Monday, October 31, 2005

பெயரில் தெரியும் அடையாளங்கள்

" நீ தமிழா முஸ்லீமா?"

பாலர் வகுப்பில் சேர்ந்த முதல் நாள்.
சக குழந்தையிடம் இருந்து வந்த இந்தக் கேள்விக்கு அந்தச் சிறுமியால் பதில் அளிக்க முடியவில்லை. இந்தக் கேள்விக்கான பதில் அவளுக்குத் தெரியவில்லை.

அந்தச் சிறிய நகரத்தில் வசிக்கும் மக்களிடையே தமிழ் என்றும் முஸ்லீம் என்றும் பிரிவுகள் இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

பள்ளி செல்லும் காலத்திற்கு முன்னர் வீட்டுக்கு வந்து அவளைக் கொஞ்சும் அப்பாவின் நண்பர்கள் விசு, கணேஷ், அழகேசன், ஹாஜா, மார்ட்டின் போன்றோரை அப்பாவின் நண்பர்களாக மட்டுமே தெரியும்.

அவர்களை இந்து, கிறித்தவர், இஸ்லாமியர் என்று அவள் புரிந்திருக்கவில்லை. 3 வயது முடிந்திருந்த நிலையில் அவளுக்கு இதெல்லாம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

"அப்படீன்னா என்ன அர்த்தம்? நீ கேக்கறது எனக்குப் புரியலே!"

" நீங்க தமிழ் ஆளுங்களா முஸ்லீம் ஆளுங்களான்னு கேட்கறா" பக்கத்தில் இன்னொரு மழலை.

"எனக்குத் தெரியலையே"


ஆசிரியை வருகிறார்.

வகுப்பில் இருக்கும் குழந்தைகள் பெயரைக் கேட்கிறார்.

ஒவ்வொரு குழந்தையும் பெயர் சொல்லி பெயர் சொல்லி அமர்கிறது.

இவளும் எழுந்து சொல்கிறாள்.

டீச்சரின் கேள்வி." நீங்க கிறிஸ்டியனா?"

மீண்டும் குழந்தை தனது மழலைப் பருவத்தை இழக்கிறது.

காலையில் இருந்து இரண்டாவது முறை..விடை தெரியாத – கேள்விப்படாத சொற்கள்..கேள்விகள்..

"தெரியலை மிஸ்"



ஆசிரியை விடவில்லை. குழந்தைக்கு எளிதில் புரிய வைக்க முயற்சிக்கிறாராம்.

"நீங்க கோவிலுக்கு போவீங்களா, சர்ச்சுக்கு போவீங்களா?"

"இந்த ஊர்ல நாங்க எங்கேயும் போக மாட்டோம். எங்க சொந்த ஊருக்குப் போனா மட்டும் தாத்தா பாட்டியோட கோவிலுக்குப் போவோம்"

" அப்ப நீங்க இந்துதான்.. அப்புறம் ஏன் உனக்கு இந்தப் பெயரை வைச்சிருக்காங்க?"

முதன் முதலாக அவளது பெயரில் ஏதோ தப்பு இருக்கிறது என்ற எண்ணம் அவளுக்கு விழுந்தது.

அப்பா, அம்மா, அவர்களுடன் பிறந்தவர்கள், தாத்தா, பாட்டி போன்ற உடனடி உறவு மற்றும் நட்பு வட்டம் தவிர மற்றவர்களில் பலர் தன்னை தனது பெயரில் அழைக்காமல் "ஜனனி" என்று அழைப்பதும் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

அலுவலகத்தில் இருந்து மாலை வீடு திரும்பிய தந்தையிடம் சிறுமி கேட்டாள்:

"ஏம்ப்பா எனக்கு இந்த பெயரை வச்சே?"

பெண்ணின் முதல் நாள் பாலர் வகுப்பு அனுபவத்தைக் கேட்டறிய ஆவலுடன் வந்த அப்பாவுக்கு அதிர்ச்சி..

குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினார். குழந்தை சொல்லச் சொல்ல காலையில் பள்ளியில் நடந்த கதையைக் கேட்டார்.

அம்மா புத்தக அலமாரியில் இருந்து ஓர் ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து வந்தார். அதனுள் ஒரு பக்கத்தில் இருந்த ஒரு குடும்ப போட்டோவில் ஒரு பெண்மணியைக் காட்டி, " இவங்க ரொம்ப நல்லவங்க.. அதனால தான் இவர் பெயரை உனக்கு வைச்சிருக்கோம்," என்றார்.

"அது சரிம்மா..இவங்க தமிழா முஸ்லீமா "

பள்ளியில் கற்ற பாடத்தை வீட்டில் உரசிப் பார்த்தாள் சிறுமி.

குழந்தையின் காயத்தை அப்பாவும் அம்மாவும் உணர்ந்தனர். குழந்தையை அன்புடன் கட்டிக் கொண்டு சொன்னார்கள்.

" நம்ம மாதிரியே அவங்களும் மனுஷங்க.. அவ்வளவு தான்."

குழந்தைக்கு புரிந்ததோ இல்லையோ உரையாடல் முற்றுப் பெற்றது.


அன்று தொடங்கிய பிரச்னை இன்று வரை தொடர்கிறது.

அடுத்ததாக வந்த வகுப்புகளில் பெயர்க்காரணம் தெரியாமல் புலனாய்வு எல்லாம் நடந்தது. அது ஒரு சிறிய நகரமாக இருந்ததால் பிற குழந்தைகளின் வீடுகளிலும் நடந்த விவாதங்கள் நண்பர்களுக்குத் தெரிய வந்தன..

அப்பாவுக்கு அந்தப் பெயரில் யாராவது “தோழி” இருந்திருப்பார்கள், அதனால் அந்தப் பெயரை வைத்திருக்கலாம் என்று வியாக்கியானங்கள்..

அப்பாவின் நண்பர்கள் மத்தியில் கூட என்னதான் இருந்தாலும் பெயர் தமிழ்ப் பெயராக இல்லை என்று விமர்சனம்..

மாலனின் சொல்புதிது என்ற புத்தகத்தில் திருமாவளவன் தனது தந்தை உள்ளிட்ட பலருக்கு இந்துப் பெயர்களை மாற்றி தமிழ்ப் பெயர் வைத்த நிகழ்ச்சி குறித்து எழுதியிருந்தார். பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். பெயர் ஒரு பண்பாட்டின் வெளிப்பாடு என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். பெயரிலோ தோற்றத்திலோ மத அல்லது சாதி அடையாளங்கள் வெளிப்படக் கூடாது என்ற கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒருவரது பெயரைக் கேட்கும்போதே அந்தப் பெயருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிற சாதி, மதம் அறிந்து கொள்ள பலர் முயற்சி செய்கிறார்கள். பெயரில் அவர்கள் விரும்பும் பதில் கிடைக்காவிட்டால் அடுத்தடுத்து பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.

