Sunday, October 23, 2005

நடுநிலை என்றால் என்ன?

தமிழ்மணம் எங்கும் நண்பர் காசியின் அறிவிப்புக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பதிவுகள் பதிவாகிக் கொண்டு இருக்கின்றன.

ஒரு நிகழ்வு நடக்கும்போது அது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாமா என்று சிலர் எண்ணக் கூடும். எல்லா நிகழ்வுகளுக்கும் எல்லோரும் கருத்து தெரிவிப்பது இல்லை என்பதே உண்மை. அதன் அடிப்படையில் மௌனமாக இருந்து விடலாம்.

முக்கிய நிகழ்வுகளின் போது கூட மௌனமா என்பார்கள். எது முக்கியம் என்பதை எதன் அடிப்படையில் யார் தீர்மானிப்பது என்று கேட்கலாம்.

எனது பதிவின் அருகில் பச்சை விளக்கு எரிகிறதா என்று பார்க்கலாம். அப்படிப் பச்சை விளக்கு எரிவது ஒரு நல்ல மனிதரின் கருணையினாலோ அல்லது அவரது மதிப்பீடுகள் அல்லது விழுமியங்கள் (இந்த சொற்கள் இல்லாமல் ஆழமான பதிவா அல்லது அர்த்தமுள்ள பதிவா) ஆகியவற்றுடன் ஒத்துப் போகும் அளவோ அல்லது ஒத்துப் போகாமல் இருந்தாலும் அனுமதிக்கக் கூடிய அளவோ இருந்தால் மட்டுமே தான் சாத்தியம் என்ற உண்மை சுடுகிறது.

அதே சமயம் இந்த திரட்டியை ஒரு தனிமனிதர்தான் நடத்துகிறார் என்பதும் அவர் இதற்காக செலவழித்த/ செலவழிக்கிற காலம் மிகவும் அதிகம் என்பதும் அதன் காரணமாகவே அவரது தனிப்பட்ட அளவுகோல்களை மதிக்க வேண்டியிருக்கிறது என்பதும் உண்மையின் மறுபக்கமாக சுடுகிறது.

என்ன செய்வது? கருத்தும் சொல்ல வேண்டும். நடுநிலையுடனும் இருக்க வேண்டும். என்ன செய்வது?

அரசியலில் நடுநிலை என்று எதுவும் இல்லை என்று கருதுகிறவன் நான். அது வீட்டு அரசியலாக இருந்தாலும் சரி; அலுவலக அரசியலாக இருந்தாலும் சரி; சமூக அரசியலாக இருந்தாலும் சரி.

ஜார்ஜ் புஷ் சொல்வாரே " நீங்கள் ஒன்று 'எங்களை' ஆதரிக்க வேண்டும் அல்லது 'அவர்களை' ஆதரிக்க வேண்டும்" என்று, அதைப் போல் நண்பர் காசி கேட்கவில்லை. நல்ல வேளை! காசி சிலர் கூறுவதைப் போல் சர்வாதிகாரி இல்லை, ஜனநாயக உணர்வு அவருக்குள் இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.

எனக்கு இணைய குசும்பர்களையும் தெரியாது, காசியையும் தெரியாது. இவர்களது பதிவில் ஒன்றிரண்டு மறுமொழிகளை இட்டிருப்பேன். என்னோடு முதல் வகுப்பு முதல் பள்ளி இறுதி வரை படித்த ஒரு பதிவரை மட்டுமே நான் நேரில் அறிவேன். (மாலனை ஒரு விழா முடிந்து வரும்போது சில நொடிகள் சந்தித்தேன். இன்னொருவர் சென்னைக்கு வந்த போது சில நிமிடங்கள் சந்தித்தேன்.) எனவே எனது கருத்து யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ எழுந்தது அல்ல. அதற்கான அவசியமும் இல்லை.

