Monday, October 31, 2005

பெயரில் தெரியும் அடையாளங்கள்

" நீ தமிழா முஸ்லீமா?"

பாலர் வகுப்பில் சேர்ந்த முதல் நாள்.
சக குழந்தையிடம் இருந்து வந்த இந்தக் கேள்விக்கு அந்தச் சிறுமியால் பதில் அளிக்க முடியவில்லை. இந்தக் கேள்விக்கான பதில் அவளுக்குத் தெரியவில்லை.

அந்தச் சிறிய நகரத்தில் வசிக்கும் மக்களிடையே தமிழ் என்றும் முஸ்லீம் என்றும் பிரிவுகள் இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

பள்ளி செல்லும் காலத்திற்கு முன்னர் வீட்டுக்கு வந்து அவளைக் கொஞ்சும் அப்பாவின் நண்பர்கள் விசு, கணேஷ், அழகேசன், ஹாஜா, மார்ட்டின் போன்றோரை அப்பாவின் நண்பர்களாக மட்டுமே தெரியும்.

அவர்களை இந்து, கிறித்தவர், இஸ்லாமியர் என்று அவள் புரிந்திருக்கவில்லை. 3 வயது முடிந்திருந்த நிலையில் அவளுக்கு இதெல்லாம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

"அப்படீன்னா என்ன அர்த்தம்? நீ கேக்கறது எனக்குப் புரியலே!"

" நீங்க தமிழ் ஆளுங்களா முஸ்லீம் ஆளுங்களான்னு கேட்கறா" பக்கத்தில் இன்னொரு மழலை.

"எனக்குத் தெரியலையே"


ஆசிரியை வருகிறார்.

வகுப்பில் இருக்கும் குழந்தைகள் பெயரைக் கேட்கிறார்.

ஒவ்வொரு குழந்தையும் பெயர் சொல்லி பெயர் சொல்லி அமர்கிறது.

இவளும் எழுந்து சொல்கிறாள்.

டீச்சரின் கேள்வி." நீங்க கிறிஸ்டியனா?"

மீண்டும் குழந்தை தனது மழலைப் பருவத்தை இழக்கிறது.

காலையில் இருந்து இரண்டாவது முறை..விடை தெரியாத – கேள்விப்படாத சொற்கள்..கேள்விகள்..

"தெரியலை மிஸ்"ஆசிரியை விடவில்லை. குழந்தைக்கு எளிதில் புரிய வைக்க முயற்சிக்கிறாராம்.

"நீங்க கோவிலுக்கு போவீங்களா, சர்ச்சுக்கு போவீங்களா?"

"இந்த ஊர்ல நாங்க எங்கேயும் போக மாட்டோம். எங்க சொந்த ஊருக்குப் போனா மட்டும் தாத்தா பாட்டியோட கோவிலுக்குப் போவோம்"

" அப்ப நீங்க இந்துதான்.. அப்புறம் ஏன் உனக்கு இந்தப் பெயரை வைச்சிருக்காங்க?"

முதன் முதலாக அவளது பெயரில் ஏதோ தப்பு இருக்கிறது என்ற எண்ணம் அவளுக்கு விழுந்தது.

அப்பா, அம்மா, அவர்களுடன் பிறந்தவர்கள், தாத்தா, பாட்டி போன்ற உடனடி உறவு மற்றும் நட்பு வட்டம் தவிர மற்றவர்களில் பலர் தன்னை தனது பெயரில் அழைக்காமல் "ஜனனி" என்று அழைப்பதும் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

அலுவலகத்தில் இருந்து மாலை வீடு திரும்பிய தந்தையிடம் சிறுமி கேட்டாள்:

"ஏம்ப்பா எனக்கு இந்த பெயரை வச்சே?"

பெண்ணின் முதல் நாள் பாலர் வகுப்பு அனுபவத்தைக் கேட்டறிய ஆவலுடன் வந்த அப்பாவுக்கு அதிர்ச்சி..

குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினார். குழந்தை சொல்லச் சொல்ல காலையில் பள்ளியில் நடந்த கதையைக் கேட்டார்.

அம்மா புத்தக அலமாரியில் இருந்து ஓர் ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து வந்தார். அதனுள் ஒரு பக்கத்தில் இருந்த ஒரு குடும்ப போட்டோவில் ஒரு பெண்மணியைக் காட்டி, " இவங்க ரொம்ப நல்லவங்க.. அதனால தான் இவர் பெயரை உனக்கு வைச்சிருக்கோம்," என்றார்.

