Thursday, December 28, 2006

வாக்கு வங்கியை நோக்கி அம்பேத்கர் பாதை?

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியாக தலித் இனத்தைச் சேர்ந்த கே.ஜி.பால கிருஷ்ணன் பதவி ஏற்க இருக்கிறார். இந்தப் பதவியில் அமரப்போகும் முதல் தலித் இவர்தான். இவர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்பதால் இந்தப் பதவியை ஏற்க இருக்கிறாரே தவிர, தலித் என்பதால் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. நீதிபதி பாலகிருஷ்ணன் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன் தலித் இனத்தைச் சேர்ந்த முதல் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனும் கேரளாவைச் சேர்ந்தவர்தான். பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற மூன்று பதவிகளை இந்தியாவின் மிகவும் பெரிய பதவிகள் என்று ஒப்புக்கொண்டால், இன்னும் பிரதமர் நாற்காலியில் மட்டுமே தலித் இனத்தைச் சேர்ந்தவர் அமரவில்லை என்பது புரிகிறது.

நீதிபதி பாலகிருஷ்ணனும் கே.ஆர். நாராயணனும் உயர் பதவிகளுக்கு வர முடிந்திருப்பது, தலித் மக்கள் தங்கள் அதிகாரத்துக்கான போராட்டத்தில் வென்று வருவதன் அடையாளம் என்று கருதலாம். அதேசமயம் இப்படிப்பட்ட உயர் பதவிகளில் தலித் இனத்தின் பிரதிநிதிகள் அமர முடிவதால் மட்டுமே இந்தியாவில் அந்தப் பிரிவு மக்களின் ஒட்டுமொத்த நிலைமைகள் முன்னேற்றம் அடைந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது. தலித்களுக்கு எதிரான பாகுபாடுகள் மறைந்து விட்டதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. இன்னும் ஒரு பிரிவினர் தங்களுக்கு உரிய இடங்களைப் பெறுவதற்கு கல்வி, சமூக, பொருளாதார, மற்றும் அரசியல்ரீதியாக நெடுந்தூரம் போக வேண்டியதிருக்கிறது என்பதை எடுத்துச்சொல்ல வேண்டிய சூழலில்தான் நாம் இன்னும் இருக்கிறோம்.

இந்தியாவின் முதன்மை நீதிபதியாக ஒரு தலித் அமர இருக்கும் சூழலில், நமது இந்தியச் சமூகம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதும் அவசியமாகிறது. நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு முதன்மை நீதிபதியாகப் பதவி உயர்வு அறிவிப்புச் செய்தி வந்த டிசம்பர் மாதத்தில் நடந்த வேறு ஒரு செய்தி கவலையளிக்கிறது.

ஒரிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஜெகந்நாதர் ஆலயத்துக்குள் 200 தலித் மக்கள் சென்றனர். இந்தியா விடுதலை அடைந்த 60 ஆண்டுகளில் இதை ஒரு செய்தியாகச் சொல்ல நேர்கிறது என்பதே சமூகத்தின் அவலத்தைச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், இந்த ஆலயப் பிரவேசம்கூட நீதிமன்றப் போராட்டத்துக்குப் பிறகே நடந்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்கு தலித் இளம் பெண்கள் அந்தக் கோயிலுக்குள் நுழைந்ததற்காக அடிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்குப் பிறகு ஆலயத்துக்குள் நுழைவதற்கான உரிமைப் போர் தொடங்கியிருக்கிறது. ஒரிசா உயர் நீதிமன்றத்தில் ‘எந்த ஓர் இந்துவும் எந்த ஓர் ஆலயத் துக்குள்ளும் செல்லலாம்’ என்ற தீர்ப்புக்குப் பிறகே இந்த ஆலயப் பிரவேசம் நடந்திருக்கிறது. அதற்கு அடுத்த நாள், அந்தக் கோயிலில் பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் பூஜைகள் மற்றும் சடங்குகள் நடைபெறவில்லை. அங்கு ஏற்கெனவே பணியில் இருந்தவர்கள் காட்டிய எதிர்ப்பே இதற்கான காரணம். இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை!
அந்தக் கோயிலில் உள்ள சுவர் ஒன்று இடிக்கப்பட்டு, அங்கு பெரிய அளவில் ஒரு கம்பித் தடுப்பு போடப் போகிறார்கள். அந்தக் கம்பிக்கு வெளிப்புறமாக நின்று அனைத்துப் பக்தர்களும் ஜெகந்நாதரை தரிசிக்க வேண்டும். அர்ச்சகர்களும் பூஜை செய்பவர்களும் மட்டுமே கம்பித் தடுப்புக்கு உள்ளே நுழைந்து கர்ப்பக்கிரகத்துக்குள் செல்ல முடியும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு நிர்வாகம் இப்படி ஒரு சமரசத்தில் இருதரப்பினரையும் இணைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சமரசத்தை அம்பேத்கர் இயக்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அந்தக் கிராமத்தில் மீண்டும் மீண்டும் இந்த ஆலய நுழைவு உரிமைக்காகப் போராடி சலித்துப்போன தலித் மக்கள் ஆயிரம் பேர், வருகிற புத்தாண்டில் புத்த மதத்தைத் தழுவ இருப்பதாக இன்னொரு செய்தி கூறுகிறது. அதாவது ‘‘நான் ஓர் இந்துவாகப் பிறந்தேன்; ஆனால் ஓர் இந்துவாக சாக மாட்டேன்’’ என்று டாக்டர் அம்பேத்கர் காட்டிய வழியில் நடக்கத் தீர்மானித்து விட்டனர். ‘உங்கள் கோயிலுக்குள் என்னை வரக்கூடாது என்று சொன்னீர்கள் என்றால், நான் எனது சொந்தப் பாதையைத் தீர்மானித்துக் கொள்கிறேன்’ என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். ஒரிசா உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ‘எந்த ஓர் இந்துவும் எந்த ஓர் ஆலயத்துக்குள்ளும்’ சுலபமாக நுழைந்துவிட முடியவில்லை என்பதே உண்மையான நடைமுறையாக இருக்கிறது. ‘ஒருநாள் ஆலய நுழைவு’ என்பது ஓர் அடையாளமாக அல்லது ஒரு சடங்காக நடந்து முடிந்திருக்கிறது.

ஒரு சமூகம் அடையாளங்களுடன் மட்டும் மனநிறைவு கொண்டுவிட முடியாது. பிரிவுக்கும் பாகுபாடுகளுக்கும் காரணமான அடிப்படை முரண்களுக்குத் தீர்வு காணாத அடையாளங்களால் பரந்த சமூகத்துக்கு எந்த ஒரு பலனும் இல்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி ஆட்சிக்கு வந்தார். மத்திய அரசில் நீண்ட காலம் பீகாரைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் அமைச்சராக இருந்தார். ஆனால், இவர்கள் எல்லாம் டாக்டர் அம்பேத்கரைப் போல பரந்த உழைக்கும் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்தார்களா என்பது விவாதத்துக்குரிய விஷயமே.

மாயாவதியும் ஜெகஜீவன்ராமும் தலித் அரசியல்வாதிகளின் அதிகாரத்துக்கான அடையாளங்கள். அவர்கள் அரசியல்வாதிகள். எனவே அடுத்த தேர்தல் என்ற இலக்கைத் தாண்டி அவர்களால் சிந்திக்க இயலாது. ஆனால், வாக்கு வங்கிகளைக் குறிவைக்கும் அரசியல்வாதியாக அம்பேத்கர் இருக்கவில்லை. அவர் ஓர் அரசியல் மேதை. எனவே அவர் அடுத்தடுத்த தலைமுறைகளைப் பற்றி சிந்தித்தார். அதனால்தான் அடிப்படை முரண்களைத் தீர்ப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.

எப்படி இருந்தபோதிலும் ஓர் அடையாளமாக உயர்பதவிகளுக்கு ஒரு தலித் வருவதுகூட நமது சமூகத்தில் சிரமமானதாகத்தான் இருக்கிறது. சிக்கலான பிரச்னைகள் பலவற்றை எதிர்கொண்டதற்குப் பிறகே இந்த உயர்நிலைக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் மற்றும் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வந்திருக்க முடியும்.

இவர்களைப்போல் வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து முன்னேறும் மனிதர்களுக்கும் சமூகத்தினருக்கும் உற்சாகம் அளிக்கும் மேற்கோள் ஒன்று இருக்கிறது.

‘‘அவர்கள் முதலில் உங்களைப் புறக்கணிப்பார்கள்; பிறகு உங்களைக் கேலி செய்வார்கள். அதன் பிறகு உங்களுடன் போட்டி போடுவார்கள்; இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!’’ என்பதே அது.

- ஜென்ராம்
நன்றி : ஜூனியர் விகடன் (31.12.06)

Labels: , ,

Wednesday, December 27, 2006

விவசாயம் அழிந்தது யாரால்?

விவசாயத்தைத் துறந்து மக்கள் நகரங்களுக்குப் படையெடுப்பதற்கு யார் காரணம் என்று வலைப்பதிவுகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக பத்திரிகையாளர் சாய்நாத் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் சாரத்தை இங்கு மறுபதிவு இடுகிறேன்.

விவசாயம் அழிந்தது யாரால்?

