Tuesday, June 14, 2011

உறவுகள் தொடர்கதை!

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை இனிதே நடந்து முடிந்தது. தேசிய ஊடகங்கள் எதிர்பார்த்த எந்த அதிரடி முடிவையும் திமுக எடுக்கவில்லை. கனிமொழியின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்த பிறகு இரண்டு நாட்களில் தி.மு.கவின் உயர்நிலைக் குழு கூடியது. கூட்டத்துக்கு முன்னதாக, அந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஊடகங்கள் உருவாக்கின. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் இப்போது இருப்பதைப் போல திமுக தொடருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சரவையில் இருந்து அமைச்சர்களை விலக்கிக் கொண்டு ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம் என்று ஊகங்கள் கிளப்பி விடப்பட்டன. மிகவும் இக்கட்டான இந்த சூழலில் எந்த உதவியும் செய்யாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்தும் ஆட்சியில் இருந்தும் திமுக விலகிக் கொள்ளும் என்ற ‘செய்தியும்’ ஊடகங்களில் விதைக்கப்பட்டன.

சில செய்தித்தாள்களிலும் சில ஆங்கில செய்தி ஊடகங்களிலும் இதுபோன்ற பரபரப்பான செய்திகளைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு சாதாரணமான கூட்டத்தை எப்படிப் பரபரப்புக்குள்ளாக்குகிறார்கள் இவர்கள் என்று சில சமயங்களில் எரிச்சல் கூட எழுகிறது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, திமுக அரசின் சில திட்டங்களை ரத்து செய்தார். அரசாங்கத்தின் அந்த செயல் நியாயமா இல்லையா என்பதைப் பற்றி விவாதிப்பது இங்கு நோக்கம் இல்லை என்பதால் அதை அப்படியே விட்டு விடலாம்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்த நிலையில் ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து திமுக என்ன செய்ய முடியும்? தோல்வியில் துவண்டு கிடக்கும் தொண்டர்களைத் திரட்ட வேண்டும். அதற்கு அடித்தளமாக கட்சிக் கூட்டம் நடத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதைத் தான் திமுக செய்திருக்கிறது. அதற்குள் ஊடகங்கள் மத்திய ஆட்சியில் இருந்து திமுக விலகுமா என்ற கேள்வியை எழுப்பி பரபரப்பு ஊட்டி விட்டன!

அப்படி என்றால் ஊடகங்கள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் இப்படிப்பட்ட கதைகளை அவிழ்த்து விடுகின்றன என்று சொல்ல முடியுமா? ‘கூடாநட்பு கேடாய் முடியும்’ என்று பிறந்த நாள் செய்தியாக திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு அறிவுறுத்தவில்லையா? அவர் கூடா நட்பு என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணியையா குறிப்பிட்டார்? அல்லது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸைச் சொன்னாரா? அல்லது கட்சிக்குள் தொண்டர்கள் வேறுவிதமான சிந்தனையில் இருப்பது தெரிந்தும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று ‘விசுவாசமாக’ இருந்த திருமாவளவனைக் குறிப்பிட்டாரா? நிச்சயமாக இருக்க முடியாது. குடும்பத்தில் ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளாமல் இருக்கிறதே என்ற ஆதங்கத்தில் வந்த அரசியல் செய்தியாகத் தான் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

திமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக கி.வீரமணி என்ன சொன்னார் என்பதை நினைத்துப் பாருங்கள். திமுகவின் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று அவர் அறிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு செயல்களுக்குப் பழியேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதால்தான் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்று அவர் உறுதியாக சொன்னார். எந்தவிதமான கருத்து மக்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டும் என்று கருணாநிதி நினைக்கிறாரோ, அந்தக் கருத்தை ஊடகங்களில் எதிரொலிப்பதே சிலருடைய அரசியல் பணி! அதனால் வீரமணியின் கருத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு திமுகவுக்கு காங்கிரஸ் மீது மனக்கசப்பு இருக்கிறது என்று ஊடகங்கள் நிறுவ முயன்றிருக்கலாம்!

