அமைதிக்கான அணு ஆயுதங்கள்?
காந்தியின் இதழ்களில் தவழும் புன்னகை ஒரு நொடியில் தோன்றியிருக்கலாம். ஆனால் நம்முடைய வாழ்நாள் முழுக்க அவருடைய முறுவல் நினைவில் இருக்கிறது. அதைப்போல சோகமான நினைவுகள் நமக்கு எப்போதும் நினைவில் இருக்கின்றனவா? ஆகஸ்ட் 15, ஜனவரி 26, அக்டோபர் 2 ஆகிய நாட்களை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்கிறோம். ஆனால் ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் நடந்த நாள் நமக்கு உடனே நினைவுக்கு வருகிறதா? மகாத்மா காந்தியும் இந்திரா காந்தியும் சுட்டுக் கொல்லப்பட்ட நாட்களை உங்களால் உடனே கூற முடியுமா? இந்திய ஜனநாயகத்தை இருட்டுக் கொட்டடியில் அடைக்க முயன்ற நெருக்கடிநிலை பிரகடனம் வெளியிடப்பட்டது எந்த ஆண்டில்? வெலிக்கடை சிறையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் போன்ற போராளிகள் சிங்கள வன்முறையாளர்களால் கொல்லப்பட்டது எந்நாளில்? முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சிங்கள ராணுவம் நடத்திய கிழமை என்ன? நம்மால் உடனடியாக பதில் சொல்ல முடியாது. நாம் நம்மை பாதித்த சோகமான நிகழ்வுகளை மறக்க நினைக்கிறோம். அவற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களை கற்க மறுக்கிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்போது நம்முள் தோன்றிய ‘கனலை’ நாம் ஊதிப் பெரிதாக்கி அழிக்க வேண்டியவற்றை அழிக்க முயல்வதில்லை!
அப்படி நாம் மறந்து கொண்டிருக்கும் பல நாட்களில் ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய இரண்டு நாட்களும் இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் முடிவில் தேவையில்லாமல் அமெரிக்க ராணுவம் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுகுண்டை வீசிய நாட்கள் அவை. இந்த நாட்களை ஏன் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்? இந்த இரு நிகழ்வுகளும் நமக்கு உணர்த்தும் செய்திகள் என்ன? அந்த பாடங்களில் இருந்து நாம் ஏதேனும் கற்றுக் கொண்டிருக்கிறோமா?
இரண்டாம் உலகப் போர் என்பது ஹிட்லரின் ஆதிக்கப் போக்கை எதிர்த்த ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ’நியாயமான’ அல்லது தற்காப்புப் போர் என்பது பலரின் நம்பிக்கை. ஆனால் போரின் முடிவில் 1945 ஆகஸ்ட் 6-ம் நாள் அமெரிக்க விமானம் ஹிரோஷிமா நகர்மீது ‘குட்டிப் பையன்’ என்ற அணுகுண்டை வீசியது. ஆறுமாதங்களாக ஜப்பானின் 67 பல்வேறு நகரங்கள் மீது குண்டுமழை பொழிந்த அமெரிக்கா இறுதியாக இந்த அணுகுண்டை போட்டது. குண்டு விழுந்த நொடியிலேயே எழுந்த பெரும் தீப்பிழம்பில் ஏறத்தாழ முழுநகரமும் சாம்பலானது. 140000 பேர் உயிர் இழந்தார்கள். 1945 ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி நகரின்மீது வீசப்பட்ட ‘குண்டு மனிதன்’ என்ற குண்டால், ஏறத்தாழ 80000 பேர் உயி இழந்தார்கள். இதன் விளைவாக ஹிட்லரின் கொடுமைகளைவிட அமெரிக்காவின் அணு ஆயுத பிரயோகம் உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களால் பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. அதாவது நியாயமான காரணங்களால் இறங்கிய ஒரு போரில் அமெரிக்கா வெற்றி பெற்ற போதிலும், வரலாறு அமெரிக்காவின் நியாயத்தை நினைவில் கொள்ளப் போவதில்லை. வெற்றியை அடைவதற்கு அது செயல்பட்ட விதத்தைத்தான் பாடமாக பதிவு செய்து கொண்டிருக்கிறது.