தமிழ்மணத்திற்கு நான் வருவதற்கு முன்பே தணிக்கை குறித்து எனக்கு ஒரு பார்வை உண்டு. காசியின் அறிவிப்பு அந்த எனது பார்வையின்படி வருத்தம் அளிக்கிறது. அதே சமயம் எனது பார்வை பொதுவான விஷயங்களுக்குத் தான் பொருந்துமே தவிர தனியானவற்றிற்குப் பொருந்தாது என்பதையும் வருத்தத்துடன் உணர்கிறேன்.

தமிழ்மணத்தில் எனது பதிவை இணைக்கும் போது என்னென்ன நிபந்தனைகள் போடப்பட்டிருக்கின்றன என்று நான் பார்க்கவில்லை. இப்போதும் கூட பார்க்கும் அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.

ஒரு விளையாட்டிற்குள் போகும்போது அந்த விளையாட்டின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆட நான் சம்மதிக்கிறேன். (Ball Badminton)பூப்பந்தாட்ட விதிகள் வேறு; (Shuttlecock)இறகுப் பந்தாட்ட விதிகள் வேறு; நான் புரிந்து கொள்கிறேன். பிரச்னைகள் வரும்போது நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.

இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு என்னால் ஆடமுடியாது என்று எனக்குத் தோன்றுகிற போது நானே வெளியேறுகிறேன். அல்லது நடுவர் அவுட் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்.

இந்தப் பற்றற்ற நிலையில் இல்லாமல் சில நண்பர்கள் தமிழ்மணத்துடன் தங்களைப் பிரித்துப் பார்க்க முடியாமல் இரண்டறக் கலந்து விட்டார்கள். அவர்களது இரவும் காலையும் தமிழ்மணத்துடன் முடிகிறது, தொடங்குகிறது. அவர்களால்தான் விலக்கலைத் தாங்க முடியவில்லை. அவர்களது உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களில் சிலர் உதிர்க்கும் சொற்களை ஜீரணிக்க முடியவில்லை. காசியோ மற்ற நிர்வாகிகளோ அவற்றைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன்.

அதேசமயம் தமிழ்மணத்தில் இடம் பெறும் பதிவுகள் " புலிகள் மற்றும் நக்சலைட் ஆதரவு, திராவிடர் கழக ஆதரவு" பதிவுகள் என்று போகிற போக்கில் பதிவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது "முத்திரை " குத்துவதும் கண்டிக்கத் தக்கது.

இந்துப் பண்பாடுக்கென ஒரு திரட்டி, தமிழ்ப் பண்பாடுக்கென ஒரு திரட்டி, பண்பாடே இல்லாதவர்களுக்கு ஒரு திரட்டி என்று எதிர்காலத்தில் உருவானால் நல்லது. அவரவர் ரசிகர் கூட்டத்திற்கு அவரவர் எழுதிவிட்டுப் போய்விடலாம்.

என்னதான்யா சொல்ல வர்றே என்று கோபப்படுபவர்களுக்கு:

1. காசியின் உரிமை – உழைப்பு இவற்றை மதிப்பதுடன் போற்றுகிறேன்.

2. காசியின் தனிச்சொத்தாக இருந்த போதிலும் தமிழ்மணத்தில் அவரது மதிப்பீடுகளின்படியான தணிக்கை வருத்தமளிக்கிறது. இவ்வளவு காலம் தணிக்கை இல்லாமல் இருந்ததற்கு மனமார்ந்த நன்றிகள். (நான் பதிவுக்கு வந்து ஆறு மாதங்கள் கூட நிறைவடையவில்லை என்பது வேறு விஷயம்)

3. காசிக்கு எதிரான கண்டனங்கள் அர்த்தம் இல்லாதவை.

4. பெற்றோருடன் – மனைவியுடன் – குழந்தையுடன் – நண்பர்களுடன் – எவ்வளவோ சமரசங்கள் செய்து கொள்வதைப் போல தமிழ்மணத்துடன் சமரசம் செய்து கொள்கிறேன்.

