Monday, February 13, 2006

ராகுல் வழிபாடு!

காங்கிரஸ் மாநாட்டிற்காக ஹைதராபாத் நகரில் கூடிக் கலைந்த காங்கிரஸ் தலைவர்களின் பேச்சும் செயலும் எதிர்பார்த்த விதத்திலேயே இருந்தன. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி வலுவாக இருக்கும் மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற முழக்கங்கள் நமது முகத்தில் அறைகின்றன.

மூன்று நாட்கள் கும்ப மேளாவைப் போல் கூடிக் கலைந்தது மட்டுமில்லாமல் ஒவ்வொருவரும் கட்சியை எள்ளி நகையாடும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறார்கள்; ஆம்! ராகுல் காந்திக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்று கோரி இருக்கிறார்கள்.

இந்த முழக்கத்தை முதலில் பார்ப்போம். பங்களா காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கூட்டணியிடம் 1967 இல் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது. ஆனால் அந்தக் கூட்டணி அரசை இந்திரா பதவி இழக்கச் செய்தார். 1969 இல் மீண்டும் நடந்த தேர்தலில் அதே சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தன. காங்கிரஸ் மீண்டும் மண்ணைக் கவ்வியது. ஆனால் 1972 இல் மீண்டும் காங்கிரஸ் உயிர்த்தெழுந்து ஆட்சியைப் பிடித்தது.

1971 இல் பங்களா தேஷ் விடுதலைப் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திரா காந்தி பெற்ற வெற்றி அவரை தேசிய தலைவியாக உயர்த்தியது. ஓவியர் எம்.எஃப் ஹுசேன் அவரை துர்காதேவியாக சித்திரம் வரைந்தார். பல மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும் மேற்கு வங்கத்தில் ஏராளமான வன்முறைக்குப் பிறகே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்திராவின் ஆணையைச் செயல்படுத்தி 1972 தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் மூலம் வெற்றி தேடித்தந்த சித்தார்த்த சங்கர்ரே மேற்கு வங்க முதல்வரானார். நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு முன்பே அரசாங்க வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். பொய் வழக்குகளில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வளவு அடக்குமுறைக்கும் நெருக்கடிநிலைப் பிரகடனத்திற்கும் பிறகு நடந்த 1977 தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. ""பர்கா நடவடிக்கை'' என்ற பெயரில் நிலச்சீர்திருத்தம் தொடங்கியது. இந்த நடவடிக்கையே கட்சிக்கு பொதுமக்களிடம் பேராதரவைப் பெற்றுத் தந்தது. மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்த்து சலசலப்பை ஏற்படுத்தக் கூடியவராக காங்கிரசில் இருந்த ஒரே தலைவர் மமதா பானர்ஜிதான். அவரும் இப்போது காங்கிரசில் இல்லை. அவர் இல்லாத மேற்கு வங்க காங்கிரஸ் வெறும் காகிதப் புலிதான்!

கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள். மேற்கு வங்கத்தைப் போல் முழுவதுமாக கேரளத்தில் காங்கிரஸ் செல்வாக்கை இழந்துவிடவில்லை. 1957 இல் முதன் முதலாக ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை மக்கள் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்தனர். ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான மாநில அரசைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி "ஜனநாயகத்தை'த் தழைக்கச் செய்தார் பண்டிதர் ஜவஹர்லால் நேரு!

ஆனால் இன்று அங்கு காங்கிரசின் நிலை என்ன? கே.கருணாகரன் வெளியேறி தனிக்கட்சி தொடங்கியபின், காங்கிரஸ் கட்சி கலகலத்து நிற்கிறது. ஏதேனும் அற்புதம் நிகழ்ந்தால்தான் அங்கு காங்கிரசைக் காப்பாற்ற முடியும்! ஏ.கே.அந்தோணி உம்மன் சாண்டி போன்றவர்கள் மீதிருந்த மயக்கம் மக்களுக்குத் தெளிந்து விட்டது. காங்கிரசும் கருணாகரனும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு தொண்டர்களின் ஒரு பகுதியை பாரதிய ஜனதா கட்சியிடம் பறிகொடுக்கப் போகிறார்கள்.

