Sunday, February 26, 2006

தொகுதிப் பங்கீடு

கடந்த 2005 அக்டோபர் 15 ஆம் தேதி "தொகுதிப் பங்கீடு" என்று ஓர் இடுகை போட்டிருந்தேன். அதை இப்போது மீள் பதிவாக இடுகிறேன். அடுத்த வாரத்திற்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. காலத்தால் மிகவும் முன்னதாக அந்த இடுகை போட்டிருந்த காரணத்தால், இப்போது மீண்டும் அதையே போடுகிறேன்.

தொகுதிப் பங்கீடு

வருகிற 2006 ஆம் வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது. சாதாரணமாக இந்தத் தேர்தலைக் கடந்த ஐந்தாண்டு கால அ.இ.அ.தி.மு.க. அரசின் ஆட்சி மீதான மக்கள் தீர்ப்பு என்றே ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் கூறுவார்கள்.

ஐந்தாண்டு கால ஆட்சியின் போது மக்களுக்கு செய்த சேவையை முன்னிறுத்தி மக்கள் முன் பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல அ.இ.அ.தி.மு.க. தயாராக இருக்கிறது.ஆனால் இந்த நிமிடம் வரை கூட்டணிக்குக் கட்சிகள் எதுவும் அ.இ.அ.தி.மு.க.வுக்குக் கிட்டவில்லை.எதிர்க் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தவும், ஓரிருவரை தமது பக்கம் இழுக்கவும் முயற்சிகள் நடப்பதாக யூகங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. சில "லெட்டர் பேடு' கட்சிகளுடன் இணைந்து அனைத்துத் தொகுதிகளிலும் "இரட்டை இலை' நிற்கும்.

ஜெயலலிதாவை எதிர்க்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் திமுக, காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம், இந்திய தேசிய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இருக்கின்றன. இவை தவிர மக்கள் தமிழ் தேசம், எம்.ஜி.ஆர் கழகம் உள்ளிட்ட பல சிறிய கட்சிகளும் இக்கூட்டணியில் கை கோர்த்து நிற்கின்றன.

இந்நிலையில் இந்தக் கூட்டணியில் 234 தொகுதிகளைப் பிரித்துக் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்று ஆளும்கட்சித் தரப்பில் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இது ஒரு சிக்கலே அல்ல என்பது போல் திமுக தலைவர் கருணாநிதி சில நாட்களுக்கு முன்பு ஒரு கருத்தைச் சொன்னார். ""மொத்த தொகுதிகளையும் நான் கையில் வைத்திருந்து ஒவ்வொரு கட்சிக்கும் பிரித்துக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து அவரவர்க்கு வேண்டிய தொகுதிகளைப் பிரித்து எடுத்துக் கொள்வோம்'' என்று கூறியிருந்தார். இந்த முறையில் அவர்கள் யார் யார் எவ்வளவு எடுத்துக் கொள்வார்கள் என்று எண்ணிப் பார்த்ததன் விளைவாக இந்த பட்டியலை அளிக்கிறோம்.

கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது, பாண்டிச்சேரி உள்ளிட்ட நாற்பது தொகுதிகளை இதே கூட்டணி பிரித்துக் கொண்டது. திமுக 16, காங்கிரஸ் 10, பாமக 6, மதிமுக 4, சிபிஐ 2, சிபிஎம் 2 என்று போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். அதே விகிதாச்சாரத்தில் 234 தொகுதிகளையும் பிரித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால், இந்த விகிதாச்சாரத்தின்படி பார்த்தால் திமுக 100க்கும் குறைவான தொகுதிகளில்தான் போட்டியிட முடியும். ஆனால் திமுகவோ தனி ஆட்சி நடத்துவதற்குக் குறைந்தபட்சம் 118 இடங்கள் பெற வேண்டும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சையே திமுக விரும்பவில்லை. எனவே 118 இடங்களில் திமுக வெற்றி பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 140 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்று திமுக தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் திமுகவுக்கு 140 இடங்கள் போட்டியிட வாய்ப்பில்லாவிட்டாலும் கூட, முஸ்லீம் லீக், ராஜ கண்ணப்பன், டாக்டர் சேதுராமன், ஆர்.எம்.வீ. ஆகியோரின் கட்சி வேட்பாளர்களை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடச் செய்தாவது 140 என்ற இலக்கை எட்டி விடுவார்கள்.

அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற ஒதுக்கீட்டின்படி பார்த்தால் 60 சீட் கிடைக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை. எனவே 50 சீட் கேட்டு இறுதியில் 40 சீட்களில் பேரம் முடிவடையலாம். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி இருப்பதால், 40க்கும் குறைவான இடங்களைப் பெறுவதற்கு காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொள்ளாது.

ஆனால் எப்படியாவது இந்தக் கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் இன்னும் அதிக இடங்கள் கோரலாம். இதனால் தொகுதிப் பங்கீட்டில் கடுமையான இழுபறி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் 40 சீட் என்பதை இறுதியில் தலைமை ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியில் எதிர்பார்ப்பு 40 சீட்களுக்கு இருக்கக்கூடும். ஆனால் திமுக கூட்டணி ஆட்சிக்குத் தயாராக இல்லாததும், தனிக்கட்சி ஆட்சிக்கு 140 இடங்கள் போட்டியிட வேண்டிய அவசியம் இருப்பதாலும் பா.ம.க.வுக்கு 40 சீட்கள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே டாக்டர் ராமதாஸ் 25 சீட்களுடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதிருக்கும். இதே தேர்தல் நேரத்தில் பாண்டிச்சேரியிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு கூடுதல் இடங்களுக்கான கோரிக்கையுடன் 25 இடங்களுடன் மனநிறைவு கொள்ளலாம். மத்தியில் கூட்டணி ஆட்சியில் பா.ம.க.வைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சராக இருப்பதால், கூட்டணியை விட்டு வெளியேறும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே தெரிகிறது. ஆனால் இதையும் மீறி மாநிலத்தில் வேறு கூட்டணியில் நல்ல பலன்கள் கிடைக்கக் கூடும் என்று பா.ம.க. கருதினால் மட்டுமே கூட்டணியில் இருந்து வெளியேறுவார்கள்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்தக் கூட்டணியில் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. கருணாநிதியை அடுத்த முதல்வராக்குவதே இப்போதைய லட்சியம் என்று வைகோ எல்லா மேடைகளிலும் முழங்கி வருகிறார். சன் தொலைக்காட்சியுடன் இருக்கும் முரண்பாட்டை மீறி அரசியல் ரீதியாக திமுகவுடன் மிகவும் நெருங்கி இருக்கிறது மதிமுக. இவர்களது எதிர்பார்ப்பு 25 இடங்களாக இருக்கக்கூடும். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் பாசத்திற்குக் கட்டுப்பட்டு, வைகோ 15 முதல் 20 இடங்களுடன் கூட்டணியைத் தொடர்வார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் சென்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தபோது தலா 8 இடங்களில் போட்டியிட்டன. இப்போதும் அதே நிலைமை தொடரக்கூடும். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துக்கொள்ளும். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெகுநாட்களாகவே திமுகவும் அ.இ.அ.தி.மு.க.வும் தங்களை சிபிஐயுடன் சமமாகப் பாவிப்பதை எரிச்சலுடன் சகித்துக் கொண்டு வந்துள்ளது.

"2006 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை வீழ்த்துவதே எங்கள் நோக்கம்'' என்று அரசியல் தீர்மானம் போட்டிருந்தாலும் கூட திமுக குறைந்த இடங்களை ஒதுக்கினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. இருந்த போதிலும் இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து 16 இடங்களுக்கு மேல் கிடைக்கும் வாய்ப்பு இருக்காது.

மீதி இருக்கும் முஸ்லீம் லீக், மக்கள் தமிழ் தேசம், எம்.ஜி.ஆர். கழகம், புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் திமுக வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் அல்லது திமுகவின் இதயத்தில் கிடைத்த இடத்துடன் மன நிறைவு கொள்வார்கள்.