விவசாயத்திற்கு நமது நாட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் முழங்கிக் கொண்டிருக்கிறார். அப்படி அவர் முழங்கிய ஒரு நாளில், மகாராஷ்டிரா மாநிலத்தின் விதார்பா பகுதியில் ஒரு விவசாயியின் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. அதே வாரத்தில் மகாராஷ்டிர சட்டசபையில் விவசாயிகளின் உருவ பொம்மைகளை வைத்து இறுதிச் ஊர்வலங்களை எதிர்க்கட்சிகள் நடத்தினர். அந்த ஏழு நாட்களில் விதார்பா பகுதியில் 20 விவசாயிகளுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அனைவரும் கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களே. பிரதமர் மன்மோகன்சிங்கின் 'நிவாரண உதவி' அளிக்கப்பட்டு மாதங்கள் ஆன பிறகும் விதார்பாவின் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் வருகிறது.

கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி நாக்பூரில் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும் போது அங்கு பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். கயர்லாஞ்சி என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலித்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிரான போராட்டச் செய்திகளில் பருத்தி விவசாயிகளின் அவலங்கள் ஊடகங்களில் இடம் பெறாமல் போய்விட்டன. அந்த நாட்களில் பருத்தி விவசாயப் பகுதி முழுவதிலும் கொள்முதல் மையங்களில் மோதல்கள் வெடித்தன.

இந்தப் பகுதியில் ஏற்படும் பதற்றமும் மோதல்களும் எதிர்பாராதல்ல. விவசாயிகளிடம் இருந்து அரசு பருத்தியைக் கொள்முதல் செய்வதில் ஏற்படும் கால தாமதம், பருத்தி விவசாயிகளைத் தனியாரிடம் தள்ளி விடுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னதாக இந்தப் பகுதியில் 300 கொள்முதல் மையங்கள் இருந்தன. ஆனால் இப்போது 56 மையங்களே இருக்கின்றன. எனவே விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் தங்கள் பருத்தியை விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நெருக்கடியில் சென்று விற்கும்போது அவர்களிடம் இருந்து விவசாயிக்கு என்ன விலை கிடைக்கும்? குறைந்த விலைதான் கிடைக்கும்..

இந்த பருவத்தில் அதிகாரபூர்வமான பருத்தி விலை ஒரு குவிண்டாலுக்கு ரு1700 முதல் ரூ1900 வரை இருக்கிறது. இங்குதான் பருத்தியின் தரத்தை நிர்ணயிப்பவர்களின் பங்களிப்பு வருகிறது. பருத்தி விவசாயிகளுக்கு இவர்கள் யார் சார்பாக இருப்பார்கள் என்பது நன்றாகத் தெரியும்.. ஆம்.. அவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். விவசாயிகளின் நல்ல விளைபொருளைக் கூட தர நிர்ணயம் செய்யும்போது குறைத்துக் கூறி விடுவார்கள். இதனால் விவசாயிகளுக்கு நடைமுறையில் இருக்கும் கொள்முதல் விலையை விட குறைவான விலையே கிடைக்கும்.

ஏற்கனவே மகாராஷ்டிரா அரசு சென்ற ஆண்டு எடுத்த நடவடிக்கை மூலம் ரூ 2250 இலிருந்து ரூ1700 ஆக ஒரு குவிண்டாலுக்கான பருத்தி விலை குறைந்து போய்விட்டது. பருத்தியின் உற்பத்தி செலவை விட கொள்முதல் விலை குறைவாக இருப்பதாக மகாராஷ்டிர அரசே ஏற்றுக் கொள்கிறது. ''மகாராஷ்டிர விவசாயிகள் தற்கொலை: ஒரு பார்வை" என்ற ஆவணத்தில் இந்த உண்மையை அரசு ஒப்புக் கொள்கிறது.

அதிலும் இந்த பருவத்தில் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். குவிண்டாலுக்கு ரூ 1900 கூட கிடைக்கவில்லை என்ற நிலை உறுதியானபோது அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பருத்திக்கு கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ 2700 அளிக்கப்படும் என்று இந்த அரசு வாக்களித்திருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி மக்கள் இந்த அரசைத் தேர்ந்தெடுத்திருந்தனர். அதற்காக இப்போது அவர்கள் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள்.

இப்படி விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எந்த அரசு எடுக்கிறது? ஏறத்தாழ 17.44 லட்சம் விவசாயக் குடும்பங்களும் அவற்றைச் சார்ந்த ஒரு கோடி பேரும் நெருக்கடியில் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டிருக்கும் அரசு – அதிலும் 20 லட்சம் பேர் "கடுமையான நெருக்கடியில்" சிக்கித் தவிப்பதாக அதிகார பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு – விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 10000 அரசு ஊழியர்களும் பிற பணியாளர்களும் பங்கேற்று நடத்தப்பட்ட அரசின் கணக்கெடுப்பிலேயே ஆறு மாவட்டங்களில் உள்ள அவலநிலை படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் மரணங்கள் குறித்த தகவல்களை அரசு ஆவணங்களிலும் அரசின் இணைய தளத்திலும் காண முடிகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது நீங்கள் விவசாயத்துறையில் நெருக்கடிநிலை என்று அறிவித்து அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்பினால் ஏமாந்து போவீர்கள். கடந்த 9ஆம் தேதி சனிக்கிழமையின் பெரும்பாலான நேரம் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளைக் கைது செய்வதிலேயே அரசு குறியாய் இருந்தது. கைது செய்யப்பட்ட விவசாயிகள் எங்கு வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதைக் கூட பத்திரிகைகள் அறிந்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாய் இருந்தது.

இவ்வளவு மோசமாக மக்கள் இருக்கும் நிலையிலும் கூட எதிர்க்கட்சிகள் மக்கள் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. பாஜகவும் சிவசேனையும் சட்டசபையில் நாடகங்களை அரங்கேற்ற முனைகிறார்களே தவிர அரசிடம் இருந்து எந்த சலுகைகளையும் மக்களுக்குப் பெற்றுத் தர முடியவில்லை. விதார்பா பகுதியில் சமீபத்தில் நடந்த சிமூர், தார்யப்பூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு வேட்பாளர்களும் சிவசேனையில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களது ராஜினாமாவால் நடந்த தேர்தல் என்பதும் அவர்கள் தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவர்கள் என்பதும் வேறு விஷயம். ஆனால் இந்த இடைத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகள் எந்த அளவு செயல்படாமல் இருக்கின்றன என்பதற்கான எடுத்துக் காட்டுகள் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த கஷ்டமான சூழ்நிலைகளில் இருந்து விதார்பா பகுதி விடுபடுவதற்கு சில மேதாவிகள் ஒரு யோசனையைச் சொல்கிறார்கள். அதாவது பருத்தி விவசாயத்தில் இருந்து கரும்பு பயிரிடுதலுக்கு மாறி விட வேண்டுமாம்! மகாராஷ்டிரா ஏற்கனவே கரும்பு ஆலைகள் மற்றும் சர்க்கரைத் தொழிலிலும் மோசமாகிக் கொண்டுதான் வருகிறது. உற்பத்தி செய்யப்படுகின்ற கரும்புகள் அனைத்தையும் கொள்முதல் செய்வதற்கு ஆலைகள் இல்லை. அரசு உதவி இல்லை என்றால் இங்கும் பருத்தி விவசாயிகளைப் போன்ற நிலையே ஏற்படும். விதார்பா பகுதியில் ஏற்கனவே தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் இங்கு கரும்பைப் பயிரிடுவதா? பருத்தியைவிட கரும்பு விளைவதற்கு 200 மடங்கு தண்ணீர் தேவை..

அதேசமயம் அமெரிக்க அரசு அங்குள்ள பருத்தி விவசாயிகளுக்கு அதிக மான்யம் வழங்குகிறது. கடந்த 2005க்கு முந்தைய ஏழு ஆண்டுகளில் அங்கிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பருத்தியின் அளவு அதற்கு முந்தைய 25 ஆண்டுகளின் இறக்குமதிக்கு இணையானது. நமது அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான வரியைக் கூட்டி உள்ளூர்ச் சந்தையைப் பாதுகாக்கவில்லை. இந்தியாவின் பருத்தி இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு இருபது சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தத் தகவல்களை எல்லாம் அரசே ஒப்புக் கொள்கிறது. அதன் ஆவணங்களில் எடுத்தாள்கிறது. ஆனால் அந்தத் தகவலை வேறு யாராவது எடுத்துப் பேசினால் அவர்கள் கைது செய்யப்படலாம். வழக்குகள் அவர்கள் மீது பாயலாம்.

மத்திய அரசின் நிவாரணத் தொகை மட்டுமே இந்தப் பிரச்னையைத் தீர்க்காது. விவசாயிகளுக்கு தேவை விளைவித்த பருத்திக்கு நியாயமான கொள்முதல் விலை.. கடன்கள் ரத்து.. சுலபமான நிதி வசதி.. உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைப்பதற்குத் தேவையான உதவி.. இவையெல்லாம் செய்யாமல் இருந்தால் மீண்டும் மீண்டும் விவசாயிகள் பிரச்னையை சட்டசபையில் விவாதித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!

நன்றி: தி ஹிந்து

ஆங்கில மூலம்: பி. சாயிநாத்

நன்றி: தினமலர் – செய்திமலர் (நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் வெளிவரும் ஞாயிறு நாளிதழுடன் வரும் இணைப்பு)

Monday, December 25, 2006

சிக்காத லாலுக்கள்!

'கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை’ என்பது கவிஞர் வைரமுத்துவின் வரிகள். இந்தப் பாடல் வரிகளை சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கேட்டிருப்பார் போலும். இந்தியாவை வல்லரசாக்கும் கனவைத் தொடர்ந்து காண முடியாமல் இந்தியாவில் இருக்கும் ஊழல் அவரை உறுத்தியிருக்கக் கூடும். எனவே மாணவர்களிடம் ஊழல் ஒழிப்புக்குப் பாடுபடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார். அதாவது தங்களுடைய பெற்றோர் லஞ்ச, ஊழலில் ஈடுபடாமல் தடுக்கும் பணியில் குழந்தைகள் இறங்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

சமூகத்தில் இருக்கும் பல அவலங்களை நீக்குவதற்கு இனி முதிய தலைமுறையால் இயலாது என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கக் கூடும். அல்லது குழந்தைகளுக்குப் புதிய ஆத்திச்சூடியும் பாப்பா பாட்டும் தந்த பாரதியின் வழிமுறை அவரைக் கவர்ந்திருக்கலாம். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், லஞ்சத்தையும் ஊழலையும் அகற்றுவதற்குப் போராட வேண்டும் என்ற அவரது கோரிக்கை மாணவர்களால் மட்டுமே அமைதியாகக் கேட்கப்படும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவியான ராப்ரி தேவியின் குழந்தைகள், தங்கள் பெற்றோரிடம் இவ் வளவு வசதிகள் எப்படி வந்தன என்று கேட்டார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், லாலு மற்றும் ராப்ரி மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்திருப்பதாக மத்திய புலனாய்வு நிறுவனம் வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கில் இருந்து லாலு யாதவும் ராப்ரி தேவியும் டிசம்பர் 18&ம் தேதி விடுவிக்கப் பட்டனர். இந்த விடுதலைக்குப் பிறகு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த லாலு பிரசாத் யாதவுக்கு எம்.பி&க்கள் கைதட்டி ஆரவார வரவேற்பளித் துள்ளார்கள்.

‘‘மாம்பழம் இனிப்பான பழம்;லாலுஜியும் இனிப் பானவர்’’ என்று மக்க ளவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தியுள்ளார். 1996&ல் ஐக்கிய முன்னணி ஆட்சி மத்தியில் நடந்தபோது அதை ஆதரித்த மார்க் சிஸ்ட் கட்சிதான், ஊழல் புகாருக்காக லாலு பிரசாத் யாதவை பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலக வைத்தது என்பது வேறு விஷயம்!

லாலு பிரசாத் யாதவ் அல்லது வேறு யாரோ ஓர் அரசியல் தலைவர் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டவுடன் மக்கள் அவரை நேர்மையானவர் என்று ஏற்றுக் கொண்டு விடுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. சட்டத்தின் பார்வையில் அவர் குற்றமற்றவர் ஆகிவிடுகிறார் என்பது உண்மைதான். ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்ற அளவில் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். மற்றபடி அதிகாரத்தில் இருக்கும் பலரும் நேர்மைக்கு மாறான வழிகளில்தான் பணம் சம்பாதிக்கிறார்கள் என்ற எண்ணமே மக்கள் மத்தியில் நிலவுகிறது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு எழுந்த முந்திரா ஊழல் தொடங்கி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி&க்கள் லஞ்சம் வாங்கியது வரை ஏராளமான புகார்கள் உள்ளன. இவை எல்லாம் வெளியில் தெரிந்து குற்றச்சாட்டுகளாகவும் புகார்களாகவும் வெளியில் வந்தவை. வெளியில் தெரியாமலே இருந்து விடுபவை ஏராளமாக இருக்கக் கூடும். தேர்தலில் சிலர் செலவழிக்கும் பணத்தைப் பார்த்தால் அவர்கள் அதிகாரத்துக்கு வந்தபிறகு, ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு தங்களுக்கு ‘என்னவெல்லாம்’ வேண்டும் என்று கேட்க வேண்டியதே இல்லை, அதுவாகவே வந்து கொட்டும் போலிருக்கிறது என்ற முடிவுக்கே வரத் தூண்டுகிறது.

இந்த லஞ்சமும் ஊழலும் இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் நம்மவர் களால் உருவாக்கப்பட்டனவா? பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முந்தைய மன்னராட்சிகளிலும் முறைகேடுகள் இல்லையா? சிலர் பிரசாரம் செய்வது போல் ‘கழகங்களின்’ ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதா? அறத்துக்கு விரோதமான வழிகளில் பொருள் சேர்க்கும் வழக்கம் 1967&க்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் ஏற்பட்டதா? இப்படி எழும் கேள்விகளுக்கு விடை தேடினால், கிடைக்கும் பதில்கள் அதிர்ச்சி தருகின்றன.

‘‘ஆட்சியில் இருப்போர் மக்களிடம் இருந்து முறைகேடான வழிகளில் பணம் பெறுவது எதைப் போன்றது? கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு வருவோர் போவோரிடம் அவர்களது உடைமைகளைத் திருடன் வழிப்பறி செய்வதைப் போன்றது. தவறான வழிகளில் குவிக்கப்படும் செல்வத்தை விட வறுமை உயர்வானது...’’ இப்படியெல் லாம் கருத்துக்களை யார் சொல்லியிருப்பது என்று நினைக்கிறீர்கள்? நமது திருவள்ளுவர்தான்! அவர் இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்ல வேண்டிய அவசியம் அந்தக் காலத்திலேயே ஏன் ஏற்பட்டது? முறைகேடான வழிகளில் செல்வம் சேர்த்தவர்கள் அப்போதும் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அந்த முறையை தவறான வாழ்க்கைமுறை என்று சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் வள்ளுவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்’ என்று பாரதி சொல்லியிருக்கிறார். அவரும் அவர் காலத்தில் சூதும் வாதும் செய்த படித்தவர்களைப் பார்த்துத்தான் அப்படிப் பாடியிருக்க முடியும்.

‘‘ஊழல் பழமையானது; மக்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் செய்கின்றன. எனவே ஊழலுக்கு எதிரான போராட்டத்தால் ஒரு பயனும் இல்லை’’ இப்படி ஒரு கருத்தைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்பவர்களும் இருக்கிறார்கள். தேர்தல் நேரங்களில் ‘நல்லவர் தேவையில்லை; வல்லவரே தேவை’ என்று பிரசாரத்தையும் இவர்கள்தான் முன்னெடுக்கிறார்கள். பொதுவாழ்வில் பெரும்பான்மையான ‘அன்பளிப்புகள்’ எழுதப்படாத விதி களுக்குக் கட்டுப்பட்டவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. எனவே அன்றாட வாழ்வில் பெருமளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவதில்லை. அதேசமயம் எந்தவித ‘வரைமுறைகளுக்கும்’ கட்டுப்படாமல் அல்லது ‘உண்மையான’ அதிகார பீடங்களுக்கு அடங்காமல் நிமிர்கின்ற சிலர்மீது மட்டுமே குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக எழுகின்றன. அதாவது தங்களில் சிலரை நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் அலைய விட்டுவிட்டு மற்ற தலைவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அப்படி வழக்குகளில் சிக்கியவர்களில் ஒருவராகத்தான் லாலு பிரசாத் யாதவ் இருக்கிறார்.

நமது பண்பாட்டைப் போலவே ஊழலும் தொன்மையானது என்பதால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதாலோ நமது அமைப்பில் ஆழமான வேர்களைக் கொண்டிருக்கிறது என்பதாலோ அதனோடு சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.

நமது உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று தெரிகிறது. அதற்குக் காரணமான நோய் என்ன என்று மருத்துவரிடம் இருந்து அறிந்து கொள்கிறோம். நோய்க்கு நிவாரணம் மரணம்தான் என்று எந்த மருத்துவரும் பரிந்துரைப்பதில்லை!

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன்

Wednesday, December 20, 2006

மரண தண்டனையில் மௌனராகம்!

‘காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமை மிகவும் பொறுப்பானது. அவர்கள் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் காவலில் இருக்கும் கைதிகளை வதை செய்வது ரத்தத்தில் புற்றுநோய் இருப்பதைப் போன்றது. எனவே, தனது காவலில் உள்ள ஒருவரை ஒரு காவலர் அடித்துக் கொல்வது, மிகவும் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு செயல்.’’

இப்படி கூறி இருப்பது ஏதோ மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது சர்வதேச மன்னிப்பு சபையைச் சேர்ந்தவர்களோ அல்ல. டெல்லி நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதியான ராஜிந்தர் குமார்தான் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். காவலில் இருந்த கைதிகளைக் கொடுமைப்படுத்திக் கொன்ற வழக்கில், ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையரான ரிஷி பிரகாஷ் தியாகி என்ற அதிகாரிக்குத் தூக்கு தண்டனை வழங்கி, அந்தத் தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி.

கடந்த 1987&ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 16&ம் தேதி ரிஷி பிரகாஷ் தியாகி, உதவி ஆய்வாளராக இருந்தார். மகேந்திரகுமார், ராம்குமார் என்ற இருவர் வழிப்பறியில் ஈடுபடுவதாக வந்த செய்தியை அடுத்து, தியாகி அவர்களை மடக்கினார். ஆனால், அவர்கள் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்கள். அவர்களைப் பிடிப்பதற்கு என்ன வழி என்று யோசித்த தியாகி, அந்த இருவரது குடும்பத்தினருக்கும் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். தங்களுக்காகத் தங்கள் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்த அந்த இருவரும், எட்டு நாட்களுக்குப் பிறகு காவல் துறையிடம் சரணடைந்தார்கள். காவல் நிலையத்தில் தியாகியும் சில காவலர்களும் அந்த இருவரையும் ‘தீவிரமாக’ விசாரித்தார்கள். இந்த ‘விசாரணை’க்குப் பிறகு 40 க்கும் மேற்பட்ட படுகாயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட மகேந்திரகுமார், இறுதியில் இறந்து போனார். மற்றவரான ராம்குமாரும் ‘எப்படியோ’ காவலில் காலமானார்.