"அது சரிம்மா..இவங்க தமிழா முஸ்லீமா "

பள்ளியில் கற்ற பாடத்தை வீட்டில் உரசிப் பார்த்தாள் சிறுமி.

குழந்தையின் காயத்தை அப்பாவும் அம்மாவும் உணர்ந்தனர். குழந்தையை அன்புடன் கட்டிக் கொண்டு சொன்னார்கள்.

" நம்ம மாதிரியே அவங்களும் மனுஷங்க.. அவ்வளவு தான்."

குழந்தைக்கு புரிந்ததோ இல்லையோ உரையாடல் முற்றுப் பெற்றது.


அன்று தொடங்கிய பிரச்னை இன்று வரை தொடர்கிறது.

அடுத்ததாக வந்த வகுப்புகளில் பெயர்க்காரணம் தெரியாமல் புலனாய்வு எல்லாம் நடந்தது. அது ஒரு சிறிய நகரமாக இருந்ததால் பிற குழந்தைகளின் வீடுகளிலும் நடந்த விவாதங்கள் நண்பர்களுக்குத் தெரிய வந்தன..

அப்பாவுக்கு அந்தப் பெயரில் யாராவது “தோழி” இருந்திருப்பார்கள், அதனால் அந்தப் பெயரை வைத்திருக்கலாம் என்று வியாக்கியானங்கள்..

அப்பாவின் நண்பர்கள் மத்தியில் கூட என்னதான் இருந்தாலும் பெயர் தமிழ்ப் பெயராக இல்லை என்று விமர்சனம்..

மாலனின் சொல்புதிது என்ற புத்தகத்தில் திருமாவளவன் தனது தந்தை உள்ளிட்ட பலருக்கு இந்துப் பெயர்களை மாற்றி தமிழ்ப் பெயர் வைத்த நிகழ்ச்சி குறித்து எழுதியிருந்தார். பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். பெயர் ஒரு பண்பாட்டின் வெளிப்பாடு என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். பெயரிலோ தோற்றத்திலோ மத அல்லது சாதி அடையாளங்கள் வெளிப்படக் கூடாது என்ற கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒருவரது பெயரைக் கேட்கும்போதே அந்தப் பெயருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிற சாதி, மதம் அறிந்து கொள்ள பலர் முயற்சி செய்கிறார்கள். பெயரில் அவர்கள் விரும்பும் பதில் கிடைக்காவிட்டால் அடுத்தடுத்து பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.

“போராடும் தொழிலாளர்க்கு
ஜாதி இல்லை மதமும் இல்லை
கொள்கை உண்டு கோஷங்கள் உண்டு
கோரிக்கைகள் சிலவும் உண்டு
கோரிக்கைகள் நிறைவேற
கோடிக் கைகள் போராடும்”
என்றெல்லாம் பல ஊர்வலங்களில் முழக்கங்கள் எழுப்பப்படும்.

ஊர்வலம் முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது ஒவ்வொருவரும் அவரவர் சாதியினராகவே மாறிவிடுகிறார்கள்.

குடும்பம் சாதிப் பழக்க வழக்கங்களிலேயே பெரும்பாலும் இயங்குகிறது.

எனவேதான் சாதி, மதம் அறியும் கேள்விகளை எங்கு போனாலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பெயரைக் குழந்தைகளுக்கு வைப்பது பெரும்பாலும் பெற்றோரே. அவர்கள் வைக்கும் பெயரால் குழந்தைகள் சிரமப்படும் என்றால் அது சரியா? இது பெற்றோரின் தவறா? சமூகம் இப்படிப் பல நுட்பமான விலங்குகளால் மனிதர்களை நிலவும் சமூக அமைப்பை மீறிச் செயல்படவிடாமல் கட்டிப் போட்டு வைத்திருக்கிறதா?

சென்னைக்கு ஏழாவது வகுப்புக்கு வந்து சேரும்போது உடன் படித்த மாணவர்கள் அவளது பெயரை அகராதியில் தேடி “பெண் கழுதை” என்று கிண்டல் வேறு..

