கேள்வி நேரம்
“இன்னொரு சகமனிதனை தீண்டத்தகாதவனாக வைத்திருப்பதற்காக கடவுள் மனிதனைப் படைக்கவில்லை” என்றார் உத்தமர் காந்தி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரியார் தீண்டாமைக்கு எதிராக பல தீவிரமான போராட்டங்களை நடத்தினார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. தமிழ்நாட்டில் தீண்டாமை இருக்கிறதா? பெரியார் மற்றும் அண்ணாவழியில் திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்தக் கேள்வி ஏன் என்று நீங்கள் கேட்கக் கூடும். கடந்த செப்டம்பர் 30-ம் நாள் திருவாரூரில் தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்தில் இருந்தே இந்தக் கேள்விகள் எழுகின்றன.
“பெரியாரின் சிலை திறப்பு விழாவில் பேசியவர்கள் திமுக ஆட்சி பெரியாரின் கொள்கையை ஏற்றுச் செயல்படும் ஆட்சி என்று கூறினார்கள். அந்த மதிப்புரையே எனக்கு போதுமானது” என்று அவர் அங்கு பேசியிருக்கிறார்.
தமிழகத்தில் இன்னும் செய்ய வேண்டிய சீர்திருத்தப் பணிகள் மிகவும் அதிக நிலையில் இருக்கிறதே, அதற்குள் இந்தப் பாராட்டே போதும் என்று முதல்வர் மனநிறைவு அடைந்து விட்டாரே என்ற எண்ணம் நமக்கு எழுவது இயல்பானது. ஆனால், ”சாதி வேறுபாடுகள் இருக்கும்வரை திமுக என்ற அரசியல் இயக்கத்துக்கு வேலை இருக்கிறது” என்றும் அவர் பேசியதை அறிந்த பிறகு, இன்னும் வேலை இருக்கிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார் என்பது புரிகிறது!
சிலை திறப்புவிழாவில் பேசியவர்கள் குறிப்பிட்டதைப் போல இந்த ஆட்சி பெரியாரின் கொள்கையை ஏற்று செயல்படும் ஆட்சி தானா என்ற கேள்வியை அதே நாளில் நடந்த வேறு சில நிகழ்வுகள் நம்முள் எழுப்புகின்றன. அன்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் எட்டு மையங்களில் பலவிதமான அடையாளப் போராட்டங்களை அறிவித்து இருந்தார்கள். அவற்றில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் காங்கியனூர் கிராமத்தில் இருக்கிற திரௌபதி அம்மன் ஆலய நுழைவுப் போராட்டமும் ஒன்று. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. போராட்டத்துக்கு தலைமை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் லதா மற்றும் விவசாய சங்கத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நூறு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காங்கியனூர் கிராமத்தில் தடைஉத்தரவு அமலில் இருப்பதால் அங்கு யாரும் செல்ல அனுமதி இல்லை என்றும் இதற்கு மேல் ஆலய நுழைவு போராட்ட ஊர்வலத்தை அனுமதிக்க முடியாது என்றும் மீறினால் அனைவரையும் கைது செய்வோம் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் ஊர்வலத்தைத் தடுத்திருக்கிறார். பேச்சுவார்த்தை பலன் அளிக்காத நிலையில் காவலர்கள் தடியடி நடத்தி இருக்கிறார்கள்.
அடுத்ததாக, வேதாரண்யம் வட்டத்தில் செட்டிபுலம் என்ற ஊரில் தலித் மக்கள் ஆலயத்துக்குள் நுழைவதையும் காவல்துறை தடுத்து கைது செய்திருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மனிதர்களுக்குள் வேறுபாடு காட்டப்படக் கூடாது என்றிருக்கும் போது கோவில்களும் கோவில் கருவறைகளும் விதிவிலக்குகளாக இருப்பது ஏன்? பெரியார் கொள்கைகளை பின்பற்றும் ஆட்சியாக இல்லாவிட்டாலும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் சட்டத்தின் ஆட்சியைக் கூட இந்தப் பகுதிகளில் உள்ள காவல்துறையினர் நடத்தவில்லையே என்ற உணர்வு எழுவதைத் தடுக்க இயலவில்லை.
அதேசமயம் அன்றே இன்னொரு நல்ல செய்தியையும் அறிய முடிந்தது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கட்டளைப்பட்டி என்ற கிராமத்தில் பொது கழிப்பறையை பயன்படுத்த தலித் மக்களுக்கு தடை இருந்தது. அந்தத் தடையை உடைத்து கழிப்பறை நுழைவுப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நடத்தி இருக்கிறார்கள். போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக கழிப்பறையின் கதவைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு சிலர் மறைந்து விட்டார்கள். ஆனால் இங்குள்ள அரசு நிர்வாகம், கழிப்பறைக் கதவில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து கழிப்பறை நுழைவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். கோவில் கருவறைக்குள் நுழையவும் போராட்டம், கழிப்பறைக்குள் நுழையவும் போராட்டம்! நிர்வாகம் கழிப்பறைக் கதவுகளை திறந்திருக்கிறது. கருவறைக் கதவுகள் திறப்பதற்கு இன்னும் எத்தனை காலம் அவர்கள் காத்திருக்க வேண்டுமோ?