5. இந்த சமரசம் மேலதிகாரியின் அதிகாரத்திற்குப் பணிந்து செய்யப்படும் சமரசம் போன்றதல்ல. வாசகர் பலத்திற்காகவும் அல்ல. வேறு எங்கும் என் கருத்துக்களைப் போட இயலாது என்பதற்காகவும் அல்ல.

6. உரிமையாளர் சொன்னால் எப்போது வேண்டுமானாலும் வீட்டைக் காலி செய்யத் தயாராக இருக்கிறேன். நான் வீட்டைப் பராமரித்தேன் என்று உரிமைக்குரலோ முணுமுணுப்போ கூட எழுப்பமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். (இதை அடிமை சாசனம் என்று சொல்லும் நண்பர்கள் சொல்லட்டும். அதுதான் உண்மை நிலை என்பது அவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம்)

7. தணிக்கையில் ஒரு சலுகையாக (தீர்வாக அல்ல) மத சர்ச்சைப் பதிவுகளைத் தவிர (அதையும் அனுமதிக்கலாம் என்பதே முழுத் தீர்வு) மற்றவற்றிற்கு பச்சை விளக்கு காட்டினால் மகிழ்வேன்.

8. ஆளும் கட்சித் தலைவர் காசியை மதிக்கும் அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் முகமூடியையும் அதே அளவு மதிக்கிறேன். (இருவரும் என்னை ஏற்றுக் கொண்டாலும் சரி இருவரும் என்னை ஒதுக்கினாலும் சரி. பொதுவாக என் போன்றோருக்கு இரண்டாவதே நிகழும்.)

9. இரு கட்சிகளின் இடைநிலைத் தலைவர்களையும் தொண்டர்களையும் அதே அளவு நேசிக்கிறேன்.

10. டெக்னோக்ரட்டியிலும் துண்டு போடலாமா என்று சிந்திக்கிறேன்.

குஷ்பூ – கற்பு- தமிழ்ப் பண்பாடு குறித்து நான் தனியாக பதிவு எதுவும் போடவில்லை. தேன்துளி, தங்கமணி பதிவுகளில் பின்னூட்டம் இட்டதுடன் எனது சமூகக் கடமை முடிந்துவிட்டது என்று இருந்து விட்டேன்.

அந்தப் பழியைப் போக்கும் விதத்தில் போடப்பட்டிருக்கும் இந்தப் பதிவு எந்தவிதமான உள்குத்துகளும் இல்லாமல் போடப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் எனது பதிவுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது என்பதைத் தவிர வேறு விளைவுகள் எதுவும் இருக்காது என்பது என் நம்பிக்கை.

16 Comments:

At 3:42 AM, Blogger முகமூடி said...

உங்களது நினைப்பை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ராம்கி.

(என்னங்க இது எதிர்கட்சி தலைவர்னு நம்ம பேர சொல்லிட்டீங்க)

 
At 7:49 AM, Blogger துளசி கோபால் said...

என்னங்க ராம்கி,

'ஊதற சங்கை ஊதியாச்சு'ன்னு எழுதிட்டீங்க.

எல்லாத்துக்கும் எப்படியும்
ஒருநாள் இல்லாட்டா ஒருநாள் 'உண்மைநிலை' புரிஞ்சுடும்தானே?

 
At 10:17 AM, Blogger ஜென்ராம் said...

முகமூடி:
ஆளும் தரப்பை எதிர்த்து உரத்த குரலை நீங்கள் எழுப்பியதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கினேன். என்னதான் ப.ம.க தலைவராக அல்லது நிறுவனத் தலைவராக இருந்தாலும் எதிர்க் கட்சித்தலைவர் என்பது பெருமைதானே? முகமூடியின் வழக்கமான ஒரு பதிவு என்று ஒரு தொண்டர் பின்னூட்டம் இடுவாரே.. அதுபோல் உங்கள் வழக்கமான பதிவைத் தொடருங்கள்.. "ஓர் அறிவிப்பை" விட்டு விடுங்கள்.

 
At 10:17 AM, Blogger ஜென்ராம் said...