இறந்துபோன மகேந்திர குமார் மற்றும் ராம்குமாரின் குடும்பத்தினர் விடாப்பிடியாக நடத்திய வழக்கில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்திருக்கிறது. காவலில் இருக்கும்போது கைதி மரணமடைந்ததாகப் போடப்பட்ட பல வழக்கு களில் அந்தக் கைதியின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்புகள் வந்துள்ளன. ஆனால், தொடர்புடைய காவல்துறை அதிகாரிக்குத் தூக்குத் தண்டனை என்ற அளவில் அதிகபட்ச தண்டனை அளித்திருப்பது இதுவே முதல்முறையாக இருக்கக் கூடும்.

காவலில் இருக்கும்போது கைதி மரணமடைந்து விட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில் காவல் துறை அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்படுவது, இந்தியா வில் அபூர்வமாக இருக்கலாம். ஆனால், காவலில் கைதிகள் கொல்லப்படும் குற்றங்கள் இந்தியாவில் அபூர்வமானவை அல்ல என்பதை தேசிய குற்றப்பதிவு கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2005&ம் ஆண்டு மட்டுமே காவலில் இருக்கும்போது கைதி இறந்துபோனதாகக் கூறி 144 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆந்திர மாநிலத்தில் மட்டும் 55 வழக்குகள் பதிவாக, அது முதலிடத்தைப் பிடித்துள்ளது. இன்னும் பல மாநிலங்களில் இத்தகைய வழக்குகள் பதிவாகாமலே போவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

பல வழக்குகளில் மேல்முறையீட்டின்போது ஏற்கெனவே வழங்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்தோ அல்லது விடுதலை செய்தோ உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியிருக்கிறது. அதுபோலவே ரிஷி பிரகாஷ் தியாகிக்கும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையில் இருந்து விலக்களிக்கலாம். அப்படியே உச்ச நீதிமன்றம் அவருக்குத் தூக்கு தண்டனையை உறுதி செய்தாலும்கூட, அவர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு போடலாம்.

எத்தனையோ குற்றவாளிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இருக்கும் இந்த உரிமை, இந்த முன்னாள் காவல்துறை அதிகாரிக்கும் இருக்கிறது. ஆனால், மரண தண்டனைகள் குறித்த தீர்ப்புகள் அளிக்கப்பட்ட அடுத்த நொடியே அதற்கு எதிரான குரல்களை எழுப்பும் பலர், தியாகி விஷயத்தில் ஏனோ மௌனமாக இருக்கிறார்கள்! ஒருவேளை, அவருக்கு இன்னும் மேல்முறையீடுகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது காரணமாக இருக்கலாம்.

ஒரு வாதத்துக்காக அனைத்து முறையீடுகளுக்கான வாய்ப்புகளும் முடிந்த பின்னர், இறுதியாக உச்ச நீதிமன்றத்திலும் தியாகிக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நமது பொது வாழ்வின் இரட்டைநிலை அப்பட்டமாக அம்பலமாகி நிற்கும். முகமது அப்சலுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்பிய பலர், ரிஷி பிரகாஷ் தியாகியைக் கண்டு கொள்ள மாட்டார்கள். முகமது அப்சலைத் தூக்கில் இடுங்கள் என்று வலியுறுத்தும் சிலர் அதேபோல் தியாகி விஷயத்தில் நடந்துகொள்ள மாட்டார்கள்.

நமது பொதுவாழ்வில் நடைபெறும் பல முக்கிய விவாதங்கள் இரு துருவங்களாகப் பிரிந்த நிலையிலேயே நடைபெறுகின்றன. எதிரெதிர் விளிம்புகளுக்கு நடுவிலும் நிலைப்பாடுகள் இருக்கின்றன என்பதைப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறையுங்கள் என்று கேட்பவன் தேசபக்தி இல்லாதவன்; ரிஷி பிரகாஷ் தியாகிக்குத் தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள் என்றால், அவன் காவல்துறையின் எடுபிடி; சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து தமிழர்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றால், அவன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன்; புலிகள் நடத்திய ‘துன்பியல் சம்பவத்தை’ நினைவுகூர்ந்தால், அவன் தமிழர் நலனுக்கு எதிரானவன்; அப்பாவி மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்தால் அவன் தேசிய வெறியன்; காவல்துறையின் மனித உரிமைகள் மீறலைக் கண்டித்தால் அவன் பயங்கரவாதி.
இவ்வாறு இரு துருவங்களில் இருந்தும் இப்படிப்பட்ட முத்திரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நபர்களுக்கு குத்தப்படுகின்றன.

இந்த மாதிரியான எதிரெதிர் துருவ நிலைகளில் மட்டுமே அரசியலையும் பிரச்னையையும் கொண்டு நிறுத்துவது சரியல்ல. பல பிரச்னைகள் சிக்கல்கள் நிறைந்தவை. அவற்றுக்கு உடனடியான ரெடிமேட் தீர்வுகள் கிடையாது. இதைப் புரிந்து கொள்ளாத நிலையில்தான், அப்சலைத் தூக்கில் இட்ட பிறகு வீரப்பதக்கங்களை வாங்கிக் கொள்கிறோம் என்று நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர், குடியரசுத் தலைவரிடம் பதக்கங்களைத் திருப்பியளிக்கிறார்கள்.

உயிரிழந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றுவதும் இந்திய அரசமைப்புச் சட்டம் அப்சலுக்கு அளித்திருக்கும் கருணை மனுவுக்கான உரிமையும் ஒன்றுக்கொன்று விரோதமானவை அல்ல.

அதைப்போலவே ரிஷி பிரகாஷ் தியாகியின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருவது காவலில் இருக்கும் கைதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு எதிரானதல்ல!

-ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன்

Monday, December 18, 2006

பொதுச் சொத்துக்கு யார் பொறுப்பு?

"உங்களைக் கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைத்தீர்களா?"

மதுரையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு வழக்கறிஞரைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள் இவை.

வழக்கறிஞர்கள் அறைக்கு மாதம் 200 ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த வாடகையைக் குறைக்குமாறு ஒரு வழக்கறிஞர் மனுச் செய்திருந்தார். இதற்கிடையே மதுரை நீதிமன்ற வளாகத்தில் நடந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது, ஜன்னல் கண்ணாடிகளும் அறிவிப்புப் பலகைகளும் உடைக்கப்பட்டிருந்தன. ‘‘இருநூறு ரூபாய் வாடகையைக் குறைக்குமாறு வழக்குப் போடும் நீங்கள், நீதிமன்ற சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கிறீர்கள். இந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நான் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும்’’ என்று அந்த நீதிபதி, வழக்கறிஞரை எச்சரித்தார்.

இதைப் போலவே இன்னொரு சம்பவத்தையும் எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம். தேர்தலின்போது பொதுச் சொத்துகளின் மீது சுவரொட்டிகளை ஒட்டியும், சுவர் எழுத்துக்களை எழுதியும் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வது முன்பு வழக்கமான நிகழ்ச்சி. இப்போது அதற்கெல்லாம் கெடுபிடிகள் அதிகமாகி விட்டன என்பது வேறு விஷயம்! ஆனால், அவ்வாறு பொதுச் சுவர்களும் சொத்துக்களும் அசுத்தப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றைச் சுத்தம் செய்வதற்கு ஆகும் செலவை அந்த அந்தக் கட்சிகளிடம் வசூலியுங்கள் என்று தேர்தல் ஆணையம் பீகார் மாநில அரசுக்கு ஆணையிட்டது.

இவை எல்லாம் பழைய சம்பவங்கள். மக்கள் வரிப்பணத்தில் உருவாகி நிற்கின்ற பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் எடுத்த நடவடிக்கைகள். பொதுச் சொத்துக்களை மட்டுமல்லாமல் தனிச்சொத்துகளையும் மனித உயிர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது, நாடெங்கிலும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நிகழ்த்தப்பட்டது. சீக்கியர்களுக்குச் சொந்தமான உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. அவர்களது உடைமைகளைப் பாதுகாத்துத் தருவதற்கு அரசு தவறி விட்டது என்று ஒரு வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் ஆர்.காந்திக்கும் இந்திய அரசுக்கும் நடந்த அந்த வழக்கில் கோவையில் சேதப்படுத்தப்பட்ட சீக்கியர்களின் உடைமைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், இதுபோன்ற வேறொரு வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் வேறுவிதமாக தீர்ப்பளித்திருக்கிறது. ஆந்திர எம்.எல்.ஏ. ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் அங்கு கலவரம் நடந்தது. அதில் லட்சுமி ஏஜென்சீஸ் என்ற நிறுவனமும் தாக்கப்பட்டு சேதமடைந்தது. அதற்கு இழப்பீடு கேட்டு ஆந்திர அரசை எதிர்த்து அந்த நிறுவனம் வழக்கு போட்டது. ‘‘அரசாங்கத்தின் செயல் நேரடியாக அந்த இழப்புக்குக் காரணமாக இல்லாத நிலையில் இந்த வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 பொருந்தாது’’ என்று ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது, இழப்பீடு வழங்கத் தேவையில்லை என்றது.