திரிபுராவில் மத்திய அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவ் முஷ்டி உயர்த்துகிறார். கள்ள ஓட்டு போடச் செய்வதில் அவர் வல்லவராக இருந்த போதிலும், காங்கிரஸ் வெற்றி அங்கு கஷ்டம் என்றே தெரிகிறது. மாணிக் சர்க்கார் தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்திற்கு மக்களிடம் கெட்ட பெயர் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மூன்று அல்லது நான்கு மாதங்களில் இந்த மூன்று மாநிலங்களும் சட்டசபைத் தேர்தல்களைச் சந்திக்க இருப்பதால், இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழகத்திலும் தேர்தல் வர இருக்கிறது. இங்கும் காங்கிரசின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளில் ஒன்று முப்பது இடங்கள் தந்தாலே, கட்சி "உயிர்ப்புடன்' இருக்க முடியும் என்பதே அவர்கள் நிலை. ஆம். நீங்கள் நினைப்பது சரிதான்! பீகாரையும் உத்தரப் பிரதேசத்தையும் விட தமிழகத்தில் காங்கிரஸ் நிலைமை பரவாயில்லைதான்! ஆனால் அதற்கும் இந்த முறை திமுக தலைவர் கருணாநிதி மனம் வைக்க வேண்டும். இவர்களது கோரிக்கையை அவர் நிராகரித்தால், இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த நிலையில் ராகுலுக்கு மகுடம் சூட்டினால் கட்சி வளர்ந்துவிடும் என்ற ஒற்றை மந்திரத்தை காங்கிரஸ் தலைவர்கள் ஜெபிக்கத் தொடங்கியுள்ளனர். ராகுலுக்கு மகுடம் என்ற முழக்கம் அவர்களது நம்பிக்கையைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக அவர்களால் எதுவும் செய்ய இயலாத கையறு நிலையையே காட்டுகிறது.

சரி விடுங்கள். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனது புதைகுழியைத் தானே தோண்டிக் கொள்ளும் உரிமை உண்டு! காங்கிரசுக்கு யாரேனும் அந்த உரிமையை மறுக்க முடியுமா என்ன? அதேபோல் நம் ஒவ்வொருவருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் உரிமையும் உண்டு. "ராகுல்' என்ற ஒற்றை மந்திரம் எல்லா பின்னடைவுகளையும் சரிசெய்து விடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைப்பது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயலே அன்றி வேறல்ல.

காங்கிரஸ் தலைவர்களைப் போலவே இந்திய மக்களும் நம்புவார்கள் என்று சொல்வதற்கில்லை. ராகுல் காந்தியின் கையில் உள்ள ஆட்சிச் செங்கோல் செல்வதன்
மூலம் தங்கள் பிரச்னைகள் அனைத்தையும் அவர் தீர்த்து விடுவார் என்று மக்கள் நம்புவார்கள் என்று கருதுவதற்கில்லை.

தாங்கள் மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவருமே ராகுலுக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்று விரும்புவதாக காங்கிரஸ் தலைவர்கள் சொல்கிறார்கள். இது உண்மையா?

நன்றி: தினமலர் செய்தி மலர் (29.01.2006)
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் இலவச இணைப்பு

1 Comments:

At 12:57 PM, Blogger tbr.joseph said...

"ராகுல்' என்ற ஒற்றை மந்திரம் எல்லா பின்னடைவுகளையும் சரிசெய்து விடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைப்பது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயலே அன்றி வேறல்ல.//

உண்மைதான். காங்கிரஸ் தலைவர்களுக்கென்ன முன்பு இ.காந்திக்கு ஜால்ரா.. இப்போது சோ.காந்திக்கு.. கொஞ்சம் கழித்து ரா.காந்திக்கு அடிப்பார்கள்.. அப்புறம் அவருடைய வாரிசுக்கு.. இதுதான் தொடர்கதையாக நடக்கும்..

கர்நாடகாவில் நடக்கவில்லையா அல்லது தநாவில் (முக - ஸ்டாலின், மூப்பனார்-வாசன், ராமதாஸ்-அவர் மகன் (பேர் மறந்திருச்சு!) நடக்கவில்லையா?

வாரிசு அரசியல் நமக்கொன்னும் புதுசில்லையே..

 

Post a Comment

<< Home