துளசி கோபால்:
// எல்லாத்துக்கும் எப்படியும்
ஒருநாள் இல்லாட்டா ஒருநாள் 'உண்மைநிலை' புரிஞ்சுடும்தானே?// இல்லை துளசி, ஒருநாள் இல்லாட்டா ஒரு நாள் இல்லை. முதல் நாள் முதல் பதிவிலேயே புரிஞ்சிருக்கணும்னு பல நண்பர்கள் சுட்டி சுட்டிக் காட்டுறாங்களே !

 
At 10:26 AM, Blogger ஜென்ராம் said...

முகமூடி:
ஆளும் தரப்பை எதிர்த்து உரத்த குரலை நீங்கள் எழுப்பியதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கினேன். என்னதான் ப.ம.க தலைவராக அல்லது நிறுவனத் தலைவராக இருந்தாலும் எதிர்க் கட்சித்தலைவர் என்பது பெருமைதானே? முகமூடியின் வழக்கமான ஒரு பதிவு என்று ஒரு தொண்டர் பின்னூட்டம் இடுவாரே.. அதுபோல் உங்கள் வழக்கமான பதிவைத் தொடருங்கள்.. "ஓர் அறிவிப்பை" விட்டு விடுங்கள்.

 
At 1:15 PM, Blogger தாணு said...

ராம்கி
என்ன இது வழ வழ கொழ கொழா? நடுநிலை என்று இல்லாட்டியும் தெளிவாக சொல்ல முடியாமல் தடுமாறுவது போல் இருக்குதே.

என் பதிவு (நேற்று போட்டது). ஓப்பன் ஆக மாட்டேங்குது. முன்னாடியென்றால் டெக்னிகல் பிரச்னையோ என்று யோசிப்பேன். இப்போ `பச்சை விளக்கு' பத்திதான் யோசிக்கவேண்டியிருக்கு

 
At 3:24 PM, Blogger ஜென்ராம் said...

தாணு:
//என்ன இது வழ வழ கொழ கொழா? நடுநிலை என்று இல்லாட்டியும் தெளிவாக சொல்ல முடியாமல் தடுமாறுவது போல் இருக்குதே//

அப்படியா தெரிகிறது உங்களுக்கு?

 
At 5:45 PM, Blogger வானம்பாடி said...

//என் பதிவு (நேற்று போட்டது). ஓப்பன் ஆக மாட்டேங்குது. முன்னாடியென்றால் டெக்னிகல் பிரச்னையோ என்று யோசிப்பேன். இப்போ `பச்சை விளக்கு' பத்திதான் யோசிக்கவேண்டியிருக்கு//

பதிவு 'ஓப்பன்' ஆகலைன்னா நீங்க ப்ளாக்கரை தான் சந்தேகப்படணும். தமிழ்மணத்தாலே ப்ளாக்கர் பதிவை எல்லாம் நிறுத்த முடியாது, நம்புங்க! தமிழ்மண RSS ஒடையிலேயோ, வாசகர் முகப்புலயோ உங்க பதிவு வரலைன்னா மட்டும்தான் நீங்க இந்த விளக்கை பத்தி யோசிக்கணும்

 
At 8:22 PM, Blogger தாணு said...

சுதர்சன்
நிஜமாகவே என் ப்ளாக்கெர் ஓப்பன் ஆகமாட்டேங்குது. தமிழ்மணத்தில் வந்து தான் என் பதிவு மூலம் போக வேண்டியிருக்கு. அதற்கு பரிகாரம் என்னன்னு நீங்களோ ராம்கியோ சொன்னால் நல்லது.

நச்சென்று விளங்கும் வகையில் விளக்கம் இல்லை என்பது உண்மைதானே. அரசியல்வாதித்தனம் லேசாக ரத்தத்தில் ஊற ஆரம்பித்துவிட்டது போல் `எனக்கு' தோன்றுகிறது.

 
At 10:17 AM, Blogger ILA (a) இளா said...