இவைபோன்ற சம்பவங்களின் பின்னணியில் தமிழக அரசின் சமீபத்திய முடிவுகளில் ஒன்றைப் பார்க்க வேண்டியதுள்ளது. அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தும் போதும் கடையடைப்பு நடத்தும்போதும் சில சமயங்களில் பொதுச் சொத்துக்கு சேதங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கு அந்தப் போராட்டத்தில் ஊடுருவியிருக்கின்ற சமூகவிரோதிகள் காரணமாக இருந்திருக்கலாம். ஆனாலும் அந்த சேதத்துக்கான இழப்பீட்டை அந்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்த அரசியல் கட்சியே செலுத்தும் வகையில், கடந்த அ.தி.மு.க. அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிக்கையை இப்போது தி.மு.க. அரசு திரும்பப் பெற்றுள்ளது. ‘சமூக விரோதிகள் எவரோ நடத்திய வன்முறைக்கு அரசியல் கட்சிகளைப் பொறுப்பாக்குவது நீதியாகாது’ என்று முதல்வர் கருணாநிதி ஆணையிட்டு இருப்பதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மக்கள் வரிப்பணத்தில் உருவான அரசுச் சொத்துக்களை சேதப்படுத்தும் அதிகாரத்தை எவரோ சிலருக்குக் கொடுத்தது யார்? அப்படிப்பட்ட சமூக விரோதிகள் ஊடுருவுவதற்கு வசதியாகப் போராட்டங்களை அரசியல் கட்சிகள் ஏன் நடத்த வேண்டும்? அரசின் செயல்பாடுகளை எதிர்ப்பதற்கோ அல்லது அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கோ வேறு நவீன முறைகளை அரசியல் தலைவர்கள் நடைமுறைப்படுத்தினால் என்ன? சமூக வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் தங்கள் போராட்ட வடிவங்களையும் இயக்கங்கள் மாற்றிக் கொண்டால் என்ன? போராட்டங்களை எல்லாம் போக்குவரத்துக்கு இடையூறான ஒன்றாக மட்டுமே பார்க்கும் மனோபாவத்தில் உள்ளவர்கள் மட்டும் எழுப்பும் கேள்விகள் அல்ல இவை. மேலும் பலர் இது போன்ற கேள்விகளை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். மொத்தத்தில் ஓர் அநீதிக்கு அரசும் துணை போகிறது என்ற எண்ணம் இவர்களிடத்தில் இருக்கிறது.

பொது வேலைநிறுத்தங்களும் பொது கடையடைப்புகளும் அபூர்வமாக நடந்து கொண்டிருந்த சமயங்களில் அரசியல் கட்சிகள் மக்களிடம் இருந்து இந்த அளவு தனிமைப்படவில்லை. அன்று சாலைகளில் இப்போது இருக்கும் அளவு வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆனால், இன்று தினந் தோறும் பணிக்குச் சென்று வருவதே இரண்டு முறை ஊர்வலங்களில் கலந்து கொண்டுவிட்டு வருவதுபோல ஆகிவிட்டது. இந்நிலையில், ஒரு போராட்டம் நடந்தாலோ ஊர்வலம் நடந்தாலோ மக்களின் அன்றாட வாழ்வில் நெருக்கடி நேர்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் இந்த ஒரு காரணத்துக்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற இயக்கங்கள் போராட்டங்களை நடத்துவதற்குத் தடைவிதிப்பதும் சரியல்ல. போராட்டங்கள் நடத்தப்படும்போது அவற்றை நடத்தும் இயக்கங்கள், சமூகவிரோதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். எந்தவகைப் போராட்டத்திலும் சமூகவிரோதிகள் அல்லது அங்கு கலவரம் விளைவிக்க எண்ணுவோர் ஊடுருவி விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இருந்த போதிலும் சில அரசியல் கட்சிகள் மட்டும் எவ்வளவு கூட்டம் வந்தாலும் கட்டுக்கோப்புடன் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அரசை எதிர்த்து சிலர் போராட்டங்களை நடத்தும்போது மக்களிடம் இருந்து எந்தவித எதிர்ப்புக் குரலையும் விரும்பாத ஆட்சியாளர்கள் இத்தகைய போராட்டங்களைத் தடுக்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள். இந்த முயற்சிகளின் விளைவாக கடுமையான சட்டங்களும் அரசாணைகளும் அறிவிக்கைகளும் பிறக்கின்றன. இவை பொதுவாக எதிர்க்கட்சியினர் மீதே ஏவப்படுகின்றன. பொதுமக்களுக்கு நேர்கின்ற இன்னல்களைவிட ஆட்சியாளர்களின் இத்தகைய தாக்குதல் போக்கு தீவிரமானது. அடிப்படை ஜனநாயகத்துக்கே ஆபத்தானது. எனவே பொதுச் சொத்து சேதங்களுக்கு அரசியல் கட்சிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் அறிவிக்கையை முதல்வர் கருணாநிதி திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இந்த முடிவை ஆதரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், வேறு ஒரு கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. கடந்த காலங்களில் பல சட்டப்பேரவைகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் மைக்குகளை உடைத்தும் மேஜை நாற்காலிகளைத் தூக்கி வீசியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சேதத்துக்குக் காரணமானவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

இங்கு யார் ஊடுருவி இருந்தார்கள்?

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன்

Wednesday, December 13, 2006

எம்.ஜி.ஆரை மறப்பது நியாயமா?

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலையை மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி திறந்து வைத்துள்ளார். ஓர் அரசியல் கட்சித் தலைவருக்கு மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது அல்லது இருந்தது என்பதைப் பொறுத்தே அவருடைய அரசியல் ஆளுமையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
அந்த வகையில் எம்.ஜி.ஆருக்குத் தமிழக மக்கள் மத்தியில் பெரிதும் செல்வாக்கு இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
எனவேதான் அவருக்கு இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது அளித்து கௌரவித்துள்ளது. எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும் அவரது அரசியலையும் நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம்!

தமிழகத்தில் செல்வாக்குடன் இருந்த எம்.ஜி.ஆரின் சிலை திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வரவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்மோகன்சிங்கும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இவர்கள் இருவரையும் இந்த விழாவுக்கு அழைத்திருப்பதாக ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ‘‘சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க இருப்பதால், விழாவுக்கு வர இயலவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் அனுப்பியிருக்கிறார்’’ என்றுபின்னர் ஜெயலலிதா சொன்னார்.

இந்த விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்ளாதது தான் ஆச்சர்யம் தருகிறது. ஏனெனில், சாதாரண அரசியல்வாதிகளின் ஆசாபாசங்களைக் கடந்த நிலையில் சோனியா காந்தி இருப்பதாக அவருக்கு ஒரு தோற்றம் இருக்கிறது. கடந்த காலங்களில் ஜெயலலிதா அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதற்காக இந்த விழாவை அவர் புறக்கணித்திருக்கக்கூடும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆர். யார் என்பதும் அவர் நிறுவிய அ.தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடந்த காலங்களில் இருந்த நெருக்கம் என்ன என்பதும் சோனியாகாந்திக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்றால், தமிழக மக்களின் உணர்வை சோனியா காந்தி அவமதித்து விட்டதாகப் பிரசாரம் நடைபெறும் என்பதையும் அவர் நிச்சயம் அறிந்திருப்பார். இருந்தும், அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

‘தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எல்லாம் தமிழக அரசியல்வாதிகளிடம் மட்டுமே இருக்கிறது. டெல்லியில் எதிரெதிர் துருவங்களாக நாடாளுமன்றத்தில் மோதிக் கொள்பவர்கள்கூட, வெளியில் வந்தால் தோளில் கை போட்டுக் கொள்வார்கள். ஒரு தரப்பு தொடர்பான விழாவுக்கு எதிர்தரப்பினர் எந்தவித தயக்கமும் இல்லாமல் வருவார்கள்...’ இப்படித்தான் தேசியக் கட்சிகளைச் சார்ந்த வர்கள் தமிழகத்தில் பெருமையாகப் பேசி வருகிறார்கள். அவர்கள் சொல் வதைப்போல காங்கிரஸ் கட்சியினரும் பி.ஜே.பி. தலைவர்களும் பல விழாக்களில் ஒன்றாகப் பங்கேற்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதனால்தான் சோனியா காந்தி எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது வியப்பளிக்கிறது.

இந்த விழாவுக்கு ஜெயலலிதா வருகிறார் என்பதால்தான் சோனியா வரவில்லை என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா வரும் இடத்துக்கு சோனியா காந்தி வரமாட்டார் என்றால், டெல்லி தலைவர்களிடம் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் இல்லை என்ற வாதம் தவிடுபொடியாகிவிடுகிறது.

காங்கிரஸ் சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து கொண்டார்கள் என்பது வேறு விஷயம். ஜெயலலிதா அங்கு வந்த சிதம்பரத்திடம் பேசினாரா, வரவேற்றாரா என்பதெல்லாம் தெரியவில்லை. இருந்தும், எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த நாம் அவசியம் பங்கேற்க வேண்டும் என்ற அவரது முடிவு வரவேற்கத்தக்கது. இருந்தபோதிலும் கட்சித் தலைவர் அல்லது ஆட்சித் தலைவர் இருவரில் யாராவது ஒருவர் கலந்து கொண்டிருந்திருக்கலாம்.

