Monday, June 13, 2011

நடுநிசி நாய்கள்

“என் வாழ்க்கையில் இதுவரை இப்படி ஒரு வன்முறையை நான் பார்த்ததே இல்லை” என்று பாபா ராம்தேவ் சொல்லி இருக்கிறார். அப்படி என்ன வன்முறை அங்கே நடந்தது? வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்திய கருப்புப் பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர் சாகும்வரை டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், அரசாங்கத்துடன் பேசிய போது அங்கே அவர் யோகா வகுப்பு எடுக்க இருப்பதாகவும், ஜூன் 4-ம் நாள், சனிக்கிழமை ஆறு மணியுடன் அந்த வகுப்பை முடித்துக் கொண்டு எல்லோரும் கலைந்து விடுவதாகவும் மத்திய அரசுக்கு அவர் வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்திய கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வந்து தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டம் மாலை ஆறு மணியளவில் முடிவடையவும் இல்லை. பின்னிரவில் காவல்துறை அந்த மைதானத்துக்குள் புகுந்து கூட்டத்தினரைக் கலைந்து போகச் செய்தது. பாபா ராம்தேவைக் ‘கைது’செய்து ஹரித்துவாருக்கு அனுப்பி வைத்தது. அங்கு அவர் மீண்டும் தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கினார் என்பது வேறு செய்தி!

கூடியிருந்த கூட்டத்தைக் கலைந்து போகச் செய்வதற்கு காவல்துறை தடியடி நடத்தியிருக்கிறது. கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தி இருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்தி எதுவும் இல்லை. ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தைக் கலைப்பதற்கு ‘எளிய’ வழிகளையே காவல்துறை பயன்படுத்தி இருக்கிறது. வெறும் இரண்டாயிரம் அல்லது மூன்றாயிரம் பழங்குடியினரைக் கலைப்பதற்கு எல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களில் சிலரைக் கொல்லும் காவல்துறை, பாபா ராம்தேவின் பக்தர்களை விரட்டுவதற்கு அப்படி ஒன்றும் செய்யவில்லை. இதற்கே அவர் ‘இப்படி ஒரு வன்முறையை என் வாழ்நாளில் நான் பார்க்கவில்லை’ என்று சொல்கிறார். இதற்குப் பொருள் என்ன? அவர் இதுவரை மிகவும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார் என்று அர்த்தமாகிறது!

இப்படிச் சொல்வதால் காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைகளை நான் ஆதரிப்பதாக நீங்கள் கருதி விடக் கூடாது. எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபடாத ராம்தேவ் பக்தர்களைக் கலைப்பதற்கு இந்த குறைந்தபட்ச தடியடி கூடத் தேவையில்லை. அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் அவரே ‘இடத்தைக் காலி செய்துவிட்டு’ போயிருப்பார். அதை விட்டுவிட்டு அந்தக் கூட்டத்தை கலைப்பதற்கு தடியடியும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தியதன் மூலம் ராம்தேவுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கிடைப்பதற்கு அரசு உதவி இருக்கிறது! இந்திய அரசின் கரங்களை வலுப்படுத்தும் சில கோரிக்கைகளை அவர் முன்வைப்பதையும் பார்க்கும்போது, அரசுக்கும் ராம்தேவுக்கும் இடையில் நல்ல ‘புரிதல்’ இருப்பதாக நம்ப இடமிருக்கிறது!

ஊழலை ஒழிப்பதற்கு உருவாக்கப்படும் லோக்பால் அமைப்பு பிரதமரையும் இந்திய தலைமை நீதிபதியையும் விசாரிக்கக் கூடாது என்று ‘செங்கல்’ உருவியவர் யார் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? பாபா ராம்தேவ் தான். “மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களை இப்படி விமர்சனத்துக்கு உள்ளாக்கினால் அது நம்முடைய சமூகத்துக்கு நல்லதா?” என்ற கேள்வி எழுப்பியவர் பாபா ராம்தேவ். அன்னா ஹசாரே மற்றும் ஆதரவாளர்களுக்கு மாற்றாக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவராகக் கூட பாபா ராம்தேவ் இருக்கலாம்.
சிவில் சமூகத்துக்கும் அரசுக்கும் இடையில் இருந்த முரண்பாட்டை தனிமனிதர்களுக்கு அல்லது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதலாக மாற்றிக் காட்டுவதற்கு அவர் உதவியாக இருக்கிறார். காமன்வெல்த் போட்டிகள், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியம், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு, டெலிபோன் இணைப்பகத்தையே முறைகேடாகப் பயன்படுத்திய அமைச்சர் என்று பல முறைகேடுகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்து கொதித்துப் போயிருக்கும் மக்களுடைய உணர்வை மடைமாற்றுவதற்கும் ராம்தேவ் கருவியாக இருக்கிறார்!