“போராடும் தொழிலாளர்க்கு
ஜாதி இல்லை மதமும் இல்லை
கொள்கை உண்டு கோஷங்கள் உண்டு
கோரிக்கைகள் சிலவும் உண்டு
கோரிக்கைகள் நிறைவேற
கோடிக் கைகள் போராடும்”
என்றெல்லாம் பல ஊர்வலங்களில் முழக்கங்கள் எழுப்பப்படும்.

ஊர்வலம் முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது ஒவ்வொருவரும் அவரவர் சாதியினராகவே மாறிவிடுகிறார்கள்.

குடும்பம் சாதிப் பழக்க வழக்கங்களிலேயே பெரும்பாலும் இயங்குகிறது.

எனவேதான் சாதி, மதம் அறியும் கேள்விகளை எங்கு போனாலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பெயரைக் குழந்தைகளுக்கு வைப்பது பெரும்பாலும் பெற்றோரே. அவர்கள் வைக்கும் பெயரால் குழந்தைகள் சிரமப்படும் என்றால் அது சரியா? இது பெற்றோரின் தவறா? சமூகம் இப்படிப் பல நுட்பமான விலங்குகளால் மனிதர்களை நிலவும் சமூக அமைப்பை மீறிச் செயல்படவிடாமல் கட்டிப் போட்டு வைத்திருக்கிறதா?

சென்னைக்கு ஏழாவது வகுப்புக்கு வந்து சேரும்போது உடன் படித்த மாணவர்கள் அவளது பெயரை அகராதியில் தேடி “பெண் கழுதை” என்று கிண்டல் வேறு..

இந்த நிலைக்கும் முன்னரே அவளுக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கானவர்கள் குறித்து அவள் அறிந்திருந்தாள். உயர்நிலைப் பள்ளி வரும்போது கொஞ்சம் முதிர்ச்சி இருந்ததால் கிண்டலும் கேலியும் அவளுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

உயர்நிலைப்பள்ளி முடித்து மேல்நிலைப் பள்ளி சேர்க்கைக்காக சென்றிருக்கும்போதும் கல்லூரியில் சேர்ந்தபிறகும் அவளது பெயர் அவளைக் கிறித்தவரா என்ற கேள்வியை எதிர்கொள்ள வைத்தது. சமீபத்தில் நடந்து முடிந்த கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்ற சில நிறுவனங்களின் நேர்காணலிலும் “உங்களுக்கு ஏன் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்?” என்ற கேள்வி தொடர்ந்திருக்கிறது.

அவள் இப்போதெல்லாம் தெளிவாகச் சொல்கிறாள். “ இது கார்ல் மார்க்ஸின் மனைவி பெயர். அவருக்கு இதே பெயரில் ஒரு குழந்தை கூட இருந்ததாம். நான் பிறந்தபோது என் அப்பா மார்க்சீயத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அதனால் அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள்.”

''ஆயிரந் தட்டல்களுக்குத்
திறக்காத கதவும்
உன்
ஒரே மிதியில் திறந்து கொள்ளும்

அந்த நம்பிக்கையோடு
உன்
அடுத்த அடியை எடுத்து வை." என்கிறார் வைரமுத்து.

ஜென்னி இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது!

69 Comments:

At 10:59 AM, Blogger இராம.கி said...

ஆழமான செய்தியைத் தொட்டிருக்கிறீர்கள். பெயரை வைத்து சாதி கண்டுபிடிக்கும் பழக்கம் பெரிதும் இங்கே விரவிக் கிடக்கிறது.

திருமாவளவனின் தமிழ்ப்பெயர் முயற்சி பெரிதும் பரவ வேண்டியது என்றே நான் எண்ணுகிறேன்.

அதே பொழுது ஜென்னி என்ற பெயரின் பின்புலம் தெரியாதவருக்கு இந்தப் பெற்றோர் என்ன விளக்கம் கொடுத்தாலும் புரியவா போகிறது?

இன்னும் ஆழச் சிந்திக்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

 
At 11:06 AM, Blogger ஜென்ராம் said...

இராம.கி. ஐயா அவர்களுக்கு,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

 
At 11:13 AM, Blogger துளசி கோபால் said...

வாங்க நட்சத்திரமே!

தீபாவளி ஸ்பெஷலா?

ஜமாய்ங்க.

வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
துளசி.

 
At 11:17 AM, Blogger ஜென்ராம் said...

துளசியின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி..நன்றி...
தீபாவளிக்கு இங்கே ஒன்றும் "ஸ்பெஷல்" கிடையாது. நியூசிலாந்து ஸ்பெஷலை தாணுவுக்குத் தெரியாமல் எப்படியும் நீங்கள் வலைப்பதிவில் போட்டுவிடுவீர்கள்..

 
At 11:23 AM, Blogger Jayakumar said...

பெயரில் ஒன்றும் இல்லைதான். ஆனால் தனது கொள்கைகள் மீதான பற்றை குழந்தைகள் மீது ஏற்றுவதில் ஒரு வகையான அசட்டுத்தனம் தான் தெரிகிறது. எங்கள் ஊரில் ஸ்டாலின், லெனின், ஹிட்லர் , சதாம் எல்லாம் இருக்கிறார்கள்.

தொடர்ந்து மின்னுங்கள்

 
At 11:29 AM, Blogger -/பெயரிலி. said...

ஸ்டேசன் பெஞ்ச் ராம்கி,
இக்குறிப்பு சொல்வது நிறைய

 
At 11:42 AM, Blogger Badri Seshadri said...

good beginning as a star!

 
At 11:59 AM, Blogger ஜென்ராம் said...

ஜேகே:
//தனது கொள்கைகள் மீதான பற்றை குழந்தைகள் மீது ஏற்றுவதில் ஒரு வகையான அசட்டுத்தனம் தான் தெரிகிறது.//
எந்தப் பெயர் வைத்தாலும் அது ஒரு கொள்கையின் வெளிப்பாடுதானே? அப்பா/அம்மாவின் பெயரைக் குழந்தைக்கு வைப்பதும் ஒரு கொள்கை வழிப்பட்டது என்றே நான் கருதுகிறேன். என்ன, அது பெரும்பான்மையினரது கருத்துக்கு ஒத்துப் போகிறது..எனவே "அசட்டுத்தனம்" பரவலாகத் தெரிவதில்லை.

