Friday, September 25, 2009

கழுத்தை இறுக்கும் மூன்று முடிச்சு!

ஒரு ஃபிகர் செட்டாயிருக்கு.. ஒரு இடம் வேணும்னு நீ கேட்டிருந்தா நான் என் வீட்டையே கொடுத்திருப்பேன்.. அப்படி கேட்காம நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்.. கல்யாணம் செய்து வைன்னு ஏண்டா கேட்கறீங்க” என்ற வசனத்தை கதாநாயகன் பேசும்போது தியேட்டர்களில் விசில் சப்தம் காதைக் கிழிக்கிறது.

“நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே” என்பது ’நாடோடிகள்’ திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி சொல்ல விரும்பிய விஷயமாக இருக்கலாம். ஆனால் அதைவிட வேறு ஒரு கருத்தே படத்தைப் பார்க்கும் மக்கள் மனதில் ஆழமாக பதிகிறது. காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் – அதிலும் நண்பர்களுடைய தியாகங்களுடன் ஒரு போராட்டத்தின் மூலமாக இல்வாழ்க்கையை தொடங்கியவர்கள் – தங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டாலும் பிரியக் கூடாது என்ற கருத்தே அது!

ஆனால் அந்த திரைப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சமீபத்திய வாரங்களில் நடந்த சில நிகழ்வுகள் நமக்கு பல்வேறு உணர்வுகளை அளிப்பதாகவே இருக்கின்றன.

காதலித்து கலப்பு மணம் செய்த கணவன் மீது மனைவி வரதட்சணைக் கொடுமை புகார் கொடுக்கிறார். காவல்துறை அந்தக் கணவனைக் கைது செய்கிறது. சித்தி, சித்தப்பாவுடன் சேர்ந்து கூட்டுக் குடித்தனம் செய்வதில் இருந்து விலகி தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று மனைவி கேட்டதே பிரச்னைக்கு அடிப்படை என்று செய்திகளில் இருந்து அறிய முடிகிறது. இருவரும் நன்றாகப் படித்தவர்கள். நல்ல ஊதியத்துடன் வேலை செய்பவர்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள். ஆனால் தங்களுக்குள் எழுந்த ஒரு சிக்கலுக்கு அவர்களுக்குள் பேசித் தீர்வுகாண முடியவில்லை. புகார், கைது, வழக்கு என்று போய்விட்டார்கள்.

இன்னொரு சம்பவம்.. இவர்களும் காதலித்து கல்யாணம் செய்தவர்களே. அதிலும் கலப்பு மணம் செய்தவர்கள். சமூகத்தில் இருக்கும் சாதித் தடைகளைத் தகர்த்து இருவரும் இணைந்தவர்கள். இரண்டு வருட வாழ்க்கைக்குப் பிறகு தனிக்குடித்தனம் என்ற கோரிக்கையை மனைவி முன்வைக்கிறார். கணவன் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை போல் தெரிகிறது. தொடர்ந்து போராடிய மனைவி போட்ட ’சண்டை’யின் முடிவில் அவர் கணவனால் கொல்லப்பட்டார். ” தனிக்குடித்தனம் வராவிட்டால் என்னுடைய அம்மாவையும் அப்பாவையும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுவிடுவதாக என் மனைவி மிரட்டினாள். என்னுடைய பெற்றோரைக் காப்பாற்றுவதற்கு வேறு வழி தெரியாமல் அவளைக் கொன்றுவிட்டேன்” என்று கணவன் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக செய்திகள் சொல்கின்றன.

இந்தத் திருமணங்கள் காதல் திருமணங்கள் என்பது மட்டுமல்ல; கலப்புத் திருமணங்களும் கூட; இத்திருமணங்களில் சிக்கல்கள் எழுந்தால் அவை சிறந்த முன்மாதிரிகளாக இருக்க முடியாது. அந்த சிக்கல்களை எதிர்காலத்தில் எதிர்நோக்கும் இளங்காதலர்களுக்கு தவறான எடுத்துக்காட்டுகளாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. இருந்தும் காதல் தம்பதிகள் சிலருடைய வாழ்க்கையில் பிரச்னைகள் எழுகின்றன. சமூகத்தில் ஒவ்வொரு விஷயம் குறித்தும் தனிநபர்கள் கொண்டிருக்கும் கருத்துக்களே அல்லது மதிப்பீடுகளே முரண்பாடுகளுக்கு அடிப்படை.

இந்த இரு சம்பவங்களிலும் சிக்கலுக்கான அடிப்படை என்ன என்று பார்த்தால், தனிக்குடித்தனம் போகவேண்டும் என்ற மனைவியின் கோரிக்கை. மனைவிக்கு அப்படி ஒரு எண்ணம் வரக்கூடாதா? வந்தால், அதை ஒரு கோரிக்கையாக கணவனிடம் முன்வைக்கக் கூடாதா? ஓரிருமுறை நடந்த பேச்சுவார்த்தைகளில் கணவன் அதை நிராகரித்தால், மனைவி மீண்டும் அதை வலியுறுத்தக் கூடாதா? வலியுறுத்தினால் ஏன் விபரீதமான முடிவுகள் நேர்கின்றன?

இப்படிப்பட்ட நேரங்களில் ஒருவரை ஒருவர் மதித்து, மற்றவர் சிந்தனைக்கு இடமளித்து, பரிசீலிக்கத் தயாராக இருக்க வேண்டும். நடைமுறையில் என்ன சிக்கல்கள் இருக்கின்றன என்றோ, ஏன் சாத்தியமில்லை என்றோ அல்லது மாற்று வழிகள் குறித்தோ பழைய ‘காதல்’ உணர்வுகளுடன் பேச வேண்டும். இப்படி நடக்கும்வரை விபரீத முடிவுகள் எதுவும் நிகழாது. ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது?