2006-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு எத்தனையோ சிக்கல்களுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், பெற்ற வெற்றிகள் குறித்து பெருமைப்பட்டுக் கொண்டு ஓய்ந்திருக்கும் நிலையில் இல்லை என்பதை அண்மைக்காலத்தில் நடந்த பல நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிருந்தா காரத் உத்தபுரம் செல்லும்போது கடந்த செப்டம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டார். பின்பு அவர் விடுவிக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்! ஆனாலும் அவர் அங்கு செல்வதைத் தடுக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு ஏன் வந்தது? தீண்டாமை இருப்பதாக புகார் இருக்கும் ஒரு கிராமத்தில், காவல்துறை என்ன நிலை எடுக்கிறது? சமூக நீதியை நிலை நாட்டுகிறதா? சட்ட நீதியை நிலை நாட்டுகிறதா? புதிதாக எந்த பிரச்னையும் இல்லாமல், இருக்கும் நிலையே அப்படியே நீடித்தால் போதும் என்ற உணர்வுதானே அரசு இயந்திரத்தில் ஊறிப் போய்க் கிடக்கிறது? மார்க்சிஸ்ட் கட்சியோ, விடுதலைச் சிறுத்தைகளோ, புதிய தமிழகத்தினரோ அங்கு போய் ‘சின்ன’ பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி விடக் கூடாது என்ற எண்ணம்தானே காவலர்கள் மத்தியில் இருக்கிறது?
சங்கரன்கோவில் பந்தப்புளி கிராமத்தில் ஒரு மாரியம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் செல்வதற்குத் தடை இருந்தது. அந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்று தலித் மக்கள் வெற்றி பெற்றார்கள். ஆனாலும் நீதிமன்ற ஆணை எளிதாக நிறைவேற்றப்படவில்லை. போராட்டங்கள், கோவில் மூடல் போன்ற பிரச்னைகளுக்குப் பிறகு முதலமைச்சர் கருணாநிதியே தலையிட நேர்ந்தது. பூட்டப்பட்ட கதவுகளைத் திறந்துவிடும்படி அவர் ஆணையிட்டார். கண்டதேவி தேரோட்டம் குறித்த சர்ச்சைக்கும் இறுதியான தீர்வு கிடைத்ததாக தெரியவில்லை. அவ்வப்போது ஏதாவது சமரசங்கள் மூலம் பெரிய அளவில் மோதல் நடைபெறாமல் தடுக்கப்படுகிறது என்பது ஆறுதலான செய்தியாக இருந்தாலும் கூட, இயல்பாக அந்த நிகழ்வு நடக்கும் நாள்தானே அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நாளாக இருக்க முடியும்?
இவையெல்லாம் முரண்பாடுகள் கூர்மையடைந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இடங்கள். இவை தவிர தடைகளை மௌனமாக ஏற்றுக் கொண்டு இன்னும் நிறைய கிராமங்கள் இருக்கக் கூடும். அரசு தாமாகவே முன்வந்து அனைத்து கிராமங்களிலும் பொதுக் கிணறு, பொது சுடுகாடு, கோவில் போன்ற இடங்களில் அனைவருக்கும் சம உரிமை இருக்கிறதா என்று பார்த்து அந்த உரிமையை உறுதி செய்யுமா? உரிமைக்கான குரலை எழுப்பும் இடங்களில் கூட நிர்வாகம் சமூகநீதிக்கு எதிராக நிற்கும்போது, அவர்கள் தாமாகவே முன்வந்து அவற்றை நிறைவேற்றுவார்களா? நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் முறையான அரசியல் பார்வை வளர்வதற்கு ஆளும் கட்சி போதுமான நடவடிக்கைகளை எடுக்கிறதா? செடிகள் வளர்வதற்கு தண்ணீரின் தேவையைப் போல், மக்கள் மத்தியில் கருத்துக்கள் பரவுவதற்கு பிரசாரம் மிகவும் அவசியம் இல்லையா? அத்தகைய பிரசாரத்தை கறாராக திமுக முன்னெடுக்கிறதா என்று கட்சித் தலைமை தீவிரமாக சிந்திக்க வேண்டும்!
-ஜென்ராம்
நன்றி:
செய்திமலர் 04.10.09
தினமலர் நெல்லை குழுமம்
0 Comments:
Post a Comment
<< Home