 
At 12:03 PM, Blogger ஜென்ராம் said...

பெயரிலி:
உண்மைதான். ஓரிரு வரிகளில் போகிற போக்கில் சில முரண்பாடுகளைச் சுட்டியிருக்கிறேன்.அவை தனியாகவே ஒரு பதிவாக விவாதத்திற்கு உரியவை. ஆனால் "ஆழமான" முத்திரை கிடைத்து விடக் கூடாதே..


பத்ரி:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

 
At 12:06 PM, Blogger ramachandranusha(உஷா) said...

நட்சத்திரம் ஆரம்பிக்கும்பொழுதே, பளீரிடுகிறதே! வாழ்த்துக்கள்.
அந்த காலத்தில் தலைவர்கள் பெயரை வைத்து பெற்றவர்கள் டார்சர் கொடுத்தார்கள் என்றால் இப்பொழுது சமஸ்கிருதம் போல தோன்றும் ஆனால் இல்லை என்கிற பெயர்கள். சமீபத்தில் கேட்ட பெயர்கள்- மிக்கிதா( கூப்பிடுவது மிக்கி), சிட்ரா.. இவை இரண்டும்வாயில் நுழைகிறது. சில எத்தனை முறைக் கேட்டாலும் மனதில் நுழைவதில்லை :-)

 
At 12:06 PM, Blogger முகமூடி said...

பெரிய விஷயத்தை சுருக்கமாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த வாரம் கலக்கல் வாரமாக அமையட்டும். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 
At 12:51 PM, Blogger Voice on Wings said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள், ராம்கி. ஆரம்பமே அமர்க்களமாகவுள்ளது.

 
At 1:03 PM, Blogger பினாத்தல் சுரேஷ் said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

சிந்தனையைத் தூண்டும் ஆரம்பம். "சாமி" படத்தில் வருவது போல, காது விடைப்பதை வைத்தே ஜாதி கண்டுபிடிக்க ஆசைப்படும் கும்பல், பெயரை மட்டும் விட்டா வைக்கும்?

 
At 1:11 PM, Blogger ஜென்ராம் said...

உஷா:
ஒரு பெயர் டார்ச்சரா இல்லையா என்பதை யார் முடிவு செய்வது? விஷ்ணுவின் இரு அவதாரங்களை என் பெயராக வைத்திருக்கிறார்கள்.அவை எனக்குள் பக்தியை வளர்க்கவில்லை. டார்சர் யாருக்கு? பெயருக்கா? பெற்றோருக்கா?

 
At 1:13 PM, Blogger ஜென்ராம் said...

முகமூடி,வாய்ஸ் ஆன் விங்க்ஸ் மற்றும் சுரேஷ்:
வருகை தந்து உற்சாகப்படுத்தியதற்கு நன்றி.

 
At 1:30 PM, Blogger Thangamani said...

நல்ல பதிவு! ஆழமான பதிவு எழுத இப்படி பயப்படலாமா??

 
At 2:05 PM, Blogger ramachandranusha(உஷா) said...

சுஷ்ருஷிதா, அத்வைத்.. இருங்க யோசிச்சிக்கிட்டு இருக்கேன். அன்று தமிழ்பெயர் வைப்பது பேஷன் என்பதுப் போல இன்று வித்தியாசம் என்று இஷ்டத்திற்குப் பெயர் வைத்து பெற்றோர்கள்தான் டார்சர் செய்கிறார்கள். என் பள்ளியில் ஒரு பெண் பெயர் கோப்பெருந்தேவி. கிண்டல் அடிப்பார்களா மாட்டார்களா? ஆசிரியர்களே அவள் பெயரை கிண்டலாய் உச்சரிப்பார்கள், தான் பதினெட்டு வயதானதும் பெயரை சித்ரா என்று மாற்றிக் கொள்ளப் போவதாய் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
அன்றும், இன்றும் பிரபலமான ஒருவர் தன் மகளுக்கு "மண்டோதரி" என்று பெயர் சூட்ட ஆசைப்பட்டு, மனைவி "குழந்தையை
எல்லாரும் மண்டு, மண்டு என்று சுருக்கி விடுவார்கள்" என்று அழுது புலம்பி வேறு பெயர் வைத்ததாக என்றோ படித்த செய்தி.

 
At 2:07 PM, Blogger ஜென்ராம் said...

நன்றி தங்கமணி..புரிய வேண்டியவர்களுக்குப் புரியாமல் போய்விடக் கூடாது என்ற பயம் தான். அதனால்தான் பயமுறுத்தும் சொற்களை விலக்கி முயன்றிருக்கிறேன்.

 
At 2:10 PM, Blogger ஜென்ராம் said...

உஷா: தகவலுக்கு நன்றி..இருந்தும் ராவணன் என்ற பெயர் தமிழகத்தில் சகஜம். திராவிட இயக்கங்கள் இப்போது இது போன்ற பண்பாட்டு மாற்றங்களை முதன்மைப்படுத்தவில்லையோ என்று எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

 
At 3:16 PM, Blogger இராம.கி said...

This comment has been removed by a blog administrator.

 
At 3:16 PM, Blogger இராம.கி said...

அவர்கள் இதையெல்லாம் விட்டொழித்து எவ்வளவோ நாளாயிற்றே?

கொள்கை, படிப்பு, பகுத்து அறிதல், சிந்தனை இன்னும் இது போன்ற பலவும் நீர்த்துப் போய், பணம், புகழ், பதவி, தான் என அவர்கள் சரிந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?

எல்லாம் இந்த 35 ஆண்டுகளில் கரைந்து போயிற்று. அவர்களை இதற்கெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்.

அன்புடன்,
இராம.கி.

 
At 5:41 PM, Blogger பத்மா அர்விந்த் said...

ராம்கி
நல்ல பதிவு. நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்து

 
At 7:38 PM, Blogger Unknown said...

ராம்கி,
ஒரு பெரிய விசயத்தை சொல்லி இருக்கின்றீர்கள்.
நான் கூட பெயரில் என்ன இருக்கிறது என்று நினைத்தது உண்டு. பெயரில் எல்லாம் இருக்கிறது
இது பற்றி நானும் எழுத நினைத்தது உண்டு. இது போன்ற விசயங்களை எழுதினாலே அது சாதி,மத எல்லைக் கோட்டைத் தொடும் அபாயம் இருப்பதால் கொஞ்சம் பயம் :-).