காதலிக்கும்போது இந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் பெண்ணுக்கு, திருமணத்திற்குப் பிறகு நிலைமைகள் மாறுகின்றன. கல்யாணம் முடிந்து சேர்ந்து வாழும் காலங்களில் மனிதர்களின் முகமூடிகள் கழன்றுவிடுகின்றன. காதலிக்கும்போது வரமாகத் தெரிந்ததெல்லாம் சில வருடங்களில் சாபமாகத் தெரிகிறது. முரண்பாடுகள் எழுகின்றன. என்ன பிரச்னையாக இருந்தாலும் பெண் அடங்கி அனுசரித்துப் போக வேண்டும் என்றே நமக்கு போதிக்கப்படுகிறது.

ஓர் ஆணும் பெண்ணும் ஒரு ‘பார்ட்டியில்’ அறிமுகமானார்கள்; வார இறுதிப் பார்ட்டிகளிலேயே சந்தித்து நண்பர்களானார்கள்; பிறகு காதலர்களாகித் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த வளர்ச்சிக்கு பல மாதங்கள் ஆயின. ஆனால், திருமணம் முடிந்த எட்டாவது நாள் விவாகரத்துக்காக அவர்கள் வழக்கறிஞர்களை நாடினார்கள். கணவன் ஓய்வில்லாமல் பணி ஆற்றும் தன்மை கொண்டவன். அல்லது இன்றைய பணிச்சூழல் எல்லோரையும் அப்படித்தான் இருக்க வைக்கிறது. வீட்டில் மனைவிக்கு ‘போர்’ அடித்தது. அவள் மீண்டும் வழக்கமாக போகும் பார்ட்டிகளுக்கு போக ஆரம்பித்தாள்.

‘திருமணம் ஆனபிறகு என்ன கூத்தடிக்க நினைக்கிறே’ என்று கணவனே மனைவிக்குத் தடை விதித்தான். பார்ட்டியில் பார்த்து, பார்ட்டியில் நட்பாகி, பார்ட்டியில் காதலித்து கல்யாணமும் செய்து கொண்ட கணவன், இப்படி ஒரு தடை விதிப்பான் என்பதை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஏமாற்றம் அவளுள் வெறுமையை உருவாக்கியது. கணவனின் இரட்டை நிலை அவன் மீது வைத்திருந்த மரியாதையைக் குறைத்தது. மிகச் சிறிய வேறுபாடு மணவிலக்குக்குக் காரணமாகி விட்டது.

எதிர்பாலினருடன் உள்ள நட்பு, தனிக்குடித்தனம், குழந்தை பெற்றுக் கொள்ளும் காலத்தை தீர்மானித்தல், கணவனைவிட மனைவிக்குக் கூடுதல் ஊதியம் மற்றும் சமூக முக்கியத்துவம் உள்ளிட்ட எத்தனையோ காரணங்கள் குடும்பத்தில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த முரண்பாடுகள் கூர்மையடைந்து விவாகரத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளுகின்றன. மண விலக்கு ஏமாற்றமளிக்கும் நிகழ்வாக இருந்தாலும் அது கொலை, சிறை போன்ற விபரீதமான முடிவல்ல! காதல் அழிவதில்லை, ஒரு முறை காதல் உணர்வு தோன்றினால் சாகும்வரை அது மாறாது, காதல் போயின் சாதல் போன்ற கருத்துக்களை நம்மிடம் சிலர் விற்கிறார்களே, அவர்கள் இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது என்ன செய்கிறார்கள்? பெரும்பாலான ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை எப்படி வெளியிடுகின்றன?

மாறி வரும் சமூக நிலைகளை கருத்தில் கொள்ளாமல், குடும்ப அமைப்பில் பெண்களுடைய நியாயமான உணர்வுகளைக் கூட அடக்க நினைக்கின்றன. காதல் திருமணங்களும் கலப்புத் திருமணங்களும் சிக்கல்களில் முடிகின்றன என்ற உணர்வை உருவாக்குகின்றன. தனிக்குடித்தனம் கேட்கும் பெண், ’பார்ட்டி’ போகும் மனைவி ஆகியோர் அடங்காத பெண்கள் என்றும் ‘குடும்பத்திற்கு’ ஏற்றவர்கள் அல்லர் என்றும் கருத்தைப் பாதுகாப்பதில் துணைநிற்கின்றன.

எப்படி காதல் திருமணங்களில் சில விபரீதங்களில் முடிகின்றனவோ, அவற்றைப் போலவே எல்லா உறவுகளிலும் விதிவிலக்குகள் இருக்கின்றன. தன்னுடைய தந்தை அல்லாத ஒருவருடன் தாய் இருந்ததைப் பார்த்த சிறுவயது மகளை அவளுடைய தாய் கொன்ற செய்தி சில வாரங்களுக்கு முன் வந்தது. தான் வேறொருவருடன் கொண்ட உறவைக் கண்டித்த வயது வந்த மகனை ஒரு தாய் கொலை செய்தாள் என்ற பரபரப்பு செய்தியை நீங்கள் இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள்.

காதல், பாசம், நட்பு போன்ற எந்த உறவிலும் விதிவிலக்குகள் ஒருபோதும் பொதுவிதிகளாவதில்லை!

- ஜென்ராம்

நன்றி: தினமலர் (நெல்லை குழுமம்)

23.08.09

0 Comments:

Post a Comment

<< Home