ஒரு மாநிலத்தில் இருக்கும் இரு கட்சிகள் எந்த ஒரு நிகழ்வையும் அரசியல்ரீதியாகத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே முயலும். எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் ஜெயலலிதாவுடன் சோனியா பங்கேற்றிருந்தால், தி.மு.க. மீது சோனியா அதிருப்தி என்று சிலர் செய்திகளை வெளியிட்டிருப்பார்கள். இப்போது மட்டும் என்ன நடக்கும்? ‘ஜெயலலிதா பங்கேற்கும் விழாவில் கலந்துகொள்வது தி.மு.க. உறவில் நெருடலை ஏற்படுத்தும். அது மத்திய ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்கிவிடக் கூடாது. எனவேதான் சோனியா காந்தி வரவில்லை’ என்று செய்திகள் வெளியாகலாம். ஆனால், ஊடகங்களில் வேறுவிதமாகப் பிரசாரம் செய்யக்கூடும் என்பதற்காக ஒரு நல்ல அரசியல் தலைவர் செய்ய வேண்டிய சரியான செயலைச் செய்யாமல் இருக்கக்கூடாது.

அடுத்தடுத்து தமிழகத்தைச் சேர்ந்த இரு தலைவர்களின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் திறக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். சிலை திறப்புக்கு அடுத்த இரு தினங்களில் முரசொலி மாறன் சிலை திறப்பு விழாவும் நடந்தது. இதில் சோனியா காந்தியும் மன்மோகன்சிங்கும் கலந்து கொண்டார்கள். ஒருவேளை தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாத சூழ்நிலையில், இப்படி ஒரு விழா நடந்திருந்தால், அதிலும் சோனியா பங்கேற்றிருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் சோனியா காந்தி எம்.ஜி.ஆர். சிலை திறப்புவிழாவிலும் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்ற வாதம் எழுகிறது. அப்படி அவர் செய்திருந்தால் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

சோனியா காந்தி ஒரு குறுகிய சிந்தனை கொண்ட கட்சியின் தலைவர் அல்ல; இந்தியாவின் பழம்பெரும் கட்சியின் அகில இந்தியத் தலைவர். அவர் சிறந்த ராஜதந்திரியாகவும் அரசியல் மேதையாகவும் புகழ்பெற வேண்டியவர். ஒரு மாநிலத்தில் உள்ள இரு கட்சிகளுக்கு இடையில் உள்ள அரசியல் வேறுபாடுகள், அவரது பரந்த செயல்பாட்டைத் தீர்மானிப்பதற்கு அவர் இடம் கொடுத்திருக்கக் கூடாது. நெருக்கடி நிலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில்கூட தமிழக மக்கள் காங்கிரஸை ஆதரித்துள்ளார்கள். அதாவது, வட இந்தியா முழுவதும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நேரத்திலும் தமிழக மக்களும் எம்.ஜி.ஆரும் காங்கிரஸ் கட்சிக்குத் துணையாக நின்றார்கள். ஆனால், அதற்கான அங்கீகாரத்தை எம்.ஜி.ஆருக்கு அளிப்பதற்கு சோனியாகாந்தி தவறிவிட்டார்.

ஒருநாள் சிங்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதன் தொண்டையில் ஓர் எலும்பு சிக்கிக் கொண்டது. அந்த எலும்பை அந்த சிங்கத்தால் விழுங்க முடியவில்லை. நேரம் ஆக ஆக, சிங்கத்தின் தொண்டையில் வலி அதிகரித்தது. வலி தாங்க முடியாமல் சிங்கம் அங்கும் இங்கும் ஓடியது. ‘‘தொண்டையில் சிக்கிய எலும்பை எடுத்து விடுங்கள். உங்களுக்குப் பரிசாக எது வேண்டுமானாலும் தருகிறேன்’’ என்று சொல்லியும் யாரும் உதவ முன்வரவில்லை.

அந்த சமயம் அங்கு ஒரு கொக்கு வந்தது. சிங்கத்தை வாயை நன்றாகத் திறந்து வைக்கச் சொன்னது. பிறகு தனது நீளமான அலகால் சிங்கத்தின் தொண்டையில் சிக்கிய எலும்புத் துண்டை எடுத்தது. இதன் பிறகு தனக்கான பரிசைத் தருமாறு கேட்டது கொக்கு. சிங்கம் அட்டகாசமாகச் சிரித்தது. ‘‘ஒரு சிங்கத்தின் வாய்க்குள் தலையை விட்டு எந்த சேதமும் இல்லாமல் இன்னும் உயிருடன் இருக்கிறாய். இதைவிட என்ன பரிசு உனக்குத் தேவை? உன் உயிர்தான் நான் உனக்களித்த பரிசு. உடனடியாக இங்கிருந்து ஓடிவிடு’’ என்று சொல்லி சிங்கம் கர்ஜித்தது.

தேசியக் கட்சி, மாநிலக் கட்சிகளை இப்படித்தான் நடத்தும் போலும்!


-ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன்

Monday, December 11, 2006

அஹிம்சைக்கு விடை கிடைக்காதா?

வலியில் இருந்து விடுதலை பெறும் நொடியே மனிதனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நொடியாக இருக்க முடியும். அதைப்போல அதிருப்தியில் இருக்கும் மக்களிடம் சென்று, அவர்களை உறுத்திக் கொண்டிருக்கும் பிரச்னை தீர இருக்கிறது என்று அறிவித்தால், அந்த மக்களின் முகங்களில் மலர்ச்சியைக் காண முடியும். அப்படி ஒரு செயலையே பிரதமர் மன்மோகன்சிங் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் செய்திருக்கிறார்.

மணிப்பூர் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் சர்ச்சைக்குரிய ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1958’ திருத்தப்பட்டு ‘மனித நேயம்’ மிகுந்த சட்டமாக மாற்றப்படும் என்று அங்கு அவர் அறிவித்திருக்கிறார். மணிப்பூர் மாநில மக்கள், இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்பு, அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டும் என்பதே சராசரியான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

ஆனால், அங்கு அவ்வாறு நிகழவில்லை. பிரதமரின் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் டெல்லியில் ஐரோம் ஷர்மிளா சானு என்ற 36 வயது பெண்மணியிடம் அதற்கான எதிர் வினையைக் காண முடிந்தது. தனது மூக்கில் செருகப்பட்டிருந்த குழாயை அவர் பிடுங்கி எறிந்தார். ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1958’ஐ முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் ஐரோம் ஷர்மிளா சானுவின் கோரிக்கை. இந்தக் கோரிக்கை முழுமையாக ஏற்கப்படாமல், ‘மனித நேயம்’ மிகுந்த சட்டமாக மாற்றப்படும் என்று பிரதமர் அறிவித்தது, சானுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவமனையில் இருந்து கொண்டு இப்படி ஓர் எதிர்ப்பைத் தெரிவிக்கும் இந்தப் பெண் யார்? அவரது மூக்கில் ஏன் குழாய் மாட்டப் பட்டிருக்கிறது?

மணிப்பூர் இலக்கியவாதிகள் மத்தியில் ஐரோம் ஷர்மிளா ஒரு கவிஞர்; யோகா வல்லுநர்கள் நடுவில் அவர் ஒரு யோகா கலைஞர். எல்லோரையும் போலவே அவரும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக ஒரு நிகழ்ச்சி கடந்த 2.11.2000 அன்று நடந்தது. அன்று முதல் அவர் உணவு எதையும் உண்ணவில்லை. ஒரு சொட்டு நீர்கூட குடிக்கவில்லை. அவருடைய மூக்கில் ஒரு குழாயைச் செலுத்தி, அதன் வழியாக உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். ஆனால், இப்படி தொடர் உண்ணாவிரதம் இருப்பதால், அவரது உடலில் ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், இன்னும் அவர் தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

2.11.2000 அன்று, -அந்தக் குறிப்பிட்ட நாளில் நடந்தது என்ன? மணிப்பூரில் உள்ள மலோம் என்ற இடத்தில் அமைதிப் பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவை குறித்து விவாதிப்பதற்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஐரோம் ஷர்மிளா அந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அந்த ஊரின் கடைவீதியில் அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் கண்மண் தெரியாமல் மனம்போன போக்கில் சுட்டனர். மணிப்பூர் தீவிரவாதிகள் அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதற்கான பதிலடியாக, அவர்கள் அப்பாவி மக்கள் மீது இப்படி சுட்டிருக்கிறார்கள். இதில் 10 பேர் பலியானார்கள்.

இந்தச் சம்பவம் ஐரோம் ஷர்மிளாவை பாதித்தது. சம்பவம் நடந்த இடத்தைச் சென்று பார்த்த ஐரோம் ஷர்மிளா, உடனடியாகத் தனது உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார். ஆயுதப் படையினருக்குத் தேவைக்கு அதிகமான அதிகாரங்களை வழங்கும் ‘ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரங்கள் சட்ட’த்தை ரத்து செய்ய வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

வழக்கம் போலவே அரசு அவர் மீது தற்கொலை முயற்சி என்று வழக்கு பதிவு செய்து, கைது செய்தது. வலுக் கட்டாயமாக மூக்கு வழியாக உணவு செலுத்தப்பட்டது. ஓராண்டு சிறைத் தண்டனை முடிந்து அவர் வெளியில் வருவார்; தனது போராட்டத்தைத் தொடர்வார்; மீண்டும் கைது செய்யப்படுவார்... இப்படியே ஆறு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த ஆண்டுதான் இந்தக் காட்சி இம்பாலில் இருந்து டெல்லிக்கு இடம் மாறியிருக்கிறது.