நட்சத்திர வாழ்த்துக்கள்

 
At 12:11 AM, Blogger குமரன் (Kumaran) said...

ராம்கி, ரொம்ப நல்ல பதிவு.

 
At 12:24 AM, Blogger சிவா said...

நல்ல தரமான பதிவு. நல்ல நடை.

மதம் தான் பொதுவாக பெயர் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அப்புறம் ஜாதகம் ( ம்-ல தொடங்கற மாதிரி பேர் வச்சா..பெரிய ஆளா பையன் வருவான்..இப்படி சில கேணத்தனங்கள்). அப்புறம் தன் பிள்ளை பள்ளியில் போய் முதல் எண்ணாக வந்து கஷ்டப்பட கூடாதே என்று, அ-வில் வராமல், ம்,ந்-தில் பேர் வைப்பது. இப்படித்தான் இருக்கிறது இன்றைய பேர் வைக்கும் நிலைமை. தாத்தா பாட்டி சொன்னாங்க..பெற்ற அன்னை ஆசைப்பட்ட பெயர்..இதெல்லாம் யாரும் பார்ப்பது மாதிரி இல்லை...

 
At 6:34 AM, Blogger ஜென்ராம் said...

தேன்துளி, குமரன், கல்வெட்டு:

வாழ்த்துக்களுக்கு நன்றி.

 
At 7:29 AM, Blogger ஜென்ராம் said...

சிவபுராணம்: முதல் வருகைக்கு நன்றி..

 
At 8:00 AM, Blogger Ramya Nageswaran said...

இந்த வார நட்சத்திரமா? வாங்க, வாங்க..

நல்லா எழுதியிருக்கீங்க. மதம் சார்ந்த ஒரு கருத்து கேள்விப்பட்டேன் என் மகனுக்கு பெயர் தேடும் பொழுது... கலியுகத்தின் கடவுளை மறந்து, கோயில், பூஜை போன்ற விஷயங்களில் ஈடுபாடு குறைந்து போய் விட்டதால், குழந்தைகளுக்கு கடவுளின் பெயரை வைத்தால் அப்படியாவது அவரின் பெயரை வீட்டில் உச்சரிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நண்பர் ஒருவர் சொன்னார்.

 
At 8:11 AM, Blogger Vassan said...

தமிழ் - இணையத்தில் பல தடவைகள் பேசப்பட்ட விதயமென்றாலும், நீங்கள் எடுத்துக்காட்டி எழுதியுள்ள விதம் படிக்க பிடித்துள்ளது. என்னுடைய அங்குமிங்குமான 2 நயா பைசா கருத்துகள்:

பெயர் என்பது ஒரு நபருடன் பேசுவதற்கு முக்கியமாக பயன்படுவது. இதில் போய் மொழிப்பற்று, இனப்பற்று போன்றவற்றை காண்பிப்பது வேடிக்கை. இப்படி பெயரிடப்பட்ட ஆசாமிகள் ஓர் சிலர் புலம் பெயர்ந்துவிட்டு, எவன் வாயிலும் நுழைய முடியாத பெயர்களை வைத்துக் கொண்டு இன்னற்படுவது, பட்டால்தான் பிறருக்கு புரியும்.

ஒரெயொரு உதாரணம்: என் தம்பிக்கு வைக்கப்பட்ட பெயர் நிரஞ்சன் திருஞானசம்பந்தம். ஆங்கிலத்தில் எழுதினால், Niranjan Thirugnanasambandam - இது முதல் பெயர் மட்டும். தமிழனற்ற எத்தனை பேரால் இதை பேந்த பேந்த விழிக்காமல் சொல்ல பார்க்க முடியும், சொல்லுங்கள்.. ? தற்போது எல்லோரும் அவரை கூப்பிடுகிற பெயர் Gene! எந்த குறைவு வந்துவிடாமல் இன்னும் தமிழராகவே உள்ளார்.

ஒரு ஐயம்: இந்தியாவில் தெலுகுபாபு,கன்னடவர்த்தனா என்றெல்லாம் பெயருண்டா என்பதை தெரிந்தவர்கள் சொல்லலாம்.

வடமொழியில் இடப்படும் பெயர்களால் ஒரு நல்லகாரியமுண்டு. இந்து பெயர்களில் குறிப்பிட்ட பெயர்களை வைத்து,இவனவன் இந்த வகுப்பு என்றாலும் கணித்து பலர் அதற்கேற்றபடி நடந்து கொள்ளலாம். இதற்கு இப்போதெல்லாம் வாய்ப்புகள் குறைவு.
இருந்தாலும், பொன்னி, வானதி, சுடர், அமுதன்,கதிர்,மாசிலன் போன்ற பெயர்களிலிருக்கும் இனிமையும்,எளிமையும் வடமொழி பெயர்களுக்கு இருக்க முடியாதுதான்.

4 நிமிடங்களுக்கு முன்பு எனக்குத் தோன்றிய ஒரு நகை துணுக்கு:

முதல் பேர்வழி: ஏங்க, எல்லோரையும் போல உங்க குடிசைய தளமா கட்டாம,தரைக்கு மேல நாலஞ்சு அடி ஏத்தி கட்டியிருக்கீங்க.. ?

2ம் பேர்வழி: எல்லாம் எங்க அப்பனால வந்த வினை. என் பெயரை இமயவரம்பன்னு வச்சுட்டு போயிட்டாரு.. பெயர் வச்ச அப்பன் பெயரை காப்பாற்ற என்னால் முடிஞ்சத செஞ்சிருக்கேன்...

-வாசன்

 
At 9:59 AM, Blogger ஜென்ராம் said...

வாசன்:
//பெயர் என்பது ஒரு நபருடன் பேசுவதற்கு முக்கியமாக பயன்படுவது. இதில் போய் மொழிப்பற்று, இனப்பற்று போன்றவற்றை காண்பிப்பது வேடிக்கை.// இதில் வேடிக்கை என்ற சொல் கூட உங்கள் கருத்தை மற்றவர் மீது திணிப்பதாக அல்லது பெயர் வைப்பதற்கு அவருக்கு உள்ள உரிமை மீதான கிண்டலாக உள்ளது.

எல்லா பெயர்களுமே பெற்றோரின் கருத்து சார்ந்தே இடப்படுகின்றன என்பதே என் கருத்து. ஆனால் ஒரு சில பெயர்கள் அவர்கள் வாழும் சமூகத்தில் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன என்று சுட்டிக் காட்டவே முயன்றிருக்கிறேன்.

நன்றி வாசன்.

 
At 10:03 AM, Blogger ஜென்ராம் said...