இந்த நிலைக்கும் முன்னரே அவளுக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கானவர்கள் குறித்து அவள் அறிந்திருந்தாள். உயர்நிலைப் பள்ளி வரும்போது கொஞ்சம் முதிர்ச்சி இருந்ததால் கிண்டலும் கேலியும் அவளுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

உயர்நிலைப்பள்ளி முடித்து மேல்நிலைப் பள்ளி சேர்க்கைக்காக சென்றிருக்கும்போதும் கல்லூரியில் சேர்ந்தபிறகும் அவளது பெயர் அவளைக் கிறித்தவரா என்ற கேள்வியை எதிர்கொள்ள வைத்தது. சமீபத்தில் நடந்து முடிந்த கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்ற சில நிறுவனங்களின் நேர்காணலிலும் “உங்களுக்கு ஏன் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்?” என்ற கேள்வி தொடர்ந்திருக்கிறது.

அவள் இப்போதெல்லாம் தெளிவாகச் சொல்கிறாள். “ இது கார்ல் மார்க்ஸின் மனைவி பெயர். அவருக்கு இதே பெயரில் ஒரு குழந்தை கூட இருந்ததாம். நான் பிறந்தபோது என் அப்பா மார்க்சீயத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அதனால் அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள்.”

''ஆயிரந் தட்டல்களுக்குத்
திறக்காத கதவும்
உன்
ஒரே மிதியில் திறந்து கொள்ளும்

அந்த நம்பிக்கையோடு
உன்
அடுத்த அடியை எடுத்து வை." என்கிறார் வைரமுத்து.

ஜென்னி இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது!

Sunday, October 23, 2005

நடுநிலை என்றால் என்ன?

தமிழ்மணம் எங்கும் நண்பர் காசியின் அறிவிப்புக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பதிவுகள் பதிவாகிக் கொண்டு இருக்கின்றன.

ஒரு நிகழ்வு நடக்கும்போது அது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாமா என்று சிலர் எண்ணக் கூடும். எல்லா நிகழ்வுகளுக்கும் எல்லோரும் கருத்து தெரிவிப்பது இல்லை என்பதே உண்மை. அதன் அடிப்படையில் மௌனமாக இருந்து விடலாம்.

முக்கிய நிகழ்வுகளின் போது கூட மௌனமா என்பார்கள். எது முக்கியம் என்பதை எதன் அடிப்படையில் யார் தீர்மானிப்பது என்று கேட்கலாம்.

எனது பதிவின் அருகில் பச்சை விளக்கு எரிகிறதா என்று பார்க்கலாம். அப்படிப் பச்சை விளக்கு எரிவது ஒரு நல்ல மனிதரின் கருணையினாலோ அல்லது அவரது மதிப்பீடுகள் அல்லது விழுமியங்கள் (இந்த சொற்கள் இல்லாமல் ஆழமான பதிவா அல்லது அர்த்தமுள்ள பதிவா) ஆகியவற்றுடன் ஒத்துப் போகும் அளவோ அல்லது ஒத்துப் போகாமல் இருந்தாலும் அனுமதிக்கக் கூடிய அளவோ இருந்தால் மட்டுமே தான் சாத்தியம் என்ற உண்மை சுடுகிறது.

அதே சமயம் இந்த திரட்டியை ஒரு தனிமனிதர்தான் நடத்துகிறார் என்பதும் அவர் இதற்காக செலவழித்த/ செலவழிக்கிற காலம் மிகவும் அதிகம் என்பதும் அதன் காரணமாகவே அவரது தனிப்பட்ட அளவுகோல்களை மதிக்க வேண்டியிருக்கிறது என்பதும் உண்மையின் மறுபக்கமாக சுடுகிறது.

என்ன செய்வது? கருத்தும் சொல்ல வேண்டும். நடுநிலையுடனும் இருக்க வேண்டும். என்ன செய்வது?

அரசியலில் நடுநிலை என்று எதுவும் இல்லை என்று கருதுகிறவன் நான். அது வீட்டு அரசியலாக இருந்தாலும் சரி; அலுவலக அரசியலாக இருந்தாலும் சரி; சமூக அரசியலாக இருந்தாலும் சரி.

ஜார்ஜ் புஷ் சொல்வாரே " நீங்கள் ஒன்று 'எங்களை' ஆதரிக்க வேண்டும் அல்லது 'அவர்களை' ஆதரிக்க வேண்டும்" என்று, அதைப் போல் நண்பர் காசி கேட்கவில்லை. நல்ல வேளை! காசி சிலர் கூறுவதைப் போல் சர்வாதிகாரி இல்லை, ஜனநாயக உணர்வு அவருக்குள் இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.