இப்படிப்பட்ட சூழலில் ராம்தேவின் போராட்டத்துக்கு ஒருவர் ஆதரவளிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இந்திய மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்தை நாம் ஆதரித்துத் தான் ஆக வேண்டும். ஆனால் அவர் அந்த ஒரு கோரிக்கையைத்தான் முன்வைக்கிறாரா? அவருடைய கோரிக்கைப் பட்டியலில் உள்ள விஷயங்கள் யாருடைய நலன்களை முன்னிறுத்துகின்றன?

ஊழல் அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று முதல் கோரிக்கையை வைக்கிறார். நாகரிக சமூகங்கள் எல்லாம் மரணதண்டனையை இல்லாமல் ஒழித்துக் கட்டி வரும் காலகட்டத்தில், மரண தண்டனையை இவர் வலியுறுத்துகிறார். லோக்பால் விசாரணை வளையத்துக்குள் கூட பிரதமரும் தலைமை நீதிபதியும் வரக் கூடாது என்று சொல்பவர் அதிகாரிகளை மட்டும் தூக்கில் போட வேண்டும் என்று சொல்கிறார். இந்தக் கோரிக்கையை எப்படி பரந்து விரிந்த அரசியல் பார்வை கொண்ட ஒருவர் ஆதரிக்க முடியும்?

1000, 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக்கி விட வேண்டுமாம். இந்த நோட்டுக்களை ஊழல் பெருச்சாளிகள் மட்டுமா வைத்திருக்கின்றன? நியாயமாக உழைத்து சம்பாதிப்பவர்கள் கூட இந்த மாதிரியான நடவடிக்கையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நெல்லை விற்று கிடைத்த பணத்தை வங்கிகளில் போடாமல் செலவுக்கு வைத்திருக்கும் விவசாயிகளே கிராமங்களில் அதிகம்.
ஜனநாயக இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்கிறார். அதாவது ஆங்கிலத்தில் நடக்கும் நிர்வாகம், கல்வி எல்லாம் நிறுத்தப்பட வேண்டும். ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்வு காணும் எளிமையான பிரச்னை அல்ல இது. மக்களிடையே விவாதம் நடத்தப்பட வேண்டிய பெரிய விஷயம் இது. எளிமையாகப் பார்த்தால், தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு இது என்னவிதமான செய்தியைத் தருகிறது? ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு எல்லா இடங்களிலும் இந்தியை கொண்டு வரும் முயற்சி என்பதே இதன் பொருள். இந்திய மொழிகள் எல்லாவற்றையும் தேசிய மொழிகளாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ராம்தேவ் முன்வைப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா?

அடுத்து மிகவும் முக்கியமான ஓர் அரசியல் கோரிக்கையை அவர் வைக்கிறார். இந்தியப் பிரதமர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே அவருடைய அந்தக் கோரிக்கை. அதாவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் அவருக்கு வேம்பாய்க் கசக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தந்த மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ராம்தேவ்களின் சில திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு பதிலாக அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வரும் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்!

இந்தக் கோரிக்கைகளை எல்லாம் பெரிதாக ஊடகங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. காவல்துறையின் அத்துமீறல்களைச் சுட்டிக்காட்டி பரபரப்பை ஊட்டுகின்றன. பாபா ராம்தேவ் போன்றவர்களின் போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கக் கூடிய ஜனநாயக விரோதமான கோரிக்கைகளை அம்பலப்படுத்தத் தவறுகின்றன. மேலோட்டமாக ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்லப்படும்போது, அதற்கு ஆதரவு அளிப்பது கடமை என்று தோன்றுகிறது. ஊழல், கருப்புப் பணம் போன்ற விஷயங்களைத் தவிர்த்துப் பார்க்கும்போது இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படக் கூடாது என்ற எண்ணமே மேலோங்குகிறது!

குமுதம் ரிப்போர்ட்டர் 12.06.11

0 Comments:

Post a Comment

<< Home