ரம்யா:
நன்றி. எனக்குப் பிடித்த பெயர்கள் பெயரிலி, முகமூடி, தெருத்தொண்டன்,பொடிச்சி போன்றவை. ஏனெனில் இவை எந்த அடையாளங்களையும் வெளிப்படுத்தவில்லை. மேலும் இவை பெற்றோரால் இடப்பட்டதுமில்லை. :-)

 
At 11:56 AM, Blogger Ramya Nageswaran said...

ராம்கி..புனைப் பெயர் வைத்துக் கொள்வதில் அடையாளங்கள் வெளிப்படுவதில்லை என்று எப்படி சொல்லுகிறீர்கள்? விஷயம் தெரிந்தவர்கள் இவர்கள் தேர்ந்தெடுத்துள்ள புனைப்பெயரிலிருந்தே இவர்களின் personalityஐ ஓரளவு தெரிந்து கொண்டு விடுவார்கள். Any takers?

 
At 1:20 PM, Blogger ஜென்ராம் said...

நான் பொதுவாக புனைபெயர்களைச் சொல்லவில்லை, ரம்யா. வலைப்பதிவுகளில் இருக்கும் சில பெயர்களை மட்டுமே குறிப்பிட்டேன். அவர்களது எழுத்தை வைத்து அவர்களைப் பற்றி எடை போடலாம். சரியாகத் தான் கண்டுபிடித்திருக்கிறோம் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே ஒரு நடையைப் பற்றி தெரிந்திருக்கும் பட்சத்தில் அவர் புதிதாக புனைபெயரில் வந்து எழுதினால்(மாடர்ன் கேர்ள் மாதிரி) கண்டுபிடிக்க முடியலாம்.

 
At 2:37 PM, Blogger மதுமிதா said...

ராம்கி இந்த வார நட்சத்திரமாமே.ஒளிருங்க.
ரஜினி ராம்கினு மாறுன உடனேயே ஒளிர ஆரம்பிச்சவங்க தானே?

சரி பெயருக்கு வருவோம்.

பரிதிமாற்கலைஞர் நினைவிருக்கா?
தெரிஞவங்க யாரு வேணாலும் சொல்லலாம்.

பிறகு முக்கிய ரகசியம் உங்களுக்கு மட்டும் ராம்கி

நிர்மல் கவிதைகள் தமிழுலகை கலக்கப்போகிறது.
(யார் யார் யார்???)
அனைத்தும் ரகசியம்.
ஆறு மாதங்களுக்குப் பின்பே
யாரென்ற உண்மை வெளிப்படும்.
(நிர்மலின் அனுமதியின்றி இங்கு இட்டு விட்டேன்.)
மன்னிச்சுக்கோங்க நிர்மல்.
எனக்கு மட்டும் நன்றி சொல்லுங்க.
உங்களை தமிழுலகத்துக்கு கவிதைகள் வருவதற்கு முன்பே அறிமுகப் படுத்தியதற்காக.

 
At 3:11 PM, Blogger Chandravathanaa said...

ராம்கி
நல்ல பதிவு.
சிந்திக்க வைக்கும் பதிவு

 
At 5:28 PM, Blogger ஜென்ராம் said...

மதுமிதா:
//ரஜினி ராம்கினு மாறுன உடனேயே ஒளிர ஆரம்பிச்சவங்க தானே?//


நான் அவரில்லை. வாழ்த்துக்களுக்கு நன்றி.

 
At 5:29 PM, Blogger ஜென்ராம் said...

சந்திரவதனா:
பதிவுக்கு வருகை தந்தமைக்கும் கனிவான சொற்களுக்கும் நன்றி.

 
At 6:11 PM, Blogger தருமி said...

இவ்வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

அதே ஜென்னி என்ற பெயர்; சில மாதங்களுக்கு முன்புதான் இதே தப்பை நானும் செய்தேன் - எப்படி, ஏன் இந்த பெயர் என்று கேட்டு. செய்த தவறின் கனம் இப்போதுதான் புரிகிறது.

ரம்யா, "விஷயம் தெரிந்தவர்கள் இவர்கள் தேர்ந்தெடுத்துள்ள புனைப்பெயரிலிருந்தே இவர்களின் personalityஐ ஓரளவு தெரிந்து கொண்டு விடுவார்கள்" என் personality பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

 
At 10:17 PM, Blogger ஜென்ராம் said...

தருமி சார், //அதே ஜென்னி என்ற பெயர்; சில மாதங்களுக்கு முன்புதான் இதே தப்பை நானும் செய்தேன் - எப்படி, ஏன் இந்த பெயர் என்று கேட்டு. செய்த தவறின் கனம் இப்போதுதான் புரிகிறது.//
தவறென்று இல்லை.ஓர் ஆர்வம் காரணமாக பலருக்கு இயல்பாக அந்தக் கேள்வி வந்து விடுகிறது.அந்த ஆர்வம் எதன் அடிப்படையில் அமைகிறது என்பது விவாதத்திற்குரிய விஷயம்தான்.

 
At 10:22 PM, Blogger தாணு said...

ராம்கி
தீபாவளியன்று மட்டும்தான் வெளியே செல்ல பரோல் கிடைத்ததால் ரெண்டுநாள் ப்ளாக் பார்க்கலை. வாழ்த்துக்கள்.

பெயர் படுத்தும் பாடுகள் பற்றி ஒரு பதிவே போடுமளவு நிறைய எதிநோக்குகள் சந்தித்திருக்கிறேன். ஆனாலும், ஜென்னியின் அனுபவங்கள் இன்றுதான் தெரிந்தது.

 
At 10:53 PM, Blogger மதுமிதா said...

மன்னிக்கவும் ராம்கி

ரஜினி ராம்கி அல்ல என்று தெரிந்தே வாழ்த்துகிறேன்

சிறந்த பதிவு

பெயரில் எல்லாம் இருக்கிறது
என்பதே என் கருத்தும்.

 
At 10:55 PM, Blogger தருமி said...

This comment has been removed by a blog administrator.

 
At 10:59 PM, Blogger தருமி said...

ராம்கி,
et tu ramki! -தருமி சார்??

அந்தப் பெயர் என் சின்ன மகளின் பெயராகவும் இருந்தது இன்னொரு காரணமாயிற்று.
யார் கண்டது - நாம் இருவரும் ஒரே ஆளைப் பற்றிப் பேசுகிறோம் என்றுதான் நினைக்கிறேன். மூன்று ஒற்றுமைகள்: அப்பெண்ணின் தந்தை ஒரு மார்க்ஸியவாதியாக இருந்தார் என்றும், அதனால் அந்தப் பெயர் தனக்கு வைக்கப்பட்டதாகவும் அப்பெண் கூறினார். பொறியியல் படித்தவர் அந்த ஜென்னி - உங்கள் ஊரில்தான் (சென்னை).
After all, world is small and round, they say!