உயிர் இழப்புகள், கதிர்வீச்சினால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று விவரிக்க முடியாத பேரிழப்புகளை மீறி அந்த இரு நகரங்களும் மீண்டு வந்ததில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவும் விஷயங்கள் இருக்கின்றன. இழப்புகளில் இருந்தும் பலவீனமான நிலையில் இருந்தும் மீண்டு வெற்றிகரமான பாதைக்கு வருவதற்கான நம்பிக்கையை அந்த நகரங்கள் இப்போதும் விதைக்கின்றன என்பது வேறு விஷயம். ஆனால் போருக்கு எதிரான பொதுக்கருத்தை இந்த சம்பவங்கள் நம்முள் உருவாக்கினவா? அணு ஆயுதங்கள் என்ற பேச்சே இல்லாத நிலை இந்த உலகில் உருவாகி இருக்க வேண்டும். ஆனால் அந்த நிலையிலா நம் உலகம் இன்று இருக்கிறது?
“வார்த்தைகளை கவனமாகக் கையாளுங்கள்; ஏனென்றால் அவை அணுகுண்டுகளை விட வலிமையானவை” என்பார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையைப் பார்க்கும்போது இரண்டிலுமே உலக நாடுகள் கவனமாக இல்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அணு ஆயுதங்களுக்கு எதிராக வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டே ஒவ்வொரு நாடாக அணு ஆயுதங்களைத் தயார்செய்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே தயாரித்த அணுகுண்டுகளை அழிப்பதற்கும் வல்லரசுகள் தயாராக இல்லை என்ற நிலையே நீடிக்கிறது. ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் அணுகுண்டுகளை வீசிய அமெரிக்காவின் கைகளில் இன்னும் 5200 அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று அமெரிக்க அணு விஞ்ஞானிகளின் அதிகாரபூர்வமான அறிக்கை சொல்கிறது. இந்த ஆண்டு மட்டும் அணு ஆயுத ஆய்வுக்காக ஒபாமா அரசாங்கம் 600 கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்கி இருக்கிறது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா ஆகிய ஒன்பது நாடுகளிடம் மட்டும் 27000 அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இவை பூமியைப் போல கோள்களை அழிக்கும் வல்லமை கொண்டவை.
64 வருடங்களுக்கு முன்னதாக வீசப்பட்ட அணுகுண்டுகளான குட்டிப் பையனும் குண்டு மனிதனும் அளவில் சிறியவை. இவை ஏற்படுத்திய அழிவையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த அறுபது ஆண்டுகளில் அறிவியல் ஆய்வு மற்றும் வளர்ச்சி இன்னும் பல மடங்கு அழிவை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட ஆயுதங்களை உருவாக்கி இருக்கும். ’குட்டிப்பையனி’ன் எடை 15 கிலோ டன். இப்போதைய ஏவுகணைகளோ 170 கிலோ டன், 300 மற்றும் 335 கிலோ டன் எடை கொண்ட குண்டுகளை எடுத்துச் சென்று தாக்கும் சக்தி கொண்டவை. ரஷ்யாவும் அமெரிக்காவும் அவர்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், 12 நிமிடங்களில் 100000 ஹிரோஷிமாக்களை அழிக்க முடியும் என்கிறது ஓர் ஆய்வு.
நினைத்துப் பார்க்கும்போதே உடல் நடுங்குகிறது. கற்பனை செய்து பார்ப்பதற்கு மனம் பதறுகிறது. 64 வருடங்களாக ஹிரோஷிமா, நாகசாகி நினைவு நாட்கள் பல்வேறு நாடுகளால் வெறும் சம்பிரதாயமாக அனுசரிக்கப்படுகின்றன. அணு ஆயுதங்களுக்கு எதிராக உண்மையில் குரல் கொடுப்பவர்கள் உலகம் முழுவதும் சிறுபான்மையாகவே இருக்கிறார்கள். தம்முடைய ஆயுதக் கிடங்கில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளை சுதந்திர நாடுகளாகக் கருத முடியாது என்று ஒலிக்கும் குரலை யார் கேட்கிறார்கள்? இருந்தும் 64-வது முறையாக உலகின் பல பகுதிகளில் ஒலிக்கும் அந்தக் குரல்களுடன் நம்மை இணைத்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது? அணு ஆயுதம் ஏதாவது ஒரு நாட்டின் கையில் இருக்கும் வரை உலகில் அமைதி பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது!
-ஜென்ராம்
நன்றி: தினமலர் (நெல்லை குழுமம்)
09.08.09
0 Comments:
Post a Comment
<< Home