எனக்கு இணைய குசும்பர்களையும் தெரியாது, காசியையும் தெரியாது. இவர்களது பதிவில் ஒன்றிரண்டு மறுமொழிகளை இட்டிருப்பேன். என்னோடு முதல் வகுப்பு முதல் பள்ளி இறுதி வரை படித்த ஒரு பதிவரை மட்டுமே நான் நேரில் அறிவேன். (மாலனை ஒரு விழா முடிந்து வரும்போது சில நொடிகள் சந்தித்தேன். இன்னொருவர் சென்னைக்கு வந்த போது சில நிமிடங்கள் சந்தித்தேன்.) எனவே எனது கருத்து யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ எழுந்தது அல்ல. அதற்கான அவசியமும் இல்லை.

தமிழ்மணத்திற்கு நான் வருவதற்கு முன்பே தணிக்கை குறித்து எனக்கு ஒரு பார்வை உண்டு. காசியின் அறிவிப்பு அந்த எனது பார்வையின்படி வருத்தம் அளிக்கிறது. அதே சமயம் எனது பார்வை பொதுவான விஷயங்களுக்குத் தான் பொருந்துமே தவிர தனியானவற்றிற்குப் பொருந்தாது என்பதையும் வருத்தத்துடன் உணர்கிறேன்.

தமிழ்மணத்தில் எனது பதிவை இணைக்கும் போது என்னென்ன நிபந்தனைகள் போடப்பட்டிருக்கின்றன என்று நான் பார்க்கவில்லை. இப்போதும் கூட பார்க்கும் அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.

ஒரு விளையாட்டிற்குள் போகும்போது அந்த விளையாட்டின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆட நான் சம்மதிக்கிறேன். (Ball Badminton)பூப்பந்தாட்ட விதிகள் வேறு; (Shuttlecock)இறகுப் பந்தாட்ட விதிகள் வேறு; நான் புரிந்து கொள்கிறேன். பிரச்னைகள் வரும்போது நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.

இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு என்னால் ஆடமுடியாது என்று எனக்குத் தோன்றுகிற போது நானே வெளியேறுகிறேன். அல்லது நடுவர் அவுட் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்.

இந்தப் பற்றற்ற நிலையில் இல்லாமல் சில நண்பர்கள் தமிழ்மணத்துடன் தங்களைப் பிரித்துப் பார்க்க முடியாமல் இரண்டறக் கலந்து விட்டார்கள். அவர்களது இரவும் காலையும் தமிழ்மணத்துடன் முடிகிறது, தொடங்குகிறது. அவர்களால்தான் விலக்கலைத் தாங்க முடியவில்லை. அவர்களது உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களில் சிலர் உதிர்க்கும் சொற்களை ஜீரணிக்க முடியவில்லை. காசியோ மற்ற நிர்வாகிகளோ அவற்றைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன்.

அதேசமயம் தமிழ்மணத்தில் இடம் பெறும் பதிவுகள் " புலிகள் மற்றும் நக்சலைட் ஆதரவு, திராவிடர் கழக ஆதரவு" பதிவுகள் என்று போகிற போக்கில் பதிவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது "முத்திரை " குத்துவதும் கண்டிக்கத் தக்கது.

இந்துப் பண்பாடுக்கென ஒரு திரட்டி, தமிழ்ப் பண்பாடுக்கென ஒரு திரட்டி, பண்பாடே இல்லாதவர்களுக்கு ஒரு திரட்டி என்று எதிர்காலத்தில் உருவானால் நல்லது. அவரவர் ரசிகர் கூட்டத்திற்கு அவரவர் எழுதிவிட்டுப் போய்விடலாம்.

என்னதான்யா சொல்ல வர்றே என்று கோபப்படுபவர்களுக்கு:

1. காசியின் உரிமை – உழைப்பு இவற்றை மதிப்பதுடன் போற்றுகிறேன்.

2. காசியின் தனிச்சொத்தாக இருந்த போதிலும் தமிழ்மணத்தில் அவரது மதிப்பீடுகளின்படியான தணிக்கை வருத்தமளிக்கிறது. இவ்வளவு காலம் தணிக்கை இல்லாமல் இருந்ததற்கு மனமார்ந்த நன்றிகள். (நான் பதிவுக்கு வந்து ஆறு மாதங்கள் கூட நிறைவடையவில்லை என்பது வேறு விஷயம்)

3. காசிக்கு எதிரான கண்டனங்கள் அர்த்தம் இல்லாதவை.