கடந்த ஆறு வருடங்களாக இவரது அம்மா இவரைப் பார்க்கவில்லை. ‘‘நான் பலவீனமானவள். மகளைப் பார்த்தால் எனது கண்கள் கலங்கும். எனது கண்களில் இருந்து வடியும் கண்ணீர், எனது மகளின் மன உறுதியைச் சிறிது கூட பாதித்துவிடக் கூடாது. எனவே நான் அவளைப் பார்க்க மாட்டேன். அவளது லட்சியத்தில் அவள் வெற்றி பெற்றபிறகு அவள் வந்து என்னைச் சந்திப்பாள்’’ என்று ஷர்மிளாவின் அம்மா சொல்கிறார்.

இந்த வார்த்தைகளில் அந்தத் தாயின் பலவீனம் தெரியவில்லை. மாறாக மன உறுதியே வெளிப்படுகிறது. இவரைப் போலவே, மணிப்பூர் தாய்மார்களில் பலர் மனஉறுதி மிக்கவர்கள்தான். அவர் கள் நடத்திய இன்னொரு போராட்டத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கடந்த 2004 ஆம் வருடம் ஜூலை மாதம் 11 ஆம் தேதி அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தங்ஜம் மனோரமா தேவி என்ற 32 வயதுப் பெண் வன்புணரப்பட்டு, அதன் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏறத்தாழ 30 தாய்மார்கள் தங்கள் உடலில் ஒட்டுத் துணிகூட இல்லாமல் அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினரின் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ‘ஆயுதப் படையினரே! எங்களையும் வன்புணருங்கள்’, ‘எங்கள் சதைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்’ போன்ற பதாகைகள் ஏந்திப் போராடினார்கள். அதைத் தொடர்ந்து ‘சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தைத் திரும்பப் பெறுங்கள்’ என்று மணிப்பூர் முழுவதும் போராட்டம் வெடித்தது.

இந்த சட்டத்தின் பிரிவுகளை மறு ஆய்வு செய்வதற்காக ஜீவன் ரெட்டி குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் தனது ஆய்வுகளை முடித்துக் கொண்டு, அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து விட்டது. ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் அதன் சில பிரிவுகளை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் இடம் பெறச் செய்யலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுமா என்பது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் மணிப்பூரில் எதுவும் குறிப்பிடவில்லை என்பது வேறு விஷயம்!

ஷர்மிளா உணவு எதுவும் உட்கொள்ளாமல் அறப் போராட்டம் நடத்துகிறார். அவர் தற்கொலை செய்துகொள்ளத் துடிக்கவில்லை. ஆனால், அவர் மீது அரசு தற்கொலை முயற்சி என்று வழக்கு பதிவு செய்கிறது. அப்படி என்றால் பட்டினிப் போராட்டம், சட்ட விரோதமாகிறது. அது இல்லாமல் வேறு வழி முறைகளில் நடைபெறும் போராட்டங்களும் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தொடங்கி குற்றச் செயல் வழக்குகள் வரை இழுத்துச் செல்லப்படுகின்றன. அப்படி என்றால் மக்கள் தங்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்கு ஜனநாயக வழியில் எப்படிப் போராட வேண்டும் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகும் இந்த சட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து சிறிதும் பின்வாங்கப் போவதில்லை என்று ஐரோம் ஷர்மிளா உறுதியாகக் கூறியிருக்கிறார். தாயும் மகளும் சந்திக்கும் நாள் விரைவில் வரட்டும்!

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன்

Sunday, December 03, 2006

ஹீரோவுக்கு சுபம்... மற்றவர்களுக்கு?

ஒரு கோட்டை அழிக்காமல் அதை சிறிய கோடாக மாற்ற வேண்டும் என்றால் அதற்குப் பக்கத்தில் அதைவிட ஒரு பெரிய கோடு வரைய வேண்டும். வாழ்க்கையில் நாம் பெரிய பிரச்னையாக நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னை ஒன்றுமில்லாததாகத் தெரிய வேண்டும் என்றால் அதைவிட தீவிரமான ஒரு பிரச்னை நம்மைத் தாக்க வேண்டும். ‘இரு கோடுகள்’ என்ற திரைப்படத்தில் இடம் பெறுகின்ற தத்துவம் இது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான தடா வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத் குறித்த தீர்ப்பு இந்தத் தத்துவத்தைதான் நினைவு படுத்துகிறது. ஆயுதங்கள் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 7 இன் கீழ் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவரது குடும்பத்தினரும் அவரது ரசிகர்களும் இதற்காக தங்கள் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக சற்றே நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ஏனென்றால் இவர்கள் பயந்த மாதிரி தடா சட்டத்தின் கீழ் சஞ்சய் தத் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளிக்கவில்லை. மும்பை குண்டு வெடிப்புக்கான பயங்கர வாத சதியில் சஞ்சய் தத்துக்கு எந்தவித பங்கும் இல்லை என்று நீதிபதி தெளிவுபடுத்தி இருக்கிறார்.

ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் ஒருவர் தண்டிக்கப்படுவது சாதாரண விஷயம் இல்லை. அதிலும் சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் சஞ்சய் தத் போன்ற ஒரு நடிகர் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவது அவரைச் சார்ந்தவர்களுக்கு மிகவும் கவலை அளிக்கக் கூடியதாகவே இருக்க முடியும். இருந்தும் அவர்கள் தீர்ப்பை சற்று மன நிம்மதியுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏனெனில் தேசவிரோத பயங்கரவாத குற்றத்தில் இருந்து சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் ஒரு பிரபலமான நடிகர் என்பதால் மட்டும் அவரைச் சார்ந்தவர்கள் இப்படி யோசிக்கவில்லை. சினிமா துறையிலும் அரசியலிலும் பிரதானமாக இருந்த ஒரு குடும்பத்தின் வாரிசு அவர். அவரது தந்தை சுனில் தத், தாயார் நர்கீஸ் தத் ஆகிய இருவரும் சினிமாவில் மிகவும் புகழ் பெற்றவர்கள். சுனில் தத் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவர். அவரது மகள் பிரியா தத் தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கிறார். இவ்வளவு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் தத் மீது தேச விரோத குற்றவாளி என்ற முத்திரை விழுந்தால் அது அந்தக் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்.

ஆனால், இப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவருக்கு எப்படி ஏ.கே.56 துப்பாக்கியின் மீதும் 9 மி.மீ. கைத்துப்பாக்கி மீதும் காதல் ஏற்பட்டது? சினிமாவில் நீளமான துப்பாக்கிகளை வைத்து எதிரிகளை ஒழித்துக் கட்டும் கதாநாயகனாக அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். நிஜ வாழ்விலும் அவரது எதிரிகளை அழிப்பதற்கு துப்பாக்கி அவசியம் என்று அவர் நினைத்திருக்கலாம். அல்லது ‘துப்பாக்கிக் குழாயில் இருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ என்று யாரோ எங்கோ எதற்காகவோ சொன்னதை இவர் தனக்கும் பொருந்தும் என்று கருதியிருக்கக் கூடும். அல்லது துப்பாக்கி வைத்திருப்பதை ஒரு ஆணின் வீரத்துக்கான அடையாளமாக நம்பி இருக்கலாம். அல்லது ‘துப்பாக்கி வைத்திருப்போர் மட்டுமே குடிமக்கள்; மற்றவர்கள் வெறும் ஜடங்கள்’ என்ற அராஜகக் குரலை ஆதரிப்பவராக இருக்கலாம்.

ஆனால், இப்படிப்பட்ட எந்தக் கருத்தையும் நீதிமன்றத்தில் அவர் சொல்லவில்லை. தனது குடும்பத்துக்குக் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன என்றும் காவல்துறையில் அவை குறித்து புகார்கள் கொடுத்தும் அவர்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் சஞ்சய் தத் கூறியிருக்கிறார். அதனால் குடும்பத்தின் பாதுகாப்புக்காக அவர் இந்த ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் அந்தச் செயல் தவறு என்று தெரிந்தவுடன் ஏ.கே.56 துப்பாக்கியை நண்பரிடம் கொடுத்து அழிக்கச் செய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்த வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் மட்டுமே ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது. சஞ்சயின் உத்தரவின்படி துப்பாக்கியை அழித்த இருவருக்கு பயங்கரவாத குற்றத்தில் இருந்து விடுவித்து ஆயுதங்களை அழித்ததில் மட்டும் குற்றவாளிகள் என்று தடா நீதி மன்றம் கூறியிருக்கிறது.

1992 ஆம் வருடம் மார்ச் மாதம் 12ஆம் தேதி மும்பை நகரின் 13 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 250 பேருக்கும் மேலாக பலியாகினர். ஏறத்தாழ 1500 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்தபோது அதுதான் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்திய பயங்கரவாதச் செயலாக கருதப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதியில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தீர்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 86 பேரைக் குற்றவாளிகள் என்றும் 23 பேரை விடுவித்தும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் தீர்ப்புகள் தொடரும்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்திலும் அதன்பிறகு உச்ச நீதிமன்றத்திலும் முறையிடலாம். தடா கோர்ட்டில் விசாரணை முடிந்து தீர்ப்பைப் பெறுவதற்கே 13 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. மேல் முறையீடுகள் முடிந்து இறுதித் தீர்ப்பு கிடைப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ?

