரசியல் முடிவுகளே இருக்கக் கூடாது என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசியல்வாதிகளின் தலையீடு கூடாது என்ற பெயரில், அரசியல் அகற்றிய ஆட்சி நிர்வாகத்தை இவர்கள் முன்வைக்கிறார்கள்.

தொழில் நிறுவனங்களை மேலாண்மை செய்வது போல் ஆட்சியை நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணம் படித்த மேல்தட்டு மனிதர்கள் மத்தியில் இருப்பதை நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம். அரசியல் அற்ற நிர்வாகம் என்ற இவர்களுடைய கொள்கைக்கு மாற்றாக நிற்கக் கூடிய கருத்துக்கள் எவை? சமத்துவமும் சமூகநீதியும்! அந்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துப் போகும் பிம்பங்களாக இருக்கும் தலைவர்கள் யார் யார்? சமத்துவ அடித்தளத்தில் உருவான மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள முதல்வர் அச்சுதானந்தன். அவருக்கு இப்போது வயது 86. சமூகநீதி அடிப்படையில் உருவான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி. அவருக்கும் இப்போது வயது 87. தங்களுக்கென்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில் ஓரளவு செல்வாக்கோடு இருக்கும் முலாயம்சிங் யாதவுக்கு வயது 70. லாலு பிரசாத் யாதவுக்கு வயது 63!

இளைய தலைவர்களே பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும் இன்று அரசு முன்வைக்கும் ‘வளர்ச்சி’யை ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். சமீபத்தில் ராகுல்காந்தி இவர்களுடைய நம்பிக்கையை தவிடுபொடியாக்கினார். பழங்குடியின மக்களிடம் பேசிய ராகுல், ”உங்களுடைய பிரதிநிதியாக டெல்லியில் நான் இருப்பேன்; கவலைப்படாதீர்கள்” என்று சொன்னார். வாக்களித்தபடி உண்மையில் ராகுல்காந்தி பழங்குடியின மக்கள் இடம்பெயராமல் அவர்களுக்கான வாழ்க்கையை உத்தரவாதப் படுத்தினால், இவர்கள் ராகுலை ஒருவேளை கைவிட்டுவிடக் கூடும். இவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள். இவர்களுக்குத் தேனாகத் தித்திக்கும் தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் என்ற மூன்று மந்திரங்களை ஜெபித்து, இன்றைய ‘வளர்ச்சிக்கான’ கதவை திறந்தவர் பி.வி.நரசிம்மராவ். அவர் பிரதமராக பதவி ஏற்கும்போது அவருக்கு வயது 80! அவருக்குப் பிறகு வேகமாக பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்திய அடல் பிகாரி வாஜ்பாய், 1998-ல் ஆட்சிக்கு வந்தபோது அவருடைய வயது 74! உண்மையில் முதியவர்கள்தான் ‘பொருளாதார சீர்திருத்தங்களை’ செயல்படுத்தி இருக்கிறார்கள்!

பெரும்பாலான அரசியல்வாதிகள் பதவிகளை எளிதாக விட்டுக் கொடுக்கமாட்டார்கள் தான்! அதிகாரம் கைகளை விட்டுப் போவதை அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, சாதாரணமான குடும்பங்களில் இருக்கும் குடும்பத் தலைவர்கள் கூட விரும்பமாட்டார்கள். பணம் சம்பாதிக்கும் தொழிலாக பெரும்பாலும் அரசியல் மாறிப் போன சூழலில், எந்த வயதினராக இருந்தாலும் பதவிகளை எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதிகாரிகளைப் போலவோ அல்லது நீதிபதிகளைப் போலவோ அரசியல்வாதிகளும் கட்டாயமாக 60 அல்லது 65 வயதில் வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றால், தமிழகத்தில் இருக்கும் பல முக்கிய தலைவர்கள் ஓய்வு பெற வேண்டியதுதான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வயது 62! காங்கிரஸ் கட்சி சார்பாக எதிர்காலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிற ப.சிதம்பரத்துக்கு வயது 65! அந்த வரிசையில் துணை முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஓய்வு பெறும் வயதை எட்டாமல் இருக்கிறார்!

அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் வேலைபார்க்கும் இந்தியர் டாக்டர் மோகன் பகத் என்னும் பேராசிரியரை அண்மையில் அமெரிக்காவில் சந்தித்தேன். அவருடைய பெயரைக் கவனித்தீர்களா? மகாத்மா காந்தியும் பகத்சிங்கும் சேர்ந்த கலவை! பேராசிரியர் பணி தவிர, இந்திய வளர்ச்சிக்கான கழகம் என்ற லாப நோக்கில்லாத தன்னார்வ நிறுவனத்தில் முக்கியமான பணிகளையும் அவர் கூடுதல் சேவையாக செய்து வருகிறார். அவருக்கு வயது எழுபதுக்கு மேல் ஆகி விட்டது. அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கு ஓய்வு வயது எதுவும் கிடையாதாம்! ஒருவரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிற பணியை சிறப்பாக அவரால் செய்ய முடியும் வரை அவருக்கு அங்கு பணி உண்டு. முதுமை காரணமாக அவருக்கு மறதி இருக்கிறது, அவரால் திறம்பட பாடங்களை சொல்லிக் கொடுக்க முடியவில்லை என்று மாணவர்களிடம் இருந்து புகார்கள் போகாதவரை பிரச்னை இல்லை!

அதைப் போல நம்முடைய தலைவர்களும் அரசுப் பதவிகளில் ஓய்வு வயது வரம்பு எதுவும் இல்லாமல் இருக்கட்டும். அவர்கள் சரிவர வேலை செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 09.09.10

1 Comments:

At 11:45 AM, Blogger கிருஷ்ண மூர்த்தி S said...

/அதைப் போல நம்முடைய தலைவர்களும் அரசுப் பதவிகளில் ஓய்வு வயது வரம்பு எதுவும் இல்லாமல் இருக்கட்டும்./


என்னடா இவ்வளவு அபத்தமாக இருக்கிறதே என்று முதலில் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

அப்புறம் குமுதம் ரிப்போர்டரில் வெளி வந்தது என்ற அடிக் குறிப்பைப் பார்த்ததும், அந்த ஆச்சரியம் போய் விட்டது!

முக்கியமான பிரச்சினை, வயது மட்டுமில்லை! வயதானவர்கள் தலைமையைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கும்போது, அடித்தளத்தில் அடுத்த தலைமுறைத் தலைமை வளர்வது இல்லை.

நேருவுக்குப் பின்..?
சாஸ்திரிக்குப் பின்..?
இந்திராவுக்குப் பின்?

இப்படிக் கேள்விகளாகவே நின்ற அனுபவத்தையும் மறந்து விட முடியுமா?

வயசாளி நரசிம்மராவ் தான் துணிச்சலாகப் பொருளாதாரச் சீர்திருத்தத்தை அமல் படுத்தினார்! உண்மைதான்! இந்த செய்தியில் வெளிப்படுத்தப் படாத இன்னொரு உண்மையும் இருக்கிறது! அந்த நேரத்தில் அவருக்கு வேறு வழி இருக்கவில்லை!

அன்றைய ரிசர்வ் பேணக் கவர்னரை நிதிமந்திரியாகும்படி ராவ் வேண்டிக் கொண்டார், ஆனால் அவர் மறுத்து விட்டார்! அதற்குப் பிறகே, "பொருளாதாரச் சீர்திருத்தங்களின் சிற்பி" என்று வர்ணிக்கப் படும் மன்மோகன் சிங்கை ராவ் வலிய இழுத்து வந்து தனது அமைச்சரவையில் நிதியமைச்சர் ஆக்கினார்!

எல்லாம் சரி!

மன்மோகன் சிங் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்? தான் உருவாக்கிய சீர்திருத்தங்களைத் தனது அமைச்சரவை சகாக்களாலேயே இடிக்கப் படுவதை பார்த்துக் கொண்டு சும்மா மட்டுமே இருக்க முடிகிற சோளக் கொல்லை பொம்மை ஆகிப் போனாரா இல்லையா?

Power corrupts and absolute power corrupts absolutely!

அதனால் தான் தலைமைப் பொறுப்பில் ஒன்று அல்லது இரு முறைக்கு மேல் எவரையும் இருக்க விட வேண்டாம், அது தான் நல்லது என்று சொல்கிற வாதங்களின் சாரம். வெறும் வயது மட்டுமே இல்லை!

 

Post a Comment

<< Home