4. பெற்றோருடன் – மனைவியுடன் – குழந்தையுடன் – நண்பர்களுடன் – எவ்வளவோ சமரசங்கள் செய்து கொள்வதைப் போல தமிழ்மணத்துடன் சமரசம் செய்து கொள்கிறேன்.

5. இந்த சமரசம் மேலதிகாரியின் அதிகாரத்திற்குப் பணிந்து செய்யப்படும் சமரசம் போன்றதல்ல. வாசகர் பலத்திற்காகவும் அல்ல. வேறு எங்கும் என் கருத்துக்களைப் போட இயலாது என்பதற்காகவும் அல்ல.

6. உரிமையாளர் சொன்னால் எப்போது வேண்டுமானாலும் வீட்டைக் காலி செய்யத் தயாராக இருக்கிறேன். நான் வீட்டைப் பராமரித்தேன் என்று உரிமைக்குரலோ முணுமுணுப்போ கூட எழுப்பமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். (இதை அடிமை சாசனம் என்று சொல்லும் நண்பர்கள் சொல்லட்டும். அதுதான் உண்மை நிலை என்பது அவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம்)

7. தணிக்கையில் ஒரு சலுகையாக (தீர்வாக அல்ல) மத சர்ச்சைப் பதிவுகளைத் தவிர (அதையும் அனுமதிக்கலாம் என்பதே முழுத் தீர்வு) மற்றவற்றிற்கு பச்சை விளக்கு காட்டினால் மகிழ்வேன்.

8. ஆளும் கட்சித் தலைவர் காசியை மதிக்கும் அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் முகமூடியையும் அதே அளவு மதிக்கிறேன். (இருவரும் என்னை ஏற்றுக் கொண்டாலும் சரி இருவரும் என்னை ஒதுக்கினாலும் சரி. பொதுவாக என் போன்றோருக்கு இரண்டாவதே நிகழும்.)

9. இரு கட்சிகளின் இடைநிலைத் தலைவர்களையும் தொண்டர்களையும் அதே அளவு நேசிக்கிறேன்.

10. டெக்னோக்ரட்டியிலும் துண்டு போடலாமா என்று சிந்திக்கிறேன்.

குஷ்பூ – கற்பு- தமிழ்ப் பண்பாடு குறித்து நான் தனியாக பதிவு எதுவும் போடவில்லை. தேன்துளி, தங்கமணி பதிவுகளில் பின்னூட்டம் இட்டதுடன் எனது சமூகக் கடமை முடிந்துவிட்டது என்று இருந்து விட்டேன்.

அந்தப் பழியைப் போக்கும் விதத்தில் போடப்பட்டிருக்கும் இந்தப் பதிவு எந்தவிதமான உள்குத்துகளும் இல்லாமல் போடப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் எனது பதிவுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது என்பதைத் தவிர வேறு விளைவுகள் எதுவும் இருக்காது என்பது என் நம்பிக்கை.

Saturday, October 15, 2005

தொகுதிப் பங்கீடு

வருகிற 2006 ஆம் வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது. சாதாரணமாக இந்தத் தேர்தலைக் கடந்த ஐந்தாண்டு கால அ.இ.அ.தி.மு.க. அரசின் ஆட்சி மீதான மக்கள் தீர்ப்பு என்றே ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் கூறுவார்கள். ஐந்தாண்டு கால ஆட்சியின் போது மக்களுக்கு செய்த சேவையை முன்னிறுத்தி மக்கள் முன் பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல அ.இ.அ.தி.மு.க. தயாராக இருக்கிறது.
ஆனால் இந்த நிமிடம் வரை கூட்டணிக்குக் கட்சிகள் எதுவும் அ.இ.அ.தி.மு.க.வுக்குக் கிட்டவில்லை.

எதிர்க் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தவும், ஓரிருவரை தமது பக்கம் இழுக்கவும் முயற்சிகள் நடப்பதாக யூகங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. சில "லெட்டர் பேடு' கட்சிகளுடன் இணைந்து அனைத்துத் தொகுதிகளிலும் "இரட்டை இலை' நிற்கும்.

ஜெயலலிதாவை எதிர்க்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் திமுக, காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம், இந்திய தேசிய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இருக்கின்றன. இவை தவிர மக்கள் தமிழ் தேசம், எம்.ஜி.ஆர் கழகம் உள்ளிட்ட பல சிறிய கட்சிகளும் இக்கூட்டணியில் கை கோர்த்து நிற்கின்றன.