பிற கட்சிகளுக்கு இந்த எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கினாலே, திமுகவுக்கு 140 இடங்கள் வரவில்லை. இரண்டு இடங்கள் குறைகின்றன. ஓரிரு இடங்களைப் பிற கட்சிகளுக்குக் குறைத்தோ அல்லது திமுக ஓரிரு இடங்களைத் தியாகம் செய்தோ ஓர் உடன்பாட்டை எட்டிவிடக் கூடும்.

இன்றைய சூழ்நிலையில் இருக்கக்கூடிய கூட்டணி நிலவரப்படி தொகுதிப் பங்கீடு இப்படி இருக்கக்கூடும் என்று கணிக்கிறோம். அரசியல் கட்சிகள் எப்படி பிரித்துக் கொள்கின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திருமாவளவனையும் இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்வேன் என்கிறார் டாக்டர் ராமதாஸ். நடுவில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சிலிர்த்துக் கொண்டு நிற்கிறது.

7 Comments:

At 4:27 PM, Blogger பாரதி said...

தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்க்கும் போது கடந்த நான்கு மாதங்களில் அரசியல் சூழலில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.உங்கள் மீள்பதிவும் அதையே உறுதி செய்கிறது.

ஆனால் தொகுதிகளைத் தேர்வு செய்யும் போது கூட்டணிக் கட்சிகளுக்கிடையே உரசல்கள் வர வாய்ப்புள்ளது. கலைஞர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று பார்க்கலாம்.

 
At 6:31 PM, Blogger BALAJI said...

திமுக ஆட்சியை பிடிக்க......

மற்ற கட்சிகளின் பலத்தை பயன்படுத்துகிறது......

ஒரு பெரிய கட்சி இப்படி மற்ற கட்சிகளிடம் தியாகம் செய்யுங்கள் என்று யாசகம் செய்வது சரியில்லை....

 
At 6:31 PM, Blogger BALAJI said...

திமுக ஆட்சியை பிடிக்க......

மற்ற கட்சிகளின் பலத்தை பயன்படுத்துகிறது......

ஒரு பெரிய கட்சி இப்படி மற்ற கட்சிகளிடம் தியாகம் செய்யுங்கள் என்று யாசகம் செய்வது சரியில்லை....

 
At 7:44 PM, Blogger ராம்கி said...

பாரதி:
உரசல்கள் வரலாம்..ஆனால் அவை சமாளிக்கப்படும். கூட்டணியை முழுவதுமாகத் தேர்தல் முடியும் வரை கொண்டு செல்வதன் அவசியத்தை கலைஞர் உணர்ந்திருக்கிறார் என்றே அறிய முடிகிறது..

மேலும் அதற்கான அவசியமும் பொறுப்பும் கூட அவருக்குத்தான்..

 
At 7:45 PM, Blogger ராம்கி said...

வேறு வழியில்லை பாலாஜி.. வெற்றி தான் முக்கியம் என்னும் போது அவர்களால் இதைத் தவிர்க்க இயலாது.

 
At 8:32 PM, Blogger selvan said...

(D)MK knows that he can face Jaya in this election only with his alliance parties. So he has to fulfill all his alliance parties demands.He can succeed to keep th alliance with him till election. But it is not possible to keep them for 5 years ruling. Because Cong. and PMK will demand participation in the govt. Cong.will threaten DMK, like the way DMK now threatening Cong. Even Jaya lose, she will have piece of mind after election.Because DMK alliance wants only power and they are not interested taking revenge of Jaya. But DMK goal is to keep Jay out of politics. DMK's alliance parties knows well that only Jaya can handle DMK.After election, all the DMK alliance parties will support Jaya. DMK should be prepared themselves.

 
At 11:13 AM, Blogger கருப்பு said...

Similar ratio was there @ the other end last time. Still the result is going to be the same.

 

Post a Comment

<< Home