 
At 11:10 PM, Blogger மதுமிதா said...

ராம்கி

இப்பதான் இங்கிருந்து போனதும் பத்ரி பதிவைப் பார்த்தேன்.

அம்ரிதா காலமெய்திய பதிவு.
மறுபடி இங்கே வந்துவிட்டேன்.

பெயரில் எல்லாம் இருக்கிறது
ராம்கி.

எனது மகன் பெயர் பத்ரிநாத்.
இதனால் பத்ரி என்ற பெயர் யாராக இருந்தாலும் சாப்ட் கார்னர் அனிச்சையாய் வந்துவிடும்.

அந்த தந்தை ஜென்னியின் பெயர் வைத்ததில் ஆச்சர்யமில்லை.
மார்க்ஸியத்தின் மீதான ஈடுபாட்டினால்.

அம்ருதா ப்ரீதம் என்றால் அழிவில்லாததில் விருப்பமுடையவர் என்று அர்த்தம்.

இலக்கியத்திலும்,இலக்கியம் நேசிப்பவர் உள்ளத்திலும்
அழிவில்லாமல் எப்போதும் வாழ்வார்.

 
At 5:03 AM, Blogger Thangamani said...

வாசனின் சில கருத்துகள் தொடர்பாக:

தமிழர்களுக்குதான் பெயர் வைக்கும் பொது அதை வடநாட்டில் உள்ளவர்கள் வாயில் நுழையுமா என்ற பழக்கம் இருந்தது. இப்போது அமெரிக்கர்கள் வாயில் நுழையுமா என்று பார்க்கிற மனப்பான்மை இருக்கிறது போலும். நீங்கள் சொல்லுகிற நடைமுறை சிரமத்தை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் வாயில் நுழையாத ஸ்பானிய, பிரஞ்சு, இலத்தீன் அமெரிக்க பெயர்களைப் பற்றி இப்படி நாம் நினைப்போமா என்று தெரியவில்லை.

 
At 5:51 AM, Blogger பத்மா அர்விந்த் said...

நாம் முயற்சி செய்து இதாலிய, அமெரிக்க, பெயர்களை உச்சரிக்கும் போது சில தமிழர்கள் நாதன் என்பதை நேதன் என்றும் வத்ஸன் என்பதை வாட்சனாகவும் இன்னமும் பல அமெரிக்க பெயர்களை கொண்டும் இருக்கின்றனர். இது விற்பனை துறையில் அதிகம். ஒருவேளை வாடிக்கையாளர்களை கவர இருக்கலாம். ஆனால் என்னதான் பெயரை மாற்றினாலும் உச்சரிப்பை, பழக்கங்கலை, மற்றும் முக அமைப்பு போன்றவை காட்டி தராதா என்ன?

 
At 6:58 AM, Blogger Ramya Nageswaran said...

தருமி சார், நான் விஷயம் தெரிந்தவள் என்று எப்படி நினைத்தீர்கள்? பெயரை வைத்தா? :-) நான் சொன்னது உண்மையிலேயே விஷயம் தெரிந்தவர்களைப் பற்றி..கையெழுத்தை பார்த்து personalityஐ சொல்லும் நிபுணர்களைப் போல.....

***********************
தாய்லந்து நாட்டுப் பெயர்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உதாரணம்: Dolly Warotamasikkhadit. என் கணவருடன் படித்தவர். அவர் முதல் பெயரும் dolly இல்லை. அதையாவது சுலபமாக கூப்பிடும் படி ஆக்கிக் கொள்ளலாம் என்பதால் மாற்றிக் கொண்டேன் என்று சொன்னார். இதை வேறு சில புலம் பெயர்ந்த தாய் நண்பர்களிடமும் பார்த்திருக்கிறேன்.

 
At 8:13 AM, Blogger ஜென்ராம் said...

தாணு:
//தீபாவளியன்று மட்டும்தான் வெளியே செல்ல பரோல் கிடைத்ததால்//
ஒரு நாள் பரோல் என்றால் உங்கள் மருத்துவமனைக்கு நீங்கள் ஒரு நாள் போகவில்லை என்று பொருள். விவரம் தெரியாதவர்கள் ஏதோ எழில் ஒரு சர்வதிகாரி அல்லது சிறை அதிகாரி என்று நினைத்துவிடப் போகிறார்கள்.
Thanu என்ற பெயருக்கும் சமீபத்திய வருடங்களில் பிரச்னை இருந்திருக்கும்.
ஊரில் இருந்து சென்னை வந்து SBOA பள்ளியில் சேர்ந்த போது she-ass என்ற கிண்டல். சிறுவயதில் “ஏன்ப்பா இந்தப் பெயரை வைச்சே” என்று ஓரிரு முறை கேட்டிருக்கிறாள். அப்போது என்னதான் நியாயம் நம் பக்கத்தில் இருந்தாலும் ஜென்னியைக் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்றறியும் போது மனம் வலிக்கத்தான் செய்யும்.

 
At 8:13 AM, Blogger ஜென்ராம் said...

மதுமிதா:
//ரஜினி ராம்கி அல்ல என்று தெரிந்தே வாழ்த்துகிறேன்//
நன்றி.. நிர்மல் கவிதைகள் குறித்தெல்லாம் நீங்கள் எழுதியிருந்தது நீங்கள் அவரென்று கருதி எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கச் செய்தது.

 
At 8:14 AM, Blogger ஜென்ராம் said...

தருமி:
//et tu ramki! -தருமி சார்??//
மன்னிக்கவும் தருமி. மிகுந்த குழப்பத்தில் யோசித்து யோசித்து போட்டு அடித்து போட்டு அடித்து கடைசியில் அந்த பிரிட்டிஷ் அதிகார வார்த்தையைப் போட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

நீங்கள் குறிப்பிடும் ஜென்னியின் சகோதரி பெயர் கியூபாவா? உலகம் மிகச் சிறியதாக இருப்பின் உங்களிடம் இருந்து ஆம் என்ற பதில் கிடைக்கக் கூடும்.

நான் பதிவில் குறிப்பிட்டிருப்பது என் மகள் ஜென்னியின் அனுபவங்களைத்தான் !

 
At 8:14 AM, Blogger ஜென்ராம் said...