இந்நிலையில் இந்தக் கூட்டணியில் 234 தொகுதிகளைப் பிரித்துக் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்று ஆளும்கட்சித் தரப்பில் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இது ஒரு சிக்கலே அல்ல என்பது போல் திமுக தலைவர் கருணாநிதி சில நாட்களுக்கு முன்பு ஒரு கருத்தைச் சொன்னார். ""மொத்த தொகுதிகளையும் நான் கையில் வைத்திருந்து ஒவ்வொரு கட்சிக்கும் பிரித்துக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து அவரவர்க்கு வேண்டிய தொகுதிகளைப் பிரித்து எடுத்துக் கொள்வோம்'' என்று கூறியிருந்தார். இந்த முறையில் அவர்கள் யார் யார் எவ்வளவு எடுத்துக் கொள்வார்கள் என்று எண்ணிப் பார்த்ததன் விளைவாக இந்த பட்டியலை அளிக்கிறோம்.
கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது, பாண்டிச்சேரி உள்ளிட்ட நாற்பது தொகுதிகளை இதே கூட்டணி பிரித்துக் கொண்டது. திமுக 16, காங்கிரஸ் 10, பாமக 6, மதிமுக 4, சிபிஐ 2, சிபிஎம் 2 என்று போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். அதே விகிதாச்சாரத்தில் 234 தொகுதிகளையும் பிரித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
ஏனென்றால், இந்த விகிதாச்சாரத்தின்படி பார்த்தால் திமுக 100க்கும் குறைவான தொகுதிகளில்தான் போட்டியிட முடியும். ஆனால் திமுகவோ தனி ஆட்சி நடத்துவதற்குக் குறைந்தபட்சம் 118 இடங்கள் பெற வேண்டும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சையே திமுக விரும்பவில்லை. எனவே 118 இடங்களில் திமுக வெற்றி பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 140 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்று திமுக தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். தனிப்பட்ட முறையில் திமுகவுக்கு 140 இடங்கள் போட்டியிட வாய்ப்பில்லாவிட்டாலும் கூட, முஸ்லீம் லீக், ராஜ கண்ணப்பன், டாக்டர் சேதுராமன், ஆர்.எம்.வீ. ஆகியோரின் கட்சி வேட்பாளர்களை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடச் செய்தாவது 140 என்ற இலக்கை எட்டி விடுவார்கள்.

அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற ஒதுக்கீட்டின்படி பார்த்தால் 60 சீட் கிடைக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை. எனவே 50 சீட் கேட்டு இறுதியில் 40 சீட்களில் பேரம் முடிவடையலாம். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி இருப்பதால், 40க்கும் குறைவான இடங்களைப் பெறுவதற்கு காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொள்ளாது. ஆனால் எப்படியாவது இந்தக் கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் இன்னும் அதிக இடங்கள் கோரலாம். இதனால் தொகுதிப் பங்கீட்டில் கடுமையான இழுபறி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் 40 சீட் என்பதை இறுதியில் தலைமை ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியில் எதிர்பார்ப்பு 40 சீட்களுக்கு இருக்கக்கூடும். ஆனால் திமுக கூட்டணி ஆட்சிக்குத் தயாராக இல்லாததும், தனிக்கட்சி ஆட்சிக்கு 140 இடங்கள் போட்டியிட வேண்டிய அவசியம் இருப்பதாலும் பா.ம.க.வுக்கு 40 சீட்கள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே டாக்டர் ராமதாஸ் 25 சீட்களுடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதிருக்கும். இதே தேர்தல் நேரத்தில் பாண்டிச்சேரியிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு கூடுதல் இடங்களுக்கான கோரிக்கையுடன் 25 இடங்களுடன் மனநிறைவு கொள்ளலாம். மத்தியில் கூட்டணி ஆட்சியில் பா.ம.க.வைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சராக இருப்பதால், கூட்டணியை விட்டு வெளியேறும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே தெரிகிறது. ஆனால் இதையும் மீறி மாநிலத்தில் வேறு கூட்டணியில் நல்ல பலன்கள் கிடைக்கக் கூடும் என்று பா.ம.க. கருதினால் மட்டுமே கூட்டணியில் இருந்து வெளியேறுவார்கள்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்தக் கூட்டணியில் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. கருணாநிதியை அடுத்த முதல்வராக்குவதே இப்போதைய லட்சியம் என்று வைகோ எல்லா மேடைகளிலும் முழங்கி வருகிறார். சன் தொலைக்காட்சியுடன் இருக்கும் முரண்பாட்டை மீறி அரசியல் ரீதியாக திமுகவுடன் மிகவும் நெருங்கி இருக்கிறது மதிமுக. இவர்களது எதிர்பார்ப்பு 25 இடங்களாக இருக்கக்கூடும். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் பாசத்திற்குக் கட்டுப்பட்டு, வைகோ 15 முதல் 20 இடங்களுடன் கூட்டணியைத் தொடர்வார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் சென்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தபோது தலா 8 இடங்களில் போட்டியிட்டன. இப்போதும் அதே நிலைமை தொடரக்கூடும். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துக்கொள்ளும். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெகுநாட்களாகவே திமுகவும் அ.இ.அ.தி.மு.க.வும் தங்களை சிபிஐயுடன் சமமாகப் பாவிப்பதை எரிச்சலுடன் சகித்துக் கொண்டு வந்துள்ளது. "2006 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை வீழ்த்துவதே எங்கள் நோக்கம்'' என்று அரசியல் தீர்மானம் போட்டிருந்தாலும் கூட திமுக குறைந்த இடங்களை ஒதுக்கினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. இருந்த போதிலும் இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து 16 இடங்களுக்கு மேல் கிடைக்கும் வாய்ப்பு இருக்காது.