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் எந்தவிதமான கசப்பும் இல்லையா? இரு கட்சிகளுக்கும் இடையில் ஊடகங்கள்தான் சிண்டு முடிகின்றனவா? அப்படி நாம் நம்ப வேண்டும் என்று இரு கட்சிகளும் விரும்புகின்றன. ஆனால் நடக்கும் நிகழ்ச்சிகள் அந்தக் கட்சித் தலைவர்களுக்குள் இருக்கும் இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இப்போது கூடாநட்பு என்று தமிழில் கருணாநிதி சொன்னதற்கு காங்கிரஸ் பிரமுகர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘இதைத் தான் நான் சில வாரங்களுக்கு முன்னால் சகவாச தோஷம் என்று சொன்னேன்’ என்று சொல்லி சண்டைக்குத் தயாராகிறார். காங்கிரஸ் கட்சியின் ‘சந்தேஷ்’ என்ற இதழ் தேர்தல் தோல்விக்கு திமுக தான் காரணம் என்று சொல்கிறது. “2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் காரணமாகவே தமிழகத்திலும் புதுவையிலும் காங்கிரஸ் தோற்றுப் போனது” என்று சந்தேஷ் பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கிறது. கூட்டணிக் கட்சியின் தவறுகளால் தங்களுடைய வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்துவிடக் கூடாது என்பதால் தமிழகக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“வெற்றி கிடைத்தால் அதன் பெருமையைக் கொண்டாட பலர் முன்வருவார்கள். தோல்வியடையும்போது பொறுப்பை பகிர்ந்து கொள்ள யாரும் வரமாட்டார்கள்” என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்த விஷயத்திலும் நடக்கிறது. திமுக சார்பாக வீரமணியும் காங்கிரஸ் சார்பாக ‘சந்தேஷ்’ பத்திரிகையும் ‘கூட்டணியால் தோல்வி அடைந்தோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் உயர்நிலைக் குழுக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, எல்லாம் சுமுகமாக இருப்பதாக நம்மை நம்பச் சொல்கிறார். “சில சுயநலவாதிகள், சில பொறாமைக்காரர்கள் ஸ்பெக்ட்ரம் பிரச்னையை பூதாகாரமாக ஊதிவிட்ட காரணத்தால், அதை வைத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையில் அப்படி எழுதி இருப்பார்கள்” என்று சமாளிக்கிறார். “ திமுகவின் தோல்விக்கு ஒரு சில ‘பார்ப்பனர்களின்’ முயற்சியே முக்கிய காரணம்” என்று அடுத்த அம்பை ஏவுகிறார்!

“காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்று நிச்சயமாகச் சொல்வேன். காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது விரோதத்தை உண்டாக்க வேண்டும், எங்களைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, திட்டமிட்டு முடிவு செய்து ஒரு சிலர் இங்கே வந்து கேள்வியைக் கேட்கிறீர்கள்” என்று ஊடகங்கள் மீது பழியைத் திருப்புகிறார். கூடாநட்பு என்று சொன்னது ‘உங்களில் ஒரு சிலரோடு எனக்கு இருக்கும் நட்பாக’ இருக்கலாம் என்று லாவகமாக அடித்து ஆடுகிறார். தொலைக்காட்சிக்கு வர்த்தகரீதியாக கடன் வாங்கியதையும் அலைக்கற்றை ஒதுக்கீட்டையும் முடிச்சுப் போட்டு கனிமொழியைக் கைது செய்த சிபிஐ அமைப்பை திமுக கண்டித்திருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐயைக் கண்டிப்பது மத்திய அரசை எதிர்த்த கண்டனம்தானே என்று கேட்டால், நீங்கள் விருப்பப்படி எழுதிக் கொள்ளுங்கள் என்று பதில் சொல்வார்!

மத்திய அரசில் இருந்து ஆ.ராசா கட்டாய ராஜினாமா, கலைஞர் டி.வி.ரெய்டு, தயாளு அம்மாள், கனிமொழி விசாரணை, கனிமொழி கைது, அடுத்து தயாநிதி மாறனைச் சுற்றும் சர்ச்சைகள் என்று அடுக்கடுக்காக தாக்குதல்கள் நடக்கின்றன. ஆனால் “இதனால் எல்லாம் திமுகவுடனான எங்கள் உறவு பாதிக்கப்படாது” என்று காங்கிரஸ் சொல்கிறது. அதையே திமுக வழிமொழிகிறது.

இதைப் பார்க்கும்போது வடிவேலுவின் “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே, இவன் ரொம்ப நல்லவன் போல இருக்கு” என்ற காமெடி காட்சியே நினைவுக்கு வருகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home