தங்கமணி, தேன் துளி:
சரியாகச் சொல்லியிருக்கீங்க.. இன்னொருவர் வாயில் நம் பெயர் நுழையுமா நுழையாதா என்ற கவலை நமக்குத் தேவையில்லை. தமிழ்நாட்டிற்குள்ளாகவே பல தமிழ்ப் பெயர்கள் சிக்கி சின்னாபின்னமாகின்றன. மதுரை பக்கத்தில் இருந்து சென்னை வந்த இளைஞர் கருப்பையா என்ற தனது பெயரை “நவீன”மாக மாற்றிக் கொண்டாராம். விற்பனைப் பிரிவில் அந்தப் பெயருடன் பணிபுரிவதில் இடர்ப்பாடுகள் உள்ளன என்று காரணம் சொன்னாராம். நேற்று இப்பதிவைப் பார்த்த அலுவலக நண்பர் சொன்னார். உண்மை நிலையை எதிர்கொள்ளும் மனத் துணிவை நாம் படிப்படியாக இழந்து வருகிறோம்.

 
At 8:15 AM, Blogger ஜென்ராம் said...

ரம்யா:
ஜப்பானிய மொழியில் “ல,ள,ழ” இல்லையாம். அதவது L இல்லையாம். அதை நினைத்து இங்கு நாம் ல,ள.ழ, இல்லாமலே பெயர் வைக்க முயல முடியுமா? Dolly டோக்கியோ போனால் டோரி ஆகிவிடுவார்:-)

 
At 8:36 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ராம்கி: //SBOA பள்ளியில் //

வாவ்! என் பள்ளிக்கூடம்!!

மெட்ரிக்கா சிபிஎஸ்சியா?

நான் மெட்ரிக். இடம் மாறுவதற்கு முன்னாடி இரண்டும் ஒண்ணா இருந்தப்ப முடிச்சுட்டேன். தம்பியும் அப்படித்தான். தங்கை இடம் மாறின மெட்ரிக்கில் முடித்தாள்.

நல்ல பதிவு. இதைமட்டும் சொல்ல வரணுமான்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்ப, பள்ளிக்கூடப்பெயர்.

ம்ம்.. அறிமுகமான பெயர்கள் நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் நான் யோசிக்க வேண்டும். உதா: மதுமிதா சொன்ன பத்ரி-பத்ரிநாத்.

ரம்யா: சீனர்களும் ஆங்கிலப் பெயர்களை பிறருக்காகப் பயன்படுத்துகிறார்கள். இதைப்பற்றி என் நண்பர்களுடன் பெரிய விவாதமே செய்திருக்கிறேன்.

-மதி

 
At 8:42 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

முன்னெப்போதோ எங்களூரில் நல்ல தமிழ்ப்பெயர்கள் வைப்பார்களாம். இப்போதெல்லாம் என்னென்னமோ பெயர்கள். அர்த்தமும் இல்லாமல், வாய் சுளுக்கும்படி பெயர்கள்.

நீண்ட பெயர்கள் வைப்பதில் எனக்கும் விருப்பமில்லைதான். ஆனால் அருள், கதிர், மாசிலன், நித்திலன் என்று வைக்கப்படும் பெயர்கள் பிடித்திருக்கின்றன. பெண்குழந்ொயொன்றிற்கும் 'முகில்' என்று பெயர் வைத்தார்கள் சமீபத்தில். இப்படிப் பெயர் வைப்பது நன்றாகவிருக்கிறது. இல்லையா?

-மதி

 
At 9:32 AM, Blogger துளசி கோபால் said...

நியூஸியிலே மவோரி இனப்பெயர்களும் இப்படித்தான்.

ரொம்பக் கஷ்டப்படணும்.

 
At 9:35 AM, Blogger ஜென்ராம் said...

மதி.. நன்றி.. எஸ்பிஓஏ சிபிஎஸ்ஈ பத்தாவது வரை..பிளஸ் 2 மெட்ரிக்..

 
At 11:24 AM, Blogger ஜெ. ராம்கி said...

Ramki sir,

Good post.

//
(i) குடும்பம் சாதிப் பழக்க வழக்கங்களிலேயே பெரும்பாலும் இயங்குகிறது.

(ii) எனவேதான் சாதி, மதம் அறியும் கேள்விகளை எங்கு போனாலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது
//

I differ this point. I don't think (ii) is not the direct effect of (i). I don't know the exact reason but, i can guess there is some other strong reason :-)

 
At 2:22 PM, Blogger G.Ragavan said...

எந்தப் பெயரையும் வைக்கலாம். தமிழிலும் வைக்கலாம். வேறு மொழிப் பெயரும் வைக்கலாம். அதில் தவறில்லை. பெயரை வைத்து ஒருவரின் பின்புலத்தை அலசும் அநாகரீகமே ஒழிய வேண்டும்.

விரும்பிய கடவுளின் பெயரை வைப்பதும் தவறாகாது. அவரவர் விருப்பம் அது. தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப் படுத்த முடியாது. அது பிறமதத் தமிழர்களின் உணர்வைப் பாதிக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்து சாலமன் பாப்பையா ஒருவரே பல எதிர்ப்புகளை மீறி தனது மகனுக்குச் செல்வம் என்று பெயர் சூட்டியிருக்கிறார். அவரது தமிழுணர்வை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

அப்படித் தமிழ்ப் பெயர் வைக்க விரும்புகின்றவர்கள் வைக்கலாம். விரும்பாதவர்கள் விடலாம். அதுதான் சரி.

பெயர் மாற்றங்களிலும் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. பெற்றோர் வைத்த பெயர். அதை ஏன் மாற்ற வேண்டும்? வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்துவது எளிதாகிறது? அரபிய ஆங்கிலப் பெயர்களையும் அப்படி மொழி பெயர்க்க வேண்டுமா! அது வேண்டாத வேலை.

உங்களுக்குத் தமிழுணர்வு இருக்கிறதா? முதலில் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இனிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். அது மிகவும் சிறந்த பண்பு. அதை விடுத்து தமது பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் வைக்காமல் தமிழ் என்று பேசுவது ஏமாற்றுவேலையாகும்.

 
At 2:35 PM, Blogger தாணு said...