மீதி இருக்கும் முஸ்லீம் லீக், மக்கள் தமிழ் தேசம், எம்.ஜி.ஆர். கழகம், புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் திமுக வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் அல்லது திமுகவின் இதயத்தில் கிடைத்த இடத்துடன் மன நிறைவு கொள்வார்கள்.
பிற கட்சிகளுக்கு இந்த எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கினாலே, திமுகவுக்கு 140 இடங்கள் வரவில்லை. இரண்டு இடங்கள் குறைகின்றன. ஓரிரு இடங்களைப் பிற கட்சிகளுக்குக் குறைத்தோ அல்லது திமுக ஓரிரு இடர்களைத் தியாகம் செய்தோ ஓர் உடன்பாட்டை எட்டிவிடக் கூடும்.

இன்றைய சூழ்நிலையில் இருக்கக்கூடிய கூட்டணி நிலவரப்படி தொகுதிப் பங்கீடு இப்படி இருக்கக்கூடும் என்று கணிக்கிறோம். அரசியல் கட்சிகள் எப்படி பிரித்துக் கொள்கின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திருமாவளவனையும் இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்வேன் என்கிறார் டாக்டர் ராமதாஸ். நடுவில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சிலிர்த்துக் கொண்டு நிற்கிறது.

இது ஒரு யூகக் கணக்கு மட்டுமே. சிலர் பேசியதை வைத்து போடப்பட்ட கணக்கு.
சோம்பல் காரணமாகப் பதிவு போட்டு நாளாகிவிட்டது என்ற குற்றச்சாட்டு மின்னஞ்சல் காரணமாக உடன் போடப்படும் பதிவு இது.

Wednesday, October 05, 2005

நூறு வயதுக்கு மேல்தான் விவாகரத்து

" உன்னாட்டம் பொம்பளை யாரடி ஊரெல்லாம் உன் பேச்சு தானடி" என்ற ரஜினிகாந்த் படப் பாடலை சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப் பதிவு.

புதிய தொழில் உறவு சட்டம் ஒன்றை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வருகிறது. இதன்படி 300 தொழிலாளர்களுக்குக் குறைவாக இருக்கும் தொழிற்சாலைகள் ஆட்குறைப்பு, கதவடைப்பு போன்றவறைச் செய்வதற்கு எந்தத் தடையும் இருக்காது.

இதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொழிலாளர்களின் எண்ணிக்கை ஓராயிரத்துக்குக் குறைந்து இருக்கும் நிறுவனங்களில், ஆட்குறைப்பு, கதவடைப்பு போன்ற நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்துக் கொள்வதில் எவ்விதத் தடையும் இருக்காது என்று கொண்டு வந்த மசோதா நாடாளுமன்றத்திலும் வெளியிலும் இடதுசாரிகளின் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு கிடப்பில் போடப்பட்டு காலாவதியானது.

அந்த அறிவிப்பு வெளியான சமயத்தில் வெப் உலகத்தில் 03.03.2001 அன்று நான் எழுதியதை மீள்பதிப்பு செய்கிறேன்.