இந்த வழக்கின் விசாரணை மற்றும் சஞ்சய் தத் குறித்து விரிவாக விவாதிக்கும் பலர், இந்த வழக்கின் வேறு கோணங்கள் குறித்து பரவலாக விவாதிப்பதில்லை. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் இன்னும் பிடிபடவில்லை. இன்று வழக்கில் தண்டனை பெறுகிறவர்கள் எல்லாம் தாவூதின் கட் டளையை நிறைவேற்றியவர்கள் மட்டுமே. அதற்கான தண்டனை அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், மூளையாகச் செயல்பட்டதாக முதன்மையாகக் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைதுசெய்ய முடியவில்லை என்பது ஓர் உறுத்தல்தான்!

சஞ்சய் தத் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏற்கனவே 16 மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். இப்போது பயங்கரவாத சதிக் குற்றத்தில் அவர் ஈடுபடவில்லை என்பதால் தடா சட்டத்தின் கீழ் உள்ள வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்.

ஆனால் தடா மற்றும் பொடா சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் இன்னும் அந்த வழக்குகளோடு மல்லுக்கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்னும் சிறைகளிலேயே இருக்கிறார்கள். தடா, பொடா என்ற இரு சட்டங்களும் இன்று இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்பதைத் தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

காலாவதியாகிப் போன தடா சட்ட வழக்கில் இருந்து சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டார். அதற்காக அவரைச் சார்ந்தவர்களும் அவரது குடும்பத்தினரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

அதைப் போலவே இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்ட பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைகோ, நக்கீரன் கோபால் உள்ளிட்ட பலரது குடும்பங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்ற நாள் விரைவில் வர வேண்டும்!

- ஜென்ராம்
நன்றி : ஜுனியர் விகடன் (06.12.06)

Friday, December 01, 2006

இணைந்து வளருமா இஸ்லாம் சமூகம்?

‘ஏன் சார் இப்படி நடக்குது? உங்களோட நாங்க படிக்கறதுக்குப் போட்டி போடறோமோ? அரசாங்க வேலைக்கு மல்லுக்கு நிக்கறோமா? அப்புறம் ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?’’

இந்தக் கேள்வியை நண்பர் அப்துல்லா என்னிடம் கேட்டார்.

ஏறத்தாழ 14 வருடங்கள் முடிந்தபிறகும் இன்னும் அந்தக் கேள்வியில் இருந்த வருத்தம் எனது நினைவில் உள்ளது.

கேட்ட நாள் 1992, டிசம்பர் 6.

அன்று மாலை இன்னும் சில இஸ்லாமிய நண்பர்களுடன் எனது வீட்டுக்கு வந்திருந்தார். அவரது உணர்வை என்னுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதலுக்கு எனது பெயரில் ‘ராம்’ இருப்பதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தி கொடுத்த வருத்தத்தில் இப்படிப் பேசுகிறார் என்பதற்குமேல் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை அப்போது புரிய வில்லை. இப்போது சச்சார் கமிட்டி யின் ஆய்வு முடிவுகள், அந்த வார்த்தைகளின் முழு பரிமாணத்தைப் புரிய வைக்கின்றன.

சிறுவயது முதல் கற்பித்து வளர்க்கப்படும் பல கருத்துக்களே மனிதர்களிடத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேர் விடுகின்றன. இந்தியா பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் மதத்தினர் சேர்ந்து வாழும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடு; இந்த வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அதன் சிறப்பு என்று பல வருடங்களாக நாம் போதிக்கப்பட்டு வருகிறோம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லும்போது வேறுபட்ட கருத்தும் வாழ்க்கை முறையும் கொண்டவர்கள் ஒன்றாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், இந்தியாவின் அடிப்படை ஆதாரங்களை ஒற்றுமையுடன் சமமாகப் பகிர்ந்து வாழ்கிறார்கள் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறோம். பெரும்பான்மையானவர்களின் அந்த எண்ணத்தில், சச்சார் கமிட்டி அறிக்கை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2005 ஆம் வருடம் மார்ச் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் இந்த ஆய்வுக் குழுவை அமைத்தார். இந்தக் குழு இந்தியாவில் இஸ்லாமியர்கள் கல்வி ரீதியாகவும், சமூக அளவிலும் பொருளாதார நிலையிலும் எப்படி இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்டது. இந்த அறிக்கை சென்ற வாரம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரபூர்வமாக அந்த அறிக்கை பிரதமரிடம் கொடுக்கப் படுவதற்கு முன்பே ஊடகங்களில் அதன் முக்கிய அம்சங்கள் வெளியாகி விட்டன என்பது வேறு விஷயம்!

பிரிட்டிஷ் காலனி ஆட்சிக் காலத்தில் 1870 களில் மியோ பிரபு உத்தரவின் பேரில் முஸ்லிம்கள் குறித்துக் கணக்கெடுப்பு தொடங்கியது. அதன்பிறகு 1978 இல் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி ஒரு சிறுபான்மை ஆணையத்தை நியமித்தது. மீண்டும் 1980 இல் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, டாக்டர் செய்யது முகமது தலைமையில் சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கு ஒரு கமிஷன் அமைத்தார். டாக்டர் செய்யது முகமது வேறு பணிக்காகச் சென்றதும், கோபால்சிங் தலைமையில் இயங்கிய அந்த கமிஷன் தனது அறிக்கையை 1983 இல் அளித்தது. ஆனால், இதுவரை எந்த அரசும் இந்த அறிக்கை குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதில் வி.பி.சிங், தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜரால் அரசுகளும் அடக்கம் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வரை எத்தனை ஆய்வுகள் நடந்திருந்தாலும், அவை அனைத்தும் ஒரே விஷயத்தைத்தான் அறிக்கையாகக் கொடுத்திருக்கின்றன. அதாவது கல்வி, அரசுப் பணி, ஆட்சிப் பணி, காவல்துறை, நீதித்துறை, நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை...

இஸ்லாமியர்களின் காவலராகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் ஆட்சி நடத்துகிற மாநிலங்களும் இந்த நிலையில் இருந்து விதிவிலக்காக இல்லை என்பது மேலும் அதிர்ச்சி தருகிறது.

உண்மை நிலைமைகள் இப்படி இருக்கும்போது, இந்திய சமூகம் முழுவதிலும் ஆழமாக ஒரு கருத்து விதைக்கப்படுகிறது. இந்தியாவில் ஓரிரு கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம்களை மனநிறைவடையச் செய்யும் அரசியலை நடத்தி வருகின்றன என்ற பிரசாரம் நடந்து வருகிறது. ஆனால், உண்மை நிலையோ வேறுவிதமாக இருக்கிறது.

இந்தியா விடுதலை அடைந்த அறுபது ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருந்த பிறகும் முஸ்லிம்களின் நிலை இதுதானா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் எதுவும் இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான எந்த அவசியமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

சில தனிமனிதர்களுக்கும் சில பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் சில சலுகைகளைச் செய்துவிட்டு அவற்றை ஒட்டுமொத்தமாக அந்த சமூகத் துக்குச் செய்த பணிகளாக சிலர் சித்திரிக்கிறார்கள். அவற்றையே எதிர்முகாமும் முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளாகச் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், இந்த சில அடையாள நடவடிக்கைகளால் முழு இஸ்லாமிய சமூகமும் பயன்பெறவில்லை என்பதை சச்சார் கமிட்டி தெரிவிக்கும் தகவல் உறுதி செய்கிறது.

மற்ற காங்கிரஸ் அரசுகளைப் போல் இல்லாமல் டாக்டர் மன்மோகன் சிங் அரசு இந்த விஷயத்தில் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஏனெனில் இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அடிப்படையான சில மாறுதல்களில் அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது. அரசுப் பணிகள் உள்ளிட்ட சமூகத்தின் பல அங்கங்களிலும் முஸ்லிம்களுக்கு ‘நியாயமான’ பங்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அதை இந்த அரசு உறுதி செய்யும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியிலும் பலர் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு குறித்துக் குரல் எழுப்பி வருகிறார்கள். மதரீதியிலான இட ஒதுக்கீடு செய்வதற்கு இந்திய அரசமைப்பு சட்டத்தில் இடமில்லை என்று எதிர்க்குரல்களும் கேட்கின்றன.

இஸ்லாமிய சமூகம் வளர்ச்சியடையாமல் பின்தங்கியதற்கு அந்த சமூகத்தின் அரசியல் தலைமைதான் காரணம் என்று குற்றம் சாட்டுபவர்களும் இருக்கிறார்கள். மைய நீரோட்டத்துடன் கலக்காமல் அவர்கள் தனியாக இருக்கிறார்கள் என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இந்தத் தடைகளையும் தாண்டி முதலில் அவர்களுக்கு உரிய கல்வி வசதி மற்றும் பிற தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் ஜனநாயகப் பண்பையும் அளவிடுவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில் அங்கு சிறுபான்மையினர் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது முக்கியமானது. இந்தியாவில் அந்தக் காரணி படிப்படியாக எதிர்மறையாகப் போய்க் கொண்டிருக்கிறது.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசுப் பணிகளிலும் மக்கள்தொகைக்கு நிகரான இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்காத இந்திய அரசு, அவர்களுக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதிக சதவிகித இடங்களைக் கிடைக்கச் செய்திருக்கிறது.

ஆம்! சிறைச்சாலைகளில் மட்டுமே அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த அவலநிலையைப் போக்குவது அரசின் கடமை. இல்லையெனில் அங்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று அரசே நினைப்பதாக அவர்கள் கருதிவிடக் கூடும்!

- ஜென்ராம்

நன்றி: ஜூனியர் விகடன் (03-12-2006)