உண்மை ராம்கி. ராஜீவ் காந்தி கொலையான சமயம் THANU என்ற என் பெயர் `தனு' என்று உச்சரிக்கப்பட்டு நிறைய காமெடியும் , சில விரும்பத்தகாத கமெண்ட்களும் ஏற்பட்டதுண்டு. அந்த சமயத்தில் DGO சேர ஸ்டான்லிக்கு சென்றபோது இடுப்பில் குண்டு இருக்கிறதான்னு தடவிப் பார்த்து காமெடி செய்த மேடம்கள்கூட உண்டு. (என் ஹேர்கட்டும்,கண்ணாடியும் கூட அதே சாயலில் இருக்குமில்லையா?)அந்த பாதிப்பிலிருந்து தப்பிக்கும் விதமாகத்தான் `நான்சி'யை அதிகமாக புழங்கவைத்தேன். மேலும் நம்மூர் பக்கம் தாணு என்பது ஆண்பிள்ளைகளுக்கே வைக்கப் படுவதால் என் gender column அடிக்கடி எதிர்புறம் போய்விடும். இப்போகூட `பாஸிடிவ் ராமா'என்பவர்(உடன்குடிக்காரர்) என்னை அண்ணாச்சியென்றே அழைத்து வருகிறார். என்ன பெயர்னாலும் அதை ஏதோ ஒரு விதத்தில் கேலிக்குள்ளாக்குவது சகஜம்தான். அலீஸை அவள் நண்பர்கள் `அலி' என்று கேலி செய்வதுண்டு. அவள் என்னை மாதிரிதானே, பதிலுக்கு ஏதாச்சும் லொள்ளு பேசிட்டு வந்திடுவா.

 
At 6:15 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஆஹா.. இந்த gender column எதிர்ப்புறம் போறதுபத்தி எங்கிட்ட கதைகதையா இருக்கு தாணு.

பி.கு.: நானும் உங்களை எதிர்ப்புறத்திலதான் கொஞ்ஞ்ஞ்ச நாள் வச்சிருந்தேன். ;)

-மதி

 
At 11:11 PM, Blogger ஜென்ராம் said...

ஜெ.ரஜினி ராம்கி:
I differ this point. I don't think (ii) is not the direct effect of (i). பெரும்பாலும் குடும்பங்கள் சாதிப் பழக்கவழக்கங்களில் தான் இயங்குகின்றன. இதில் நீங்கள் வேறுபடவில்லை. சாதி, மதம் அறியும் கேள்விகளை எங்கு போனாலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதிலும் நீங்கள் வேறுபடவில்லை. இரண்டையும் இணைத்த “எனவே” யில்தான் நீங்கள் வேறுபடுகிறீர்கள். அப்படித்தானே?:-)
ரஜினி ராம்கி, சார் வேண்டாம்.

 
At 11:12 PM, Blogger ஜென்ராம் said...

ஜி.ராகவன்: நன்றி..
//பெயரை வைத்து ஒருவரின் பின்புலத்தை அலசும் அநாகரீகமே ஒழிய வேண்டும்.// மெத்தச் சரி.
//உங்களுக்குத் தமிழுணர்வு இருக்கிறதா? முதலில் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இனிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். அது மிகவும் சிறந்த பண்பு. அதை விடுத்து தமது பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் வைக்காமல் தமிழ் என்று பேசுவது ஏமாற்றுவேலையாகும். //
இதைப் பொதுவாக எல்லோரும் எதிரில் இருப்பது போல் நினைத்துச் சொல்கிறீர்களா இல்லை என்னை விளித்துச் சொல்கிறீர்களா? இந்தப் பதிவில் நான் தமிழ் உணர்வு குறித்து எதுவும் எழுதவில்லையே. மாறாக ஜென்னி தமிழ்ப்பெயர் இல்லை என்ற விமர்சனத்தையே சந்தித்திருக்கிறேன். இதையும் பதிவில் மெலிதாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

 
At 11:12 PM, Blogger ஜென்ராம் said...

தாணு, மதி:
சிவதாணு, தாணுலிங்கம் என்று நெல்லை, குமரி மாவட்டங்களில் பெயர் ஆண்களுக்கு அதிகம்தான். இருவர் வருகைக்கும் நன்றி.

 
At 2:12 AM, Blogger Thangamani said...

//எனக்குத் தெரிந்து சாலமன் பாப்பையா ஒருவரே பல எதிர்ப்புகளை மீறி தனது மகனுக்குச் செல்வம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்.//

இவ்விதத்தில் கவிஞர் இன்குலாப் கூட தன் மகனுக்கு செல்வம் என்றே பெயர் சூட்டியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

 
At 6:26 AM, Blogger ஜென்ராம் said...

தங்கமணி:
//கவிஞர் இன்குலாப் கூட தன் மகனுக்கு செல்வம் என்றே பெயர் சூட்டியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.//

விவாதம் திசை திரும்பிவிடக் கூடாதே என்ற அச்சத்திலேயே எழுதுகிறேன். ஆனால் இன்குலாப் தனது பெண்ணுக்கு பெயர் வைப்பதில் மத வழி பெயரையே வைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். இதில் நான் தவறேதும் காணவில்லை. செல்வம் என்றவுடன் அந்தப் பெயரும் நினைவுக்கு வந்தது. அதனால் இன்குலாபின் சிறப்பு எந்த விதத்திலும் குறைந்து விடுவதில்லை. என் போன்றோர் பெயர் வைப்பதால் பெரிய பலனும் ஏதுமில்லை.

 
At 6:29 AM, Blogger ஜென்ராம் said...

நம்பி:
//But nuemorology and craze with letters sh, ja, etc is getting ridiculus.//

ஏன்

 
At 7:35 AM, Blogger ஜென்ராம் said...

Nambi:
Thanks for your comments.

 
At 11:09 AM, Blogger G.Ragavan said...

// இதைப் பொதுவாக எல்லோரும் எதிரில் இருப்பது போல் நினைத்துச் சொல்கிறீர்களா இல்லை என்னை விளித்துச் சொல்கிறீர்களா? இந்தப் பதிவில் நான் தமிழ் உணர்வு குறித்து எதுவும் எழுதவில்லையே. மாறாக ஜென்னி தமிழ்ப்பெயர் இல்லை என்ற விமர்சனத்தையே சந்தித்திருக்கிறேன். இதையும் பதிவில் மெலிதாகக் குறிப்பிட்டிருக்கிறேன். //

ராம்கி, இது பொதுவாகச் சொன்னது. தன்னுடைய பெயரையும் மற்றவர்களின் பெயரையும் தமிழ்ப் படுத்த நினைக்கின்றவர்களுக்காகச் சொன்னது. அவ்வளவே. உங்களைத் தனிப்பட்ட முறையில் எதுவுமே சொல்லவில்லை.

 
At 12:36 PM, Blogger ஜென்ராம் said...

ஜி.ராகவன்,

விளக்கத்திற்கு நன்றி.

 

Post a Comment

<< Home