நூறு வயதுக்கு மேல்தான் விவாகரத்து? புதிய சட்டம்!


ஓராயிரம் அல்லது அதற்கு மேல் தொழிலாளர்களைக் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் தான் வரும் நிதியாண்டில் இருந்து இந்தியத் தொழில் தகராறுச் சட்டம் பொருந்தும். அதாவது தொழிலாளர்களின் எண்ணிக்கை ஓராயிரத்துக்குக் குறைந்து இருக்கும் நிறுவனங்களில், ஆட்குறைப்பும், கதவடைப்பும் இதுபோன்ற நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்துக் கொள்வதில் எவ்விதத் தடையும் இருக்காது.

2001 - 2002 நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில் இந்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குறிப்பிட்டதே மேல் கூறிய செய்தி. இது போல் வேறு என்னென்ன சீர்திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்று எமது உடான்ஸ் டீம் தங்கள் கற்பனையைத் தட்டி விட்டதன் விளைவு நிதியமைச்சரின் கீழ்க்கண்ட மற்ற அறிவிப்புகள்.

1. இரண்டு கோடி மக்கள் தொகைக்குக் குறைந்த பேரூராட்சிகளுக்கு, கிராமப்புற வளர்ச்சி நிதியில் இருந்து எந்த உதவியும் கிடையாது. கிராமப்புற வளர்ச்சி நிதியில் இருந்து உதவி பெற கிராமத்தின் மக்கள் தொகை இரண்டு கோடியாக இருக்க வேண்டும்.

2. இந்தியாவில் விவாகரத்து கோரும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகக் குறைந்த பட்ச வயது நூறாக இருக்கவேண்டும். அதற்கு இடையில் கோரப்படும் விவாகரத்துக்கள் சட்ட விரோதமானவை.

3. அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாஸ் அல்லது கட்டணச் சலுகை பெற மாணவர்கள் 40 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.

4. இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் மிகக்குறைந்த பட்சம் 20 வருடங்களாவது திரும்ப இந்தியா வராமல் இருந்தால் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுவர். இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் செய்யப்படும்.

5. கிரிக்கெட் பித்தலாட்டத்தின் மூலம் ரூ 500 கோடிக்குக் கீழ் சம்பாதித்தவர்கள் மேல் உள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படும். அதற்குக் குறைவான ஊழல், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

6. ஹுன்டாய், போர்டு கார்கள் தவிர, வேறு எந்த வாகனங்களும் இந்திய சாலைகளில் ஓடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் இதற்கான உரிய சட்டத் திருத்தத்தை விரைவில் அறிவிப்பார்.

7. தொழிற் கல்விக்கான கடன் பெறத் தகுதியுள்ள மாணவ மாணவியர் தாய், தந்தை இல்லாமல் சுயம்புவாக அவதரித்தவர்களாக இருக்கவேண்டும்.

8. தீவிரவாதிகளால் கடத்தப்படும் பிரபலங்களை விடுவிக்கக் கொடுப்பதற்காக பிணைத் தொகை நிதி ஒன்று ரூ 100 கோடி முதலீட்டுடன் தொடங்கப்படும். இதிலிருந்து உதவி பெற, ஒரு பிரபலம் குறைந்தபட்சம் 100 நாட்களாவது பிணைக் கைதியாக தீவிரவாதிகளிடம் இருந்திருக்க வேண்டும்.

9. விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அட்டை மூலம், கார்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவை மட்டுமே வாங்க முடியும். இந்த அட்டைக்கான பயன்பாட்டை முறைகேடாகப் பயன்படுத்தி உரம், விதை வாங்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

10. ரேஷன் அட்டைகள் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகக் கிடைக்கும் செய்திகள் மிகுந்த மன வேதனையை அளிக்கின்றன. ரேஷன் அட்டைகள் வழங்குவது மாநிலங்களின் பொறுப்பாக இருந்த போதிலும், இவை அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கச் செய்வது மத்திய அரசின் கடமை. எனவே அனைத்து மாநிலங்களிலும் இந்துக்களுக்குக் காவி அட்டையும், கிறிஸ்தவர்களுக்கு வெள்ளை அட்டையும், இஸ்லாமியர்களுக்கு பச்சை அட்டையும் வழங்கப்படவேண்டும். இதற்கான வழிகாட்டும் நெறிகளை மத்திய அரசு விரைவில் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கும்.

நன்றி: வெப் உலகம்