"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்கிற மாதிரி ஒரு தேர்தல் வைத்து பார்த்து விடலாமா?

 
At 1:04 PM, Blogger ramachandranusha(உஷா) said...

தாணு, அது என்ன வழவழா கொழ கொழான்னு சாதாரணமா சொல்லிட்டீங்க? இதற்கு பெயர் ராசதந்திரம்! அரசியலில் அரிச்சுவடி
பாடமுங்கோ!

 
At 6:08 PM, Blogger Unknown said...

ராம்கி,
சரியான கருத்து, நானும் எனது பதிவில் (http://kalvetu.blogspot.com/2005/10/13.html) இதனை ஒத்த கருத்துகளையே சொல்லியிருந்தேன்.
//பெற்றோருடன் மனைவியுடன் குழந்தையுடன் நண்பர்களுடன் எவ்வளவோ சமரசங்கள் செய்து கொள்வதைப் போல தமிழ்மணத்துடன் சமரசம் செய்து கொள்கிறேன்//
நமது சுதந்திரம் பாதிக்காத வரையில்சமரசங்கள் சரியே.
//எதிர்க்கட்சித் தலைவர் முகமூடி//
எதிர்க்கட்சி என்று சொல்ல வேணாம். நம்ம ஊர் அரசியலில் எதிர்க்கட்சி என்று சொன்னாலே எல்லாத்தையும் எதிர்ப்பது என்றாகிவிடும்.
வேண்டுமானால் முகமூடியை மாற்றுக்கருத்து அணித்தலைவர் என்று அழைப்போம்.

 
At 8:25 PM, Blogger ஜென்ராம் said...

ராமச்சந்திரன் உஷா: நீங்க அர்த்த சாஸ்திரம் படிச்சிருப்பீங்களா இருக்கலாம். எனக்கு ராச தந்திரம் எல்லாம் தெரியாது. செய் அல்லது செத்து மடி, நல்லது அல்லது கெட்டது அப்படின்னுல்லாம் ரெண்டு எக்ஸ்ட்ரீம் நிலை எடுக்கற பழக்கம் எனக்கு இல்லீங்க. இந்தப் பதிவுல சொன்ன விஷயத்தையே நீங்க புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

//இருவரும் என்னை ஏற்றுக் கொண்டாலும் சரி இருவரும் என்னை ஒதுக்கினாலும் சரி. பொதுவாக என் போன்றோருக்கு இரண்டாவதே நிகழும்.// நான் இது குறித்து கவலைப்படுவதில்லை.

 
At 8:32 PM, Blogger ஜென்ராம் said...

ila: தேர்தல்லாம் வைச்சு முடிச்சாச்சு, நீங்க கலந்துக்கலையா?

கல்வெட்டு: உங்க பதிவுலதான் நீங்க எது வேணும்னாலும் போடலாமே. அந்த சுதந்திரம்தான் உங்களுக்கு இருக்கே. திரட்டி திரட்டுமா திரட்டாதாங்கறது தானே பிரச்னையாக விவாதிக்கப்பட்டது. நான் இருக்கும் வீட்டில் எனது கருத்துக்கு மாறாக நடக்கும். நான் இருக்கும் அலுவலகத்தில் எனது சிந்தனைக்கு மாறாக நடக்கும். அதற்காக அங்கிருந்தெல்லாம் வெளியேறுகிறோமா? அதைத்தான் நான் சமரசம் என்று சொன்னேன். சுதந்திரம் குறித்த மயக்கம் எல்லாம் இல்லை.

 
At 8:34 PM, Blogger ஜென்ராம் said...

உங்கள் பதிவு நேரடியாக பிளாக்கரில் திறக்கிறதே தாணு.

 
At 7:09 AM, Blogger Kasi Arumugam said...

//ஒருநாள் இல்லாட்டா ஒருநாள் 'உண்மைநிலை' புரிஞ்சுடும்தானே?//

ரெண்டு வருசம் கழிச்சாவது உண்மை புரிஞ்சுதா?

 

Post a Comment

<< Home